Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

தெருவில் சீடர்களுடன் வந்து கொண்டிருந்த கௌதம புத்தர் முன்னால் அந்த வீட்டுக்குள் இருந்து ஓடி வந்து காலில் விழுந்த வயதான தாயின் முகத்தில் பல நூறு வருடங்களின் சோகம் தெரிந்தது.

''என்ன வேண்டும் அம்மா?'' என்று கேட்டார் புத்தர்.

''என் மகளை என் மருமகன் எப்போது பார்த்தாலும் அடிக்கிறான். ஒன்று அவன் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் என் மகளை விதவையாக்கிவிடுங்கள்''.

அதிர்ந்து போனார் புத்தர். இறந்த மகனை உயிர்ப்பிக்க வரம் கேட்ட தாயைக் கூட சமாளித்துவிட்டோம். இதை எப்படி சமாளிப்பது ?

'எந்த ஒரு வீட்டில் எந்தப் பெண்ணும் கணவனிடம் ஒரு முறை கூட அடி வாங்கினதில்லையோ அந்த வீட்டிலிருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிக் கொண்டு வா. உனக்கு தீர்வு அளிக்கிறேன்.'' என்றார் புத்தர். பழைய உத்தி இந்த முறையும் உதவுமா, தெரியவில்லை. தாய் நகரவில்லை. புத்தர் முகத்தில் கவலை அரும்பியது.

''எந்த வீட்டிலும் அப்படி ஒரு பெண் கூட இருக்கமாட்டாள் என்பது எனக்குத் தெரியும். அரண்மனைக்குப் போய் உங்கள் பூர்வாசிரம மனைவி யசோதரையிடம் வேண்டுமானால் கேட்கட்டுமா ? '' என்றாள் அந்தத் தாய்.

புத்தர் சிரித்தார். ' பூர்வாசிரமத்தில் நானும் ஓர் ஆண்தானே. இப்போதுதான் மனிதனாக இருக்கிறேன்.''

''எல்லாரையும் சீக்கிரமாக மனிதனாக்குங்களேன்.'' என்று சொல்லும்போதே அந்தத் தாயின் குரல் தழுதழுத்தது. புத்தரும் அழுதார். இதற்கு முன்பு போர்க்களத்தில் அழுதேன். மயானத்தில் அழுதேன். மருத்துவமனையில் அழுதேன். இப்போது வீட்டு வாசலிலா?! இல்லறத்தின் கோளாறுகளுக்குத் தீர்வு துறவு மட்டும்தானா ? இல்லறத்துக்குள்ளேயே தீர்வு வேண்டாமா ? அன்பு இதையும் தீர்க்காதா ? துறவி புத்தர் மறுபடியும் குடும்பம் பற்றி சிந்திக்கத் தொடங்கின கதை இது.

ஒவ்வொரு வீடும் வன்முறை நிகழும் யுத்த பூமியாக இருக்கிறது என்பதுதான் இந்த பெமினிஸ்ட் புத்தா கதை சொல்லும் யதார்த்தம். குடும்பத்தின் அடிப்படை அன்பு மட்டும்தான், அதிகாரம் அல்ல என்ற மனமாற்றம்தான் இந்த வன்முறைக்கு இறுதியான தீர்வு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் மனமாற்றம் வரும்வரை தினசரி அடி உதைகள், சொல்லம்புகள், மௌனச் சித்திரவதைகள் இவற்றிலிருந்து பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா ? இதை வலியுறுத்தி பல வருடங்களாக மகளிர் அமைப்புகள் பேசியும் போராடியும் வந்ததன் விளைவாக, ஒருவழியாக குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்கான சட்டம் அக்டோபர் 26லிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரம் வருடத்துக்கு எட்டு சத விகித வளர்ச்சியை எட்டி விட்டது என்று பெருமைப்படும் அதே நேரத்தில் , ஒவ்வொரு வருடமும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை 40 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். தொன்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் பல முறை சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் ஓராண்டு காலமாகக் கிடப்பில் இருந்த சட்டத்தை மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சவுத்ரி நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆந்திராவின் ஆண் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஈடு கொடுத்துப் போராடி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரேணுகா, இந்த அமைச்சகத்தை விட்டுத் தான் போக விரும்பவில்லை. இதில் இருந்தால்தான் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொன்டு வர முயற்சிக்க முடியும் என்கிறார்.

அவர் சொன்னதுபோல இந்த சட்டம் சமூகத்தில் குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை உண்டாக்கக்கூடியது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் வந்த பிறகுதான் இரண்டாம் வகுப்பு ரயில் பயணமும் பஸ் பயணமும் நிம்மதியாக இருக்கிறது.

புதிய சட்டத்தின் முதல் புரட்சிகர அம்சம் குடும்பம் என்றால் திருமணம் செய்துகொன்டு வாழ்பவர்கள் மட்டுமல்ல. சடங்குகள் இல்லாமல் சேர்ந்து வாழ முடிவு செய்த ஜோடிகளும் என்று குறித்திருப்பதாகும். அது மட்டுமல்ல. குடும்பத்தில் இருக்கும் சகோதரி, தாயார், மாமியார், தத்து எடுக்கப்பட்ட மகள் எல்லாருமே இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறுகிறார்கள். அடிப்பது, உதைப்பது மட்டுமல்ல, வீட்டை விட்டு துரத்தி விடுவதாக அச்சுறுத்துவது, உதைப்பேன் என்று மிரட்டுவது, பொருளாதார ரீதியில் ஏய்த்து துன்புறுத்துவது, விருப்பமில்லாதபோது பாலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது எல்லாமே குடும்ப வன்முறைகளாகக் கருதப்படும்.

மேற்படி குற்றங்களைச் செய்யும் ஆண்களுக்கு ஓராண்டு சிறைவாசம் முதல் இருபதாயிரம் ரூபாய் அபராதம் வரை தண்டனை என்று நிர்ணயித்திருக்கும் இந்த சட்டத்தின் மிகவும் முற்போக்கான அம்சம், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வழி வகைகளை சட்டத்திலேயே சொல்லியிருப்பதுதான்.

இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகாரியாக ஒருவரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். இந்த அதிகாரி அரசு ஊழியராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகளை அதிகாரியாக நியமிக்கலாம்.

நீ புகார் கொடுத்தால் என்ன, கேசே இன்னும் பத்து வருஷமானாலும் விசாரணைக்கு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற மிரட்டல்கள் இந்த சட்டத்தின் முன் நடக்காது. காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னால் வழக்கை காவல் அதிகாரிகள் கொண்டு போயாக வேன்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை உண்டு. வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளித்தாக வேன்டும் என்ற காலவரம்பு நீதிபதிக்கும் தரப்பட்டிருக்கிறது.

குடும்பங்களுக்குள் ஆண் பெண் மீது நடத்தும் வன்முறை காலம் காலமாக இருந்து வந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காணும் முதல் முயற்சி இந்த சட்டம்தான். முதல் முயற்சி என்பதாலேயே இது பல சிக்கல்களை சந்திக்கவும் வேண்டி வரும்.

பொதுவாக சுட்டிக் காட்டப்படும் சிக்கல், பொய் வழக்கு போட்டு அப்பாவி ஆண்களை கில்லாடி பெண்கள் சிக்க வைத்து சட்டத்தையே துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதாகும். இதே போன்ற கருத்து தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் மீதும் சொல்லப்படுவது உண்டு. தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மீது மேல்ஜாதியினர் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டத்தை சில தலித்துகள் பொய் கேஸ் போடப் பயன்படுத்துவதாக மேல் ஜாதி அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள், வாய்ப்புகள் எல்லாம் விதி விலக்குகளே தவிர பொது விதியல்ல. தீன்டாமை தடுப்பு சட்டம் மட்டும் இல்லையென்றால் தலித்துகள் மீதான வன்முறை இன்னும் கடுமையாக இருக்கும் என்பதுதான் யதார்த்த நிலை. இது பெண்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவில் மூன்று நிமிடத்துக்கொரு முறை என்ற விகிதத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்கிறது. கணவன், அவன் உறவினர் செய்யும் வன்முறைக் குற்றங்கள் பெண்ணுக்கு எதிராக ஏழு நிமிடத்துக்கொரு சம்பவம் என்ற விகிதத்தில் நடக்கிறது. வரதட்சணை கொடுமையில் சாவு நிகழ்ச்சியின் விகிதம் 77 நிமிடங்களுக்கு ஒன்று.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சந்திக்கக் கூடிய இன்னொரு சிக்கல், அன்புதான். 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று பல தலைமுறைகளாக கணவனின் வன்முறையை சகித்துக் கொள்ளப் பெண்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அணைப்பதும் சரி, அடிப்பதும் சரி ஆணின் சுயநலம் மட்டுமே சார்ந்ததாக இருப்பதை உணரும் பெண்கள் எண்ணிக்கை இப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. புகார் கொடுத்துவிட்டு பிறகு சிறையில் இருக்கும் கணவனுக்காகப் பரிதாபப்படுவது பெண்ணின் அன்பையும் மரபான அடிமை மனதையும் காட்டுகிறதே தவிர, அவளுக்கு எதிரான வன்முறையை அது தீர்க்காது.

இதை பாரதி சுமார் 80 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறான். சம உரிமைக்காகப் போராடும் பெண்கள், பாரதப்போரில் அர்ச்சுனனின் மன நிலையில் இருக்கிறார்கள். அவன் சொந்த சகோதரர்களுடன் எப்படிப் போரிடுவது என்று கலக்கமடைந்தானோ, அதே போல பெண்களும் தங்கள் அன்புக்குரிய அப்பா, சகோதரன், காதலன், கணவன் இவர்களுடன் எப்படி சம உரிமைக்காகப் போராடுவது என்று மயங்கக்கூடாது என்கிறான் பாரதி.

பிறந்த வீடு, புகுந்த வீடு என்று காலம் காலமாக பெண்ணின் மனதில் பதிக்கப்பட்டிருக்கும் வரையறையையும் இந்த சட்டம் மாற்றுகிறது. இது புகுந்த வீடு. இது பிறந்த வீடு. அப்படியானால் எது என் சொந்த வீடு என்ற நியாயமான கேள்விக்கு அன்றே பாரதி பதில் சொல்லியிருக்கிறான். இப்போதைய சட்டமும் அதையே சட்டப்படியானதாக ஆக்குகிறது.

கணவன் அடித்தால், வீட்டை விட்டு துரத்தினால், போகமாட்டேன் என்று சொல்லும்படி பெண்ணுக்கு பாரதி ஆலோசனை சொல்கிறான். இது என் வீடு. என் குழந்தைகளுக்கும் எனக்கும் சமைத்து சாப்பிடுவேன். உனக்கு சமைத்துப் போட மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன் என்று சொல் என்கிறான் பாரதி. திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் வீட்டுக்கு மனைவி வந்தாலும், அது அவர்கள் இருவருக்கும் சம உரிமையுடைய குடும்ப வீடாக ஆகிவிடுகிறது என்பதுதான் இன்றைய சட்டம். அதைக் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காக்கும் சட்டமும் வலியுறுத்துகிறது. வீட்டை விட்டு மனைவியை துரத்தும் உரிமை கணவனுக்கு இல்லை என்பது இந்த சட்டத்தினால் கிடைக்கும் இன்னொரு பாதுகாப்பாகும்.

பாரதி, பெரியார் போன்றோரெல்லாம் கனவு கண்ட சமத்துவத்தை பெண் அடைவதற்கு முன்னால் குறைந்தபட்சம் அவளை வன்முறையிலிருந்தேனும் காப்பாற்ற வந்துள்ள இந்த சட்டம் புரட்சிகரமானது என்பதில் சந்தேகமே இல்லை. இதைக் கொண்டு வந்ததற்காக ரேணுகா முதல் ஒவ்வொரு மகளிர் அமைப்பின் உறுப்பினரும் நிச்சயம் பெருமைப்படலாம். ஆனால் இந்த புரட்சிகரமான சட்டத்துக்குத் தேவையே இல்லாத குடும்பச் சூழலை ஏற்படுத்துவதுதான் நமது சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் பெருமையாக இருக்க முடியும்.

(ஆனந்தவிகடன் 8-11-2006)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com