 |
ஞாநி
நோபல் பரிசு 7 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?
''நோபல் பரிசு பெறும் முகமது யூனுஸ் யார்?''
''பிச்சைக்காரர்களை வியாபாரிகளாக்கியவர்!''
'உண்மையான உதவி என்பது மீனை இலவசமாகத் தருவது அல்ல; மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான்' என்ற பொன்மொழியைப் பலபேர் பல காலமாக மேற்கோள் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதைச் செய்துகாட்டியவர் யூனுஸ். அதனால் தான் அவருக்கும், அவர் தொடங்கிய ‘கிராமீன்’ (கிராமிய என்று அர்த்தம்) வங்கிக்கும் இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எல்லோரும் வியக்கும் வண்ணம் மூலைக்கு மூலை பெருகி வரும் 'சுய உதவிக் குழு திட்ட'த்தின் தந்தை யூனுஸ். வங்க தேசத்தில், 1987-ல் அவர் தொடங்கிய பெண்கள் சுய உதவிக் குழுதான் கிராமீன் வங்கியாக வளர்ச்சி அடைந்து, இன்று 22 நாடுகளில் இயங்கி வருகிறது.
சிட்டகாங் நகருக்கு அருகே ஒரு கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் 1940-ல் பிறந்தவர் யூனுஸ். உள்ளூர்ப் பள்ளிகளில் படித்தவர், பின்புவெளி நாடுகளில் படித்து, சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியரானார். 1974-ல் கடும் பஞ்சம் காரணமாக வங்க தேசத்தில் பட்டினிச் சாவுகள் நடந்தன. மாணவர்களுடன் கள ஆய்வுக்குச் சென்ற யூனுஸ், ஏழை மக்கள் உழைத்தாலும் பட்டினியில் இருக்கக் காரணம் கடன் சுமைதான் என்று அறிந்தார். மூங்கில் மோடாக்கள் பின்னும் ஏழைப் பெண்கள், மூலப்பொருள் வாங்குவதற்காகக் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, மூச்சுத் திணறுவதைக் கண்டார். அவர்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் தந்தார். எல்லாப் பெண்களும் பாடுபட்டு உழைத்துப் பணம் ஈட்டி, கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்தார்கள். இதிலிருந்துதான் கிராமீன் வங்கி ஐடியா உதயமாயிற்று.
1976-ல் தொடங்கப்பட்ட கிராமீன் வங்கி, இதுவரை மொத்தமாக 53 லட்சம் பேருக்குச் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்புக்குக் கடன் வழங்கியிருக்கிறது. யூனுஸின் இந்த வங்கி மாடலைப் பின்பற்றித்தான் இன்று இந்தியா முதல் அமெரிக்கா வரை வரை சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
கிராமீன் வங்கியின் இன்னொரு திட்டம் - பிச்சைக்காரர்களை வியாபாரிகளாக்கியது. வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்கும்போது, சில பொருட்களையும் எடுத்துச் சென்று விற்கும்படி பிச்சைக்காரர்களிடம் சொல்லப்பட்டது. சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், பிஸ்கட்கள் போன்றவை விற்பதற்குக் கொடுக்கப்பட்டன. ஒரே ஆண்டில் மொத்தம் 38 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இதில் பங்கேற்று வியாபாரிகளாக மாறினார்கள்.
யூனுஸின் இன்னொரு சாதனை - கிராமங்களுக்கு செல்போனைக் கொண்டு சென்றது! கிராமீன் வங்கியிலிருந்து 90 லட்சம் கிராமவாசிகளுக்கு செல்போன்கள் தரப்பட்டன (இதுவும் கடனுக்குத்தான்). ஒவ்வொரு செல்போன்காரரும் அதை ஊரில் மற்றவருக்குப் பேச இரவல் கொடுத்துக் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதாவது, செல்போன் வைத்திருப்பவரே நடமாடும் பப்ளிக் பூத் ஆகிவிடுகிறார். இப்படி வசூலிக்கும் கட்டணத்தில் கடனை அடைத்துவிட்டு, வருமானம் ஈட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
கிராமீன் வங்கி மூலம் யூனுஸ் உருவாக்கிய இன்னொரு திட்டம், கதர் போன்ற கைத்தறித் துணிகளைப் பரப்புவது. கிராமீன் செக் எனப்படும் டிசைனில் வாரத்தில் ஒரு நாளேனும் உடை உடுத்த வேண்டும் என்ற பழக்கத்தை முதலில் அவர் ஏற்படுத்தினார். இன்று அந்த டிசைன் உடை, வங்க தேசத்தில் பலரும் தினசரி உடுத்தும் உடையாகிவிட்டது. யூனுஸின் மனைவி அஃப் ரோஜி, இயற்பியல் பேராசிரியர். இரண்டு மகள்கள் - மோனிகா, தினா. யூனுஸ் இதுவரை பெற்றிருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் மட்டும் 27. விருதுகள் 62.
காந்தி சொன்ன கிராமப் பொருளாதாரம், கூட்டுறவுக் குழுக்கள், உள்ளூர் நெசவு எல்லாவற்றையும் கிராமீன் வங்கியும் யூனுஸூம் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். நோபல் பரிசுத் தொகையாக வரும் சுமார் 7 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள் யூனுஸூம் கிராமீனும்..? மலிவு விலையில் உணவு தயாரித்து, ஏழைக் குடும்பங்களுக்கு விற்கும் தொழிற்சாலை மற்றும் ஏழைகளுக்கான கண் மருத்துவமனை இரண்டையும் தொடங்கப் போகிறார்கள்.
யூனுஸூக்கும் கிராமினுக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பதால் நம் ஊர் மகளிர் சுய உதவிக் குழுக்களும் உற்சாகமடைந்து சீக்கிரமே செல்போன், ஜவுளித் தொழில்களை எல்லாம் ஆரம்பித்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்போமா? நினைக்கையிலேயே கனவு இனிக்கிறதே!
(ஆனந்தவிகடன் 25-10-2006)
|