 |
ஞாநி
காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?
பல பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர். அவரே பிரதமராகும் வாய்ப்பு 1966-ல் வந்தது. ஆனாலும், பிரதமராக அவர் விரும்பவில்லை. ஏன் என்று காமராஜரே தன்னிடம் கூறிய காரணத்தை புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் இப்போது தன் புதிய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். காரணம் கடைசியில்!
'ஸ்கூப்' என்ற குல்தீப் நய்யாரின் புத்தகத்தின் தலைப்பே ஒவ்வொரு பத்திரிகை நிருபருக்கும் நோபல், ஆஸ்கர் விருது போன்றது. வேறு யாருக்கும் கிட்டாத செய்தியை, பெரும் சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய செய்தியைத் தான் மட்டுமே கண்டு பிடித்து வந்து வெளிப்படுத்துவதுதான் ஸ்கூப்.
சுமார் 60 வருட காலமாகப் பத்திரிகையாளராக இருந்து வரும் 82 வயது குல்தீப் நய்யார், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலம் முதல் சமீபத்தில் லாகூருக்கு நட்பு பஸ் விட்டது வரை, இந்த 60 வருடங்களில்தான் எழுதிய முக்கிய ஸ்கூப்களை இந்தப் புத்தகத்தில் சுருக்கமாகத் தொகுத்திருக்கிறார்.
குல்தீப்பின் பத்திரிகை - சமூக வாழ்க்கை சுவாரஸ்யமானது. அரசாங்கத்தில் செய்திப் பிரிவு அதிகாரியாக வேலை பார்த்தவர், அரசாங்கத்தாலேயே சிறைவைக்கப்பட்டார். பின்னர், அதே அரசின் தூதராக லண்டனுக்குச் சென்றார். பின்பு, ராஜ்யசபை எம்.பி-யாகவும் ஆனார். அரசியல்வாதிகளின் நண்பராகவும் விமர்சகராகவும் விளங்கியவர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நட்பு, மதச் சார்பின்மை ஆகிய இரண்டு கொள்கைகளிலும் பிடிவாதமாக இருக்கும் குல்தீப்... காந்தி, ஜின்னா, மவுன்ட்பேட்டன், நேரு, சாஸ்திரி, காமராஜர், இந்திரா, மொரார்ஜி எனப் பல முந்தைய தலைமுறை பிரபலங்களைப் பேட்டிகள் எடுத்தவர். அரசியலில் என்ன நடக்கிறது, ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை மோப்பம் பிடிப்பது நிருபர்கள் வேலை. அவர்களுக்குத் துளியும் தகவல் தெரியாமல் தடுப்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் வேலை. இந்தக் கண்ணா மூச்சி ஆட்டத்தில் மறுபடி மறுபடி ரவுண்ட் கட்டி ஜெயித்தவர் குல்தீப்.
அதிகாரிகள்தான் அவருக்குச் செய்திகளை லீக் பண்ணுகிறார்கள் என்று பிரதமர் இந்திரா நினைத்தார். எனவே, ஓர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அதிகாரிகளையே அவர் அழைக்கவில்லை. ஆனாலும், அமைச்சரவை ரகசிய விவாதங்கள் குல்தீப் வேலை செய்த பத்திரிகையில் மறுநாள் வெளியாகின. 'பேப்பரைப் படித்தால், நேற்று கேபினட் கூட்டத்தில் குல்தீப் நய்யாரும் கலந்துகொண்ட மாதிரி தெரிகிறது' என்று எரிச்சலோடு சொன்னார் இந்திரா.
தன் நீண்ட முடியை வெட்டி கிராப் செய்து கொண்டதும் தன் லுக் எப்படி இருக்கிறது என்று சகஜமாக குல்தீப்பிடம் கருத்து கேட்கும் அளவுக்கு சிநேகமாக இருந்த இந்திரா தான், அவரை நெருக்கடி நிலையின்போது கைது செய்து சிறையில் அடைத்தார்.
பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப் போராடியதில் பெற்ற சிறை வாசத்தில் 10 கிலோ எடை இழந்த குல்தீப், நெருக்கடி நிலையை எடுத்து விட்டுத் தேர்தல் நடத்தப்போகிறார் இந்திரா என்ற ஸ்கூப் செய்தியை பின்னர் வெளியிட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோவைக் கைது செய்து, சிறையில் வைத்திருந்த ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கைச் சந்தித்த குல்தீப் தான், பூட்டோ உடனடியாகத் தூக்கிலிடப்பட விருக்கும் செய்தியையும் முதலில் வெளியிட்டவர்.
இதே போல, பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்துத் தயாராக வைத்திருக்கிறது என்ற செய்தியை அதன் அணுகுண்டுத் தந்தையான விஞ்ஞானி ஏ.க்யூ.கானிடம் பேட்டி எடுத்து, முதலில் வெளியிட்டவரும் இவரே!
ராஜீவ் காந்தியுடன் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக ஜெயவர்த்தனேவை குல்தீப் நய்யார் எடுத்த பேட்டிதான், ஜெயவர்த்தனேவை நம்பலாம் என்ற நிலைக்கு வெளியுறவு அதிகாரி தீட்சித்தையும் ராஜீவ் காந்தியையும் தள்ளியது. ஆனால், ஜெயவர்த்தனே ஒருபோதும் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து தர விரும்பாதவராகவே தெரிந்தார் என்று குல்தீப் குறிப்பிடுகிறார்.
குல்தீப் நய்யாரின் புத்தகம் 60 வருட இந்தியத் துணைக் கண்டத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு பத்திரிகை நிருபர் என்பவர் தன் வேலையின் நிமித்தம் அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளுடன் உறவாடும் வாய்ப்பைப் பெறுகிறார். ஆனால், அதனாலேயே தனக்கும் பெரிய அதிகாரமும் சக்தியும் வந்துவிட்டதாக நிருபர் மயங்கிவிடக் கூடாது. வள்ளுவர் சொல்வது போல, நெருப்பில் குளிர்காயும் நிலைதான். மிகவும் நெருங்கினால் சுட்டுவிடும். அதிகம் விலகி இருந்தால், குளிர் போக்க உதவாது. செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்குத் தேவையான இந்தப் பக்குவத்தை குல்தீப் நய்யார் பெற்றிருந்ததன் அடையாளமாக 'ஸ்கூப்' தொகுப்பு இருக்கிறது. எந்த நிலையிலும் ஒரு நிருபர் தன் நெறிகளைக் கைவிடக் கூடாது என்பதற்கும் குல்தீப் நய்யாரின் அனுபவங்கள் ஆதாரமாக இருக்கின்றன.
காமராஜர் பிரதமர் ஆக விரும்பாததற்குக் காரணம், அவருடைய மொழிக் கொள்கை தான் என்கிறார் குல்தீப். 'நான் பிரதமராக ஆவதென்றால் ஆகியிருக்கலாம். ஆனால், அது நியாயமானதும் முறையானதும் அல்ல. ஏனென்றால் எனக்கு இந்தி, ஆங்கிலம் இரண்டும் தெரியாது. இந்தியாவின் பிரதமர் பதவிக்கு வருபவருக்கு நிச்சயம் இரண்டில் ஒன்றாவது தெரிந்திருக்க வேண்டும்' என்று காமராஜர் தன்னிடம் சொன்னதாகக் கூறுகிறார் குல்தீப்.
ஒரு குழப்பம்
இயக்குநர் லிங்குசாமி: ''உங்களுடைய இத்தனை வருஷ வாழ்க்கையில் என்னிக்காவது ஒரு கணம், ஒரு நிமிஷம், கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது உங்களுக்குத் தோணியிருக்கா?''
கருணாநிதி: ''அந்த ஒரு கணம், என் வாழ்க்கையின் குறுக்கே வராததற்கு ஒருவேளை கடவுள்தான் காரணமோ?''
ஒரு சிரிப்பு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொசுக்களை ஒழித்துக் கட்டுவோம் - விஜய்காந்த்.
ஒரு கவலை
நாட்டில் வேலைக்குச் செல்லும் வயதில் இருப்போரில் 58 சதவிகிதம் பேருக்கு 2004-05-ம் ஆண்டில், வருடம் முழுவதும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. வேலை இன்மைப் பிரச்னை கிராமங்களைவிட நகரங்களில் அதிகம்; ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்று இது பற்றிய ஆய்வு சொல்கிறது!
ஒரு மலர்ச் செண்டு
காகிதம் பொறுக்கும் சந்த்ராஜ் மௌரியாவுக்கு!
கருத்தரங்கில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டபோது, பிசினஸ் வகுப்பு டிக்கெட் இருந்தும் அவரை அனுமதிக்க மறுத்த அலிடாலியா ஏர்லைன்ஸ், இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டு நஷ்டஈட்டுச் சலுகை அளித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து உலகில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் ஒரு முறை சென்று திரும்புவதற்கான டிக்கெட்டை அவருக்கு இலவசமாகத் தருகிறது. சொகுசு வகுப்பில் என்றால் மூன்று பேருக்கு இலவசம். சாதா வகுப்பெனில், ஐந்து பேருக்கு! 'சாதாவே போதும். அப்போதுதான் என்னுடன் குப்பை பொறுக்கும் சக தோழர்கள் நான்கு பேரை கூட்டிச் செல்ல முடியும்' என்றிருக்கிறார் சந்த்ராஜ்!
ஒரு குட்டு
திருமாவளவனுக்கு! முன்னர் தி.மு.க. கூட்டணியி லிருந்து விலகியபோது, அந்த அணி சார்பில் வென்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர், இப்போது அ.இ.அ.தி.மு.க. அணியிலிருந்து விலகியதும், அந்தக் கூட்டில் ஜெயித்த தன் கட்சியின் இரு எம்.எல்.ஏ-க்களையும் விலகச் சொல்வாரா என்று கேட்டதற்கு, அவர் தந்த பதிலுக்காக! அப்போது தங்கள் கட்சிச் சின்னத்தில் ஜெயிக்காமல் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்ததால் விலகலாம். இப்போது, இரட்டை இலையில் நிற்காமல் சொந்தச் சின்னத்தில் ஜெயித்ததால், விலகத் தேவையில்லையாம்!
ஒரு அட்வைஸ்
'அரசியலில் குதிப்பேன்.' என்று அறிவித்திருக்கும் நடிகர் பிரபுவுக்கு. 'ப்ளீஸ்... வேண்டாமே!'
ஒரு புதிர்
அக்டோபர் 13, 15 தேதிகளில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதே போன்ற தேர்தல் 2001-ல் நடந்தபோது, எந்த ஊரில் 100-க்கு 62 பேர் ஓட்டு போடவில்லை?
1. சென்னை
2. கடையநல்லூர்
3. சின்னதாராபுரம்
படித்தவர்கள் அதிகம் இருக்கக்கூடிய சென்னை மாநகரில் தான். அதிலும், பெசன்ட் நகர் போன்ற மெத்தப் படித்தவர்கள் மிகுதியாக உள்ள வார்டில் 75 சதவிகிதம் பேர் ஓட்டுப் போடவில்லை. மிக அதிக வாக்குப்பதிவு கிராமங்களில்தான். கிராமப் பஞ்சாயத்துகளில் 65 சதவிகிதம் பேர் ஓட்டுப் போட்டார்கள். நகராட்சிகளில் 55 சதவிகிதம். சென்னை தவிர, இதர மாநகராட்சிகளில் 45 சதவிகிதம். சென்னையில் மட்டும் சுமார் 38 சதவிகிதம்தான். மற்ற நேரங்களில் தெருவிளக்கு, சாக்கடை, சொத்து வரி பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் வாசகர் கடிதம் எழுதி அங்கலாய்க்கிறவர்கள், ஓட்டுப் போடும் வாய்ப்பை அலட்சியப்படுத்துவது ஏன்?
ஆனந்தவிகடன் 22-10-2006
|