 |
அ.ராமசாமி
வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்
சில பொதுக்குறிப்புகள்:
சாதாரண நிகழ்வுகளுக்கும், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை வரையறை செய்வது பல நேரங்களில் சிக்கலான ஒன்று. புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே ஒரு சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாக ஆகி விடுவதுண்டு. இதன் மறுதலையாக விவாதிக்கத்தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதுமுண்டு. மனித வாழ்க்கை சார்ந்த எல்லாவற்றிலும் இந்த அம்சம் பொதுத்தன்மையாக இருக்கிறது. கண்டு கொள்ளப்படுவதிலும், கவனிக்கப்படாமல் போவதிலும் வினையாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்லி விடுவதும் விளக்கிக் காட்டுவதும் கூடத் தற்காலிகமானவைகள் தான்.
இப்பொதுக் குறிப்புக்குச் சமீபத்திய உதாரணம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற சினிமாவின் வெற்றி. அப்படம் கவனிக்கத்தக்க படமாகவும் வசூலில் வெற்றி பெற்ற படமாகவும் ஆகி இருப்பதில் விவாதிக்கத் தக்க அம்சங்கள் பல உள்ளன. பாடல்களாகவும் காட்சித் துணுக்குகளாகவும் ஒரு படத்தின் பகுதிகள் சின்னத்திரையில் காட்டப்பட்ட பின்னால் அப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வம் கூடும் என்பதும், அப்படத்தை முழுமையாகக் கண்டுகளிக்கப் பார்வையாளத் திரள் திரையரங்கை நோக்கி இழுக்கப்படும் என்பதும் விளம்பரங்கள் சார்ந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால் தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்களும் முன்னோட்டத் துணுக்குகளும் இதற்கு மாறாகவே இருந்து வருகின்றன. பல படங்களின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு பார்க்க வேண்டிய படம் அல்ல என்றே பார்வையாளர்கள் முடிவு செய்கின்றனர். இம்சை அரசன் இந்த மனநிலையிலேயே மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது. விளம்பரங்களாகவும் விமர்சனக் குறிப்புக்களாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண்பிக்கப்படும் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் காட்சிகளும், துணுக்குகளும் அரங்கிற்குச் சென்று பார்க்க வேண்டிய படம் என்று தீர்மானிக்கச் செய்கின்றன.
திரை அரங்கிற்குச் சென்று சினிமா பார்ப்பது என்ற வினையில் தனி நபர்களின் பொழுதுபோக்கு ஈடுபாடும் கலை ஆர்வமும் செயல்படுகிறது என்பது மேற்கத்திய மனோபாவம். ஆனால் இந்தியா போன்ற கீழ்த் திசை நாடுகளில் திரை அரங்கிற்குச் செல்வது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு சமூகச் செயல்பாடு தான். நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் இந்த அம்சம் கூடுதலாக வெளிப்பட்டதைச் சொல்ல முடியும். தனியாக ஒருவர் சினிமாவுக்குச் செல்வது அரிதான ஒன்று. நண்பர்களாக - உறவினர்களாகவே தமிழர்கள் சினிமாவைப் பார்த்து வந்தனர். புதுப்பட வெளியீடுகள் பெரும்பாலும் விழா நாட்களில் இருந்ததற்கான சமூகக்காரணம் கூட்டமாகச் சினிமாவிற்கு வருவார்கள் என்பதுதான். நகரங்களிலும் கூடக் குடும்பத்தினருடன் கிளம்பிக் கோயிலுக்குப் போய்விட்டு வருவது போன்ற ஒரு சமூகச் செயல்பாடாகவே இருந்தன. வெற்றி அல்லது இழப்பு போன்ற முக்கிய நாட்களை உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து கூட்டமாகக் கொண்டாடும் சடங்குகள் சார்ந்த சமூக நிகழ்வு. திரைப்படங்களை அரங்கிற்குச் சென்று கூட்டமாகப் பார்ப்பதில் சடங்குகளில் பங்கேற்கும் மனநிலைகள் பலவிதமாக வெளிப்படுகின்றன.
கூட்டத்தின் பகுதியாகவும், கூட்டத்தின் கூறாகவும் தனிமனிதன் மாறிக் கூட்டத்தின் குணத்தை அடையும் போது அவன் இரட்டை நிலையை அடைகிறான். அவனே நிகழ்த்துபவன்; அவனே பார்வையாளன். வெகுமக்கள் திரளின் ரசாயனத்தை விளங்கிக் கொள்ளக் கிராமப்புறக் கோயில்களில் நடக்கும் பலியிடலில் அல்லது கொடையில் ஒவ்வொருவரும் பார்வையாளர்களாகவும் நிகழ்த்துபவர்களாகவும் பங்கேற்று வெளிப்படுவதை நினைவுபடுத்திக் கொண்டால் எளிமையாகப் புரியக் கூடும். திரை அரங்கிற்குச் சென்று தான் விசிறியாக இருக்கும் நாயகனின் படத்தைப் பார்க்கும் போது வெளிப்படும் ரசிகனின் வெளிப்பாடுகள் பலவற்றை கொடையில் பங்கேற்கும் பக்தனின் மனநிலையோடு சமப்படுத்திச் சொல்ல முடியும். ஒவ்வொரு கொடையிலும் சென்று பங்கேற்பதைக் கடமையாகக் கொண்ட பக்தன் மனநிலையிலிருந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாத மனநிலைதான் நாயக நடிகர்களின் ரசிகர்களிடம் வெளிப்படுகிறது. ஏற்கனவே வந்த படத்தைப் போன்றதொரு படத்தையே திரும்பவும் தனது மதிப்பிற்குரிய நாயகன் நடித்திருந்தாலும் அதையும் பார்க்க வேண்டியது தனது கடமை எனக் கருதுகிறான். வருடத்திற்கொரு முறையாவது தனது இஷ்ட தெய்வத்திற்குப் பலிப்பொருட்கள் வழங்குவது போல ஆறுமாத இடைவெளியில் வரும் தனது இஷ்ட நாயகனின் படத்தையும் பார்த்து வைக்கிறான். அதில் அவனுக்குத் தனது மாதிரியாகவோ வழிகாட்டியாகவோ கருதும் பிம்பத்தின் புதிய மாதிரியைப் பார்த்த மகிழ்ச்சியும், செய்ய வேண்டிய கடமையை முடித்த திருப்தியும் கிடைக்கிறது.
சிறப்புக் குறிப்புகள் சில:
பெரிய திரையில் படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தோடு, கூட்டமாக அமர்ந்து படம் பார்க்கும் பார்வையாளர்களின் ஈடுபாட்டையும் கவனிப்பது எனது விருப்பங்களில் ஒன்று. இப்பொழுதும் நான் பார்க்க விரும்பும் படத்தை திரை அரங்கிற்குச் சென்று தான் முதல் தடவை பார்க்கிறேன். திரும்பவும் பார்க்க வேண்டும் என்றால் மட்டுமே கம்யூட்டர் வட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றைப் பார்க்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து பின்வரும் கருத்தைச் சொல்கிறேன்:
சமீப காலங்களில் நான் சென்ற திரை அரங்குகளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் எனக் குடும்பம் குடும்பமாக வந்து குதூகலத்துடன் பார்த்துச் செல்லும் படமாக இம்சை அரசன் இருக்கிறது. இதற்கு முன்பு இப்படிக் கலவையான கூட்டத்தைத் திரை அரங்குகளை நோக்கி இழுத்த படம் ரஜனிகாந்தின் சந்திரமுகி. சேரன் இயக்கிய ஆட்டோகிராப், லிங்குசாமியின் சண்டைக் கோழி போன்ற படங்களுக்கும் கூட கூட்டம் வந்தது; வசூலில் வெற்றியும் பெற்றன. ஆனால் அவற்றின் பார்வையாளர்கள் கலவையான பார்வையாளர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட வகைப் பார்வையாளர்கள்தான். சந்திரமுகியும் இம்சை அரசனும் தான் எல்லாவகைப் பார்வையாளர்களையும் அரங்கை நோக்கி இழுத்து வந்த படங்கள் எனச் சொல்ல வேண்டும்.
வியாபார வெற்றியை விரும்பும் திரைப்படத் தயாரிப்பு கலவையான பார்வையாளர்களை [Common Audience] குறிவைக்குமா? அல்லது குறிப்பான பார்வையாளர்களை [Target Audience] குறிவைக்குமா? என்று கேட்டால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான விடை ஒன்றைச் சொல்ல முடியாது.
கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பான பார்வையாளர்களை நோக்கியே அதிகமான படங்கள் எடுக்கப்படுகின்றன. கலவையான அல்லது பொதுவான பார்வையாளர்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் போட்டியால் திரை அரங்கிற்கு வருவதைக் குறைத்துக் கொண்ட நிலையில் குறிப்பிட்ட பார்வையாளர்களை நோக்கிப் படம் எடுப்பது என்ற நகர்வு தவிர்க்க முடியாத ஒன்று. பொதுநிலைப் பார்வையாளர் என்ற திரளை உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகித்தவர்கள் பெண்கள்தான். நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பெண்களின் விருப்பங்களே பொதுநிலைப் பார்வையாளர் திரளை உருவாக்கித் திரை அரங்கிற்கு இழுத்துக் கொண்டு வரக்கூடியன. அவர்களில் கணிசமான தொகையினரைத் தொலைக்காட்சித் தொடர்கள் கட்டிப் போட்டு விட்ட நிலையில் புதிய பார்வையாள இலக்குகள் குறி வைக்கப்பட்டன.
தொடர்ந்து வெற்றிப் படங்களை நடித்து வந்த விஜயின் படங்கள் எல்லாம், இளையோர்கள் - அதிலும் இளைஞர்கள் என்னும் குறிப்பிட்ட வகைப் பார்வையாளர்களை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் தான். அவருடைய போட்டியாளராக முன்னிறுத்தப்படும் அஜித்தின் படங்களும் யுவதிகளையும் இளைஞர்களையும் குறி வைக்கும் படங்கள் எனலாம். இந்தப் போக்கு மிகச் சமீபத்தில் வேறு தளத்திற்குச் சென்றுள்ளது. பெரியவர்கள், பெண்கள், இளையவர்கள், மாணவர்கள் என்று பொது அடையாளத்துடன் கூடிய கூட்டம் என்ற இலக்கு இடம்சார்ந்த சமூகப்பிரிவுகள் சார்ந்த கூட்டமாகக் கணிக்கப்படுகின்றன. இன்றும் திரை அரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கூட்டமாக இருப்பவர்கள் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் சேரிகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களே என்பது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கணக்கு. எனவே அவர்களிலிருந்து உண்டான மனிதர்களாகப் பாத்திரங்களையும், அவர்கள் உலாவும் சேரிகளை வெளிகளாகவும், அவர்களின் மதிப்பீடுகள் என இவர்கள் கருதும் வாழ்க்கை மதிப்பீடுகளை படத்தின் செய்தியாகவும் கொண்டு படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
தாதாக்களின் படங்கள் எனப் பெரும்பத்திரிகைகள் குறிப்பிட்ட படங்களின் காட்சி அமைப்புகளைக் கவனித்தவர்களுக்கு இது தெளிவாகத் தெரியக்கூடிய ஒன்றுதான். சேரிகளின் வெளிகளை அப்படங்கள் எவ்வாறு காட்டுகின்றன என்பதும், அங்கு வாழும் மனிதர்கள் -குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு எடுப்பார் கைப்பிள்ளைகளாக- பணத்திற்காக- எஜமான விசுவாசத்திற்காக மனித உயிர்களை எடுக்கும் கொலைகாரர்களாகவும், சமூகவிரோதச் செயல்கள் எனச் சொல்லப்படும் விபச்சாரம், கள்ளச்சாராயம், போதை மருந்துகள் விற்பனை போன்றனவற்றில் ஈடுபடுகிறவர்களாகவும் காட்டுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியன. விளிம்புநிலை மனிதர்களை வாழ்க்கை மதிப்பீடுகள் எதுவும் அற்றவர்களாகவும், பின்பற்ற விரும்பாதவர்களாகவும் காட்டுவதன் மூலம் உண்டாக்க விரும்பும் கருத்து யாருக்குச் சாதகமாக அமையும்? என்பது எழுப்பப்பட வேண்டிய கேள்வி. தலித் மக்கள் அரசியல் சக்தியாகத் திரட்டப்படும் இன்றைய கால கட்டத்தில் அவற்றிற்கெதிரான பொதுக் கருத்தை உண்டாக்கும் நோக்கம் இத்தகைய படங்களை இயக்குபவர்களுக்கும் தயாரிப்பவர்களுக்கும் இருக்கும் எனச் சந்தேகப்படுவது நியாயமற்ற சந்தேகம் அல்ல. இவ்விவாதம் தனியாக நடத்த வேண்டிய விவாதம்.
பாட்ஷா தொடங்கி வெற்றிப்படங்களாக நடித்து வந்த ரஜினிகாந்தின் பாபா படம் அடைந்த தோல்விக்குப் பல காரணங்கள் இருந்த போதிலும், பார்வையாளர் கூட்டம் குறிப்பான இலக்குப் பார்வையாளர்களாக மாற்றப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம் எனலாம். கலவையான பார்வையாளர்களின் பொதுப் புத்திக்குள் அடைபடாத பாபாவின் ஆன்மீகச் சொல்லாடலை விவாதப் பொருளாக்கிய அந்தப் படம் எண்ணிக்கையில் மிகக் குறைவான ஆன்மீகவாதிகளின் இலக்காக மாறிவிட்டது. பாபாவின் தோல்விக்கான காரணம் உணரப்பட்ட நிலையில் அடுத்து நடித்த சந்திரமுகியில் சரிசெய்து வெற்றி பெற்றார் ரஜினிகாந்த். எல்லாவகைப் பார்வையாளர்களும் கண்டு திளைக்கும் காட்சிகளும் ரகசியங்களும் அப்படத்தில் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டன. அத்தகைய கலவைக்கேற்ற இயக்குநராக பி.வாசுவைத் தேர்வு செய்ததில் தான் ரஜினிகாந்தின் வெற்றி இருந்தது.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் வெற்றி அப்படிப்பட்டதொரு வெற்றிதான். திரைப்பட இயக்கம் என்ற அளவில் எந்தவிதப் புதுமையையும் இந்தப் படம் முயற்சிக்கவில்லை. ஏற்கெனவே வெற்றி பெற்ற இரட்டை வேடத் தமிழ் சினிமாக்களிலிருந்து கலக்கி எடுத்த பழைய கதை மற்றும் திரைக்கதை அமைப்பை அப்படியே எடுத்துக் கொண்டுள்ளது. மையப்பாத்திரங்களின் முரண் மற்றும் வளர்ச்சி என்பதிலும் கூட புதுமை எதையும் முன் வைக்காத படம் தான் 23 ஆம் புலிகேசி. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஷங்கரும் இயக்குநர் சிம்புத்தேவனும் எடுத்த தைரியமான முடிவு மொத்தப் படத்தையும் நகைச்சுவைப் படமாக எடுப்பது எனத் தீர்மானித்தது தான். அத்தீர்மானித்துடன் மையக் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை இரட்டை வேடத்தில் நடிக்க வைப்பது என்ற முடிவும் கூடத் தைரியமான முடிவு தான். அவர்கள் எடுத்த இந்தத் தைரிய [risk] முடிவுகள் வியாபார வெற்றியை மட்டும் அல்லாமல் கவனிக்கத்தக்க படம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது.
சூழலில் பெறும் தனித்தன்மை
23 ஆம் புலிகேசியின் வியாபார வெற்றிக்குப் பின்னால் அந்தப் படம் வந்த சூழல் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ரத்தம், வன்முறை, அடிதடி, கொலை என அலையும் இளைஞர்களின் சமூகவிரோதச் செயல்களின் பின்னணிகளைக் குறிப்பான சூழலில் நிறுத்தி நியாயப்படுத்தும் படங்களாக - தாதாக்களின் உலகத்தை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும், அவர்களோடு இணைந்து நிகழ்கால அரசியல் மற்றும் அதிகார அமைப்புக்கள் ஊழல் புரிவதாகவும் பேசும் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த சூழலில் அவற்றிலிருந்து விலகி நின்ற ஒற்றைக் காரணமே புலிகேசியின் வெற்றிக்கு முதல் காரணம். நிகழ்வுச் சூழலால் உண்டாகும் இத்தகைய எதிர்பார்ப்புக்கு மாறான கவனம் பெறுதல் அல்லது வியாபார வெற்றியை தனி மனிதர்கள் அதிர்ஷ்டம் என்றோ யோகம் என்றோ கருதி விடுவார்கள். ஆனால் திரைப்படத்துறையினர் அதனை காலத்தின் போக்கு [Trend] எனக் கருதிவிடுகிறார்கள் என்பதுதான் விநோதம். அப்படிக் கருதுவதன் விளைவாக அப்படத்தின் நகல்களாகச் சில படங்களை எடுத்துத் தள்ளி விடுவார்கள். ஆனால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியை நகல் எடுப்பதும் இயலாத ஒன்று. ஏனெனில் அப்படம் புதிய அழகியல்களைத் தனது கருவியாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கருவிகளாக இருப்பனவற்றை வரலாறு, அங்கதம் அல்லது பகடியாடுதல் என இரண்டு வார்த்தைகளில் குறிப்பிடலாம்.
அலையும் பயணம்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தைப் பார்த்தவர்கள், சரித்திர காலப் படத்தைப் பார்த்த திருப்தியுடன் தான் வீடு திரும்புகின்றனர். தமிழகப் பரப்படங்கிய இந்திய வரலாற்றில் இப்படியொரு அரசன் இருந்தான் என்பதற்கான எந்தக் குறிப்பையும் வரலாற்றுப் புத்தகங்களில் அவர்கள் படித்ததில்லை. வாய்மொழிக் கதையாகக் கூடக் கேட்டதுமில்லை. புலிகேசி என்ற அரச பரம்பரை தமிழ் நிலப்பரப்பிற்கு வெளியே இருந்ததாக ஒரு வேளை வாசித்திருக்கலாம். அந்தப் பரம்பரைக்கும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த காலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த உண்மை படம் பார்க்கும் பலருக்கும் தெரியும். படத்தை இயக்கிய சிம்புத்தேவனுக்கும் தயாரித்த ஷங்கருக்கும் கூட நன்றாகவே தெரியும்.
வரலாறு சார்ந்த நிகழ்வு ஆதாரம் எதுவும் இல்லாமலேயே இந்த அரசனின் சாயல் கொண்ட குறுநில மன்னர்கள் இந்தியாவில் இருந்திருக்க வாய்ப்புண்டு; ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலப் பகுதியில் இருந்த பாளையக்காரர்களில் பலரும் இத்தகையவர்களே என்பதாக நம்பச் செய்யும் விதமாக படத்தின் கதைப் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நம்பச் செய்தாலும் இந்தியாவில் அல்லது தமிழகப் பரப்பில் எந்தப் பகுதியை அந்த அரசர்கள் ஆண்டார்கள் என்ற கேள்வி எழுப்பப்படும் என்பதால் குறிப்பான வெளி எதுவும் சுட்டப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு என்ற உண்மையையும் இயக்குநர் சொல்லவே செய்துள்ளார். எழுத்துக்களாகச் சொல்லப்படும் தகவல்களில் இவை மறைந்து நிற்கின்றன. புனைவை வரலாறாகக் காட்டுவது என்று முடிவுடன், வெளிப்பாட்டு முறையை அங்கதபாணி எனத் திட்டமிட்டுக் கொண்டு படத்தை எடுத்துள்ளனர். சமீபகாலத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களில் கச்சிதமாகத் திட்டமிட்டு எடுத்த சினிமா என்பதும் கூட அப்படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாளையக்காரர்களில் ஒருவனான 23 ஆம் புலிகேசி என்ற அடையாளம் உண்டாக்கப்படுவதன் மூலம் விதேசி X சுதேசி என்ற எதிர்வு உண்டாக்கப்பட்டு சுதேசிய உணர்வு ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது. இயல்பாகவே இந்திய மனம் சுதேசிய உணர்வு, நாட்டுப்பற்று, சொந்த மண்ணின் பெருமை போன்ற அடிப்படை உணர்வுகளுக்குள் அலைந்து கொண்டிருக்கும் மனம் என்பதால், மக்கள் நலனை மையப்படுத்தாமல், தாய்மாமனின் கைப்பொம்மையாக இருந்து விவேகமும் வீரமும் இல்லாமல் வெற்று அதிகாரம் செய்யும் இம்சை அரசன் வெறுக்கத்தக்கவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அந்தக் கற்பனைப் பாத்திரம் இந்திய வரலாற்றில் -குறிப்பாக ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த குறுநில மன்னனின் பாத்திரமாக நம்பப்பட்டு அவனது செயல்பாடுகளும் ஆட்சி முறையும் கேலிக்குரிய அபத்தங்கள் எனக் கருதப்படுகின்றன. இதைச் சாதித்துள்ள இயக்குநர் சிம்புத்தேவன், இம்சை அரசனை வரலாற்றுப் படம் என்று நம்பும்படி செய்வதற்குப் பின்பற்றியுள்ள உத்தி பாத்திரங்களின் உடை, மற்றும் ஒப்பனைகள் மட்டுமே.
ஆங்கிலேயர்களின் கப்சி, அக்கமாலா பானங்களுக்கு இம்சை அரசன் அனுமதி அளிக்கும் காட்சியில் நிகழ்கால இந்திய அரசுகள் பன்னாட்டுக் குளிர்பானங்களான பெப்சி, கொக்கோகோலாவை அனுமதித்த நிகழ்வும், அப்பானங்களில் இந்தியர்களின் உயிர்களுக்கு ஆபத்தூட்டும் நச்சுப் பொருட்களும், பூச்சிகளும் கலந்திருக்கின்றன என்ற தகவல்களும் நினைவுக்கு வராமல் போகாது. அதே போல் கொள்ளையர்களை அடக்க வேண்டிய அரசனே அவர்களின் நண்பனாக இருக்கிறான் எனக் காட்டும் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்புடைய ஆளுங்கட்சிகளுக்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களோடும் நபர்களோடும் உள்ள தொடர்புகள் நினைவுக்கு வராமல் போகாது. தேர்தல்கள் மூலமாக அரசதிகாரத்திற்கு வருபவர்களுக்குப் பயன்படும் கருவியாகப் பிரிவினைவாதச் சிந்தனைகள் இருக்கின்றன என்ற கருத்தை சாதிச்சண்டை மைதானக் காட்சியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறந்த வீரர் பரிசளிப்புக் காட்சியும் நினைவூட்டத்தான் செய்யும்.
பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், சுலபமாக இடிந்து விடக்கூடிய கட்டடங்கள், வேலை நேரத்தில் தூங்கும் ஊழியர்கள், செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் சம்பளம், போனஸ் எனக் கேட்கும் பணியாளர்கள் என விரிக்கப்பட்டுள்ள காட்சிகள், அரசுத்துறைகள் மீதும் பொதுத்துறை ஊழியர்களின் மேலும் வைக்கப்படும் விமரிசனங்கள் என்பதைச் சுலபமாகப் பார்வையாளர்கள் உணரவே செய்கின்றனர். ஊழல், கையூட்டு, தரகு, சோம்பேறித்தனம், தட்டிக் கழித்தல், சிபாரிசுகளின் வழியாகப் பணியில் சேருதல் என முடங்கிக் கிடக்கும் நிகழ்கால அரசமைப்பை விமரிசனத்திற்குள்ளாக்கும் பல காட்சிகள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் அரண்மனையில்- ஆட்சிக் காலத்தில் நிறைந்திருந்திருந்தன எனப் படம் சொன்னாலும் இவை அனைத்தும் இன்றைய இந்தியாவின்/ தமிழகத்தின் அவலங்கள் எனச் சொல்வது தான் படத்தின் அடிப்படை நோக்கம்.
நிகழ்கால அரசியலை விமரிசிக்கும் இந்தப் படம் எத்தகைய மாற்றம் வரவேண்டும் என்ற முன்மொழிதலில் குழப்பத்தையும் தெளிவின்மையும் காட்டுவதாகப் பலருக்கும் தோன்றலாம். அரசாங்கத்தை விமரிசனம் செய்துள்ளதாலேயே படத்திற்குச் சிவப்புச் சாயத்தைச் சிலர் பூசலாம். ஆனால படத்தின் இயக்குநரான சிம்புத்தேவனுக்கும் தயாரிப்பாளரான ஷங்கருக்கும் அந்தச் சாயம் உடன்பாடான சாயம் அல்ல என்பதைப் படத்திலேயே வைத்துள்ளனர். அந்நியர்கள் வெளியேற்றப் படவேண்டும்; ஆட்சி அமைப்பு மாற வேண்டியதில்லை; அதே அரசனே கூட தவறுகளைக் களைந்து கொண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதாகப் படத்தை முடிக்கும் சிம்புத்தேவன் படத்தின் மையக்கதாபாத்திரமான (மனம் மாறிய) இம்சை அரசனின் வழியாக அறிவிக்கும் புதிய [பத்து] கட்டளைகள் கவனிக்க வேண்டியவை. இருக்கிற அமைப்பை மாற்றாமல் பழுதுபார்த்துப் பயன்படுத்தினால் போதும் என வலியுறுத்தும விதமாகவே அந்த அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புகளால் உண்டாகும் மாற்றங்கள் இடதுசாரிகள் விரும்பும் மாற்றங்கள் அல்ல. நேர்மையான அரசைத்தர விரும்பும் வலதுசாரிகளின் மாற்றங்கள் அவை. அந்த நம்பிக்கை மட்டுமே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இருப்பதைப் படம் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது.
அவர்கள் நம்புவதைப் படமாக எடுத்ததன் மூலம் நிகழ்கால அரசியல் விமரிசனப் படம் ஒன்றை எடுத்து, பார்வையாளர்களைப் பார்க்கச் செய்ததன் மூலம் வணிக வெற்றியையும் அடைந்துள்ளனர். இதே நோக்கத்தோடு வலதுசாரிச் சித்தாந்தியும் பத்திரிகையாளரும் நடிகருமான சோ அவர்கள் எடுத்த சில சினிமாக்களும் மேடையேற்றிய நாடகங்களும் [முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன.?] இந்த அளவு கவனத்தைப் பெறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். காரணம் அவை வெறும் வார்த்தை சார்ந்த விமரிசனமாக மட்டுமே இருந்தன. வெகுமக்கள் சினிமா என்ற ஊடகத்தின் கலையம்சங்களையும் காட்சி அமைப்புகளையும் நிராகரித்திருந்தன.
அரசர்கள் காலத்து உடை என்பதாக ஏற்கனவே அறிமுகம் பெற்றுள்ள பளபளப்பு ஆடைகளையும் மிகக் குறைந்த செலவில் அமைக்கப்பட்ட அரங்க அமைப்பையும் மொத்தத் தமிழ்நாட்டிற்கும் புரியக்கூடிய பொதுத் தமிழ் வசனங்களையும் வைத்துக் கொண்டு பார்வையாளர்களைச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துப் போயுள்ளனர். அதே நேரத்தில் காட்சிக் கோர்வைகளையும், பேசப்படும் வசனங்களையும் பயன்படுத்தி நிகழ்காலத்திற்கும் அழைத்து வந்துள்ளனர். கடந்தகாலத்திற்குள்ளும் நிகழ்காலத்திற்குள்ளும் பார்வையாளர்களை மாறிமாறிப் பயணம் செய்யும்படி தூண்டும் வெளிப்பாட்டு முறையில் தான் அங்கதபாணி [Satire] யின் வெற்றி அமைந்திருக்கிறது. அந்தப் பாணியை மொத்தப் படத்திற்கும் பயன்படுத்திய வகையில் சிம்புத்தேவன் கவனிக்கத் தக்க இயக்குநராக ஆகியிருக்கிறார். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி குறிப்பிடத்தக்க படமாக ஆகியிருக்கிறது. அப்படத்தின் மையக்கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வடிவேலுவும் நாசரும் நடிப்புக் கலையின் சாத்தியங்களைத் தொட்டுள்ளனர்.
|