 |
ஞாநி
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...
உங்கள் பொன்னான வாக்குகளை நாங்களே போட்டுக் கொள்வோம்! உள்ளாட்சித் தேர்தல் தினத்தன்று மாலை, கடும் கோபத்தில் இருந்தேன். காரணம், சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் தி.மு.க. நடத்திய வன்முறை வெறியாட்டம் பற்றி வெளியான தகவல்கள். என் விரலில் வைக்கப்பட்ட அடையாள மை எதன் அடையாளம் என்று யோசித்தேன். நான் ஓட்டுப் போட்டுவிட்டதன் அடையாளம் அல்ல அது; என் ஓட்டுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைத்த என் முட்டாள்தனத்தின் அடையாளம்தான் என்பது புரிந்ததும், என் மீதே எனக்குக் கடுங்கோபம்.
சென்ற முறை அ.தி.மு.க. வன்முறை செய்யவில்லையா, இந்த முறை நாங்கள் செய்தால் என்ன என்ற ரீதியில் தி.மு.க அறிக்கை விடாத குறைதான். ஆனால், தன் வன்முறைகளையும் அராஜகங்களையும் மறைத்துக்கொள்ள ஜெயலலிதாவிடம் நல்ல முகமூடிகள் இல்லை. கருணாநிதிக்கு அவருடைய முதுமையும் மொழிச் சாதுர்யமும் இருக்கின்றன.
சென்னையில் பூத் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், நெஞ்சைத் தொட்டு உண்மைகளைச் சொன்னால், தேர்தல் அராஜகங்கள் இந்த முறை எந்தளவு முன் திட்டமிட்டு செய்யப்பட்டன என்று அம்பலமாகக்கூடும். போலீஸ் பொம்மையாக்கப்பட்டது, மாற்றுக் கட்சியினர் தாக்கப்பட்டது, சிறைப் பிடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களில் அடைக்கப்பட்டது, பூத் அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டது, கூலிப்படை ரவுடிகளைப் பயன்படுத்தியது என்று பலதும் வெளிவரக்கூடும்.
டெல்லியில் தாங்கள் ஆதரிக்கும் காங்கிரஸ் அரசை விமர்சிப்பதில் பத்தில் ஒரு பங்குகூட, சென்னையில் தங்கள் ஆதரவுபெற்ற தி.மு.க. அரசு மீது இடதுசாரிகள் சொன்னதில்லை. ஆனால், அவர்களே இந்த முறை சென்னையில் தி.மு.க. நடத்திய அராஜகம் பற்றி கொதித்துப் போய் அறிக்கை விடவேண்டியதாகியிருக்கிறது.
வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஆற்று மணல், கடை வாடகை, எம்.எல்.ஏ - எம்.பி. தொகுதி நிதி என்று பல ரூபங்களில் ஒவ்வொரு வார்டிலும் லட்சக்கணக்கில் பொதுப் பணம் புழங்குகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டே, பல லட்சங்களை ஒரு முதலீடாக இப்போது பிரசாரத்திலும், வாக்காளருக்கான லஞ்சமாகவும், ரவுடிகளுக்கான கூலியாகவும் செலவழிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக தலைவர் பதவிகளுக்குப் பேரங்கள், வரும் வாரங்களில் நடக்கப்போகின்றன. அப்போது ஆள் கடத்தல் புகார், திரை மறைவுப் பண பேரம் என்று இன்னும் அசிங்கமான முகங்கள் வெளிப்படக்கூடும்.
இதிலிருந்தெல்லாம் விடிவே இல்லையா? மறுபடியும் காந்தி மாதிரி, பெரியார் மாதிரி, மார்க்ஸ் மாதிரி தன்னலமற்ற வழிகாட்டிகள் வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கம்தான் எழுகிறது. சரி, அப்படியே வந்தாலும்தான் இன்றைய காலகட்டத்தில் என்ன ஆகும்?
காந்தியோ பெரியாரோ அல்லது மார்க்ஸ் வழிவந்த இடதுசாரி முன்னோடிகளோ என்ன சாதித்திருந்தாலும், அவை எல்லாமே மக்களின் ஆதரவுடன் சாதித்தவைதான்! இவர்களைப் பின்பற்றியவர்கள் எல்லாரும் இவர்களின் வழிமுறைகளையும் முழு மனதாக நம்பினார்கள். அதனால்தான் காந்தி முன் நடத்திய இயக்கங்களில் உப்பெடுக்கச் சென்றாலும், மறியலானாலும், முதல் தொண்டரைப் போலீஸ் அடித்தால், அடுத்த தொண்டர் பயந்து ஓடியதில்லை. நின்று உதைபட்டாலும் தன் கருத்தில்உறுதியாக இருந்தனர். எதிரி தாக்கினால், இடதுசாரித் தொண்டர்கள் பதிலுக்குத் தாக்கினார்கள்.
இன்றைக்கு காந்தியோ பெரியாரோ அசல் மார்க்ஸியவாதியோ ஒரு போராட்டத்தை நடத்தினால், அவர்களுக்குப் பின்னால் போகக் கூடியவர்கள் தங்கள் கருத்துக்காக உதைபடவும் தயாராக இல்லை; தற்காப்புக்காகப் பதிலுக்குப் போராடவும் தயாராக இல்லை. எந்தத் துயரமும் வராது என்று தெரிந்தால் மட்டுமே, 'கொள்கைப் பிடிப்'போடு இருக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆக, காந்தியும் பெரியாரும் மார்க்ஸூம் தனியாகத் தான் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். கடைசியாக... ஓட்டுச்சாவடி அராஜகங்களுக்கு ஒரு தீர்வு யோசனை இதோ... யாரும் பூத்துக்கே போகத் தேவையற்ற தேர்தல் தேவை. தெருத் தெருவாக ஒரு மொபைல் பூத் சென்று நின்றதும், அந்தந்தத் தெரு வாக்காளர்கள் வந்து அதில் ஏறி ஓட்டளித்துவிடலாம். மொபைல் பூத்துக்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது எளிது. இன்ன இடத்துக்கு இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை மொபைல் பூத் வரும் என்று நிர்ணயிக்கலாம். அதிக வாக்குகள் பதிவாகும் வாய்ப்பும் உண்டு. தெருத் தெருவாக தண்ணீர் லாரி வருவது போல இதையும் செய்ய முடியும். இதெல்லாம் நடக்காது என்று அவநம்பிக்கை வேண்டாமே! பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மாற்றத்துக்கான சுவடுகள் தெரிகிறதே... நம்பிக்கைதான் வாழ்க்கை!
இந்த வார வியப்பு!
நவம்பர் 25, 1981 அன்று ரொடீஷியா என்ற பெயரில் இருந்த இப்போதைய ஜிம்பாப்வே நாட்டிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை 48 கடத்தல்காரர்கள் சேர்ந்து, தென் ஆப்ரிக்க டர்பன் நகருக்குக் கடத்திச் சென்றார்கள். கடைசியில் எல்லாரும் சரணடைந்தார்கள். செஷல்ஸ் தீவில் ஆட்சி மாற்றத்துக்காக நடந்த இந்த விமானக் கடத்தலில் கூலிப் படையாக ஈடுபட்ட பீட்டர் 21 மாத சிறைவாசத்துக்குப் பின் பத்திரிகைப் புகைப்படக்காரர் ஆனார். முதலில் விமானத்துக்குள் பைலட் சக்சேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த விமானத்தைக் குண்டுவைத்துத் தகர்த்துவிடுவதாக மிரட்டியவர் பீட்டர். சரணடைந்தபோது பீட்டர், சக்சேனாவிடம் 'மீண்டும் சந்திப்போம்' என்றார். 'சந்திக்கலாம். ஆனால், இதே மாதிரி வேண்டாம்' என்றார் சக்சேனா. சொன்னபடி 25 வருடங்களுக்குப் பின், சென்ற வாரம் மும்பை அந்தேரியில் சக்சேனாவின் வீட்டில் அவரையும் அப்போதைய ஏர் ஹோஸ்ட்டஸ் அல்காவையும் பீட்டர் சந்தித்து உரையாடினார். விமானக் கடத்தல் பற்றிய ஒரு புத்தகத்தை பீட்டர் சக்சேனாவுக்கு அவர் பரிசளித்தார்.
இந்த வாரப் பூச்செண்டு!
ஆட்சி மாறும்போதெல்லாம் புதிய முதலமைச்சரைப் பாராட்டி சினிமாக்காரர்கள் நடத்தும் டான்ஸ் -உடான்ஸ் மேளாவை அம்பலப்படுத்தும் விதத்தில் 'ஓ' பக்க வேண்டுகோளை ஏற்று, இப்போது கருணாநிதி விழாவை சன் டி.வி. ஒளிபரப்பிய அதே சமயத்தில், முந்தைய ஜெயலலிதா விழாவை மறு ஒளிபரப்பு செய்த ஜெயா டி.வி-க்கு! அதற்கு முந்தைய கருணாநிதி விழாவை அடுத்த வாரம் சன் டி.வி. ஒளிபரப்பினால் அவர்களுக்கும் பூச்செண்டு உண்டு!
இந்த வாரக் குட்டு!
மத்திய தேர்தல் ஆணையத்திடம் சும்மா கிடக்கும் ஆயிரக்கணக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இரவல் வாங்கி, சென்னை மாநகராட்சி போன்ற பெரு நகரங்களிலாவது உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தலாம் என்று வாக்காளர் விழிப்பு உணர்வு அமைப்புகள் யோசனை சொல்லியும் கேட்காமல், வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்திய மாநில தேர்தல் ஆணையத்துக்கு இ.வா.குட்டு! மின்னணு இயந்திரங்கள் இருந்திருந்தால், இந்த அளவு தில்லுமுல்லு செய்திருக்க முடியாது!
இந்த வாரப் புதிர்!
50 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகக் கைவசம் வைத்திருக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்? (மொத்த மக்கள் தொகை சுமார் 120 கோடி)
1. 7 கோடி பேர்
2. 70 லட்சம் பேர்
3. 7 லட்சம் பேர்
4. 7 ஆயிரம் பேர்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, தற்போது 7 லட்சம் இந்தியர்கள், விரும்பியபடி சொகுசுப் பொருட்களை வாங்கும் வசதியுடன் கைவசம் 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கம் வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். விலை உயர்ந்த கடிகாரம், நகைகள், மதுவகைகள் வாங்குவது, வெளிநாடுகளுக்கு உல்லாசக் கப்பல்களில் சுற்றுலா போவது போன்றவை எல்லாம் சொகுசுச் செலவுகள். இந்த வகைகளில் மட்டும் இந்தியா வில் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்கள் செலவிடப்படுகிறதாம்.
(ஆனந்தவிகடன் 25-10-2006)
|