நீலப்புலிகள்' இயக்கமாக இறுதி வடிவமெடுத்ததன் இயக்க வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்வார் மணி: ""1960 வாக்கில் சிறுவர்களால் தொடங்கப்பட்டு, 1962 இல் "அம்பேத்கர் கல்வி வளர்ச்சி மன்றம்', 1967 இல் தந்தை பெரியாரின் அறிவுரைப்படி இயக்கத் தனித் தன்மையை இழக்காமல் காமராஜருக்கு ஆதரவு நிலை, 1974 இல் காமராஜர் மறைவிற்குப் பிறகு விலகி நின்று கடும் போராட்டங்கள், நூற்றுக்கணக்கான தீண்டாமை வழக்குகள், சிறு பெரும் கலவரங்கள்...'' என அவரது இயக்கம் வளர்ந்தது ("விடுதலை முழக்கம்', அக்டோபர் 2009).

1982 முதல் 1992 வரை இளையபெருமாளின் மனித உரிமைக் கட்சியின் கீழ் இயங்கிய போதும் மணி தனது தனித்தன்மையை இழந்துவிடவில்லை. 1990 இல் தனது "அம்பேத்கர் கல்வி வளர்ச்சி மன்றத்தை' விரிவாக்கி "அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை' என  ஓர் இயக்கமாக்கினார். அதுவே 1996 இல் "நீலப்புலிகள்' இயக்கமாக உருவெடுத்தது. எனினும் இளைஞர்களுக்கு விரிவான சமூக அறிவு வேண்டும் என்பதால் 2010 இல் "கற்பி பாசறை'  என்றொரு படிப்பு வட்டத்தை தனது பொறுப்பில் உருவாக்கி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கோட்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அவர் மகன் புரட்சிமணி கூறுகிறார்.

திருப்பனந்தாள் பகுதியை ஒட்டிய பிரச்சினைகளில் தன் சக்தி முழுவதையும் செலுத்தி இயங்கியபோதும் மணியின் பார்வை எப்போதும் தலித் மக்களின் பொதுப்பிரச்சினைகள், அவர்களுக்கான இறுதி விடுதலை குறித்த சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து அகலவில்லை. ஆறு மாத காலம் அவர் சிறையில் கழிக்க நேரிட்டபோது  சிறையில் இருந்த அன்றைய நக்சலைட் தோழர்களுடன் அவர் விரிவான விவாதங்களை மேற்கொள்கிறார். வெளியில் வந்த பின்னும் இப்பகுதியில் களப்பணி புரிந்து தியாகிகளான தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்கள் புரிகிறார். அடிப்படை மார்க்சியம், மாவோயிசம் ஆகியவற்றையும் பயில்கிறார்.

திருப்பனந்தாள் மடத்தை எதிர்த்த போராட்டங்களில் நக்சல் இயக்கத்தவரோடு பல்வேறு நிலைகளில் இணைந்து இயங்கிய போதும் எந்நாளும் அவர் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்றதில்லை என்பதை அவர் மகன் புரட்சிமணி வலியுறுத்துகிறார். இந்திய சமூகப் பிரச்சினைகளை வர்க்க வேறுபாடு என்கிற கருத்தாக்கத்தின் மூலம் புரிந்து கொள்ள இயலாது என்பதை மணியும் தன் எழுத்துக்களில் ஆங்காங்கு பதிகிறார். தமிழக அளவில் இவ்வாறு பல்வேறு நிலைகளில் பணி செய்து கொண்டிருக்கும் தலித் இயக்கங்களை இணைப்பது அவசியம் என்கிற எண்ணம் இறுதிவரை அவரிடம் குடி கொண்டிருந்தது. அதற்கான முயற்சிகளையும் அவர் இறுதிவரை கைவிடவில்லை.

1984 தேர்தலுக்குப் பிறகு ""தமிழக அளவிலுள்ள தலித் தலைவர்கள் அத்தனை பேரையும் பறையர், பள்ளர், அருந்ததியர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஒன்று திரட்ட'' இளையபெருமாள் மேற்கொண்ட முயற்சியில் அவருடன் இருந்து ஊக்கம் தந்தவர் மணி. இறுதியில் அம்முயற்சி "ஷெட்யூல்டு இன விடுதலைக் கூட்டமைப்பு' என்பதாக விடிந்தது. வை. பாலசுந்தரம் தலைவராகவும் டாக்டர் சேப்பன் பொருளாளராகவும் சக்திதாசன் பொதுச் செயலாளராகவும் பெரியவர் மு. சுந்தர்ராஜன் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர். தஞ்சை, தென்னாற்காடு, சென்னை முதலான மாவட்டங்களில் சிறு சிறு பொதுக்கூட்டங்களுக்குப் பின் சூன் 29, 1986 இல் மணி அவர்கள் முன்நின்று நடத்திய பந்தநல்லூர் மாநாட்டை அவரது மிகப்பெரிய சாதனையாக இன்றும் நீலப்புலிகள் இயக்கத்தவர்கள் நினைவு கூறுகின்றனர்.

தொண்ணூறுகளுக்குப் பின் தமிழக தலித் இயக்கப் போக்கில் ஒரு மிகப்பெரிய பண்புமாற்றம் ஏற்பட்டது. உலகளவில் ஏற்பட்ட ஊடகப்பெருக்கம், அடையாள அரசியலுக்குத் தத்துவார்த்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட பலம்,  இந்தியாவைப் பொருத்தமட்டில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட எழுச்சி முதலியன இதில் முக்கியப் பங்கு வகித்தன. தலித் அமைப்புகளை பொருத்தமட்டில் இது இங்கு இரண்டு விளைவுகளை ஏற்படுத்தின. திருப்பனந்தாள் மணி அல்லது பரமக்குடி சந்திரபோஸ் என்கிற அளவில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தலைவர்களைக் கடந்து தொல்.திருமாளவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி முதலான தமிழக அளவிலான தலைவர்கள் உருவாயினர். இவர்கள் சென்னையை  மய்யமாக வைத்து இயங்கத் தொடங்கினர். ஊடக வெளிச்சம் இவர்களுக்கு தாராளமாக கிட்டியது.

இதன் இன்னொரு விளைவு, இந்தத் தலைவர்கள் தமிழக அளவில் செயல்பட நேர்ந்ததன் ஊடாக இவர்கள் தலித் பிரச்சினைகளைக் கடந்து, தமிழக அளவிலான பொதுவான தேசிய அடையாளங்களை சூடிக்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செல்வாக்குடன் உருவான தலைவர் திருமாவளவன் தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு, அதிலும் குறிப்பாக  விடுதலைப் புலிகள் ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.  தேர்தல் பங்கேற்பு மூலமான அரசியல் அதிகாரம் என்கிற நிலைப்பாட்டையும் இந்தப்புதிய தலைவர்கள் அழுத்தமாக முன்வைத்து அந்தத் திசையில் இயங்கவும் செய்தனர். ஆற்றல்மிகு பேச்சாளரான திருமாவளவனின் பின்னால் தமிழக அளவில் தலித் இளைஞர்கள் திரண்டனர். இதன் விளைவு, பகுதியளவில் செயல்பட்டுக்கொண்டிருந்த டி.எம்.மணி, அரங்க குணசேகரன் போன்றோர் பலவீனமாயினர்.

இது குறித்து நீலப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரும் மணி அவர்களின் மூத்த புதல்வருமான புரட்சிமணி இப்படிக் குறிப்பிட்டார்: ""நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு ஒரு புதிய அதிகாரம் மட்டுமல்ல புதிய அங்கீகாரமும் கிடைத்தது. நீலப்புலிகள் இயக்கத்தில் இருந்தவரை அவர்கள் சைக்கிளில்தான் சென்று இயக்கப் பணிகள் செய்து கொண்டிருந்தனர்.அப்பாவும் சைக்கிளில்தான் சென்று கொண்டிருந்தார்.இப்போது அவர்கள் கார்களில் பயணம் செய்யும் வாய்ப்பு பெற்றனர். மக்கள் மத்தியிலும் அதற்கொரு ஈர்ப்பு இருந்தது.'' புரட்சிமணியின் சகோதரர்கள் சம்சுதீன், கவிமணி ஆகியோரும் இதனை அங்கீகரித்தனர்.

தான் தலைவராக ஏற்றுப் பணி புரிந்த இளையபெருமாள் அவர்களையே விமர்சிக்கத் தயங்காத டி.எம். மணி, யாருடைய செயல்பாடுகள் மீதும் தன் கருத்தை முன் வைப்பதற்கும் தயக்கம் காட்டியதில்லை. தொண்ணூறுகளுக்குப் பின் உருவான புதிய தலைவர்கள் குறித்து அவர் இப்படி மதிப்பிடுவார்:

""தென் மாவட்டங்கள் கிருஷ்ணசாமி என்றும் வட மாவட்டங்கள் திருமாவளவன் என்றும் உருவாகியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தலித் அரசியலுக்கு வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை... வட மாவட்டங்களைப் பொருத்தவரையில் தலித் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் (நாங்கள்) ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தோம்... அன்று தலைவர் திருமாவளவனும் அவரைச் சேர்ந்த தலைவர்களும் தலித் அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்றார்கள். பொதுவுடைமைச் சீர்திருத்தவாதிகளும் தமிழ்த் தேசியவாதிகளும் நாம் முன் சொன்ன ஊடகங்களும் இவர்களை தலித் அரசியலுக்கு தலைமை ஏற்கச் செய்தார்கள். அவர்கள் எதன்பொருட்டு இவர்களை இறக்குமதி செய்தார்களோ அந்த வேலையை அழகாகவும் சிரத்தையுடனும் செய்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ்த் தேசியமும் ஈழவிடுதலையுமே கொள்கையாகக் கொண்டுள்ளார்கள்..''

முத்தாய்ப்பாக புதிய சூழல் குறித்து மணி அவர்கள் தன் மதிப்பீட்டையும் கவலையையும் இப்படி முன்வைக்கிறார்: ""தற்போது  அரசியல் அதிகாரம் என்ற பெயராலும் தமிழ்த் தேசியம் என்ற பெயராலும் தலித் மக்கள் போராட்டக் குணமிழந்து இந்துக்களிடம் அடிமைப்படும் நிலை உருவாகியுள்ளது'' ("தலித் விடுதலை முழக்கம்', அக்டோபர் 2009, பக்கம்: 32)

ஈழத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தமிழகத்தைக் காட்டிலும் அதிகம்.இதைத் தன் எழுத்துக்களின் மூலம் அற்புதமாக ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் டானியல். ஆனால் தமிழகத்தில் யாரும் அது குறித்துப் பேசியதில்லை.மற்றவர்கள் பேசாதது இருக்கட்டும்.இங்குள்ள தலித் இயக்கங்களும் பேசியதில்லை என்பதுதான் வேதனை. அப்படிப்பேசுவது ஏதோ ஈழப்போராட்டத்திற்கே துரோகம் இழைப்பது என்பது போன்ற நிலை இங்கு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விரிவாக தலித் இயக்கங்கள் மத்தியில் பேசியவராக நாம் மணி அவர்களைத்தான் காண முடிகிறது. மணி அவர்கள் உமர் பாரூக்காக பிறப்பெடுத்தபின் எழுதிய "தமிழ் ஈழத்தில் தலித் மக்கள்' ("தலித் விடுதலை முழக்கம்', அக்டோபர், 2009) எனும் கட்டுரை இந்த வகையில் மிகமிக முக்கியமானது.இக்கட்டுரை தனிவெளியீடாக வெளியிடப்பட வேண்டிய ஒன்று.

ஈழத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது, அதன் வரலாறு, அவர்களின் உரிமைப் போராட்டங்கள் எப்படி உயிர்ப்பலிகளில் முடிந்தன, தலித் கல்லூரி முதல்வர், யாழ் நகரசபைத் தலைவர் இவர்களெல்லாம் எப்படி விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், தலித் மக்களுக்காக வழக்காட எப்படி டானியல் போன்ற தலித் தலைவர்கள் சிங்கள வழக்குரைஞர்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது என்றெல்லாம் அவர் மிக விரிவாக அக்கட்டுரையில் பதிவு செய்கிறார்.

மணி அவர்களின் விமர்சனங்கள் கூர்மையாக இருந்தபோதிலும்  அது மிகவும் கண்ணியமாக இருக்கும். தான் விமர்சிப்பவர்களையும் அவர் தலைவர் என்றே குறிப்பிடுவது வழக்கம். தான் செயல்பட்ட பகுதிகளில் அம்பேத்கரின் புகழைப் பரப்பியதிலும் மணி அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்துக்களை மணியின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் காணலாம்.சாதி ஒழிப்பிற்காக அம்பேத்கர் பரிந்துரைத்த மதமாற்றம் மற்றும் தனிக்குடியிருப்புகள் எனும் இருவழிமுறைகளை அவரளவிற்குத் தமிழகத்தில் வலியுறுத்தியவர்கள் யாருமில்லை.

தொண்ணூறுகளுக்குப் பிறகு மேலெழுந்த தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் ஆகியவற்றின் மீதும் மணி அவர்கள் கூரிய அவதானங்களைச் செய்துள்ளார். பாமாவின் "கருக்கு' நாவல் வெளிவந்து தமிழக இலக்கியச் சூழலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த தருணத்தில் அந்த நூலுக்கான விமர்சனக்கூட்டம் ஒன்றை குடந்தையில் நானும் மறைந்த தோழர் கணேசமூர்த்தியும் ஏற்பாடு செய்தோம். கூட்டத்திற்கு பாமா,  அருட்தந்தை மாற்கு ஆகியோரும் வந்திருந்தனர். உள்ளூர் இலக்கிய நண்பர்களோடு  டி.எம்.மணி அவர்களையும் அழைத்திருந்தோம். ஓர் அரசியல் போராளியாக மட்டுமே அறியப்பட்டிருந்த மணி அவர்களின் அன்றைய பேச்சு அனைவரையும் அசர வைத்தது. மிக அழகான இலக்கிய மதிப்பீடாக மட்டுமின்றி சில கூரிய விமர்சனங்களையும் அவருடைய கோணத்திலிருந்து அவர் முன்வைத்தார்.

தலித் கலை என்கிற பெயரில் தப்படித்தல், தலித் மொழி என்கிற பெயரில் தலித் மக்களின் பேச்சு மொழியில் எழுதுதல் ஆகியவற்றில் தனக்கு உடன்பாடில்லை என்பதை அன்று அங்கு அவர் முன்வைத்ததோடு பின்னாளில் அவர் அதைக் கீழ்க்கண்டவாறு பதியவும் செய்தார்: ""கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத் தமிழ் வார்த்தைகளை நன்றாக தலித்துகளிடம் புரிந்து கொண்ட பாமா போன்ற எழுத்தாளர்கள் இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள். "தப்பு' தான் தலித் கலை என்றால் குழல், யாழ் போன்ற ஏனைய இசைகள் எமக்கு உரிமையில்லையா? பாமா சொல்வதுதான் தலித் இலக்கியம் என்றால் என் இனிய தமிழ் இலக்கியங்கள் எங்களுக்கு உரிமை இல்லையா? அகராதிகளில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்களைக்கூட இன்னும் எங்கள் தாய் வழிச் சொந்தமாக காத்துவரும் ஒரு கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம் , தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ண தர்மக்கோட்பாடே.  அண்ணல் அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதென்பதை சமத்துவத்திற்கானப் போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம்.தப்புகளை செய்ய செத்தமாடு  எங்களுக்குத் தேவையில்லை எனக் கோஷமிட்டோம்'' ("சாதி ஒழிந்தது' பக்கம்:11).

சேரிகளை அவர் வெறுத்தார்.தலித் மக்களை நோக்கி ""அம்பேத்கரின் லட்சியம் நிறைவேற ஒவ்வொரு சிந்தனை பெற்ற மனிதனும் சேரிகளை விட்டு வெளியேறுங்கள்'' என்று அறைகூவல் விடுத்தார். (செந்தமிழ்நாட்டுச் சேரிகள், பக்கம்: 94). சேரிகளை மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இந்து மதத்தை விட்டு வெளியேறுவதை அவர் வற்புறுத்தினார்.

சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கென்று இதுகாறும் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் பலவும் எவ்வாறு பொய்யாய்ப் போயின என்பதையும் எங்கே அவை தவறு செய்கின்றன என்பதையும் டி.எம்.மணி அவர்கள் தனது எழுத்துக்களில் பொருத்தமான இடங்களில் நச்சென்று சொல்லி வைக்கத் தவறுவதில்லை. சாதி ஒழிப்பிற்கான ஒரே தீர்வாக மதமாற்றத்தை அடையாளம் கண்டவராக அம்பேத்கர் அவர்களைப் போற்றும் மணி, ஆனால் அதுவும் கூட பவுத்தம் என்கிற அளவில் சுருங்கியபோது இங்கு பயனற்றுப் போனதை சுட்டிக்காட்டத் தயங்குவதில்லை. அம்பேத்கர் மதம் மாறினால் இஸ்லாமால்தான் தீர்வு கிடைக்கும் என நம்பினாலும் என்ன பின்னணியில் அவர் பவுத்தத்தை  நோக்கித் தள்ளப்பட்டார் என்பதை "அண்ணல் அம்பேத்கரின் மதமாற்றம்: பின்னணி என்ன? ' எனும் குறுவெளியீட்டில் விளக்குகிறார். இது குறித்து டி.எம்.மணி சொல்வதை இப்படி சுருக்கலாம்:

"தற்போதைய மதத்தை விட்டு வேறொரு மதத்தினரோடு ஒன்றாய்க் கலந்திடாமல் வேறு எவ்வழியிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பலமுடையவர்களாக முடியாது' என்று கூறிய அம்பேத்கர், "நீங்கள்  இப்படிப் பலமுடையவர்களாக ஆகாவிட்டால் உங்கள் எதிர்கால சந்ததியினரும் உங்களைப் போலவே பரிதாபமான வாழ்வைத்தான் வாழமுடியும்' என 1936 மே 31 அன்று சக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரித்தார். அப்படி எச்சரித்ததோடு நிற்காமல், "நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல; நான் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்' என்ற உறுதியையும் வெளியிட்டார். மதம் மாறத் தயார் எனச் சொன்ன தன் சீடர்களிடம் அவர், "நீங்கள் மாறுவதாக இருந்தால் இஸ்லாம்  மதத்திற்கு மாறிவிடுங்கள்' என்று அறிவுரை கூறினார். அவர் நடத்தி வந்த "பகிஷ்கரித் பாரத்' எனும் பத்திரிகை வழியாகவும் இந்தப் பிரச்சாரத்தைச் செய்தார்.

மதமாற்றம் என அம்பேத்கர் சொன்னவுடன் இந்துக்கள் பதறிப்போனார்கள். மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் தாங்கள் (ஒன்றாக இருந்த இந்தியாவில்) சிறுபான்மை ஆகிப்போவோமே என்கிற அச்சம் அவர்களை ஆட்டுவித்தது. உடனே காரியத்தில் இறங்கினார்கள். இந்துக்களை எச்சரித்தார்கள். அம்பேத்கர் மனதை மாற்றுவது என ஒரு பக்கம் "இந்து மகாசபை' முதலான இந்துத்துவ சக்திகளும் இன்னொரு பக்கம் காங்கிர ஸ் கட்சியும் களத்தில் இறங்கின. இந்துத்துவ சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.நிறுவனர் டாக்டர் மூஞ்சே, ஜூகல் கிஷோர் பிர்லா, சங்கராச்சாரி கொண்ட மூவர் குழு ஒன்றின் மூலம் அம்பேத்கரிடம் பேச முடிவெடுத்தது.காங்கிரஸ் கட்சி காந்தியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

1930களில்  அம்பேத்கர் இவ்வாறு முடிவெடுத்தபோது அவர் முன் பவுத்தம் ஒரு தீர்வாக இல்லை. இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் ஆகிய மதங்களில் ஏதேனும் ஒன்று என்பதுதான் அன்று அவர் முடிவாக இருந்தது. இந்நிலையில் டாக்டர் மூஞ்சே பம்பாய் சென்று மூன்று நாட்கள்

பேச்சுவார்த்தை நடத்தி அம்பேத்கரும் அவரைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்திற்கோ, கிறித்துவத்திற்கோ போகாமல் சீக்கியத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தினார். அம்பேத்கர் அதை ஏற்க வேண்டியதாயிற்று. பின்னர் தர்மானந்த கோசாம்பி முதலானவர்கள் அம்பேத்கரைச் சந்தித்து பவுத்தத்தை பரிந்துரைத்தனர்.

இது "அம்பேத்கரின் மதமாற்றம்' எனும் குறுவெளியீட்டில் மணி அவர்கள் சொல்லியுள்ளதின் சுருக்கம். இவை 1930 களில் நடைபெற்ற நிகழ்வுகள். தன் வாழ்வின் இறுதியில் அம்பேத்கர் தன் ஆதரவாளர்களோடு மதம் மாறியபோது அவரது தேர்வு பவுத்தமாகவே இருந்தது என்பதை நாம் அறிவோம்.இப்படி பவுத்தத்திற்கு மாறியது குறித்து "சாதி ஒழிந்தது' என்ற நூலில் மணி கூறுவது:

""அம்பேத்கரின் அறிவுரையைக் கேட்டு மதம் மாறியவர்கள் சிறுபான்மையினர் ஆனார்கள். மதமாற்றத்தின்  மூலம் கூடுதல் பலம் பெற முடியும் என்கிற அம்பேத்கரின் கொள்கைக்கு மாறாக (உண்மையில் நடந்தது என்னவென்றால்  அம்பேத்கரின் அறிவுரையை ஏற்று ) மதம் மாறிய பவுத்தர்கள்  செயலற்றுப் போனார்கள். ""தனிமனிதனாக இவர்கள் தன்னை இந்து அல்லர்  என்று சொல்லிக்கொள்ள முடியும். (ஆனால்) இவர்களை ஆதரிக்க  அரவணைக்க,  ஒன்றிணைந்து குரல் கொடுக்க, போராட, பெண் கொடுக்க, பெண் எடுக்க,  ஒன்றிணைந்து கூட்டு வாழ்க்கைக்கு யாரோடு சேர்ந்து நிற்பார்கள்? தன்னை இந்து இல்லை என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதுமா?  மானுடத்தில் இணைந்திட வேண்டாமா? மதமாற்றம்  என்பது சமுதாயத்தில் கூட்டுவாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதைவிட்டு மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக இருக்கக் கூடாது'' (பக்கம்:74).

"கடவுளை மாற்றுவோம்' எனும் குறுவெளியீட்டில் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். ""நான் பவுத்தன்' என்று பெயரளவில் சொல்லிவிட்டு இந்துக்கோயில்களை வணங்கிக்கொண்டு இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றிக்கொண்டு''  இருக்கும் நிலைக்குத்தான் பவுத்த மாற்றம் கொண்டு போய்விடும்.

அப்படித்தான் நடந்தது. முதல் தலைமுறையில் பவுத்தத்திற்கு மாறிய பலரது அடுத்த தலைமுறைகள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளதுதான் எதார்த்தம். நிறைய பவுத்த மதமாற்றங்களைச் செய்ய பெரியவர் ஒருவரை நண்பர் அயன்புரம் ராஜேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். ""உங்களால் பவுத்தம் வந்தடைந்தவர்கள் தங்கள் மதக் கடமைகளைச் செய்ய, கடவுளை வணங்க எங்கு போகிறார்கள்?'' என நான் கேட்டபோது அவர் சோர்ந்துபோனார். ""அதுதான் சார் எங்களுக்குப் பிரச்சினை. இங்கே புத்த கோயிலே கிடையாது. எல்லாத்துக்கும் சென்னை வந்து கென்னத் லேனுக்குத்தான் போகணும்.'' இது ஒரு முக்கியமான நடைமுறைப் பிரச்சினை. பவுத்தத்தில் கடவுள் என்கிற கருத்தாக்கமே இல்லை என்றெல்லாம் தத்துவம் பேசிக்கொண்டிருக்க முடியாது. மனிதர்கள் சமூகப்பிராணிகள்.குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்தால், ஒரு திருமணம் நிகழ்ந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில் புனிதப்படுத்துதல் ((Solemnize) சமூக வாழ்வில் அவசியமாகிறது. சமூகம் முழுமைக்கும் அரசியல் தெளிவு ஏற்படாத வரைக்கும் இது ஒரு பிரச்சினைதான்.

ஆக, இந்து மதத்தை விட்டுப் போவது என்பதுதான் தலித்துகளுக்குள்ள ஒரே வழி.ஆனால் அப்படி போகும் இடம் ஒருவரை மேலும் தனிமை ஆக்கிவிடக்கூடாது. முழுமையான சமூக வாழ்க்கைக்கு இடமளிக்கவேண்டும். பவுத்தம் அதைச் சாதிக்காது என்பது முடிவாக மணி சொல்லும் சேதி. சரி அப்படியானால் இரட்டை வாக்குரிமை மூலம் தலித்துகளுக்கு விடிவு கிடைத்து விடுமா?இந்தக்கேள்விக்கு "கிடைத்துவிடும்' அல்லது "கிடைத்துவிடாது' என பதில் சொல்ல முயலாமல் மணி நம் கவனத்தை வேறு திசைப்பக்கம் திருப்புகிறார். இன்றுள்ள தேர்தல் முறையில் தலித்துகள் யாரையாவது அண்டிப்பிழைக்கத்தான் வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்றைய அமைப்பில் இரட்டை வாக்குரிமை என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் மணி இது குறித்து சொல்வது.

தனித்தொகுதி குறித்து தலைவர் கன்சிராம் கூறுகிறார். ""இன்றைய தனித்தொகுதி பிரதிநிதித்துவம் குறித்து போராடுவதில் நான் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை. ஏனென்றால் ஆங்கிலேயர் ஆட்சியில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு சாத்தியமாகாதபோது சாதியவாதிகள் ஆளும் காலத்தில் என்னால் எப்படி சாதிக்க முடியும்?'' என்கிறார். ""தலைவர் கன்சிராமின் ரத்தினச்சுருக்கமான இந்தக் கருத்து நிறையப் பொருள் அடங்கியது. இந்திய அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முடிவை எடுக்கின்ற அளவிற்கு தகுதியோ திறமையோ அதிகாரமோ இவர்களுக்கு (இன்றைய ஆட்சியாளர்களுக்கு) கிடையாது. மேலும் இவர்கள்தான் தம் உயிரைப் பணயம் வைத்து இரட்டை வாக்குரிமையை எதிர்த்தவர்கள். அவர்களிடமே போய் கையேந்தி நிற்பது சிறுபிள்ளைத்தனமானது.'' ("சாதி ஒழிந்தது', பக்கம்.77, 78)

""பொதுவுடைமைக் கொள்கை தலித்துகளுக்கு எதிரானதல்ல''

என்று கூறும் மணி, வர்க்க ரீதியாக மக்களைப் பிரிக்க முடியாத நிலை இங்கிருப்பதையும் ஏழை பிற்படுத்தப்பட்ட சாதிகளே தலித்துகளுக்கு எதிராகக் களத்தில் இருப்பதையும் அவர்கள் உணர்வதில்லை'' என்கிறார் ("சாதி ஒழிந்தது' பக்கம்: 16) தொடர்ந்து கல்வி, பணம், நாகரிகமான பண்புகள் இவை தீண்டாமையைப் போக்குமா எனக் கேள்வி எழுப்பி  இவை எதுவும் போக்கிவிடவில்லை என்பதுதான் எதார்த்தம் என முடிக்கிறார் ("கடவுளை மாற்றுவோம்', பக்கம்: 18). அப்படியாயின் சாதியையும், சாதியால் இங்கு ஒட்டிக்கொண்ட இழிவையும் ஒழிக்க என்னதான் வழி?அந்த வழியை அவர் சொன்னதோடும் எழுதியதோடும் நிற்கவில்லை. 

வாழ்ந்து காட்டினார்.

எம்.மணி அவர்கள்  2007 மே 7 அன்றுதான்  கலிமா ஓதி டி.எம். உமர் பாரூக் ஆனார்.அவரோடு அன்றே அவரது மனைவி அகிலம்மை அவர்களும் ஆயிஷா பேகம்ஆனார்கள்.உமர் பாரூக் தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள்.நான்கு பெண்கள்.மூன்று ஆடவர்கள்.பெண்களில் ஒருவர் வழக்குரைஞர். மற்றவர் அரசு ஊழியர். மூன்றாவது மகன் கவிமணி ஒரு பொறியாளர்.இரண்டாவது மகன் வெற்றிமணி 1992 ஆம் ஆண்டே இஸ்லாம் மதம் தழுவி  சம்சுதீன் ஆனார். மதம் மாறியபின் உமர் பாரூக்கின் பெயர் மட்டும் மாறவில்லை; தொப்பி, தாடி, மூட்டிய வெள்ளை வேட்டி சகிதம் முழுமையான இஸ்லாமியத் தோற்றம் கொண்டார். வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல; அய்ந்து வேளைத் தொழுகை, ரம்சான் மாதத்தில் நோன்பு என அவர் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்தார். திருப்பனந்தாளில் இப்போது அவர் இல்லம் "பாய் வீடு' என அடையாளப்படுத்தப்படுகிறது. எனினும் அவரின் மதமாற்றம் எந்த ஆர்ப்பாட்டங்களுடனும் நடக்கவில்லை. மிக அமைதியாக அது நிகழ்ந்தது.

அவர் இறந்த அன்று என்னால் இறுதி அஞ்சலி செலுத்த இயலவில்லை. ஒரு வாரத்திற்குப் பின் நான் அங்கு சென்றபோது இறுதி நிகழ்ச்சி எப்படி நடைபெற்றது?எனக்கேட்டேன். முழுமையான இஸ்லாமிய நெறிமுறைகளின்படி நடந்தது எனவும் இஸ்லாமிய பெரியவர்கள் முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டனர் எனவும் பள்ளி வாசலை ஒட்டிய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அவரது பிள்ளைகள் கூறினர். அவரது அடக்கத் தலத்தில் சில மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்த எனக்கு விருப்பந்தான். ஆனால் இஸ்லாமிய மரபில் அதற்கு இடமில்லை என்பதை அறிவேன்.

""எங்க அப்பாவைத் தொட்டுத் தேய்த்து குளிப்பாட்டி உடை உடுத்தி அவர்களே (அவ்வூர் இஸ்லாமிய மக்களே) எல்லாம் செய்தார்கள் சார். எங்களுக்கு முழு திருப்தி சார்'' – இப்படி குறைந்த பட்சம் இருமுறையேனும் நான் உமர் பாரூக் அவர்களின இல்லத்தில் இருந்த இரண்டு மணி நேரத்தில் அவரது பிள்ளைகள் சொல்லியிருப்பார்கள்."எங்களுக்கு முழு திருப்தி சார்' எனும் சொற்கள் அடுத்த சில நாட்கள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. மரணம் என்பதை துக்கம் என அழைப்பது தமிழ் மரபு. பவுத்தத்தில் "துக்க'  என்றால் முழுமையற்றிருப்பது. ஏதோ ஒன்றோ, சிலவோ குறைவது. "திருப்தி' என்பது எல்லாம் நிறைந்ததால் ஏற்படும் உணர்வு. இங்கே மரணம் எப்படி திருப்தி ஆகிறது?உமர் பாரூக் அவர்களின் சாதி ஒழிந்ததைக் கண்ணால் கண்டபோது அவரது பிள்ளைகள் அடைந்த திருப்தி, அவரது மறைவால் ஏற்பட்ட துக்கத்தை விஞ்சியது என்பதாகத்தான் அதை நான் விளங்கிக் கொண்டேன்.

""அப்பாவை எல்லாவற்றிலும் பின்பற்றுகிற நீங்கள் ஏன் அவரோடு மதம் மாறவில்øலை? என புரட்சிமணியிடம் கேட்டேன். ""அப்பா யாரையும் கட்டாயப்படுத்தியதில்லை. சென்ற ஆண்டில் திருப்பனந்தாள் பகுதியில் அப்பா பெரிய அளவில் மதமாற்றம் செய்கிறார் என ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை செய்தது. "நக்கீரன்' இதழும் பெரிதாகக் கட்டுரை எழுதியது. அப்ப "நக்கீரன்' செய்தியாளர் அப்பாவை போனில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டார். "மதம் மாறுவது குறித்து பேச எனக்கு உரிமை உண்டு. ஆனால் நான் என் பிள்ளைகள் உட்பட யாரையும் கட்டாயமாக மதம் மாற்றியதில்லை' என்றார். அப்பா மதம் மாறியதில் எங்களுக்கெல்லாம் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம்'' என்றார் அவர்.

""அப்பாவின் மூலம் எத்தனை பேர் மதம் மாறியிருப்பார்கள்?''

""ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும்''

இது எனக்கு பெரும் வியப்பு. உமர் பாரூக் அவர்கள் குலாம் முகம்மது அவர்களின் "அறிவகம்' அமைப்புடன் இணைந்து பல ஆண்டுகளாக "தாவா' பணிகள் செய்துகொண்டிருப்பதாக நான் அறிவேன். உடன் குலாம் முகம்மது அவர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டேன். அவர் சொன்னது என் வியப்பைக் கூட்டியது:

""அதைவிட அதிகமா இருக்கும் சார். அவரது பிள்ளைகள் சொன்னது கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் முதலிய பகுதிகளில் நடந்த மதமாற்றங்களின் அடிப்படையில்தான். அறிவகம் அமைப்பே திருப்பனந்தாளில் அவரது அலுவலகத்தில்தான் தொடங்கியது. பின்னாடி அது முத்து தேவன் பட்டிக்கு மாறிய அப்புறமும் அந்தப் பகுதிகளில் நடந்த மதமாற்றங்களிலும் அவருக்கு பங்கிருந்தது.''

தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை உமர் பாரூக் தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார்.தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது ""வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காணமுடியாது. சமூக விடுதலையைப் பெற முடியாது. ஒன்று திரண்டு போராடு, புரட்சி செய் என்பதெல்லாம் தற்காப்பு நடவடிக்கையே அன்றி சமூக விடுதலையைத் தந்துவிடாது '' என்றார் ( "கடவுளை மாற்றுவோம்' , பக்கம்: 27)

மற்ற தத்துவங்கள் இறுதி உபாயமாக சொன்னவற்றை உமர் பாரூக் வெறும் தற்காப்பு நடவடிக்கை எனச் சொல்வதைக் கவனியுங்கள். பிறிதோரிடத்தில் "உற்பத்தி உறவா இங்கு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின?' என நகைப்பார்.டி.எம். உமர் பாரூக்கைப் பொருத்தவரையில் இங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் ஆனவை. இவற்றை உருவாக்கியது மதம்தான்.சாதிய இழிவுக்கான ஒரே தீர்வு இஸ்லாமிய மதமாற்றந்தான்.தன்னைப் பின்பற்றி வந்தவர்களிடம் இஸ்லாமிய மதமாற்றத்தால் எந்த இழப்பும் ஏற்படாது. பயன் மட்டுமே கிட்டும் என உமர் பாரூக் உறுதி கூறினார்.இஸ்லாமிய மத மாற்றத்தால் இட ஒதுக்கீடு போகுமே எனக் கவலை தெரிவித்தவர்களை நோக்கி அவர் சொன்ன பதில் அவரது சுயமரியாதை உணர்விற்கும் நறுக்கான பேச்சுக்கும் நல்ல எடுத்துக்காட்டு."ஊனமுற்றோர் இருக்கையில் அமர ஊனப்படுத்திக் கொள்ளலாமா?' என்பதுதான் அந்தப்பதில் ("கடவுளை மாற்றுவோம்' பக்கம்:19)

2007 இல் தான் மதம் மாறியபோது இஸ்லாமிய அழைப்புப்பணியை உமர் பாரூக் அவர்கள் கடந்த 35 ஆண்டுகாலமாக செய்து வருகிறார் என அவரது பிள்ளைகள் கூறுகின்றனர். அவரது "அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை' மற்றும் நீலப்புலிகள் இயக்கத்திலிருந்தவர்களில் சிலரும் அப்படி மதம் மாறியுள்ளனர். பாலக்குடி சிவசுப்பிரமணியன் சிராஜூதீனாகவும், சிக்கல்நாயக்கன்பேட்டை கன்னையன்  ஜக்கரியா ஆகவும், பட்டம் சுந்தர்ராஜன் சதாத் அலி கானாகவும் டி.பழூர் கருணாநிதி முகம்மது கனியாகவும் இப்படி மதம் மாறினர். இவர்களில் கடைசி இருவர் குடும்பத்தோடு மாறினர்.

""இப்படி இயக்கச் செயல்பாட்டிலிருந்து கொண்டே அழைப்புப் பணியையும் செய்ததற்கு இயக்கத்தில் ஏதும் எதிர்ப்பு இருந்ததா?''

""இல்லை. யாரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அப்பா யாரையும் வற்புறுத்தியதும் இல்லை; அதோடு அவரது எந்தப்பணியும் தலித் பிரச்சினைகளில் அவரது கவனத்தைக் குறைந்ததுமில்லை. அதனால் யாரும் எதிர்க்கவில்øலை'' என்றார் புரட்சிமணி.

""இயக்கத்திலிருந்து வெளியேறியவர்கள் அப்படி ஏதும் குற்றச்சாட்டுகளை வைத்தார்களா?''

""வெளியேறியவர்கள் வேறு காரணங்களுக்காகத்தான் வெளியேறினார்கள். அவர்களில் சிலர் மதம் மாறுவது என்று முடிவோடு இருந்தவர்கள் கூட. வேறு காரணங்களுக்காக வெளியேறிய ஒரு சிலர் மதம் மாறியதையும் ஒரு காரணமாகச் சொன்னது உண்மைதான்.'' 35 ஆண்டுகளாக இஸ்லாமிய மதமாற்றம் குறித்துப் பேசி இயங்கியவராயினும் மகன் 23 ஆண்டுகளுக்கு முன்பே மதம் மாறியிருந்தபோதும் உமர் பாரூக் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாமுக்கு மாறியுள்ளார். தலித் மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்வதற்கு இஸ்லாமிய மதமாற்றம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என அவர் நினைத்திருக்க வேண்டும்.

உமர் பாரூக் அவர்கள் பற்றிய இந்தக் குறிப்பை முடிக்கும் முன் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

2007 இல் இஸ்லாமான பின்னும் அவரது இல்லம் "பாய் வீடு' ஆன பின்னும் அவர் தலித் மக்களுடன்தான் இருந்தார். மட்டியூரில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நீலப்புலிகள் இயக்கக் கொடிமரங்களை சாதி வெறியர்கள் இருமுறை உடைத்தெறிந்ததை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவரது உயிர் பிரிந்தது. ஆஞ்ஜியோ செய்து வந்து முற்றிலும் ஓய்வாக இருக்கவேண்டிய நிலையில் அவர் மாவட்ட அதிகாரிகளைப் பார்ப்பதற்காக தஞ்சாவூருக்கு அலைந்து கொண்டிருந்தார். கொடிமரங்கள் உடைபட்டதோடு மட்டுமல்லாமல் அதை எதிர்த்துப் போராடியதற்காக 13 தலித் மக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுக்கூட்டங்களில் பேசினார். கடைசி நாட்களில் மட்டியூர் பிரச்சினை குறித்து கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அது உமர் பாரூக் அவர்களின் மரணத்தை விரைவுபடுத்தியது என்றும் அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.

இஸ்லாம் ஆன பின்னும் ஏன் தலித் இயக்க வேலைகளைத் தொடர்கிறீர்கள் என்கிற கேள்வி உமர் பாரூக் அவர்கள் முன் வைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில்:

""யாருக்கு என்னுடைய பணி தேவையாக உள்ளதோ அவர்களோடு இருக்கிறேன்.''

Pin It