சூலூர் கூட்டத்தில் உடுமலை கவுசல்யா பேச்சு
எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர் களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்து விடுகிறது.
சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு, அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத் தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.
பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே நிரம்பிய சிறுவன் பெரியசாமி தன் தாய்க்கு ஒரே மகன். சிறையில் இருந்த அவனை தமிழக கவர்னர் விஷ்ணுராம் மேதி நேரில் வந்த போது பார்த்திருக்கிறார். சிறியவன் என்ற பரிவில் "உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன், இனிமேல் இதுபோல் எந்தக் காரியமும் செய்யாமல் இருப்பாயா" என்று கேட்டிருக்கிறார். இதை அவனிடம் தமிழில் சொல் கிறார்கள். அவன், பெரியசாமி, பெரியாரின் இளம் தொண்டன் பதில் சொல்லியிருக்கிறான். வெளியே அனுப்பினால் நான் மீண்டும் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று. 16 வயது மட்டுமே நிரம்பிய ஒருவன் பெரியார் ஆணை ஏற்று கவர்னரிடம் நெஞ்சம் நிமிர்த்தி அப்படித்தான் கொளுத்துவேன் என்று சொல்லியிருக்கிறான். இந்த உறுதி, வீரம் பெரியாரிடம் இருந்து வந்திருக்கும். கூடுதலாக சட்ட எரிப்புப் போராட்டத்தின் நியாயத்தை முழுமையாக அவன் உணர்ந்திருக்கிறான். அதுதான் அவனுக்கு அந்த துணிச்சலைத் தந்திருக்கிறது. பெரியாரின் பேருழைப்பு, பெரியாரின் தொய்வில்லாத பரப்புரை, அரசியல் கல்வி ஒரு சிறியவனைக் கூட கொள்கை வீரனாக உருமாற்றி இருக்கிறது. கொள்கைத் தெளிவு இருந்தால் சாவின் மீது அச்சமிருக்காது என்பதை இந்தச் செய்தி படித்த போது புரிந்து கொண்டேன்.
பெரியார் மீதான பாசம் மட்டுமே பெரியசாமியை உருவாகியிருக்காது. அதையும் தாண்டி பெரியார் தந்த கருத்தியல், கொள்கை மீது அவன் ஆழமான பிடிப்புக்கொண்டிருக்கிறான். அது உயிருக்கு அஞ்சாத வீரனாக அவனை உருவாக்கி இருக்கிறது. இன்றும் பெரியார் மீதான பாசத்தை விட அவர் தந்த கொள்கை இலட்சியத்தை உயிர் போல் நேசிக்க வேண்டும் என்ற செய்தியை நான் கற்றுக் கொண்டேன்.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை வேரிலேயே கிள்ளி எறிவதற்காக சட்டத்தை பெரியார் எரித்தார். சட்டத்தின் புனிதம் காத்துக்கொண்டே சாதியை ஒழிக்க முடியாது என்றும் இதனை புரிந்து கொள்ளலாம். நமது அண்ணல் அம்பேத்கர் வரைந்த சட்டம் என்று பெரியார் பார்க்கவில்லை. அம்பேத்கர் கோவித்துக் கொள்வார் என்று பெரியார் யோசிக்கவில்லை. அம்பேத்கர் இந்த சட்டத்தை எழுதி இருந்தாலும் இந்தச் சட்டம் கொளுத்தப்பட்டால் அவரே மகிழ்ச்சி அடைவார் என்று பெரியாருக்குத் தெரியும் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.
ஏனென்றால் அம்பேத்கரே இந்தச் சட்டத்தை நான்தான் எழுதினேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள், நான் எழுதினேன் என் கைகளை பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டார்கள். நாளை இந்தச் சட்டத்தை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பான் என்று சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் கனவை பெரியார் நிறைவேற்றி இருக்கிறார்.
இந்தச் செய்திகள் எனக்கு ஒன்றை புரிய வைக்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் இருக்கும் வரை சாதி இருக்கும். அதனால்தான் சாதி ஒழிப்புக்காகவே வாழ்நாள் எல்லாம் போராடிய பெரியாரும் அம்பேத்கரும் இந்தச் சட்டத்தை கொளுத்தத் துணிந்திருக்கிறார்கள்.
பெரியார் சொல்வது போல் இந்தச் சட்டத்தை வரைந்த ஆறு பேரில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள். டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபால்சாமி அய்யங்கார், கே.எம். முன்ஷி என நான்கு பேரும் பார்ப்பனர்கள்.
முஹம்மது சாதுல்லா இசுலாமியர். இன்னொருவர் அம்பேத்கர். வயதுக்கு வந்தோருக்கான வாக்குரிமை அனைவருக்கும் இல்லாத காலத்தில் இந்தச் சட்டம் எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் சட்டத்தை எழுதியவர்களை எந்த சனநாயக வழிமுறையின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படியானால் ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பாக இந்த சட்டம் வரையப்பட்டுள்ளது. பிறகு எப்படி இதை சனநாயக நாடு என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
பெரியாரின் கேள்விகளையே இங்கே மீண்டும் முன் வைக்கிறேன். இந்தச் சட்டம் எழுதப்படும் போது எளிய மக்களிடம் ஏன் கலந்து கொள்ளவில்லை? அவர்கள் சார்பில் அந்த அவையில் ஒருவர் கூட இடம்பெறாதது ஏன்? ஒருவர் கூட இல்லாதபோது இது எப்படி எல்லோருக்குமான சட்டமாக இருக்க முடியும்?
எங்கள் பங்கேற்பு இல்லாத சட்டம் எங்களுக்கான சட்டமாக எப்படி இருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடையை பெரியவர்கள் எனக்குச் சொல்ல வேண்டும். பெரியார் இன்னொன்றும் சொல்கிறார் மனுதர்மத்தின் மறுப்பதிப்பே இந்த அரசமைப்பு சட்டம் என்று.
இந்த சட்டம் எதுவுமே பயன் இல்லை என்று சொல்லமாட்டேன். என் வழக்குத் தீர்ப்பு வருகிற திசம்பர் 12 ஆம் தேதி வர இருக்கிறது. நம்பிக்கையோடு காத்துக்கொண்டுள்ளேன். என் பெற்றோருக்கு தண்டனை வாங்கித் தருவது அல்ல என் காத்திருப்புக்கு காரணம். அந்தத் தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்தால்தான் சாதிய கௌரவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் வர அடிப்படையாய் இருக்கும். அதுவும் இந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதுதான். பேரறிவாளன் அவர்களின் தூக்கு ஆயுளாக இந்த சட்டத்தின் கீழ்தான் மாறியிருக்கிறது. நாளை அவர் இதன் அடிப்படையில் விடுதலை ஆவார் என்று நம்பி காத்திருக்கிறோம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இது ஏதும் நம் பெரியாருக்குத் தெரியாதா என்ன? அடிப்படையில் இது மனுதர்மத்தின் மறுபதிப்புதான். தமிழர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதுதான். அதனால்தான் பெரியார் இந்திய அரசை பார்ப்பனிய அரசு என்கிறார்.
இதிலிருந்து நாம் பெரியார் அரசியலை எடுத்துக் கொண்டு போவோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை கொளுத்தினார், தமிழ்நாட்டை நீக்கி வைத்து இந்திய வரைபடத்தை கொளுத்தினார், ஆகஸ்ட் 15 ஆம் நாளை தமிழர்களுக்கு துக்க நாள் என்றார். இந்தியா இருக்கும் வரை சாதி இருக்கும் என்றார். இதன் அடிப்படையில் 1956 லிருந்து சாகும் வரைக்கும் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார்.
பெரியாருக்கு கடவுள் மீது எந்தக் கோபமும் இல்லை. கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போகிறேன் என்று பதில் சொல்கிறார். இந்து மதத்தின் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. அதை பின்பற்றி யவர்களை மதித்து நடந்திருக்கிறார். காந்தியடிகள் மீது எந்தக் கோபமும் இல்லை. இந்த நாட்டுக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் என்கிறார். அதேபோல் இந்தியா மீதும் பெரியாருக்கு எந்தக் கோபமும் இல்லை. சாதி ஒழிப்பு என்ற ஒரே நோக்கத்திற்காக இவற்றையெல்லாம், எதிர்த்தார். ஒழிப்பேன் என்றார். அதேபோல் சாதி ஒழிப்புக்காகத்தான் இந்தியாவையும் எதிர்த்தார் இந்தியாவை ஒழிப்பேன் என்றார். இதுதான் என் புரிதல்.
‘பெரியார் இன்றும் என்றும்’ நூலில் தமிழ்நாடு தமிழருக்கே என்பதை பச்சை குத்திக்கொள்ளச் சொல்கிறார். சிறைக்கும் சாவுக்கும் அஞ்சாமல் இளைஞர்கள் விடுதலைக்கு அணிதிரள வேண்டும் என்கிறார். நம்மையே கொடுத்துப் போராடாமல் விடுதலை பெற முடியாது என்கிறார். பெரியாரால் பெரியசாமி போன்ற சிறியவர்களைக் கூட வீரர்களாக உருவாக்க முடிந்திருக்கிறது. நாமும் பெரியாரின் உண்மைத் தொண்டனாக அந்தப் பெரியசாமி போல் உருவாக வேண்டும். சாதி ஒழிக்க களத்திற்கு அணியமாவோம். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதை உயிராய்க் கொள்வோம். இதுதான் சட்ட எரிப்பு போராளிகளுக்கு நாம் செய்யும் வீரவணக்கமாக இருக்கும். நான் உங்களோடு இன்று போல் வாழ்நாள் முழுக்க கைகோர்த்து நிற்பேன்.