நோக்கம்

periyar 350 copyஉலக வரலாற்றில் தனது வாழ்நாளிலேயே தனது கொள்கைகளை வெற்றி பெற்றிட சுயமரியாதை இயக்கத்தின் பங்கு பணிகளை மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரிய மாமனிதர் தந்தை பெரியார் ஆவார். 1925-இல் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்து அவற்றின் செயல்பாடுகளில் சிலவற்றினைக் காண்போம்.

ஜோதிடம்

“நீ திடமானால் சோதிடம் எதற்கு?” என்றார் பெரிய பூமி தன்னை தானே சுற்றி, சூரியனைச் சுற்றி வருவது விஞ்ஞானம். கோபர் நிக்கஸ் கூற்றுப்படி பூமி சுற்றுகிறது சூரியன் நிலையானது. இதே வானியல் சோதிடத்தில் பூமியை நிலையாகக் கொண்டு சோதிடமாக கட்டம் போட்டு கிரகங்கள் பூமியைச் சுற்றி வருவதாக உள்ளது. இது சூரியன் உள்பட முற்றிலும் முரணானதாகும் மூடநம்பிக்கைகளே.

மனித மூளையை விடப் பன்மடங்கு சிறிய மூளையுடைய சிட்டுக் குருவி, கிளி, ஏவி கொண்டு சோதிடம் பார்ப்பது எந்த வகையில் அறிவியலாகும். மூடநம்பிக்கையாலும் சோதிடப் புரட்டுகளாலும் சீரழிந்த மக்களை விழிப்புற செய்தவர் பெரியார் ஒருவர் தானே.

தான் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும், இரவு பகல் பாராது சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தவர் பெரியார் என்னும் சிந்தனையாளரே தான்.

கடவுள்

எண்ணிலாக் கடவுளர்களை உருவாக்கி பிரம்மா,  சிவன், விஷ்ணு என்பவர்களே முதன்மையாக மனிதனைக் காப்பதாகவும் கூறி பார்ப்பனர்கள் தங்களின் வாழ்வாதாரத்தினைப் பெருக்கிடவும், சோம்பேறிகளாய் வாழ்ந்திட வழி செய்து கொண்டனர். கடவுள் என்றால் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும். ஏன்? எப்படி? எங்கே? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டனர்.

கடவுளின்  பெயரால் அறிவை பாழ்படுத்தும் செயல்களான தேர், காவடி, மண் சோறு, பூமியில் புரளுதல், சாமி ஆடுதல், உயிர்பலி, நரபலி, உடன்கட்டை ஏறுதல், தீக்குடம் ஏறுதல், மயிர்க் காணிக்கை, சோதிட நம்பிக்கை, வாஸ்து சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், சகுனம், சாமியார் மோசடி, பாபா லீலைகள், பேய், பில்லி சூன்யம் போன்றவற்றைப் பெரியார் தனது தொடர் பிரச்சாரத்தின் மூலம் ஒழித்துக் காட்டினார்.

பிள்ளைகள் நான்கையும் கொடுப்பதாய்க் கூறும் மனிதர்களைப் பார்த்து, மனைவியை உள்ளே படுக்கவிட்டுவிட்டு, நீ என்ன திண்ணையிலா படுத்துத் தூங்கினாய் என்று கேட்டார் பெரியார். நமது பிள்ளைகளை கெடுத்துக் கடவுள் ஏன் பத்து ஏக்கர் நிலமும், வீடும், வாசலும் ஏன் தரவில்லை என்று கேட்டு சுயமரியாதை இயக்கத்தின் தொடர் பரப்புரையில் வெற்றியைக் கண்டார் பெரியார்.

புராண இதிகாசங்கள்

அதி நவீனத் திரைப்படங்கள் போன்று இராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றை உருவாக்கி கதாநாயகர்களான இராமன், கிருஷ்ணன் ஆகியோர்களை உருவாக்கி ஓவியமாய் வரைந்து, நாகரீகமான பட்டாடைகள், துணிமணிகளைக் கொண்டும் தங்க நகையை உடம்பு முழுவதும் அணிவித்து மனிதர்களைப் போல் உருவாக்கி, உயர்ந்தவர்களாகப் பலகைகளில் பலவித ஆயுதங்களுடன் காட்சிப்படுத்தி, இது தான் கடவுளின் அவதாரம், இவர் ஏழுமலையான், முருகன், விநாயகர், இராமர், கிருஷ்ணர் என்று கதையளந்தனர் ஆரிய பார்ப்பனர்கள்.

இதனால் சுய லாபம் அடைந்தனர் பார்ப்பனர்கள்.

புராணங்களாலும், இதிகாசங்களாலும் கற்பிக்கப்பட்ட கடவுளைப் பார்ப்பனர்களுக்கு நிகரான வாதிக்கின்றனர். 

“தெய்வா தீனம் ஜகத் சர்வம்

மந்தீரா தினந்து தெய்வம்;

தன் மந்திரம் ப்ராமாண தினம்

ப்ராமாண மமதேவதாஹா”

இதன் பொருள்: “அகில உலகமும் ஆண்டவனுக்குள் அடக்கம், ஆண்டவன் மந்திரங்களுக்குள் அடக்கம், மந்திரங்கள் அனைத்தும் பிரமாணர்களிடம் அடக்கம். எனவே, பிராமணர்களே நமது கடவுள்.

இதனை ஒரு பித்தாலாட்டம், அயோக்கியர்களின் சூதுத்தனம். இது அப்பட்டமான மோசடி கவலை என்று பெரியார் ஆதாரங்களுடன் கூறி, இராமன் படத்தினை தீயிட்டுக் கொளுத்தியும், பிள்ளையார் சிலைகளை வீதியில் போட்டு உடைத்தார். அவரது செயல் அற்புதமான மெய்விளக்கமாகும். கடவுள், மதம், சாதி இதிகாசங்கள் இல்லை என்பதனைப் பறை சாற்றினார்.

பெரியாரின் போற்றுதலுக்குரிய சுயமரியாதை இயக்கத்தினர் பட்டி தொட்டியெங்கும் பரப்பி சுழன்று பணி முடிக்கின்றனர்.

சாதி

சாதி என்ற சொல் வடமொழியில் வழக்கத்தில் இருந்து வந்தது. சாதி, மதம் இயற்கை இல்லை, மாறாக  கால தேச செய்திகளால் தோன்றியவையே, சாதி மதம் புரட்டு அயோக்கியர்களின் சுய நலத்திற்காக கற்பிக்கப்பட்டது. ஆரிய பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சுற்றுச்சார்புடன் போராடி, பாதுகாப்பாய் அமைத்துக் கொண்டது தான் சாதி. சங்க காலத்திற்குப் பிறகு வேதம், மனுதர்மம் போன்ற சாஸ்திரங்கள் நம் மொழியில் இல்லை. இந்த வர்ணம், சாதி, பிராமணன், சத்திரியன், சூத்திரன், வருணாஸ்ரமம், இந்து போன்றவை தமிழ்ச் சொற்களே அல்ல.

வேத சாஸ்திரத்தில் மனுதர்மசாஸ்திரத்தில் வர்ணாஸ்ரமதர்மம் முக்கியமாக சாதி வித்தியாசங்கள் உருவாயின. “புருஷசூக்தப்” பகுதியில் படைப்புக் கடவுள் பிரம்மா நான்கு பிரிவுகளாகச் சாதியை படைத்தவர் என எழுதி வைத்துள்ளனர். முகத்திலிருந்து பிராமணர்களையும், தோளில் சத்திரர்களையும், தொடையில் வைசியர்களையும், காலில் சூத்திரனையும் படைத்தாராம். பிறப்பில் பேதத்தைக் கூறியவர்கள், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே எனக் காரணம் இந்து மதமும், புராணக் குப்பைக் கதைகளும் தான்.

ஏற்றத் தாழ்வுகளை பிறப்பிலேயே போதிக்கின்ற கடவுளையும், மதத்தையும் சாகடித்த பெருமை உண்டு. அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தினர் இன்றைய பரப்புரை செய்கின்ற பணியை செய்து வருவதை உலகார் அறிவர்.

விஞ்ஞானம்       

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று அறிவியல் அறிஞர் டார்வினரின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை மதம் ஏற்காமல் ஆதம் ஏவாள் கவிதையையேக் கூறி மதம் வளர்த்தது. பின்னர் விஞ்ஞானம் வளர வளர அத்தவற்றினை மதமே திருத்திக் கொண்டது. சூரியன் சந்திரன் கிரகணங்கள் நேர் கோட்டில் சந்திப்பது இயற்பியல் உண்மை. ஆனால் பாம்பு சந்திரனை விழுங்குவதாகக் கூறும் கற்பனைவாதக் கதைகளை பேராசிரியர்களே நம்புவது, மூடநம்பிக்கையல்லவா?

கொளுத்தும் வெயிலைத் தணிக்க குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறிகள், இருளை விரட்டிட மின்விளக்கு, கண்டம் விட்டு கண்டம் கடந்து சென்றிட வான் ஊர்தி, கடலில் நெடுந்தூரம் பயணிக்க கப்பல், உணவு சமைத்திட மின் இயக்க சாதனங்கள், நோயின் கொடுமைக்கு மருந்து மாத்திரைகள் போன்ற கண்டுபிடிப்புகள் அனைத்தும் அறிவியல் கூறுகளே என்பதை மறுத்திட இயலுமா? இதில் கடவுளின் பங்களிப்பு துளிக் கூட இல்லை என்று உரக்கக் கூறலாம். இது எப்படி நிகழ்கின்றதென்று கேட்டவர் தான் அறிவாசான் பெரியார் அவர்களை,

பெரியாரின் வழிகாட்டலால் உருவாகிய பகுத்தறிவு நாதத்தினை முழுமூச்சாய் இயங்கும் சுயமரியாதை இயக்கம், இயக்கப் பணிகளால் இன்று வரை செம்மாந்த நடைபோடும் வாழ்வே அழகு தான்.

கல்வி

கல்வி என்பது ஒரு கருவியே ஆகும். மிகப் பெரிய உத்தியோகத்திற்குச் செல்லவும், அதன் வழியே பணம் சம்பாதிக்கவும், ஒரு வழியாக உள்ளது. நான்கு பிறப்பாரில் கடைசியாக பிரம்மனின் காலில் பிறந்தவன் சூத்திரன். இவன் அனைத்து சாதிகளுக்கும் கீழ்ப்பட்ட அடிமை. அவர்களுக்கு பணிவிடை செய்வதே சூத்திரனுக்கு பாக்கியம் – சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுதர்மம். அதோடு மட்டுமல்ல படிக்க முற்பட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்ற கொடுமையில் வாழ்ந்த வெகு ஜன மக்களின் மனதினை உளப்பூர்வமாய் அறிந்த பெரியார் அனைவரும் கல்வி பயிற்றுவிக்க பலவழிகளில் அரசிடம் போராடினார்.

குலக் கல்வி எனும் பெயரால் முதலமைச்சராயிருந்த இராஜாஜியின் திட்டத்தை தவிடு பொடியாகக் கொள்ளைப் புற வழியாக ஓடி ஒளிந்திட தந்தை பெரியாரும் அவரது உணர்ச்சியும் எழுச்சியும் ஒரு சேர பெற்ற சுயமரியாதை இயக்கமும் தோழர்களும் உழைத்ததின் பயனே அனைவருக்கும் உயர்கல்வி உயர் பதவிகள் வரை முயன்று முன்னேற்றம் அடைந்தனர் எனக் கூறலாம்.

பெரியாரின் அறிவாற்றலும், அனுபவ முதிர்வாலும் கிளர்த்தெழுந்த சுயமரியாதை இயக்கத்தின் சீரியப் பணியால் கீழ்த்தட்டு மற்றும் அடிநிலை மக்களும் பெரும் பயன் அடைந்தனர் என்றே பெருமை கொள்ளலாம்.

முடிவுரை

மேற்சொன்ன மாந்தர்களின் அத்தனை வாழ்வியல் சிக்கல்களும் கடவுள் தான் மூலக் காரணம் என்பதை உணர முடிகிறது. இத்தனை கடவுளும் அதனை உருவாக்கி கொடுத்து சோம்பேறிகளால் வாழ்கின்ற பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்தாலொழிய உண்மையான சமத்துவம் காண வாய்ப்பேயில்லை.

மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவு பேராற்றல் வாய்ந்ததாகும். அப்பகுத்தறிவினைப் பயன்படுத்தினால் கடவுள் கற்பனை மற்றும் மூடநம்பிக்கையிலிருந்து முழுமையான புரட்சி மிகுந்த விடுதலை கிடைக்கும். இதுவே பெரியாரின் நெறியாகும்.

நம் உரிமைகளை பெற்றுத் தந்திட பெரியார் பட்ட கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? சொல்லடி, கல்லடி, அழுகிய முட்டையடி, மலத்தையும் வீசினார்கள். ஏன் கால் செருப்பால் அடித்தனர். மறு செருப்பையும் கேட்டு வாங்கினார். கிளர்ச்சி போராட்டங்கள் என எடுக்கப்பட்ட பெரியாருக்கு 30 முறை சிறை தண்டனை கிடைத்தது யாருக்காக? நமக்காகத் தான் என்பதையும் நினைவில் கொள்வீர்.

எனவே கடவுள் தொடர்பான குருட்டு நடவடிக்கைகளும், மக்களுக்கு இருந்த மயக்கமும் குறைந்துவிட்டால் கடவுள் நம்பிக்கை என்ற உணர்ச்சி தானே குறையும். பின் ஒழுக்கமும் சமத்துவமும் இன்பமும் நிலைபெறுவதற்கு அறிவு வழிபட்ட பிரச்சாரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்த அரசும் ஆட்சியாளர்களும் முன்வர வேண்டும்.       

Pin It