தலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய  வேண்டியிருக்கிறது என்பது ஒரு  பெரிய பட்டியலுக்குரியது. ஆனால் அத்தகைய செயல்பாடுகள் எல்லாம்  ஜாதியின் வேரை இன்னும் அசைக்கக் கூட இல்லை! இந்தியாவின் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் கல்வி சாதியைக் காப்பாற்றும் கல்வியாகவே இருக்கிறது. இங்கிருக்கும் பண்பாடுகளும் தேசிய சிந்தனைகளும் சாதியை நிலைப்பெறச் செய்வதாகவே இருக்கின்றன.  இந்நிலையில் சாதி ஒழிப்புக்காக இசையைக் கருவியாக்கி வருகிறார் இசையரசு.

இசையரசின் இயற்பெயர் பார்த்தசாரதி. பேறுகாலவலியெடுத்து இசையரசின் அம்மாவை திருவல்லிக்கேணி குழந்தைப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரிலேயே பிறந்துவிட்ட குழந்தைதான் இவர். அதனால் இவர் பெயரை பார்த்தசாரதி என்று இவருடைய தந்தை வைத்திருக்கிறார். ஒரு பெயர் எத்தகைய அரசியலை நிகழ்த்துகிறது என்பது இசையரசின் அனுபவங்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது.

இசையரசு பத்தாம் வகுப்பு முடித்த பிறகு திருவல்லிக்கேணியிலிருக்கும் ஒரு பெரிய காபித்தூள் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.சேர்ந்த அன்று அவருடைய பெயரைக் கேட்ட கடை முதலாளி எல்லோரையும் விட இவருக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்.சிலநாட்கள் கழித்து "உங்க அப்பா என்ன வேலை செய்கிறார்?'   எனக் கேட்க, மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார் என்று இவர் சொல்ல, அன்றிலிருந்து  இவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.

இவ்விரண்டு பெயர்களுக்குமான அடையாளங்கள் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்கிறார் இசையரசு. ஒருமுறை கிருபானந்த வாரியாரின் தம்பி தன்னுடைய ஆட்டோவில் பயணம் செய்ததாகவும் இசையரசு என்னும் அந்தப் பெயரே "என்னப்பன் முருகன் பெயர்தான்'  என்றும் சொன்னபோது மதவாதிகள் எப்படி எல்லோரையும் உள்வாங்கிச் செரித்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகரில் வசிக்கும் நீங்கள் ஜாதியை எதிர்க்கும் தீவிர மனநிலையோடு வாழ்கிறீர்களே? எனக் கேட்டதற்கு மிகவும் கோபப்பட்டார் இசையரசு.ஜாதி ஏதோ கிராமங்களில்தான் இருக்கிறது; நகரங்களில் இல்லை என்பதுபோல ஒரு தோற்றம் இங்கு நிலவுகிறது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திற்கு அருகே அதிநவீன "சிட்டி சென்டர்' இருக்குமிடத்தில்தான் அருந்ததியர் தெரு, பறையர் தெரு, நாயக்கர் தெரு என்று இன்றும் இருக்கிறதே! அதற்கென்ன பதில்?என்று கொந்தளிக்கிறார்.

""1993 இல் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். கடிதங்களைக்  கொண்டுபோய்க் கொடுப்பது என் வேலை. தியாகராயர் நகரில் ஒரு பார்ப்பனர் வீட்டில் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கேட்டேன். கொடுத்தார்கள். குடித்துவிட்டு குவளையைக் கீழே வைத்துவிட்டு வெளியேறுகையில் எதேச்சையாக திரும்பினால் அந்தக் குவளையின் மீது தண்ணீர் தெளித்து ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்.எனக்கு சுருக்கென்று தைத்தது.

சாதியின் ஆதிக்கம் எவ்வளவு மோசமானது எனத் தெரிந்தது. இந்த செயல் எனக்கு மேலும் ஒன்றை நினைவுபடுத்தியது. இதே சென்னை மாநகரில் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது கடைகளில் தின்பண்டங்கள் வாங்கினால் காசை கீழே வைக்கச் சொல்லிவிட்டு பிறகு தண்ணீர் தெளித்துதான் எடுப்பார்கள். அப்போது புரியாதது இப்போது புரிகிறது.சாதி இல்லாத இடம் என்று ஏதுமில்லை. அதற்கு கிராமம் நகரம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை நான் உணர்ந்தேன்''  என்கிறார் இசையரசு.

""2011  2014 ஆகிய கால கட்டங்களில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  துணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றினேன். சாதியை மதம் எப்படி காப்பாற்றுகிறது என்று அங்குதான் நான் உணர்ந்தேன். கர்நாடகாவில் ஒரு படப்பிடிப்பிற்காகச் சென்றபோது என்னுடன் வந்திருந்த என் சக ஊழியர்களுக்கு எல்லாம் தங்குவதற்கு வசதியான குடில்களைக் கொடுத்தவர்கள் எனக்கு மட்டும் கார் நிறுத்தும் இடத்தை ஒதுக்கினார்கள். ஏன் என்று கேட்டபோது "அங்கெல்லாம் நீ தங்க மாட்டியா?' என்று ஏளனமாகக் கேட்டார்கள்.

பணியாளர்களுக்கான கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் நான் என் பங்களிப்பாக நிறைய கருத்துகளைக் கூறினாலும் என்னை அவர்கள் ஒரு செய்தியாளனாகக் கூட அங்கீகரிக்கவில்லை. இதற்கெல்லாம் சாதிதான் காரணம் என்று உணர்ந்த அந்த நிமிடமே நான் வேலையிலிருந்து நின்றுவிட்டேன்'' என்கிறார் இசையரசு.

ஓர் இசைக்கலைஞனாக உங்களை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு ""ஜாதி எதிர்ப்புப் பிரச்சாரங்களின் போதுதான் என்னை நான் இசைக் கலைஞனாக உணர்ந்தேன். 2004 ஆம் ஆண்டு "சுனாமி' க்குப் பிறகு சென்னையில் இருக்கும் தலித் மக்களின் குடிசைப்பகுதிகளை அகற்றி செம்மஞ்சேரி போன்ற இடங்களுக்கு  வலுக்கட்டாயமாக துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் அதை எதிர்த்து நாங்கள் மக்களை ஒன்று திரட்டினோம்.

ஓரிடத்தில் 500 குடிசைகளை அகற்றி வேறிடம் தருவதாகக் கூறினால் அங்கு 250 குடிசைகள்தான் தருவார்கள்.மற்றவர்கள் வெளியில்தான் இருக்க வேண்டும். அப்போது கண்ணகி நகருக்கு  தாசில்தார் இரவு 11 மணிக்கு வரும்வரை மக்களைப் பாட்டுப் பாடித்தான் அவர்களின் கோபம் மாறாமல் வைத்திருந்தோம். அப்போதுதான் எனக்குள் இருந்த பாடகன் உதித்ததை நான் உணர்ந்தேன்.

"ஆனாலும்  97– 98  ஆம் ஆண்டுகளில் பொழிலனின் சாதி குறித்த விழிப்புணர்வு, தமிழ்த் தேசியப் பயணம், தியாகு, பெ. மணியரசன் போன்றவர்களின் தமிழ்வழிப் பயணங்களில் மேடையேறிப் பாடிய அனுபவங்கள் இருந்தன. கே.ஏ. குணசேகரன் மற்றும் தலித் சுப்பையா ஆகியோரின் பாடல்களை அதிகமாகப் பாடினேன். ம.க.இ.க. வின் "ஆயிரம் காலம் அடிமை என்றாயே'  போன்ற பாடல்களை அதிகம் பாடினேன். தலித் சுப்பையாவும் கே.ஏ. குணசேகரனும் இல்லை என்றால் தலித்துகளுக்கு பாடுவதற்கு பாடல்கள் இருந்திருக்காது.

"கருப்புப் பிரதிகள்' நீலகண்டனும் அமுதாவும் தமிழ்த்தேசியம் குறித்த என் கொள்கைகளைத் தங்கள் கேள்விகளால் பிய்த்தெறிந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் தமிழ்த்தேசிய மயக்கத்தில் இன்னொரு முத்துக்குமாராகவும் செங்கொடியாகவும் நான் மரித்திருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கும். 

தமிழ்த் தேசியத்திற்கு முன் சாதி ஒழிப்பு மிகவும் அவசியம் என்பதை அவர்கள் உணர்த்தினார்கள். ஆனால் தமிழ்த்தேசியவாதிகள் தமிழ்த்தேசியத்திற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பை எப்போதுமே வைப்பதில்லை. தமிழ்த் தேசியம் உருவானாலும் சாதி ஒழிக்கப்படவில்லை என்றால் அது கடைந்தெடுத்த இந்து தேசியமாகத்தான் இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்.

""தலித் முரசு'  இதழ்  மூலம்தான் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் எழுத்துகளை அதிகம் வாசித்தேன். அதனால் எனக்கு சிந்தனைத் தெளிவு பிறந்தது. சாதி ஒழிப்பிற்கான என் பங்களிப்பை நான் செலுத்தவேண்டும் என என் பயணத்தைத் தொடர்கிறேன்.  இந்து மதம் மற்றும் அதன் சாதியப் படிநிலை அமைப்பு ஆகியவற்றின் கெட்டித்தட்டிப்போன தன்மையைத் தகர்த்தெறிய வேண்டும் என்றால் அம்பேத்கர் – பெரியார் என்னும் அறிவாயுதங்களே அவசியம் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

தலித்துகள் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, கல்வியை ஆயுதமாக்கவேண்டும், சாதியப் படிநிலைகளில் உடைப்பு தேவைப்படுகிறது. 

அதற்கு கல்வி பெற்ற தலித்துகள் தொடர்ந்து இந்த சமூகத்தோடு உறவு பாராட்ட வேண்டும்.  நம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்து அடையாளங்களை மறுதலித்து ஒவ்வொருவரும் தங்களை பவுத்தராகத் தகவமைத்துக் கொள்ள  வேண்டும் என்கிறார்.

இசை ஆர்வலரான இசையரசு 2009 இல் குடிசைகளை அகற்றும் அரசின் திட்டத்தை எதிர்க்க மக்களை அணியமாக்கும் முயற்சியில் "தண்டோரா' என்ற இதழை நடத்தினார். "சென்னையில் வசிக்க நமக்கு இடமில்லை' மற்றும் "தமிழ்த்தேசியர்களே கொஞ்சம் யோசியுங்கள்'  போன்ற பாடல்களை இயற்றி, பாடி அரங்கேற்றியுள்ளார்.

மேலும்,"யாருக்காக சிங்காரச் சென்னை?'  என்னும்  குறுந்தகடை இசையரசு வெளியிட்டுள்ளார். சென்னை நகரத்தின் குடிசைகள் அகற்றப்படுவதை எதிர்த்து இவர் மிக முக்கியப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

சென்னை நகரத்தை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கூவம் கரையில் குடியிருக்கும் குடிசைப் பகுதி மக்களைத்தான் ஆட்சியாளர்கள் துரத்துகின்றனர். அவர்களை அப்படியே கொண்டு போய் வேறிடத்தில் குப்பை கூளமாகக் கொட்டுவதை எதிர்க்கும் இவருடைய போராட்டம் தொடர்கிறது.

தன் குடும்பத்தோடு கூவத்தின் கரையில் வசிக்கும் இசையரசு, சென்னையில் ஜாதிக்கெதிராக முழங்கும் ஒரு போர்ப்பாட்டுக்காரர்!

Pin It