கீற்றில் தேட...

v arasuஆய்வறிஞர் வீ.அரசு அவர்களுடன் ஒரு நேர்காணல்

எனது பிறப்பு, வளர்ந்த சூழல், கல்வி

கல்லணைக் கால்வாயின் ஒரு பிரிவான புதுஆற்றங்கரை, மேலத்தஞ்சையில் உள்ள வடக்கூர் என்பது நான் பிறந்தஊர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாசன வசதி பெற்று, கடந்த பத்து ஆண்டுகளாகப் பாசன வசதி இழந்த ஊர்களில் ஒன்று. எனது குடும்பம் சிறு விவசாயக் குடும்பம், எங்கள் ஊரில் இருக்கும் இடைநிலைப் பள்ளி, அருகில் உள்ள ஈச்சங்கோட்டை என்னும் ஊரில் உயர் நிலைப்பள்ளி, பூண்டி, புட்பம் கல்லூரியில் புகுமுக வகுப்புமுதல் முதுகலைவரை பயின்றேன். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்), உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் ஆகியவற்றை முடித்தேன்.

எங்கள் ஊர், காங்கிரசின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுத் திராவிட இயக்கக் கட்சிகள் செல்வாக்கு செலுத்திய ஊர். இளம் வயதிலேயே திராவிட இயக்கச் செல்வாக்குடன் வளர்ந்தவன் நான்.

பகுத்தறிவு மற்றும் முற்போக்குக் கருத்தியலுக்கு வந்த பின்னணி

உயர்நிலைப் பள்ளியிலேயே பெரியார் எனக்கு அறிமுகமானார். எங்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணிக்கவாசகம் எனும் தோழரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் அடித்து மண்டையை உடைத்தனர். வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரிடம் நான் தொடர்பு கொண்டேன். அவர் மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவர் என்பதைப் பின்னர்த் தெரிந்துகொண்டேன். அவர் இப்போதும் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறாரோ என்று கருதுகிறேன்.

நான் கல்லூரிக்கு வந்தபின் அவருடன் தொடர்பு நெருக்கமானது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஊரில் இளைஞர் நற்பணி மன்றம் தொடங்கி, ஊரின் பொதுவேலைகள் (திருமண வீடு, இறப்பு வீடு போன்ற நிகழ்வுகள்) அனைத்தையும் செய்தோம். மார்க்சிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து இரவு நேரங்களில் வகுப்பு எடுக்கச் செய்தோம். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரை மிதிவண்டியில் பின்புறம் உட்கார வைத்து ஊரில் சுற்றி வந்தோம். அப்போது எங்கள் ஊரில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் சைக்கிள் ஓட்டிச் செல்லக்கூடாது எனும் சட்டம் ஊர்ப் பஞ்சாயத்தில் இருந்தது. மாட்டு வண்டியில் உட்கார்ந்து செல்லக்கூடாது; தோளில் துண்டு போடக்கூடாது, செருப்புப் போடக்கூடாது (அறுபதுகளின் இறுதி எழுபதுகளின் தொடக்கம்) எனும் நிலைகள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊர் எங்கள் ஊர். அதற்கு எதிரான போராட்டத்தை எங்கள் மன்றம் செய்தது. புலவர் படித்த எங்கள் நண்பன் இந்த நிகழ்வுகளால் அவமானப்படுத்தப்பட்டான்.

“பறையன் வீட்டிலே போய் கல்யாணம் பண்ணிக்கோடா” என்று அவனின் பெற்றோர்களே கூறினர். அவன் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்று பின் மீண்டுவரும் நிலைக்கு அன்றைக்கு நாங்கள் நடத்திய போராட்டம் இருந்தது. ஊரில் கள்ளச் சாராயத்தை ஒழித்தோம். இந்தத் திட்டம் பின்னர் ஒரத்தநாடு காவல்நிலைய காவல் அதிகாரி ஒருவரால் “ஒரத்தநாடு திட்டம்” என்று கள்ளச் சாராய ஒழிப்புக்காக அடையாளப் படுத்தப்பட்டது. நான் எங்கள் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. தஞ்சாவூரில் மாமா வீட்டில் தங்கத் தொடங்கினேன்.

பள்ளியில் பெரியார் அறிமுகம்; கல்லூரியில் இடதுசாரி சிந்தனைகள் அறிமுகம் என்று வளர்ந்தவன் நான். கல்லூரிப் படிப்பின் தொடக்க காலத்தில் பேராசிரியர் இரா.இளவரசு அவர்கள் மூலம் ‘தமிழியக்கம்’ எனும் அமைப்பில் தொடர்பு ஏற்பட்டது. அப்போது இராஜூ எனும் என் பெயர் ‘அரசு’ என ஆகியது. பின்னர்ச் சட்டப்படி ‘அரசு’ என்றே பெயர் மாற்றிக் கொண்டேன். புகுமுக வகுப்பில் இராஜூ, பட்ட வகுப்பில் “அரசு” ஆனேன். இடதுசாரிச் சிந்தனை மரபோடு செயல்பட்ட அய்யப்பன், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களோடு கல்லூரிக் காலங்களில் இடதுசாரி அமைப்பு வேலைகளில் ஈடுபட்டோம்; மாணவர்களிடம் பரப்புரை செய்தோம். முதுகலை பயிலும் காலத்தில் மங்கையோடு தொடர்பு உருவானது.

தோழர் ஜீவாவின் ஆக்கங்களைத் தொகுத்த அனுபவம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யில் பணியாற்றிய தோழர் ருக்குமணி அம்மள் என்பவர் வடசென்னையில் வாழ்ந்தவர். 1930களிலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனவர். அவருக்கு மங்கையை ரொம்பப் பிடிக்கும். அவருடைய சேகரிப்பில் 1939முதல் 1944 முடிய வெளிவந்த ஜனசக்தி இதழ்கள் இருந்தன. அவற்றை எங்களிடம் கொடுத்தார். கவிஞர் தமிழ்ஒளியின் நண்பரான பாவலர் பாலசுந்தரம் அவர்களிடம் 1937ஆம் ஆண்டு ஜனசக்தி இதழ்கள் இருந்தன. அவருடைய மகனும் எனது நண்பருமாகிய பேரா. பா. மதிவாணன் மூலம் அவ்விதழ்களைப் பெறமுடிந்தது. இந்த இதழ்கள் கைவசம் இருந்ததால் ஜீவா நூற்றாண்டு வரும்போது, ஜீவா எழுத்துகளை இவ்விதழ்கள் வழி தொகுத்து வெளியிடலாம் என்று கருதினேன். இதற்குத் தோழர் நல்லக்கண்ணு மிகுந்த ஆதரவு தந்தார். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாலன் இல்லத்தில் இருந்த நூலகத்தில் பிற ஆண்டுகளின் ஜனசக்தி இதழ்களைப் பார்க்கக் கிடைத்தது.

எனவே 1937 - 1963 ஆண்டுகளில் வெளிவந்த ஜனசக்தி இதழ்களை எடுத்து, ஜீவாவின் ஆக்கங்கள், ஜனசக்தி தலையங்கங்கள் ஆகியவற்றைப் புகைப்படக் கருவியில் படம் எடுத்தோம். பின்னர் அதனைக் கணிப்பொறியில் இட்டு, தேவையற்ற பகுதிகளை நீக்கினோம். எஞ்சிய பகுதியை கணிப்பொறியிலிருந்து அச்சிட்டு எடுத்தோம், அவற்றைப் பின்னர் புதிதாக அச்சிட்டோம். கணிப்பொறியில் ஏற்றி, புத்தக வடிவமாக்கி அச்சிட்டோம். எனது ஆய்வு மாணவர்கள் குப்புசாமி, பிரேம் குமார் ஆகியோர் என்னோடு உழைத்தவர்கள். சித்ரா தட்டச்சு செய்தார். நியுசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுப்பு ஜீவாவின் ஆக்கங்கள், இரண்டு தொகுதிகள் ஜனசக்தி தலையங்கங்கள் ஏ4 அளவில் 7500 பக்கங்கள்.

ஜீவா பற்றியும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அறிய உதவும் அரிய ஆவணம் அவை. உடல் நலம் சீர்கெடும் நிலைக்கு உழைத்த அனுபவம் செழுமையானது. ஜீவா அந்தத் தொகுதிகளில் வாழ்கிறார். அந்த அனுபவம் மிகவும் செழுமையானது.

தாங்கள் ஆவணப்படுத்தியுள்ள சென்னை இலௌகிக சங்கம் பற்றிக் கூறுங்கள்

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மத எதிர்ப்பு இயக்கம் உருவானது. புரூனோவை நெருப்பில் வைத்து கொளுத்திய நிகழ்வோடு இவ்வியக்கம் எழுச்சி பெற்றது. இவ்வியக்கத்தின் தாக்கம் இலண்டன் நகரில் பெரும் எழுச்சியாக வடிவம் பெற்றது. ‘இலண்டன் செக்யுலார் சொசைட்டி’ எனும் அமைப்பு உருவானது. இவ்வமைப்பின் கிளை 1878இல் சென்னையில் உருவானது. அந்த அமைப்பு முதலில் சென்னை சுயாக்கியானிகள் சங்கம் - என்றும் பின்னர் சென்னை இலௌகிக சங்கம் - என்றும் அழைக்கப்பட்டது.

இவ்வியக்கம் “தத்துவ விவேசினி” Thinker என்ற இரு இதழ்களை முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தியது. அவ்விதழ்களை ஆவணப்படுத்தி ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன். நான்கு தமிழ், இரண்டு ஆங்கிலம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான நாத்திக இயக்கம் இது. இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் இவ்வியக்கம் தொடர்பான விவரங்களைச் சேகரித்தேன். மிக விரைவில் ‘சென்னை இலௌகிக சங்கம்: வரலாறும் விளைவுகளும்’ எனும் பெரிய நூல் ஒன்றைக் கொண்டு வருவேன். தமிழ்ச் சமூகத்திற்கு எனது சிறிய பங்களிப்பாக இதனைக் கருதுகிறேன். இவ்வியக்கம் தொடர்பாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்தேன். அந்தக் கருத்தரங்க கட்டுரைகளை மாற்றுவெளி இதழ் 14 இல் வெளியிட்டேன்.

புதுமைப்பித்தன் குறித்த மதிப்பீடு

புதுமைப்பித்தன் கதைகளை அவர் எழுதிய இதழ்கள்வழி மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்தேன். ‘மணிக்கொடிக் கதைகள்’, ‘ஊழியன் மற்றும் பிற கதைகள்’, ‘கலைமகள் மற்றும் பிற கதைகள்’, வ.ரா. வீட்டிலிருந்து எனக்கு மணிக்கொடி இதழ்கள் கிடைத்தன. மணிக்கொடியில் மிக அதிகமான கதைகள் எழுதியவர் புதுமைப்பித்தன். மூன்று தொகுதிகளுக்கும் முறையே ஆதிமூலம், சந்துரு, மருது ஆகியோர் வரைந்த புதுமைப்பித்தன் படங்களை அட்டையாக அச்சிட்டோம். அலைகள் பதிப்பகத்தின் சி. இளங்கோ இதற்கு உதவினார். பின்னர் அடையாளம் பதிப்பகம் வழி புதுமைப்பித்தனின் அனைத்துக் கதைகளையும் இதழ்வழி முழுப்பதிப்பு என்றும் பிறகு இரண்டாம் பதிப்பாக முழுக் கதைகளையும் ‘பல்பரிமாணக் கதைகள்’, ‘எளிய கதைகள்’, ‘தழுவல் கதைகள்’ என்று பிரித்துப் பதிப்பித்தேன்.

இவ்வகையில் புதுமைப்பித்தன் கதைகளுக்குள் பயணம் செய்த அனுபவம் செழுமையானது. தொடர்ந்து ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு‘ என்று தேர்வு செய்து பதிப்பித்தோம், நூறு படைப்பாளிகளின் வாழ்க்கைக் குறிப்புகளோடு வெளிவந்துள்ள இத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் “தமிழ்ச் சிறுகதை வரலாற்றை புதுமைப்பித்தனில் இருந்துதான் தொடங்க வேண்டும். இதற்குமுன் தமிழில் சிறுகதை எழுதியவர்களாகக் கூறப்படுவோர் எழுதியவை சிறுகதை வடிவில் அமைந்தவை இல்லை” என்று பதிவு செய்துள்ளேன். தமிழில் புனைவு உருவாக்கம், அச்சுப் பண்பாட்டின் வளர்ச்சி, தமிழில் உருவான வாசிப்பு மரபு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தர்க்க மரபில் இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளேன். புதுமைப்பித்தனுக்கு முன்பு தமிழில் சிறுகதை என்று சொல்வது தவறு என்பது என் தரப்பு மதிப்பீடு. தமிழின் முதன்மையான கலைஞர்களில் ஒருவராகப் புதுமைப்பித்தன் வரலாறு முழுக்க இருப்பார். அவரை வாசிப்பது அரிய அனுபவம்.

தமிழ் இலக்கியத்தின்மீது ஈழ இலக்கியத்தின் தாக்கம் குறித்த மதிப்பீடு

ஈழத்தில் உருவான பக்தி இலக்கிய மரபுக்கும், தமிழக மரபுக்கும் நெருக்கமான உறவுண்டு. ஆறுமுக நாவலர் இரு நிலப்பகுதிக்கும் உரியவராகச் சமமாக மதிக்கப்பட்டார். இதில் பின்னர் இராமலிங்க வள்ளலாரை முதன்மைப்படுத்தி நடந்த அருட்பா- மருட்பா உரையாடல் என்பது சாதிய சக்திகளால் முன்னெடுக்கப்பட்டது. இராமலிங்கர் வெள்ளாளர் சாதியைவிட தாழ்ந்தவர் என்பதால், அவரால் அருட்பாக்களைப் பாட முடியாது என்னும் ஆதிக்கச் சாதி ஊகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இருநிலப்பகுதிகளின் இலக்கியம் மூலம் நடந்த கொண்டுகொடுத்தல் இயல்பானது. கிறித்தவ தொண்டூழிய நிறுவனங்கள் மூலம் ஈழமண்ணில் பல புத்தாக்கங்கள் உருவாயின. அந்த அளவிற்குத் தமிழகத்தில் இல்லை. பதினாறாம் நூற்றாண்டுமுதல் ஆங்கிலக் கல்விக்கு அறிமுகமான சமூகம் யாழ்ப்பாணச் சமூகம்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான புனைகதைகளின் தாக்கம் ஈழத்தில் ஏற்பட்டது. தொடக்கக்கால நாவலாசிரியர்களில் ஒருவரான செ. கணேசலிங்கம், பச்சையப்பன் கல்லூரி மு.வ.வின் மாணவர். அவரின் நாவல்களின் மொழியில், மு.வ. நாவல்களின் மொழித்தாக்கம் உள்ளது. கருத்து நிலையில் மு.வ. விலிருந்து வேறுபட்டவர். ஈழத்தில் தொடக்கக் காலத்தில் புனைகதை எழுதியவர்கள் தமிழக எழுத்தாளர்களின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள். பின்னர் எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.) காலத்தில் அது மாறியது. அவர்களுக்கான புனைமொழி உருவானது.

தமிழ்க்கவிதை மொழியில் 1980களுக்குப் பிற்பட்ட ஈழக் கவிஞர்களான புதுவை இரத்தினதுரை, நுஃமான், சேரன், ஜெயபாலன் ஆகிய பிறரின் தாக்கம் தமிழகத்தில் வளமானது. இக் கவிஞர்களின் தொகுதிகள் தமிழக இளம் கவிஞர்களிடத்தில் ஏற்படுத்திய செல்வாக்கு மிகுதி. தமிழகப் பெண் கவிஞர்களிடத்திலும் ஈழப் பெண் கவிஞர்களின் தாக்கம் உருவானது. நவீன தமிழ்க்கவிதை என்பது ஈழக் கவிதைகள் வழிதான் அடையாளம் பெறுகிறது. ஈழப் போர் அதற்கொரு முதன்மையான காரணம். ஈழக் கவிஞர்களுக்குக் கிடைத்த அனுபவம், தமிழ்நாட்டுக் கவிஞர்களுக்கு இல்லை. பார்ப்பனீய மரபு சார்ந்த நவீன தமிழ்க்கவிதை மரபை வளமாக மாற்றியதில் ஈழப் போர்க் கவிதைகளுக்கு முதன்மையான பங்குண்டு.

கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் ஈழ ஆய்வாளர்களின் அணுகுமுறை குறித்த பார்வை

ஈழத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம் பிள்ளை, கனகசபை பிள்ளை, நா. கதிரைவேற் பிள்ளை, விபுலானந்தர், சி. கணபதிப்பிள்ளை, தனிநாயகம் அடிகள், சு. வித்தியானந்தன் என்ற வளமான ஆய்வு மரபுண்டு. தமிழகத்தில் இம் மரபுக்கு இணையான மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற மரபுண்டு. இம்மரபு மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. இவ்விரு மரபுகளிலிருந்து வேறுபட்ட ஆய்வு அணுகுமுறைகளில் பேராசிரியர்கள் கைலாசபதி, கா. சிவத்தம்பி மற்றும் எம்.ஏ. நுஃமான் ஆகியவர்களால் ஈழத்தில் மேற்கொள்ளப் பட்டதைக் காண்கிறோம். இவர்கள் மார்க்சியம் எனும் கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டவர்கள். தமிழகத்தில் கல்வித்துறை, குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் சார்ந்து இம்மரபு உருவாகவில்லை. ஆனால் ஈழத்தில் உருவானது.

அதில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மார்க்சியக் கருத்துநிலை சார்பாளர்கள் என்பதும் அதிலிருந்தே தமிழியல் ஆய்வை பல்கலைக் கழக மட்டத்தில் முன்னெடுத்தவர்கள் என்பதும் முதன்மையாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி. எனவே, தமிழில் மார்க்சியக் கருத்துநிலை சார்ந்து பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு மரபை உருவாக்கியவர்கள்  கைலாசபதியும் சிவத்தம்பியும் ஆவர். இவர்களின் தாக்கம் தமிழகத்தில் மார்க்சிய கருத்துநிலை சார்ந்து செயல்பட்டவர்களிடத்தில் மிகுதி. என் தலைமுறையைச் சார்ந்த மார்க்சியப் பின்புலத்தில் ஆய்வு செய்யவந்த அனைவருக்கும் இவ்விருவர்களே முன்னோடி.

புலம்பெயர் இலக்கியம் பற்றிய பதிவுகள்

1983 கருப்பு ஜூலை, தமிழர் இனப்படுகொலை வன்முறைக்குப் பின்பு, ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் உலகம் முழுவதும் அகதிகளாகக் குடியேறினர். அகதி வாழ்க்கையின் கொடுமைகளைப் பதிவு செய்தனர். தொண்ணூறுகளில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இதழ்கள் வெளிவந்தன. அவற்றில் புலம்பெயர் அகதி வாழ்க்கை குறித்தும் தாயகத்தில் நடைபெறும் இன அழித்தொழிப்பு குறித்தும் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என வெளிவந்தன. ‘அம்மா’, ‘ஈழம்’, ‘உயிர்’ ‘நிழல்’, ‘உயிர்ப்பு’, ‘எக்ஸில்’, ‘ஓசை’, ‘காலம்’, ‘காந்தள்’, ‘களரி’, ‘தாயகம்’, ‘நட்புறவுப் பாலம்’, ‘நாழிகை’, நிர்மாணம்’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘மனிதம்’, ‘மானுடம்’, ‘மூன்றாவது மனிதன்’ எனப் பல இதழ்கள் தமிழர் வாழும் நாடுகளிலிருந்து வெளிவந்தன. இந்தச் சூழலில்தான் புலம்பெயர் இலக்கியம் எனும் சொல்லாட்சி உருவானது. இதன் பொருள் குழப்பமானது. புலம்பெயர்ந்து சென்றவர்கள் எழுதும் இலக்கியமா? புலத்தில் வாழும்முறை குறித்த இலக்கியமா? என்பதே அது. சுமார் பதினைந்து (1990-2005) ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த சொல்லாட்சி, இப்போது பெரிதும் பேசப்படுவதில்லை.

திராவிட இயக்கம், தமிழ் இலக்கியத்தின்மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா? என்பது குறித்த மதிப்பீடு

திராவிட இயக்கம் தமிழ்க் கவிதையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “வானம்பாடி” இதழ்வழி உருவான கவிஞர்களை அவ்வகையில் மதிப்பிடலாம். பாரதிதாசனின் தாக்கம் என்பதே திராவிட இயக்கத் தாக்கம் தானே. பெருஞ்சித்திரனார் கவிதைகள் திராவிட இயக்க மரபில் உருவானவை. புனைகதைகளை திராவிட இயக்கத்தில் இருந்தவர்கள் எழுதினார்கள். அவை பெரிதும் அங்கீகாரம் பெறவில்லை. பொதுவெளியில் திராவிட இயக்கத் தாக்கம் புனைகதைகளில் இல்லை. திரைப்படத்துறை, ஒரு கட்டத்தில் நாடகத்துறை, இதழியல் துறை ஆகியவற்றில் திராவிட இயக்கத்தின் தாக்கம் வளமானது.

திராவிட இயக்கத்தின் தாக்கம், ம.பொ.சி முன்னெடுத்த தமிழ்த்தேசிய வடிவில் உருவான தாக்கம் பற்றிச் சொல்லலாம். தெ.பொ.மீ, மு.வ., மா.ரா.போ. குருசாமி, ந. சஞ்சீவி - என்ற பல பேராசிரியர்கள், ம.பொ.சி பேசிய தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். இவர்களின் ஆக்கங்களில் அதன் தாக்கம் உண்டு. அதனையும் திராவிட இயக்கத் தாக்கம் என்று கூறமுடியும். குறிப்பாக மு.வ.வின் புனைகதைகள்.

தலித் இலக்கியம் தமிழுக்கு வழங்கிய கொடை என்ன?

1980களின் இறுதியில் தொடங்கி 2000 வரை சுமார் இருபது ஆண்டுகளில், தமிழ்க்கவிதை, தமிழ்ப்புனைகதைகள், தமிழ் ஆவணப்படம், தமிழ்ச் சிற்றிதழ்கள் ஆகியவற்றில், இதுகாலம் வரை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்யப்படாத சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்க்கை புதிதாகப் பதிவானது. அது புதியமொழி, நாவல் வடிவத்தில், 1970கள்முதல் பதிவானாலும், மேற்குறித்த காலத்தில்தான் அது கவனிக்கப்பட்டது. இதுவரை சமூக அங்கீகாரம் பெறாத ஒரு எழுத்து மரபுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அது தமிழுக்குப் புதிது. அதுவே தலித் இலக்கியம் தமிழுக்கு வழங்கிய கொடை என்று சொல்லலாம்.

பெண்ணிய நோக்கில் எழுதப்படும் படைப்புகள் குறித்த அணுகுமுறை

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் இடைக்காலம் முதல் பெண்ணிய ஆக்கங்கள் குறித்த உரையாடல் பொதுவெளிக்கு வந்துள்ளன. தலித்தியம் போன்றே பெண்ணியமும் தமிழ்ச் சூழலில் தனித்துப் பேசப்படவில்லை. இப்போது அதை ஒரு பகுதியாக பேசவேண்டும் என்னும் உணர்வுத் தளம் உருவாகியுள்ளது. பெண்ணிய படைப்புகளைக் கொண்டாட வேண்டும். பல தரப்புகளிலும் அது குறித்துப் பேச வேண்டும். உருவாகியுள்ள பெண்ணிய ஆக்கங்களைப் பல தொகுதிகளாகத் தமிழில் தொகுக்க வேண்டும். ஆங்கிலத்தில் அவ்வாறு நிகழ்ந்துள்ளது. பெண்ணிய எழுத்து, நமது எழுத்து மரபின் ஒரு பாதியாகப் பார்ப்பது அவசியம். அந்தத் தன்மை இன்னும் உருவாகவில்லை. ஆணாதிக்கம், பெண்ணிய ஆக்கங்களை மௌனப்படுத்தும் சூழல் இன்னும் முழுதாக நீங்கவில்லை. தமிழ்க் கவிதையில் பெண்ணியக் கவிஞர்கள் வளமானவர்கள். அக் கவிதைக்கு இணையான இன்னொரு மரபு தமிழில் இல்லை என்றுகூட கூற முடியும். சுமார் இருபதுக்கு மேற்பட்ட பெண்ணியக் கவிஞர்கள் தமிழில் அண்மைக் காலத்தில் எழுதுகிறார்கள். பெண்ணிய அரசியலை முன்னெடுப்பது அவசியம்.

நவீனத்துவம் - பின்நவீனத்துவம் - அமைப்பியல் குறித்த கருத்துகள்

மிக விரிவாக எழுத வேண்டிய செய்திகள் இவை. சுருக்கமாக நான் புரிந்து கொண்ட அளவில் சொல்கிறேன். உலக வரலாற்றில் பொ.ஆ.500 முன் கிரேக்க ரோமானிய பண்பாட்டு மரபுதான் இருந்தது. பின்னர் பொ.ஆ. 1200 வாக்கில் மறுமலர்ச்சி மரபுகள் உருவாயின. தொடர்ந்து தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி ஆகியவை. பதினெட்டாம் நூற்றாண்டளவில் மறுமலர்ச்சி இயக்கங்கள் உருவாயின. அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தின் உற்பத்திமுறையை மாற்றின. உற்பத்தி கருவி மாற்றத்தின் மூலம் உலகில் புதுவகையான மூலதனம் உருப்பெற்றது. இதனால் சமூகத்தில் புதிய புதிய மாற்றங்கள் படிப்படியாக உருவாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இம்மாற்றம் ஐரோப்பிய உலகில் நவீனத்துவத்தைக் கொண்டு வந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நவீனத்துவம் உருவானது. இதற்குமுன் இருந்த மரபிலிருந்து புதிதான மரபுகள் உருவாயின. இவற்றைப் பின்காலனிய நிகழ்வுகள் என்றும் கூறுவர். தமிழில் இம்மரபு 1930களில் இடம் பெறத்தொடங்கியது. புதுமைப்பித்தன் நவீனத்துவத்தின் குறியீடு.

1960ஆம் ஆண்டுக்குப்பின் பின்-நவீனத்துவம் உருவானது. கலைகள் மற்றும் பண்பாட்டுத் துறையில் இதற்குமுன் இருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மரபுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு கோட்பாட்டாளர்கள் உருவாயினர். அதிகாரத்துக்கு எதிரான செயல்பாடாகவும் இது கட்டமைக்கப்பட்டது. பின்நவீனத்துவ மரபு புதிய பண்பாட்டைப் பேசியது. பல்வேறு கலைத் துறைகளில் இதன் தாக்கம் உருவானது.

மைய அழிப்பு செய்யப்பட்டு, விளிம்புகளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டது. பின் நவீனத்துவம் முன்னெடுத்த நுண் அரசியல் சார்ந்த கருத்தாடல் அனைத்து வகையான பிரதிகளையும் கட்டவிழ்ப்பு செய்தது. புதிய வாசிப்புமுறை, புதிய எழுத்து முறை, புதிய திரைப்படம், புதிய ஓவியம் என பல துறைகளிலும் அது செயல்பட்டது. தமிழில் பெரிய அளவில் செயல்பட்டதாகக் கூற முடியாது. தமிழில் தவறாகவும் இது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு அணுகுமுறை; அம்முறையை கையிலெடுப்பவர்களுக்கான அரசியல் பார்வை சார்ந்து அம்மரபு கட்டமைக்கப்படும். இதனை அரசியல் அகற்றல் - என்று முழுமையாகக் கூற இயலாது - புதிய பார்வை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அமைப்பியல் முற்றிலும் மொழியியல் மற்றும் மானிடவியல் துறை சார்ந்த தத்துவச் சொல்லாடல். “சசூர்” என்ற மொழியியல் அறிஞர் முன்னெடுத்த குறியீட்டியல் போன்ற துறைகள் இத்துறை சார்ந்த நிகழ்வுகள். மொழியியல், தத்துவம், மானிடவியல் சார்ந்த ஒரு புலமைத் துறையாக அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துப் பிரதிகளையும் வாசிக்க இம்முறையியல் உதவும். கல்விப்புலம் சார்ந்த புலமைத் துறையாகவே இது செயல்படுகிறது.

இடதுசாரிகள் தமிழுக்கு ஆற்றிய பணிகள்

இடதுசாரிகள் என்ற சொல்லை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன். 1920முதல் நீண்ட நெடிய வரலாறு இவ்வியக்கத்திற்கு இருக்கிறது. தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணிகள் என்று வரையறை செய்துகொண்டு கீழ்க்காணும் செய்திகளைத் தொகுக்க முடியும்.

சிங்காரவேலர் தொடங்கி தமிழில் தத்துவ மரபு சார்ந்த சொல்லாடல்களை வளர்த்தெடுத்தவர்கள் இவர்கள். பகுத்தறிவு மரபு சார்ந்து சிங்காரவேலர் எழுதியவை தமிழுக்குப் புதியது. இதனால்தான் பெரியார் அவரைக் கொண்டாடினார். ஜீவா தொடங்கி தமிழ்ஒளி வழியாக இடதுசாரிகள் உருவாக்கிய கவிதை மரபு செழுமையானது. எழுபதுகளில் இன்குலாப் போன்ற வீறார்ந்த பல கவிஞர்கள் இந்த மரபில் உருவானர்கள். தொ.மு,சி, ரகுநாதன், நா. வானமாமலை ஆகியோர் தொடங்கி தனித்த ஆய்வு மரபுகளை இடதுசாரிகள் வளர்த்தெடுத் திருக்கிறார்கள். பாரதி பற்றிய ஆய்வில் இடதுசாரிகள் இடம் தனித்தது.

தமிழ்ஒளி காலத்தில் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர் மன்றம், பொதுவுடைமைக் கட்சி சார்ந்து செயல்பட்ட புதுமைக் கலா மன்றம் (1940-1960), கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் பங்களிப்பு மிகுதி. ‘முன்னணி’ ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘தாமரை’, ‘மனிதன்’, ‘செம்மலர்’ ஆகிய வரிசையில் வெளிவந்த இதழ்களின் பங்களிப்பு வளமானது.

புனைகதை, கவிதை, திரைப்படம், நாடகம், ஆய்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் இடதுசாரிகள் தடம் பதித்துள்ளார்கள். இந்த வரலாறு இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. விரிவாகப் பதிவு செய்ய வேண்டியத் தேவையுண்டு.

செம்மொழித் தமிழாய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் செயல்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்.

இ.ந்த நிறுவனங்கள் நிர்வாக ரீதியில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதில் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்குப் பங்குண்டு. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இதுவரை இயக்குநர் நியமிக்கவில்லை. திட்டமிட்டு அதனைத் தொடர்ந்து செய்து வருகிறது நடுவணரசு. தமிழுக்கு இந்த வகையான நிறுவனம் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எப்பொழுது இழுத்து மூடலாம் என்பதற்கானத் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சரே அந்த நிறுவனத் தலைவர் என்பதால் அவரது தலையீட்டால் ஏதேனும் செய்யலாம். ஆனால் இன்றைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, வெறும் பெயரளவில் இருந்தும் இல்லாத நிறுவனமே அது. நடுவணரசு தமிழ்மொழி மற்றும் பண்பாடு சார்ந்த நிறுவனங்கள் வளர அனுமதிக்காது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த பல ஆண்டுகளில் ஒரு சிலரைத் தவிர, மற்றைய அனைத்துத் துணைவேந்தர்களும் திட்டமிடுதல், செயல்படுதல் எனும் அடிப்படையில் புரிதல் இல்லாதவர்கள். அரசியல் வாதிகளின் விருப்பம் சார்ந்து, கட்சிப் பதவிபோல் துணைவேந்தர் பதவி கொடுக்கப்பட்டது. அதனால் அந்நிறுவனம் சீரழிந்து கிடக்கிறது. இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் துணைவேந்தர், சரிசெய்ய முயற்சி செய்கிறார். சரியாகும் என்று நம்பிக்கை இல்லை; ஏனெனில் பல்கலைக் கழக நிர்வாகத்தின் அடிமட்டமே சீர்குலைவுக்குள்ளாகியுள்ளது. மூன்று ஆண்டுகளில் சரி செய்வது சாத்தியம் இல்லை.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆளும் கட்சியின் நேரடிக் கிளைபோன்று செயல்படுகிறது. அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம் எனும் பெயரில் பெரும் விழாக்களை நடத்தி, கல்வித்துறை தொடர்பற்ற கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கல்வியாளர்களை இயக்குநர்களாக நியமனம் செய்யும் மரபு இல்லாமல் போனதால், கட்சித் தொண்டர்களான, கரைவேட்டிக் காரர்கள் இயக்குநராக செயல்படும் அவலம் தொடர்கிறது. இதிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று தெரியவில்லை. தமிழ்ஆய்வு சார்ந்த பண்பாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் மிகுந்த கவலை தருவனவாக உள்ளன. நேரடிக் கட்சித் தலையீடு என்பதிலிருந்து இந்த நிறுவனங்கள் விடுபட்டுக் கல்வியாளர்களின் நேரடிச் செயல்பாடு எதிர்காலத்தில் நிகழுமா? என்ற கேள்வி நம்முன் உள்ளது. தமிழ்ப்பண்பாட்டுச் சீரழிவுகளில் ஒன்றாக இவற்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தனித்தமிழ் இயக்கம் குறித்தப் பதிவு

தமிழகத்தில் தோன்றிய பண்பாட்டு இயக்கங்களில் தனித்தமிழ் இயக்கத்திற்கு தனித்த இடமுண்டு. மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், இளவரசு என்றதொரு தொடர்ச்சியான ஆளுமைகளின் பங்களிப்பு நேர்மையானது. தமிழ்மொழியில் தேவையில்லாமல் உருவான மொழிக்கலப்பு தடுத்து அணைபோட்டு, நல்ல தமிழ் உருவாக வழிகண்ட இயக்கம். இவ்வியக்க மரபை மதித்த திராவிட இயக்க ஆட்சி அதிகாரம் உருவானதால் பொதுவெளியில் தமிழ்ப் புழக்கம் வளமாகியது. இப்போது மீண்டும் ‘நமஸ்காரத்தைக்’ கொண்டு வர விரும்பும் பார்ப்பனீய சக்தி உருப்பெறும் சூழலில் இந்த இயக்கத்தின் வலிமையைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியான பண்பாட்டு இயக்கம் இது. கோட்பாட்டுப் புரிதல்களில் முரண் இருந்தாலும் இவ்வியக்கத்தைக் கொண்டாட வேண்டும். தனித்தமிழ் இயக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம் வளமானது. புலமைத்துவ தளத்தில் இவ்வியக்கம் அடிப்படைவாதப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மதிப்பீடு உள்ளது. இந்தத் தன்மையில் இப்போது மாற்றம் உருவாகி வருகிறது.

தமிழ்வழிக் கல்விக்கான தடைகள் யாவை? அவற்றைக் களைந்து முன்னேறுவதுஎப்படி?

தமிழ் வழிக்கல்வியை அதன்தொடக்கக் காலத்திலேயே நடைமுறைக்கு வராமல் தடுத்தவர்கள் அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியாரும், முதலமைச்சராக இருந்த மீ. பக்தவச்சலமும் ஆவர். சி. சுப்பிரமணியம் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். அதனை இழுத்து மூடியவர்கள் மேற்குறிப்பிட்ட இருவர். இரா. நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழ்வழிக் கல்வியில் நம்பிக்கையில்லை இதற்கு அடிப்படை, இவர்களுக்கு இருந்த ஆங்கில மோகம். இந்தி எதிர்க்கும் பண்பாட்டுப் போரில், தமிழை வளர்ப்பதற்குப் பதிலாக ஆங்கிலத்தை வளர்த்தெடுப்பதில் திராவிட இயக்கத்திற்குப் பங்குண்டு. காலனிய தாக்கமும் பார்ப்பனீய மனநிலையும் கல்வித்துறையில் இன்னும் அதிகார சக்தியாக உள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற்ற ஆண்டுகளில் தமிழ்வழிக் கல்விக்கான பாடப்புத்தங்கள் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வளமாக செயல்பட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், இப்போது சீரழிந்து போனது. அதனை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அந்தக் காலத்தில் வெளியிட்ட நூல்களை திரு. உதயச்சந்திரன் அவர்கள் முயற்சியில் அண்மையில் ஒளிப்பட அச்சாகக் கொண்டு வந்துள்ளார்கள். திராவிடக் கட்சிகள் தமிழ்வழிக் கல்வியை வளர்த்தெடுக்கும் திட்டங்களை வளமாக்கவில்லை.

 தமிழ்நாட்டில் கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

தொடக்கக் கல்வி நடைமுறைப்படுத்தும் முறைமைகளில் மாற்றங்கள் தேவை. குழந்தைகளுக்கு எத்தகைய பாடங்களை, எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்று குறித்த அறிவியல் பூர்வமான திட்ட வரையறைகள் இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழி பயிற்றல் என்பது அறிவியல் பூர்வமான முறைகளில் அமைந்திருக்கிறது. தமிழ் மொழி பயிற்றல் அவ்வாறு இல்லை. இதனால் தமிழ்மொழி கற்றலில் குழந்தைகள் ஆர்வம் காட்டாது சோர்வடைகிறார்கள். ஆங்கிலக் கல்வி பயிற்ற இலக்கியம் மற்றும் மொழிக் கல்விக்கான ELT எனும் துறை வளர்ச்சிடைந்துள்ளது. அதைப்போல் தமிழில் TLT எனும் துறை குறித்த புரிதல்கூட இல்லை.

தொடக்கக்கல்வி பயிற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முறைகள் புதிய வளர்ச்சியோடு இல்லை. மிகப்பழைய முறையே உள்ளது. நவீன வளர்ச்சி சார்ந்த புதிய முறைப் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பயிற்சி நிறுவனங்கள் புலமைத்துவ சூழல் மிக்கதாக இருக்கவேண்டும். அவ்வாறு தமிழ்ச் சூழலில் இல்லை. தொடக்கக்கல்வி சீர்பெற்றால் இடைநிலைக் கல்வி தானாகவே மாற்றமடையும். இதனால் பள்ளிக்கல்வி என்பது குழந்தைகளின் ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் பயிற்சி மையங்களாக அமையும். இப்போது அப்படி இல்லை. ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை மிகுதி.

உயர்நிலைக்கல்வி நிறுவனங்கள், புலமைத்துவ உரையாடல் நிறுவனங்களாக வடிவம் பெறவேண்டும். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக அமைப்பு போன்று அமைதல் அவசியம். அந்த நிலை இன்று இல்லை. மாறாக அந்த நிறுவனம் அழிக்கப்படுகிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் எனும் பெயரில் கல்விவணிகம், முதலாளிகளின் தொழில்களில் ஒன்றாகியுள்ளது. வரும் காலத்தில் உயர்கல்வி என்பது ஒரு தொழிற்சாலைபோல் இயங்கத் திட்டமிடுகிறார்கள். இது வளமானது இல்லை.

பெரியார் பரிந்துரைத்த தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க வேண்டியதன் தேவை என்ன?

பெரியார் 1920களில் சமூக நீதிக்காகப் போராடி வகுப்புவாரி உரிமையைப் பெறச்செய்தார். 1938இல் இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். 1954இல் குலக்கல்விக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார். 1957 இல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொளுத்திய போராட்டத்தில் மூவாயிரம் பேருக்கு மேல் சிறை சென்றனர். பலர் இறந்தனர். வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு வைதீகப் பார்ப்பனீய எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு என்று வாழ்ந்தார்.

இதன் மூலம் அவர் முன்னெடுத்த தமிழ்த்தேசியம் என்பது மொழி ஆதிக்க எதிர்ப்பு சார்ந்தது. சாதிய ஒழிப்பை முதன்மைப்படுத்துவது. சமய மறுப்பை அடிப்படையாகக் கொண்டது. பெண் விடுதலையைக் கோரி நிற்பது. இந்தப் பின்புலத்தில்தான் பெரியாரின் தமிழ்த்தேசியம் அமைகிறது. அதை முன்னெடுப்பது நமது கடமை. அவரின் சில நடைமுறைச் செயல்பாடுகளைத் தவறாகப் புரிந்து கொண்டு அவரைத் தமிழுக்கு எதிரியாகப் பேசுவது அறியாமை.

தேர்தலில் பங்கேற்றதோடு திராவிடக் கட்சியின் போக்கு எவ்வாறு உள்ளது?

தேர்தல் என்ற நடைமுறை அடிப்படையில் சாதியத்தை நடைமுறையாகக் கொண்டது. ஓட்டு வங்கி என்பது சாதியை முதன்மைப்படுத்தி அமைவது. இதனால்தான் தமிழ்நாட்டில் சாதியச் சங்கங்கள் என்பது சாதிக்கட்சிகளாக வடிவம் பெற்று செயல்படுகின்றன. சாதி அடையாளம், ஓட்டு அடையாளம் எனும் நிலை உருப்பெற்றுள்ளது. எந்தக் கட்சியானாலும், தொகுதியின் சாதி எண்ணிக்கையைச் சார்ந்தே வேட்பாளர்களைத் தெரிவு செய்கிறார்கள்.

திராவிட இயக்கம் பெரியாரால் “சுயமரியாதை இயக்கம்” எனும் பெயரில் சாதிக்கு எதிரான இயக்கமாக உருவானது. ஆனால் திராவிடக் கட்சிகள், தேர்தலில் சாதிக்கு எதிராகச் செயல்பட முடியாது. வட்டார ‘பெரிய’ மனிதர்களின் விருப்பம் சார்ந்துதான் கட்சி இயக்கப்பட முடியும். தேர்தல், கோடிக் கணக்கில் பணம் புழங்கும் சூதாட்டம். இதை சாதிக்கட்சிகளும் மதம் சார்ந்த கட்சிகளும் நடைமுறைப்படுத்துகின்றன. திராவிட கட்சிகளும் நடைமுறைப்படுத்துகின்றன. ஊழல் செய்வதற் கான அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சியைச் சார்ந்த குடும்பம் ஒன்று தென் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியின் முதன்மையான பணக்காரக் குடும்பம் என்கிறார்கள். டி.வி.எஸ். அய்யங்கார் முதலாளிகளுக்கு இணையானவர் கள். இது எவ்வாறு சாத்தியமாகியது? திராவிடக் கட்சிகளின் தேர்தல் விளையாட்டுத்தான்.

இதன் மறுதலையாகத் திராவிட கட்சிகளின் அதிகாரத்தால் இந்தியாவில் எங்கும் நிகழாத சமூகநீதி தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. சமூக நீதியில் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட வகுப்பு மக்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பயன்பெற்றிருப்பதை மறுக்க முடியாது. திராவிடக் கட்சிகள், கொள்ளவும் முடியாத தள்ளவும் முடியாத மனநிலையை நமக்கு உருவாக்குகின்றன.

தமிழீழ விடுதலை எவ்வாறு நிகழும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பெரும்பான்மை சிங்கள பேரினவாதம், சிறுபான்மையான தமிழர்களைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒடுக்கி வருகிறார்கள். ஒரே தீவில் இரு தேசிய இனங்களும் இஸ்லாமிய மக்களும் வாழவேண்டும். இதற்கான கூட்டாட்சி தத்துவ மரபை சிங்கள பேரினவாதம் ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறையில் கூட்டாட்சி வெற்றிகரமாக இல்லை எனில், தேசிய இனங்கள் தமக்கென தனித்த அரசை உருவாக்குவது தவிர வேறு வழியில்லை. அப்படியரு அரசை உருவாக்க முயன்று ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் உயிர் இழப்புக்கு ஆளாகி விட்டார்கள். உலகம் முழுவதும் அகதிகளாக வாழும் கொடுமை நிகழ்கிறது.

நேர்மையான கூட்டாட்சியை உலக நாடுகள் அவர்களுக்கு உருவாக்கித்தர இயலாவிடில் அவர்களுக்குத் தனிநாடு உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை பேரினவாதத்தால் ஒடுக்கப் படுகிறார்கள் என்ற புரிதல் உலக நாடுகளில் உருவாக்கப்பெற்றுள்ளதா? மாறாகப் பேரினவாத அரசோடு பெரிய நாடுகள் கைகோர்த்துக் கொள்கிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் நேரடியாகவே தமிழ் இன அழிப்புக்குத் துணைபோகிறார்கள். மிகச் சிறுபான்மையாக உள்ள மக்கள் தனித்துப் போராடுவதன் மூலம் தனி ஈழம் சாத்தியமாகுமோ? என்ற அச்சம் உருவாகிவிட்டது? அவர்களுக்கு யார் துணை நிற்கப்போகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ் ஈழம் சாத்தியப்படும்.

இன்றைய இந்துத்துவ சூழலில் பெரியார் - அம்பேத்கர் ஆகியோர் கருத்துகளை முன்னெடுப்பதன் தேவை

இன்றைய இந்துத்துவ பாசிச சூழலுக்கு மாற்று பெரியார் - அம்பேத்கர் முன்வைத்த கருத்துகள்தான் முதன்மையானவை. மதத்தையும் சாதியையும் அடிப்படையாகக் கொண்டது இந்துத்துவம். இந்த இரண்டையும் ஒழிக்கப் போராடியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும். எனவே அவர்களை முன்னிறுத்துவதன் மூலம் இந்த பாசிச சக்திகளை அம்பலப்படுத்த முடியும். சாதி மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய தேவை உருப்பெற்றுள்ளது. பெரியாரிய செயல்பாட்டாளர் கள், அம்பேத்காரிய செயல்பாட்டாளர்கள், தமிழ்த் தேசியர்கள், இடது சாரிகள் ஆகிய அனைவரும் கைகோர்த்து செயல்படும் சூழல் இந்தியா விற்குத் தேவை. அதை நடைமுறைப்படுத்துவதுதான் இன்றைய முதன்மையான செயல்.

உலகமயச் சூழலும் இடதுசாரிகளும் குறித்தப் பதிவு

இடதுசாரிகள் முதன்மையாகக் கொண்ட தொழிலாளர் இயக்கங்களின் நடைமுறைச் செயல்பாடுகள் மாற்றம் பெற்றுள்ளன. உழவுத்தொழில் சார்ந்த மக்கள், இயக்கங்களாகச் செயல்படும் வாய்ப்பு கள் குறைந்துவிட்டன. இடைநிலை வகுப்பைச் சேர்ந்த கல்வி அறிவு பெற்றவர்களில் ஒரு பகுதியினர் இடதுசாரி இயக்கங்களில் செயல்படுகின்றனர். உலகத்தில் நிகழ்ந்த பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களால், இடதுசாரி அமைப்புகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது. இடதுசாரிக் கட்சிகள் இதனைக் கருத்தில் கொண்டு விவாதித்து வருகின்றனர். புதிய திட்டங்களோடு இடதுசாரிக் கட்சிகள் செயல்படும் காலம் உருப்பெறும். பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரிகள் இந்திய அரசியலில் பின் தங்கியுள்ளனர். பண்பாட்டு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் தேவை இடதுசாரிகளுக்கு இன்றைய தேவையாக அமைகிறது.

எங்கள் வீட்டில் உள்ள நூலகம் பற்றிய சில குறிப்புகள்

எங்கள் வீட்டின் பெயர் ‘கல்மரம்’, எனவே எங்கள் நூலகத்திற்கு கல்மர நூலகம் என்று பெயரிட விரும்புகிறோம். 19,500 நூல்களும், 1,800 இதழ் தொகுப்புகளும் எங்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. மையற்றுப்படி செய்யப்பட்ட 650 நூல்களும் 600 ஆய்வேடுகளும் நூலகத்தில் உள்ளன. சிறுவெளியீடுகள் சுமார் 2000 அளவில் உள்ளன. வ.ரா, இல்லத்தில் இருந்து கிடைத்த அரிய ஆவணங்கள் பல உள்ளன.

இது சொந்த ஈடுபாட்டால் உருவானது. நூலகத்தின் இதழ்த் தொகுப்புகள் பெறுமதி மிக்கவை. எதிர்காலத்தில் அரிய ஆவணங்களாக அவை அமையும். எனது கல்லூரிக் காலம் முதல் திரட்டப் பட்டவை. மங்கையின் சேகரிப்பால் நாடகத்துறை சார்ந்த மிக அரிய நூல்கள் உள்ளன. அச்சு ஊடகம், அரங்கக்கலை, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழின் முதன்மையான ஆளுமைகளின் நூல்கள், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு சார்ந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் ஆகியவை

நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்போது நூல்பட்டியல் உருவாக்கி விட்டோம். ரோஜா முத்தையா நூலக நூற்பட்டியல் முறையைப் பின்பற்றி உருவாக்கியுள்ளோம். இணையத்தில் அந்தப் பட்டியல் விரைவில் இடம்பெறும். யாரும் எங்கிருந்தும் பட்டியலைப் பார்க்க முடியும். ஆய்வு மாணவர்களுக்கு உதவுவது முதன்மையான நோக்கம்.

எனது ஓய்வு ஊதியம் மூலம் கிடைத்த தொகையில் முக்கால் பகுதியை இந்நூலகக் கட்டிடத்தை உருவாக்கச் செலவிட்டேன். கட்டிடக் கலைஞர் மகேஸ் இராதாகிருஷ்ணன் இதை உருவாக்கினார். ஐரோப்பிய நாடுகளில் இந்த வடிவில் பல வீடுகளிலும் இவ்வகையான நூலகங்கள் உண்டு. நமது நாட்டில் மிகவும் குறைவு. இந்த நூலகத்தைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவ அணியமாக இருக்கிறோம்.

நன்றி.