கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாரதிய சனதா முனைப்பு

பாசிச பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதனுடன் இராசுட்ரிய சுயம்சேவக் சங்கமும் இவர்களின் கூட்டாளிக் கும்பலான காவிக் கூட்டமும் ஒன்றிணைந்து நாட்டில் அடுக்கடுக்காகக் கீழே கொலைபாதகமான கொடுஞ் செயல்களைத் திட்டமிட்டு வகுத்தெடுத்து ஒடுக்கப்பட்ட வெகுமக்களை ஒவ்வொரு வழியிலும் வாட்டி வதைத்து பலரைப் பலிவாங்கி அவர்களின் வாழ்வை அழித்து ஒழித்துக் கொண்டேதான் வருகின்றன. இவற்றின் அடிநாடி, அமெரிக்கா எப்படி உலகை அமைதியற்ற சூழலில் வைத்து வருகின்றதோ அதே போல் இக்கூட்டம் இந்திய ஒன்றியத்தில் பதட்டமான சூழலை உருவாக்கி தம் கயமைச் செயல்களைக் கட்டவிழ்த்து விட்டு அவர்கள் மறைத்து வைத்துள்ள திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர்.

*     மசூதி இடிப்பு-பல ஆயிரம் மக்கள் பலிவாங்கப் பட்டனர்

*     தோத்திரா தொடர்வண்டி எரிப்பு-மக்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

*     மாட்டுக் கறிக்குத் தடை, பசுகாப்பு-ஒடுக்கப்பட்ட மக்களைப் பலியிடல், குறு சிறு தொழில்கள் அழிப்பு

*     மதிப்பு மிகு பண மதிப்பிழப்பு-இரு நூற்றுக்கு மேலோனோர் சாகடிப்பு

*     பொருள் சேவை வரி-பல இலக்கக் குறு, சிறு தொழில்கள் நலிவு கோடிக்கணக்கானோர் வேலை இழப்பு

*     நீட் தேர்வு-ஒடுக்கப்பட்டோருக்கு மருத்துவக் கல்வி மறுப்பு

*     மேல்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு-தனி இட ஒதுக்கீடு மறுப்பு-சமூக நீதிக் கோட்பாடு ஒழிப்பு

*     தேசியக் கல்விக் கொள்கை-கல்வி மறுப்பு-தேசிய இனங்கள் அழிப்பு

*    அரசமைப்புச் சட்ட விதி 370, 35ஹ நீக்கல் - சிறுபான்மையினருக்கு உறுதி செய்யப்பட்ட உரிமை கள் மறுப்பு, இந்திய ஒன்றியக் கூட்டாட்சி வடிவ அழிப்பு இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகும்.  இவையெல்லாம் மனுவின் சனாதனக் கோட்பாட்டை நிலைத்திட வைக்கும்.

இவற்றினூடே இராசுட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் ஏதோ நடுநிலை நாயகன் போன்று இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் பயனடை யாதாரின் மனத்தாங்கலையும் பயன்பெறு வோர் இடையுறும் இன்னல்களையும் பொதுவில் வைத்து கலந்துபேசி இடஒதுக்கீடு குறித்து முடிவை எட்டுவோம் என நயவஞ்சகமாக தன் கடைந்தெடுத்த கயமைத் தனத்தைத் தன்கருத்தாகத் தெரிவித்துள்ளார்.  இவர்கள் இதற்கும் மேலும் சுடு சொற்களால் வசைபாடத் தக்கவரெனினும் இந்த அளவுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

இவர் இவ்வாறு சொல்வதின் பின்னணியில் உள்ளவை எவை.  இவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் சொல்லும் கருத்துக்கள்.

உயர் அறமன்ற நடுவர் தம் ஆணையில் குறிப்பி டுகிறார்-கையூட்டும், இடஒதுக்கீடும்தான் நாட்டின் பெரும் கேடுகள்.

பார்ப்பனர்கள் சங்கம் நிகழ்த்திய கூட்டத்தில் சமூகத்தின் உயர் நிலையில் இருக்கத் தகுதியுடையோர் அவர்கள் மட்டும்தானாம் எனப் பேசுகின்றனர் அதில் கலந்துகொண்ட உயர் அறமன்ற நடுவர்கள்.

மோடி நாம் நாட்டின் காவலாளிகளாக இருந்து நாட்டைக் காப்போம் (உண்மையில் அழிப்போம் என்பதுதான் உட்பொருள்) என்ற புனையுரையைக் கூடச் சகிக்காத பா.ச.க.சுப்பிரமணியசாமி சொல்கிறார்.  இல்லை, இல்லை நான் பிராமணன். அந்தக் கீழ்ப்பணிகளை நாங்கள் செய்யோம். நாங்கள் சொல்பவற்றைச் செயல் படுத்துபவர்களாகத்தான் (மோடி இதில் அடக்கம்) பிறரை வைத்திருப்போம்.

இந்த உளவியல் பார்பனர்களுக்குள் ஊடுருவி நிற்கின்றது. பாரத ஸ்டேட் வங்கிப் பணிபெற தேர்வுக்கு மேல்சாதி ஏழைக்களுக்கு 28 மதிப்பெண்களே போதுமானதாகும்.  ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தகுதி மதிப் பெண் 75.80 என்ற அளவில், ஒப்பீட்டளவில் இவர்கள் எவ்வளவு தாழ்நிலையில் இருந்தாலும் தகுதியுடைய வர்களே. இதுபோன்ற எண்ணிலடங்கா அறநெறிக்கு எதிராகத் தான்/தாம் என்ற திமிரான பேச்சுக்கள் அன்றாட நிகழ்வாகி வருகின்றன.

ஒரு பார்ப்பனர் சொல்கிறார், நாய்களில் உள்ள பல்வேறு வகைகளை எப்படி ஒரே இனமாக்க் கருத முடியாதோ அதே போன்றது தான் மனித இனம்.

உச்ச அறமன்றம் பலமுறை கூறுகின்றது.  இட ஒதுக்கீடு எவ்வளவு காலம்தான் தொடரும்.  அதற்குக் கால வரையறை வேண்டாமா?  மேலே முதலில் குறிப்பிட்டவர் இவர்களெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அதன் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு நியமனம் பெற்று அதன் உள்ளடக்கமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை அந்தப் பதவியில் இருந்து கொண்டே அரசமைப்புச சட்டத்திற்கு முற்றிலும் எதிராகக் குறிப்பிடுவது, நாங்கள் எதையும், எப்படியும், எந்தப் பொறுப்பிலிருந்தாலும் பேசுவோம் என்பதன் வெளிப்பாடுதான்.

இனி பார்ப்பனியக் காவிக் கூட்டம் இடஒதுக்கீட்டுக் கொள்கை அழிப்புக்கு எவ்வாறெல்லாம் வித்திட்டு இப்போது மோகன் பகவத் அதை அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளார் என்பதைக் காணலாம்.

அரசமைப்புச் சட்ட விதிகள் 15 (4) மற்றும் 16 (4) இல் (பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களும் அடங்குவர்) 1950 லிருந்தே பிற்படுத்தப்பட்டோருக்கு இதில் உரிமையாக வழங்கியிருந்தபோதிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக் கென மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் 27 ஒதுக்கீடு அளித்திட ஒன்றிய அரசு நெருக்கடிக்கு உள்ளாக் கப்பட்டு ஆணையிட்ட அடுத்த அடியிலேயே அதனை ஒழித்திடவும் அடித்தளம் இட்டுவிட்டனர். 

ஒதுக்கீடு பெற வருமான அளவு வரையறைவகுத்து அந்த வரையறை அளவை மிகும் நிலையில் அவர்கள் பசையுடைய வளமான பிரிவினராக முத்திரையிடப்பட்டு ஒதுக்கீடு வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள் எனக்கூறி அதைப்பெற தகுதியற்றவர்களாக அறிவித்துவிட்டனர்.  அந்த அழிப்புத் திட்டத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் மேல்சாதி ஏழை களுக்கென்று தனியாக 10 விழுக்காடு அளிக்கப்பட்டு சட்டம் இயற்றி நடைமுறைக்கு வந்துவிட்டது.  (அதன் செயல்பாட்டில் விளைந்த கேடுகளை பின்னர் விவரிப்போம்) அதன் நீட்சியாக, இடஒதுக்கீட்டை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்டத்தான் இதன் மீதான விவாதத்தை மேற்கொண்டு முடிவுக்கு வருவோம் என்ற பசப்புச் சொற்களில் விளக்கி யுள்ளார் மோகன் பகவத்.

அரசின் முதன்மையான மூன்று அலகுகளாக உள்ள சட்டமன்றம், நிருவாகத்துறை, அறமன்றங்களின் உயர் அதிகாரங்களில் மேல்சாதிக்காரர்கள்தான் (பார்ப்பனர்கள் மட்டும் மிகுந்து) 100 விழுக்காடு அளவுக்கும் முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று நாடாளுமன்றத் தில் அரசு தெளிவான விவரங்கள் தந்துள்ளது.  குறிப்பாகத் குடியரசுத் தலைவர் அலுவலகம், ஒன்றிய தில்லி தலைமைச் செயலக முக்கிய துறைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் இவர்கள்தான் இடம் பெற்று மெய்யான ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதே நிலைதான் நாடு விடுதலையடைவதற்கு முன் மௌரியர், மொகலாயர், ஆங்கிலேயர் என எவர் ஆட்சி யில் இருந்தார்களெனினும் அதிகாரம் செலுத்தியவர்கள் முழுவதும் இவர்கள்தானே.  நாட்டின் விடுதலைக்குப் பின் 72 ஆண்டுகளிலும் இவர்கள் கோலாச்சிக் கொண்டிருக்கின் றார்கள்.  இவர்கள் எவ்வளவு நயவஞ்சக கயமை எண்ணங் கொண்டவர்களாக இருந்திருப்பின் இப்போது 193 உலக நாடுகளிலேயே மக்கள் மேம்பாட்டுக் குறியீடுகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, ஊதிய அளவுகள், பொதுவாக வாழ்க்கைத்தரம் எனப் பல்வேறு தன்மைகளால் மனுதர்மத்தின்படி வெகுமக்களான ஒடுக்கப்பட்டவர்களை அடி மட்டத்தில் வைத்திருப்பதையே கொள்கையாகக்  என்பது உறுதியாகிறது.  இதுதான் இந்தக் கூட்டத்தின் தகுதி திறமைக் கோட்பாட்டின் வெளிப்பாடு.  இந்நிலையில் வெறும் 10ரூ அளவில் கூட உயர் கல்வியில் உயர் பணிபதவிகளில் இடஒதுக்கீடு வழி இடம்பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களை முற்றிலும் இவற்றிலிருந்து அகற்றி விடவேண்டுமென்ற உள்நோக்கம் கொண்ட கெடுமதிதான் பாகவத்தின் கூற்றாகும்.

இதில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்து மதவாதம் பேசும் இவர்கள் கண்ணுக்கும் கருத் துக்கும் மேற்சொன்ன ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்களாக வே தெரியவில்லை என்பதுடன் பார்பனர்கள் மட்டுமே இந்துக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்களாகவும் மனுவின் கூற்றுப்படி இவர்கள்தான் வாழ்வும் வளம் பெறுவதற்கும் தகுதியானவர்கள் என்பதுதான் இந்தக் காவிக் கூட்டத்தின் முடிவான முடிவாகத் தெரிகிறது. 

எனவே இவர்கள், இந்துக்கள் மீதான பற்று என்பது வெறும் பசப்பு, வெற்றுக் கூச்சல் என்பதையெல்லாம் மேற்சொன்னவைகளிலிருந்து தெளிவானபோதும் இந்த இந்துச் சமூகம் எனப்படுவது குறுக்கு நெடுக்காகப் பிளவு படுத்தப்பட்டு ஒருவருக்கொருவர் கீழோர், மேலோர் என்ற இழிவிலேயே உழல வைக்கப்பட்டுள்ளதைச் சற்றும் புரியாமல் பொது எதிரி யார் என்பதை அறியாமலேயே உள்ளனர்.

தற்போதைய 2018-19இல் இந்திய ஒன்றிய மக்களின் வாழ்நிலை எவ்வாறு இரங்கத்தக்க தன்மையில் உள்ளது என்பதை அண்மையில் உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றது.

உலக நாடுகளில் (சில) நிலவும் மோசமான வறுமையில் வாடும் மக்கள்  (விழுக்காட்டில்)

Inter census 600இந்திய ஒன்றியத்தில் 21.2 விழுக்காடான 29.30 கோடி மக்கள் இப்போது வறுமையின் பிடியில் வைக் கப்பட்டுள்ளனர்.  ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் உயர்ந்துள்ளது எனப் பெருமை பேசிவந்த காங்கிரசும் (பா.ச.க. போன்றவரே) பாரதிய சனதா கட்சியும் இந்த விவரங்களையும் பார்த்துவிட்டு வெட்கித் தலைகுனியாமல், வெகுமக்களைப் பசிப்பிணியிலிருந்து மீட்டெடுக்க எவ்வித திட்டங்களையும் வகுக்கமுனையாமல் உள்ளன.  இவர்கள் ஏழை, எளிய மக்கள் குறித்து எவ்வித கரிசனமற்றவர்கள்.

சென்ற 30 ஆண்டுகளில் நம்மையொத்த சீனா வறுமை நிலையை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான அளவுக்குக் குறைத்து விட்டது. அதேபோல் பாக்கிசுத்தான் 7.8 என்ற அளவுக்குக் குறைத்துள்ளது.  ஆனால் இந்திய ஒன்றியம் 21.2 அளவைத் தக்க வைத்துள்ளது இங்கு ஆட்சி செய்வோர் மக்கள் நலப் பற்றற்றோர் என்பதைக் காட்டுகின்றது.

இந்த வறுமையின் பிடியில் உள்ள 30 கோடி மக்களும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் சிறிதும் அய்யம் கொள்ள வேண்டியதில்லை.  ஏனெனில் இந்த அளவு வறுமையில் உள்ளவர் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினருள் இருக்க வாய்ப்பே இல்லை எனலாம்.  வேண்டுமென்றால் ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் உள்ள மேல் சாதி ஏழைகள் இருக்கலாம். 

இந்தச் சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட இந்திய ஒன்றியத்தில் சனாதனக் காவிக் கும்பலான இராசுட்ரிய சேவக் சங்கம், பாரதிய சனதாக்கட்சி அரசமைப்புச் சட்டத்தை அறநெறி எதையும் பின்பற்றாமல் அடாவடியாக மோசடியாகத் திருத்தி மேல்சாதி ஏழை களுக்கென (பொதுப்பிரிவில் நலிந்த பிரிவினர்கள்) கல்வியிலும், வேலைகளிலும் தனியே, 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட வழிசெய்து விடுவதில் எவ்வளவு முனைப்பும் வேகம் காட்டியுள்ளனர் என்பதிலிருந்து (தண்ணீரைக் காட்டிலும் குருதி அடர்த்தியானது) தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்ற பழமொழியை மேல்சாதிக்காரர்கள் எண்பித்துக் காட்டிவிட்டனர்.

குறிப்பாக இந்தச் சனாதனக் கும்பலுக்கு மேல்தட்டு இந்து மக்கள் என்ற மேல்பூச்சை முகமூடியாகக் கொண்டு அதிலும் ரூ.8 இலட்சம் வருமான அளவு உடைய இந்துக்கள் மேல்தான் பெரும் அக்கறையுடன் செயல்பட்டு கீழ்த்தட்டு இந்து வளையத்திற்குள் வரும் 80-85 மக்களை இழிவான இந்துக்கள் என அவர்களின் நலனுக்கு எதிராகத்தான் அவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு வேட்டு வைத்துவிட்டனர்.

இதை ஒடுக்கப்பட்ட மக்களுள் சிலர் தன்னறிவு கொண்டு சிந்தியாமலும் பெரியார் அம்பேத்கார் தந்த அறிவைக் கொண்டும் சிந்திக்காமலும் 10ரூ இடஒதுக்கீடு சமூகநீதியுடன் சமநீதியும் கிடைத்திட வழி செய்துவிட்டது எனக் கூறும் இந்த காவிக் கயவர்களின் நயவஞ்சகப் பசப்பு மொழிகளுக்குச் சோரம் போய் உண்மையில் இந்தச் சமூக அநீதியை வரவேற்க வும் செய்கின்றனர்.  இது கண்டு வேதனை கொள்வதைத் தவிர என்ன செய்வது? ஆனால் வெகுமக்கள் பற்றுள்ள, அறிவு நாணயம் உள்ள தன்னிலையில் இன்றி பொது நிலையிலிருந்து அணுகும் எவரும் இது இயற்கை அறனுக்கு முரணானது, எதிரானது என மனதார உணர்வர். இருப்பினும் அரசமைப்புச் சட்டப்படியும் இதன் தன்மையை ஆய்வோம்.

முதலில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 சொல்வதைப் பார்ப்போம்.

சட்டத்தின் முன் எந்த ஒருவருக்கும் அரசு சமன் மையை மறுக்கக் கூடாது அல்லது இந்திய ஒன்றியப் பகுதிக்குள் சமமான சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் இந்தப் பிரிவுக்குப் பல காலக்கட்டங்களில் தொடுக் கப்பட்ட வழக்குகளில் உச்ச / உயர் அறமன்றங்கள் இன்னும் விரிவான தெளிவான விளக்கங்கள் தந்துள்ளன.  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு அனை வருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சமனற்றவர்களுள் போட்டி என்பது நெறியற்றது என்றும் இன்னும் தெளிவாகப் போட்டி சமமானவர்களுக்கிடையில் இருப்பதுதான் நெறி என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட் டுள்ளன.

இந்த விதி 14 எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் வகையில்தான் பிரிவுகள் 15ம், 16ம் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.  அதாவது பிரிவு 15(1) இன் படி சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவை எவற்றின் அடிப்படையிலோ எந்தக் குடிமகனையும் அரசு வேறுபடுத்தக்கூடாது (இது பிரிவு 14இன் படி அனைவரும் சமம்).  இதை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது வசதிகளையும் பயன்படுத்துவதற்கும் மேற்சொன்னவற்றின் அடிப்படையில் எந்தக் குடிமகனையும் இயலாமை, முடியாமை, தடைகள் அல்லது கட்டுப்பாடு இவற்றிற்கு உள்ளாக்கக்கூடாது என 15இன் துணைப் பிரிவுகள் விதிக்கின்றன. சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்பைச் சேர்ந்த குடிமக்கள் அல்லது பட்டியல், பழங்குடிகள் ஆகியோர் மேம்பாடு முன்னேற்றம் பெறுவதற்காக எந்தச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திட இப்பிரிவில் உள்ளவையோ அல்லது 19(2) பிரிவோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட அரசைத் தடை செய்யாது.

பிரிவு 16(4) இன் படி எந்தப் பிற்படுத்தப்பட்ட பிரிவுக் குடிமக்களுக்கும் அரசின் வேலைகளில் அல்லது பணி களில் போதுமான பிரநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுமெனில் எந்த வகை ஏற்பாடுகளையும் செய்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு இந்த விதியில் உள்ளவை ஏதும் அரசுக்குத் தடையாக இராது.

மேலும் பிரிவு 46-ஐ அடிப்படையாகக் கொண்டு அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்து 10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது அடிப்படையிலேயே தவறானது.  இவ்விதி நாட்டில் உள்ள எல்லா வகுப்புப் குடிமக்களுள் உள்ள நலிந்தவரை குறிப்பிட்டுவிட்டு சிறப்பாக பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களைத்தான் குறிப்பிட்டு அவர்களைக் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்து சமூக அநீதியிலிருந்தும் எல்லா வகைச் சுரண்டலிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்றுதான் தெளிவாக உள்ளது. 

இது 15(4), 16(4) பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு போதுமானதாக அமைத்திடாது என்ற கவலையின் அடிப்படையில்தான் அப்பிரிவுகளில் உள்ள நலிந்தவர்களும் அவர்களுடன் பிறவகுப்பு நலிந்த மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமெனத் தெளிவாக உள்ளது.  இதை 10 விழுக்காடு இடஒதுக்கீட் டுக்கு நயவஞ்சமாகப் பயன்படுத்தியதே மிகப்பெரும் குற்றம். எனவே இச்சட்டம் செல்லுபடியாகாது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.

இந்த இரண்டு பிரிவுகளிலும் வேற்றுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பதின் அடிப்படையில்தான் இவ்விதிகளில் உள்ளவை எதுவும் சமூகம், கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட அரசை தடைசெய்யாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் அஞ்சல் துறை, வங்கிகள் பணி நியமனங்களில் 10 விழுக்காடு சட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண் தெரிவு செய் யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் மிகக்குறைவு என்பது மட்டும் அல்ல 28 மதிப்பெண் பெற்ற மேல் சாதி ஏழையும் பணிநியமனம் பெற்றுள்ளார். இது பிரிவு 335க்கு முற்றிலும் முரணானது பட்டியல் வகுப்பு, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர் அறமன்றத் தீர்ப்பின்படி ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தகுதி திறமை பாதிப்படையும் வகையில் அமைத்திடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையை இந்தப் பிரிவு விதித்துள்ளது. 

இது ஒடுக்கப்பட்ட மக்களை இழிவு படுத்தும் என்றும் அடிப்படை நேர்மைக்கு எதிரானது என்றும் மா.பெ.பொ.க கருதுகின்றது.  இப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்நிலைப்பாடு. ஆனால் தற்போது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவின்படி 10 விழுக்காடு சட்ட நடவடிக்கைகள் முறை யற்றவை.  அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே 10 விழுக்காடு சட்டத்தின் படி செய்யப்பட்ட நியமனங்கள் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் உட்பட) அரசு கல்வி பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறும் வரையில் இடஒதுக்கீடு தொடர்ந்து பெறவேண்டும் என்பதே 15(4), 16(4) விதிகளின் பொதிவான பொருள். பிற்படுத்தப்பட்டோர் வேற்றுமைக்கு உள்ளாக்கப்பட்ட வர்கள் என அதில் சொல்லப்பட்டுள்ளதின் அடிப்படையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.  அது தொடர வேண்டும்.  இது மேல்சாதி ஏழைக்களுக்குச் சற்றும் பொருந்தாதது. எனவே 10 விழுக்காடு சட்டம் செல்லத் தக்கதல்ல எனத் தள்ளுபடி செய்யத்தக்கது.

மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு நலன்கள் பாதுகாக்கப்பட மோடி அரசின் இந்த மோடிச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இதற்கு வெகுமக்கள் பெரு மளவில் வெகுண்டெழுந்து ஒன்று திரண்டு மிகப்பெரும் போராட்டம் காணவேண்டும்.  இதில் ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் இந்தப் போராட் டத்தை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.