ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையிலிருந்து -
“பகுத்தறிவாளர் பார்வையில் பெரியார், பெண்கள் பார்வையில் பெரியார், தலித்துகள் பார்வையில் பெரியார், இசுலாமியர் பார்வையில் பெரியார் - என தலை சிறந்த தலைப்புகளில் பலர் பேசியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்ததல்ல இயல்பாகவே அமைந்துவிட்டது.
ஏனென்றால், பெரியார் ஒரு இசுலாமியர் அல்ல; ஆனால், இசுலாமியர்களின் தலைவர். பெரியார் பெண் அல்ல; ஆனால், பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல; ஆனால், தலித்துகளின் தலைவர் என்பதை உணர்த்துகின்ற மேடையாக இந்த மேடை அமைந்திருக் கின்றது. இதை வேறு எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியாது. பெரியார்தான் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுடைய ஒற்றைக் குறியீடாக தென்னகத்தில், தமிழ்நாட்டில் திகழ்ந்துகொண்டிருக்கின்றார். வேறு எந்த தலைவருக்கும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்படிப் பொருத்திப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட அடையாளமாக, ஒரு குறியீடாக பெரியார் திகழ்கின்றார்.
இசுலாமியர்கள் ஒரு இசுலாமியரைத் தவிர்த்து இன்னொருவரை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தளவிற்கு மதரீதியாக மார்க்க ரீதியாக ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டவர்கள். மூன்று வயதிலேயே மார்க்க கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டவர்கள். உலகப் பொதுக்கல்வி கற்கவே 6 வயதிற்குத் தான் வருவார்கள். ஆனால் மார்க்கக் கல்வியை கற்க 3 வயதில் அனுப்பப்படுகின்றனர். இது தொடர்ச்சியாக நடக்கும்.
அப்படிப்பட்ட தலைமுறைகளிலிருந்து வந்தவர்கள்தான், கடவுளே கூடாது, மதமே கூடாது என்ற பெரியாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம் என்றால் இது ஒரு மிகப் பெரிய தாக்கம், மாற்றம். இது ஏதோ இன்றைக்கு நடந்தது என எண்ண வேண்டாம். ஒரு நூறு ஆண்டு களுக்கும் மேலாக இப்படி அடையாளப்படுத்தப்பட் டிருக்கிறார்கள் .
காயிதே மில்லத் அவர்கள் இசுலாமியர்களின் தலைவர். முஸ்லிம் அரசியலை வெளிப்படையாகக் கட்டமைத்தவர். முஸ்லிம் லீக் என்ற தேசிய கட்சியை நடத்தியவர். அவர், அவரது அரசியல் எல்லாமே இசுலாமியர்களுக்கானது. அவர் தீவிர மத, கடவுள் பற்றாளர். அவர் ஒரு அரசியலை முன்னெடுத்துக் கொடுக்க, தமிழ்நாட்டில் யாரோடு இணைந்து அந்த அரசியலை செய்ய முடியும் என பார்க்கிறார். அன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் தமிழகத்தில் இருந்தன. திராவிட நாடு கோரிக்கை, இந்துக்களை, கடவுள்களை எதிர்க்கிறார் என்றும் பெரியார் போகிற இடமெல்லாம் பிரச்சனை வந்து கொண்டிருந்த நேரத்தில் பெரியாரோடு இணைந்த அரசியலைதான் காயிதேமில்லத் எடுத்தார். பெரியாரோடு கைகோர்த்துக் கொண்டு பயணித்தார்.
பெரியார் கடவுளை மறுத்தார். காயிதே மில்லத் கடவுளைப் போற்றினார். பெரியார் மதம் கூடாது என்றார். காயிதே மில்லத் மதம் வேண்டும் என்றார். ஏன் நேர் எதிர் முரண்பாடுகளுடன்தான் பயணம் செய்தனர். இருவரும் இணைய முடியாத கோட்பாடுகளைக் கொண்டவர்கள். ஆனால் சமூக நீதி என்கிற கோட்பாட்டில்தான் இவர்கள் இணைய முடிந்தது.
முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றார்கள், ஆதிக்க சக்திகளால் நசுக்கப்படுகின்றார்கள், மத ரீதியாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற சூழ்நிலையில் பெரியார் இயக்கம் உருவாக்கி வைத்திருந்த விதை, அந்த கட்டுமானம் இன்றைக்கு வரைக்கும் சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்ற அடையாளம்தான் இந்த மாநாடு. இது ஒரு வரலாற்று துவக்கம்.
இன்றைக்கு நான் இங்கு வந்துகொண்டிருக்கின்ற நேரத்தில் பீகார் தேர்தல் முடிவுகளை பார்த்து அது பற்றிய சிந்தனையோடுதான் இவ்வரங்கத்தினுள் நுழைந்தேன்.
5 ஆண்டுக்கு ஒருமுறை வாக்களித்து இந்துத்துவத்திற்கு எதிராக ஒரு முடிவை ஒரு நிலைப்பாட்டை பீகார் போன்ற மாநிலங்கள் எடுக்கிறது. ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல ஓவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதைத்தான் இந்த அரங்கம் இந்த மாநாடு நமக்கு உணர்த்துகின்றது.
இங்கே இந்துத்துவம் என்பது எந்த காலத்திலும் செல்லுபடியாகாது என்பதை தொடர்ந்து நிருபிக்கின்ற களமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கின்றது. இங்கே எனக்கு தரப்பட்ட தலைப்புக்கூட, பார்ப்பனீயம், இந்துத்துவம் இசுலாமியர்களின் பார்வையில்…என்று தரப்பட்டிருக் கின்றது.
இந்துத்துவமும், பார்ப்பனீயமும் இந்தியாவில் ஒரு சமூகத்தையே எதிரியாக முன்னிறுத்துகின்றது. இசுலாமிய சமூகத்தை மிக வெளிப்படையாக புறந்தள்ள முயற்சிக் கின்றது. இந்து சாதிகளை ஒன்றிணைப்பது. இந்துக்கள் என்ற கட்டுமானத்தை ஏற்படுத்துவது, அதற்கு எதிராக முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டுவது, முஸ்லிம்கள் வந்தேறிகள் இம்மண்ணிற்குத் தொடர்பில்லாதவர்கள் என்று சொல்லி அவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை எதிர்ப்பதற்கு இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு அரசியலை நெடுங்காலமாக இந்த மண்ணில் பார்பபனீயம், ஆர்எஸ்எஸ், பா.ஜ.க போன்ற சக்திகள் செய்து வருகின்றன.
இது பொதுமக்களிடம் - குறிப்பாக இந்திய பொது மக்களிடம் எடுபடக்கூடிய காட்சிகளை நாம் பார்த்து வருகின்றோம். அது பல்வேறு கட்டங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கின்றது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எடுபடவில்லை என்றாலும் வட மாநிலங் களில் எடுபடுகின்ற சூழல்களை நாம் பார்க்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் அதற்கு சாட்சியாக இருக்கின்றது. அவர்கள் என்ன சொல்லி முஸ்லிம்களை தனிமைப்படுத்துகின்றார்கள். அவர்கள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முஸ்லிம்கள் மீது பார்ப்பனீயம் வைக்கக்கூடிய அவதூறுகள் உண்மைதானா அது எந்தளவிற்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பார்ப்பனீயம் ஆர்.எஸ்.எஸ் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகளில் சிறிதேனும் உண்மையிருக்கிறதா என அறிவு பூர்வமாக ஆராய்ந்து அணுக வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். நாம்தான் உண்மையை வெளி உலகத்திற்கு எடுத்து சொல்ல முடியும் .
முஸ்லிம்கள் மீது வைக்கின்ற முதல் குற்றச்சாட்டில் முஸ்லிம்கள் மைய நீரோட்டத்தில் இணைய மாட்டார்கள். தம்முடைய மதம் தம்முடைய மதகோட்பாடு என்றுதான் செல்வார்கள். மொழியா, மதமா என்று கேட்டால் மதம்தான் பெரிது என்பார்கள். நாடா, மதமா என்று கேட்டால் மதம்தான் பெரிது என்பார்கள். நாட்டிற்கும் மொழிக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள் இது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல்கள் முஸ்லிம்கள் மீது வைக்கின்ற மிகப் பெரிய குற்றச்சாட்டாகும். இது உண்மையா என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகன்களும், தமிழ்க் குடிமகன்களும் ஆய்வு பூர்வமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்கள் மதமாகத்தான் ஒருங்கிணைவார்கள் என்று பார்த்தால் அது உண்மையல்ல.
இந்தியாவில் முஸ்லிம் லீக் தலைவர்கள் என யாரை சொல்கின்றோம் என்றால் காயிதே மில்லத்தை தான் சொல்கின்றோம். தமிழகத்தில் காயிதே மில்லத்திற்கு முன்னதாக ஜமால் முகமது சாகிப் போன்றவர்கள்தான் இந்தியாவில் முஸ்லிம் லீக் என்று அடையாளப்படுத்தி யிருக்கின்றோம்.
இவர்களில் எடுத்த எடுப்பிலேயே முஸ்லிம் அரசியலுக்கான, நலனுக்காக உருவாகி வந்தவர்களா என்றால் இல்லை. ஜின்னாவிற்கு இது பொருந்தாது. ஜமால் முகமதுவிற்கு இது பொருந்தாது. காயிதே மில்லத்திற்கு இது பொருந்தாது. இவர்களெல்லாம் எங்கிருந்த தலைவர்கள் என்று பார்த்தால் காங்கிரஸில் இருந்த தலைவர்கள்.
பெரியாரைபோல் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னோடிகள். பெரியார் எப்படி காங்கிரஸ் ஒரு ஆதிக்க ஜாதிகளின் கூடாரம் என்று சொல்லி வெளியேறினாரோ அதுபோல வெளியேறியவர்கள்தான் ஜின்னா, ஜமால்முகமது, காயிதே மில்லத் போன்ற தலைவர்கள். எனவே மைய நீரோட்டத்தை விலக்கிவிட்டு நாங்கள் இப்படிதான் இருப்போம் என அறிவித்துவிட்டு வெளியே சென்றவர்கள் அல்ல இவர்கள். மைய நீரோட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் மைய நீரோட்டம் அவர்களை விலக்கி வைத்தது. அதுதான் உண்மை. முஸ்லிம்கள் தானாக விலகி நிற்கவில்லை. தங்களுக் கென்று தனிகட்சி என்று அடையாளப்படுத்தியதில்லை. தங்கள் தலைமையில்தான் இம்மக்கள் திரளவேண்டும் என்று எந்த காலத்திலும் சொல்லியதில்லை. ஆனால் அப்படி அவர்களை சொல்ல வைத்தது பார்ப்பனீயம்.
மத அடையாளமற்ற ஜின்னா
ஜின்னா எப்படிபட்ட தலைவர் அவர் என்றைக்காவது தன்னுடைய மத அடையாளத்தை வெளிப்படுத்தி யிருக்கிறாரா? அவர் தாடி வைத்துக் கொள்ள மாட்டார்; தொப்பி அணிய மாட்டார்; இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்றியதில்லை; மாறாக தன்னை மேல்நாட்டு கலாச் சாரத்தில் ஈடுபடுத்திகொண்டவர். கையில் எப்போதும் சுருட்டை பிடித்துகொண்டிருப்பார். முஸ்லிம் தலைவர்கள் என்பவர்கள் அப்படியிருக்க மாட்டார்கள். அவர்களின் பண்பாடு வேறு மாதிரியிருக்கும். ஜின்னா அதற்கு நேர்மாறாக இருந்தார். ஆனால் மதசார்பின்மைக்கு ஆதரவாளர். மதசார்பின்மை கருத்திற்கு ஆதரவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். எங்கும் இஸ்லாமிய மதகோட்பாட்டை ஏற்றவர் அல்ல. எங்கேயும் தன்னை ஒரு மதத்திற்கு உரியவராக அடையாளப்படுத்தி யதும் இல்லை. சொல்லப்போனால் காங்கிரஸில் உள்ள மேலாதிக்கத்தை எதிர்த்து முஸ்லிம்கள் கட்சி தொடங்கிய போது அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் ஜின்னா.
1906இல் முஸ்லிம் லீக் தொடங்கப்படுகின்றது. ஆனால் 1933இல்தான் ஜின்னா முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலமாக ஜின்னா, முஸ்லிம் லீக் அரசியலை மறுத்து வந்திருக்கின்றார். முஸ்லிம்கள் தனித்து இயங்கக் கூடாது; அவர்கள் மைய நீரோட்டத்திற்குதான் வர வேண்டும் என்றும், முஸ்லிம்கள் தனித்த அடையாளத் தோடு இயங்கக்கூடாது எனவும் போராடியவர் ஜின்னா. அப்படிப்பட்ட ஜின்னாதான் பின்னாளில் முஸ்லிம் லீக் தலைவரானார். முஸ்லிம்களுக்கு ஒரு நாடு வேண்டும் எனவும் கேட்டார். முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து அதில் இணைந்த ஜின்னா தனி நாடு கேட்டதற்கான காரணம் அவர் அல்ல, அப்படிப்பட்ட சிந்தனையும் கொண்டவரல்ல, அவரை முஸ்லிம்களுக்கு தனிநாடு தேவை என கேட்க வைத்தது எது. முஸ்லிம்கள் மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டார்கள். ஜின்னாவும் விலக்கி துரத்தப்பட்டார். இதை செய்தது இந்துத்துவ பார்ப்பனீயம் என்கிற சூழ்ச்சி; இந்து தேசிய அரசியல்.
அடுத்து தமிழ்நாட்டு அரசியல் என்னவென்று பார்க்க வேண்டும். ஜமால் முகமது சாகிப் என்கிற ஒரு தேசியவாதி. திருச்சி ஜமால்முகமது கல்லூரியை நிறுவியவர். தென்னகத்தில் மிகப்பெரிய தோல்ஏற்றுமதி செய்கின்ற நிறுவனத்தை நிறுவியவர். செல்வாக்கு மிகுந்த மிகப்பெரிய செல்வ செழிப்புடன் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தேசியவாதி. இன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் தலைவராக வரமுடியுமா என நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். 1930 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமையேற்று நடத்தியவர் ஒரு முஸ்லிம். ஆனால் 1906ல் தொடங்கப்பட்ட முஸ்லிம் கட்சி 1937இல் தான் தமிழ்நாட்டில் அவ்வியக்கம் தொடங்கப்படுகின்றது. அதை யார் தொடங்குகின்றார் என்று பார்த்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜமால்முகமது சாகிப் அவர்கள்தான் தொடங்கினார். அதற்கு காரணம் அப்போது சென்னை மாகாண கவுன்சிலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜமால்முகமது போட்டியிடுகின்றார். அப்போது ஒரு இந்திய விடுதலைக்காக காந்தி நன்கொடை திரட்ட தமிழகத்திற்கு வந்தபோது இங்கு எந்த தேசியவாதியும் நிதிகொடுக்க முன்வரவில்லை.
ஜமால்முகமது சாகிப் அவர்கள்தான் தொகை நிரப்பப்படாத ஒரு காசோலையை காந்தியிடம் கொடுத்து, ‘உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை காசோலையில் எழுதிக்கொள்ளுங்கள்’ என்று கொடுத்தார். காந்தி அதிர்ந்து போனார். அந்த காசோலை யில் காந்தி ரூ. ஒரு லட்சத்தை நிரப்பிக்கொண்டார். 1930 காலகட்டத்தில் இந்திய விடுதலைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்தவர் ஜமால்முகமது சாகிப். அந்தளவிற்கு தேசியத்தின் மீது ஈடுபாடுகொண்டவர். தன்மக்களையும் தேசிய விடுதலைக்காக உழைக்க வைத்த ஒரு சிறந்த தேசியவாதி. அப்படிப்பட்டவர் சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டபோது அவர் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் காங்கிரஸில் இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுகின்றார். ஜமால் முகமது சாகிப் தோற்றார். உயர்ஜாதி ஆதிக்கம் வெல்கிறது. உண்மையான தேசியம் தோற்றுப் போகின்றது. காங்கிரஸின் இத்தகைய போலித்தனத்தால் மிகுந்த மன வேதனையடைந்த ஜமால்முகமது காங்கிரஸை விட்டு வெளியே வந்தார். காங்கிரஸில் உள்ளவர்கள் ஏமாற்றுக்காரர்கள் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள், போலிமுகங்களை கொண்டவர்கள் என்பதை உணர்ந்து வெளியே வந்தார். பெரியார் காங்கிரஸை விட்டு 1925இல் வெளியே வந்தார். அதன்பிறகு காங்கிரஸின் போலித்தனத்தை 10 ஆண்டுகள் கழித்துதான் உணர்ந்தார் ஜமால் முகமது சாகிப். பெரியார் மிகப் பெரிய தீர்க்கதரிசி, ஆனால் ஜமால் முகமதுவிற்கோ 10 ஆண்டு களுக்கு பிறகு ஞானம் வந்து வெளியேறினார்.
ஆனால் ஒரு தேசிய நீரோட்டத்தில் இணைந்த ஒரு சமூகத்தை விரட்டியடித்தது பார்ப்பனீயம். துரத்தியடித்ததும் பார்ப்பனீயம் தான். அதுவரையிலும் முஸ்லிம்கள் என்று தனியாக அடையாளப்படுத்தப்படாமல் இருந்த ஒரு சமூகம், அதன்பின்னர் முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர்.
முஸ்லிம்கள் மைய நீரோட்டத்திலிருந்து விலகி நிற்பதையே குணமாக கொண்டவர்கள் இல்லை. மதமா நாடா எனக்கேட்டால் நாடுதான் பெரிது என கொடி பிடித்தவர்கள், முஸ்லிம்கள் தலைமையில் சேரவேண்டுமா அல்லது பொது சமூகத்தின் தலைமையில் சேர வேண்டுமா என கேட்டபோது, பொது சமூகத்தின் தலைமையில்தான் சேரவேண்டும் என முடிவு எடுத்தவர்கள் என்பதை வரலாறு சொல்கின்றது.
அடுத்து காயிதேமில்லத் 1896ல் பிறந்தார். அவர் 10 வயதில் இருந்தபோதுதான் தேசிய அளவில் முஸ்லிம்லீக் தொடங்கப்படுகின்றது. அவர் இளைஞராக கல்லூரியில் பிஏ படித்தார். அப்போதுகூட முஸ்லிம் லீக்கில் சேரவில்லை; மாறாக காங்கிரஸில் சேர்ந்தார். அவர் பிஏ வகுப்பு படிக்கும் போது கடைசி தேர்வு எழுதும் நாளில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். அந்த சூழலில் காயிதே மில்லத் தனது கடைசி தேர்வை புறக்கணித்து விட்டு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தில் சேர்வதற்காக கல்லூரியைவிட்டு வெளியேறுகின்றார். கல்வியா? தேசமா? என கேட்டபோது தேசமே பெரிது என தனது கல்வியை துறந்த தேசியவாதி காயிதே மில்லத். காங்கிரஸில் இணைந்து திருநெல்வேலியில் ராஜாஜியை வைத்து காங்கிரஸ் மாநாட்டை நடத்தி தன்னை ஒரு காங்கிரஸ் தேசிய வாதியாக அடையாளப்படுத்தி கொண்டவர் காயிதே மில்லத்.
ஜமால் முகமதுவிற்கு காங்கிரஸில் ஏற்படுத் தப்பட்ட துரோகம் காயிதே மில்லத்தையும் வெகுவாக பாதிக்க வைத்தது. அவரும் ஜமால் முகமதுவை பின்பற்றி காங்கிரஸைவிட்டு விலகி முஸ்லிம் லீக்கில் இணைகிறார். இது தான் இந்திய முஸ்லீம்களின் அரசியலில் ஒரு வரி, அதற்கு பிறகுதான் எல்லாமே மாறியது. இதற்குப் பிறகாவது, முஸ்லிம்கள் அவர்களது தலைமையில் திரண்டார்களா? காயிதே மில்லத் தலைமையில் அணி திரண்டார்களா? என்றால் இல்லை. இன்றுகூட காங்கிரசுக்கு ஓட்டுப் போடும் முஸ்லிம்களை மனிதநேய மக்கள் கட்சிக்கோ, எஸ்டிபிஐ கட்சிக்கோ ஓட்டுப்போட கொண்டு வரமுடியவில்லை. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதியில் ஏறத்தாழ ஒரு இலட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நிறைய தொகுதிகளில் இவர்கள் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கிறது. தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சி வந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் முஸ்லிம்கள் அடத்தியாக உள்ள தொகுதி களில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை ஏனென்றால் மதத்தைப் புறம்தள்ளி பொது நீரோட்டத்தில் கலந்தவர்கள் முஸ்லிம்கள். எனவே அவர்களைப் பார்த்து மதவாதிகள் என்று சொல்வது, அபாண்டமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதுபோல் காஷ்மீரை நாம் எடுத்துக் கொள்வோம், அடர்த்தியாக முஸ்லிம்கள் வாழக்கூடிய ஒரு மாநிலம் காஷ்மீர். மாநிலம் என்பதை விட ஒரு நாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அங்கு முன்பு ஆட்சி செய்தது யார்? பிரிட்டிஷ் ஆட்சி புரிந்த நாட்டின் பகுதியை பிரிட்டிஷார்தானே ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் ஆட்சி செய்தவர்கள் இந்து மன்னர்கள். அங்கு சமஸ்கிருதம் தான்ஆட்சி மொழியாக இருந்தது.
இந்தியா பாகிஸ்தான் இரண்டாக பிளவு பட்டது. அது மதத்தின் அடிப்படையில்தான் பிரிந்தது என சொல்லப்பட்டது. மதத்தின் அடிப்படையில் பிரிந்தது என்றால் காஷ்மீர் பாகிஸ்தானுக்குதானே போயிருக்க வேண்டும் ஆனால் போகவில்லை. மதத்தின் அடிப்படை யில் முஸ்லிம்கள் முடிவெடுக்கக் கூடியவர்கள் அல்ல. முஸ்லிம்களுக்கு என்று பாகிஸ்தான் ஒரு நாடாக வந்துவிட்டது. எனவே இந்தியாவில் நமக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதி இந்திய முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ் தானுக்கு தானே சென்றிருக்க வேண்டும்? அவ்வாறு போகவில்லையே என்ன காரணம்? அப்போது காயிதே மில்லத் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார். அதுதான் உண்மை.
அப்பிரிவினையில் முஸ்லிம் லீக் கட்சியும் இரண்டாக பிளவுபடுகிறது. கட்சியின் பாகப் பிரிவினைக்காக காயிதே மில்லத் பாகிஸ்தான் போகிறார். அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த லியாகத்அலிகான் அவர்கள் காயிதே மில்லத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு நம் நாட்டையையும் கட்சியையும் அவர்கள் பிரித்து விட்டனர். இருந்தாலும் இனி இந்திய முஸ்லிம் களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள் நாங்கள் உங்களுக் காக பேசுகிறோம் என்று சொன்னார். உடனே காயிதேமில்லத் அதை மறுத்து என்ன சொன்னார் என்று தெரியுமா தோழர்களே, மிஸ்டர் லியாகத் அலிகான் இந்த சிந்தனையை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் வேறு நாடு நாங்கள் வேறு நாடு இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதைத் தீர்ப்பதற்கு எங்களுக்குத் தெரியும் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று உறுதியாக மறுத்துக் கூறியவர் காயிதே மில்லத். அவர் பாகிஸ்தான் உருவானதை ஏற்கவில்லை பாகிஸ்தான் போவதற்கும் விரும்பவில்லை அதன் முதல் பிரதமரை எதிர்த்துப் பேசுகிறார். எனவே மதஅடிப்படை யில் முடிவெடுக்கக்கூடிய சமூகம் அல்ல முஸ்லிம்கள். அதுபோல் அரசியல் அரங்கில் எந்த காலத்திலும் முடிவெடுக்கக் கூடியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதே உண்மை.
மதஅடிப்படையில் முஸ்லிம்கள் முடிவெடுப் பவர்களாக இருந்தால் அதற்கு வட்டமேஜை மாநாடே சாட்சியாக இருக்கும். அம்பேத்கர் வட்டமேஜை மாநாட்டிற்குப் போகக்கூடாது தலித்களின் தலைவராக அங்கு போகக்கூடாது என்றும் இந்துக்களுக்களுக்கு ஒரு நாற்காலி முஸ்லிம்களுக்கு ஒரு நாற்காலி, மூன்றாவதாக ஒரு நாற்காலி போடக்கூடாது என்றும் ஆகாகானிற்கு காந்தி நிபந்தனை வைத்தார். ஆகாகானை பார்த்து நீங்கள் இந்து, முஸ்லிம் குறித்து எந்த நிபந்தனை வைத்தாலும் நான் பார்த்துக் கொள்கிறோன். ஆனால் அம்பேத் கரை மாநாட்டிற்குப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் காந்தி, ஆனால் ஆலம்கான் அதை மறுத்து எங்கள் கோரிக்கை தோற்றாலும் பரவாயில்லை அம்பேத்கர் போக வேண்டும் என்று ஆதரித்து முடிவெடுத்த சமூகம் தான் முஸ்லிம் சமூகம்.
எனவே வரலாற்றை பார்த்தோம் என்றால் முஸ்லிம்கள் அவர்கள் தலைமையில்தான் அணி திரளவேண்டும் என்று கூறாமல் பொதுத் தலைமையின் கீழ் திரள வேண்டும் என்று கூறினார்கள்.
(தொடரும்)