சனவரி

சேரிகள் இழிமுகமா?

சேரி வாழ்வின் துயரங்கள், அது பற்றிய எந்த உணர்வும் இல்லாதோரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. பெருந்துன்பத்தில்தான் மனிதர்கள் ஆகச்சிறந்த பக்குவத்தை அடைகிறார்கள் என்பதும், வலியின் எல்லையைக் கண்டவர்களை வேதனைகள் ஒன்றும் செய்வதில்லை என்பதும், தீப்பற்றி எரியும்போது தன் அடுப்புக்கான நெருப்பை சேமிக்க நினைப்பதுமே சேரி வாழ்வின் எதார்த்தம். நம்பிக்கை தொலையும் நேரத்தில் பிறந்து துயர் பெருகும் பொழுதுகளில் வாழ்ந்து உண்மை அழியும் கணத்தில் மரிப்பது. இது, இந்தியச் சேரிகளில் வாழ நிர்பந்திக்கப் பட்டவர்களின் சுருக்கமான சுயசரிதை. இந்த சுயசரிதையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது "ஸ்லம்டாக் மில்லினர்' திரைப்படம். பிரிட்டிஷ் இயக்குநர் டேனிபோயல் இயக்கத்தில் இந்தியும், ஆங்கிலமும் கலந்து இருமொழி படமாக வெளிவந்திருக்கிறது.

– மீனாமயில்

இனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை

சாதியத்தின் மூலம் தன் சொந்த மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, மிகக் கடினமாக வேலைகளை அவர்கள் மீது திணித்ததோடு மட்டுமின்றி, அதை இழிவாகவும் சித்தரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து மதத்தின் கொடூர முகத்தை நாம்புரிந்து கொள்ள வேண்டும். குஜராத்தில் நடந்த இனப்படுகொலை அரசே கூலி கொடுத்து நடத்திய பயங்கரவாதம். கிறித்துவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் பயங்கரவாதத் தாக்குதல்களே! பெண் கருக்கொலையும் பயங்கரவாதச் செயல்தான். பயங்கரவாதத்தைப் பற்றி நாம் இன்று பேசும்போது, எங்கு தொடங்கி எங்கு முடிப்பது?

– தீஸ்தா செடல்வாட்

பிப்ரவரி

வாழ்வுரிமைக்கு முற்றுப்புள்ளி

தலித் மற்றும் பழங்குடியினர் தங்களின் மதிப்பான வாழ்க்கைக்காகப் போராடி வருகின்றனர். தனியார் துறையில் பணிபுரிவதற்கான உரிமைக்காகவும், அரசு செயலாளர் உள்ளிட்ட முதல் தர நிலை பதவிகளில் இடஒதுக்கீட்டிற்காகவும் போராடி வருகிறார்கள். இதை இந்த சட்டவரைவு இல்லாமல் செய்கிறது. இந்த சட்டவரைவு, தலித்துகளின் அனைத்து முயற்சிகளையும், டாக்டர் அம்பேத்கர் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகளினால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரே அடியில் இல்லாமல் ஆக்கியிருக்கிறது.

– டி. ராஜா

மார்ச்

தேர்தல் வாக்குறுதிகள் : சட்டத்திற்கு எதிரான சொற்கள்

சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் 11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்துக்கென ஒதுக்கப்படுகிறது. அதில் தலித்துகளுக்கு விகிதப்படி 1.6 லட்சம் கோடிகள் ஒதுக்கப்படலாம். தமிழகத்தில் இது 19,000 கோடியாக இருக்கும். பல துறைகள் ஒதுக்கீட்டுத் தொகையை தலித்துகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழங்குவதே இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கென 2000 ஆம்ஆண்டில், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை தமிழக அரசுக்கு வழங்கிய 40.18 கோடியில் 18.57 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. 2009 வரை இத்தொகையை கணக்கிட்டால், இவ்வாறு செலவழிக்கப்படாத தொகை 100 கோடிகளைத் தாண்டலாம். கழிவகற்றுபவர் மற்றும் உலர் கழிப்பறைகளை கட்டுதல் (தடை) சட்டம் 1993 இன் பிரிவுகள் 3(1), 4, 17, 18 ஆகியவற்றைத் திருத்த வேண்டும். இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை அறிக்கை கூறுகிறது.

– அழகிய பெரியவன் 

கயர்லாஞ்சி

ஜாதி – பல மாயைகளில் புதைந்திருக்கிறது. கயர்லாஞ்சி படுகொலை அவற்றில் பலவற்றை உடைத்தெறிந்திருக்கிறது. முதலாவதாக, நவீன தாராளவாத மாயை ஒன்று இருக்கிறது. அதாவது, உலகமயமாக்கல் சாதியை ஒழித்துவிடும் என்பது பெரும்பான்மையான தலித்துகளின் அனுபவம். அதற்கு மாறாக இருப்பினும், இந்த மாயை தலித் அறிவு ஜீவிகள் உட்பட, சில அறிவுஜீவிகளால் முன் வைக்கப்படுகிறது. அது, அச்சு ஊடகங்கள் மற்றும் அறிவுத் தளங்களில் அவ்வப்போது சில அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இடதுசாரி சிந்தனையாளர்கள் எப்போதுமே சாதியை ஒரு வர்க்கப் பிரச்சனையாக மட்டுமே பார்க்க விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் அனைத்து சாதிய சிக்கல்களும் நிலப்பிரச்சினையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். கயர்லாஞ்சி வழக்கை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் போட்மாங்கே குடும்பத்தினருக்கும் பிற கிராமத்தினருக்கும் இடையிலான நிலத்தகராறே கயர்லாஞ்சி வன்கொடுமைக்கு காரணம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

-  ஆனந்த் டெல்டும்டே

ஏப்ரல்

நீர் தீயின் வெப்பத்தைக் கொண்டுள்ளது

கீழ்வெண்மணியில்

நீர் கிழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான

ரவிக்கைகளின் போராட்டக் குணத்தைக்

கொண்டுள்ளது

நீரோடு சண்டையிட முனையாதே

அதன் தோற்றம், சாதி மற்றும்

பரம்பரை குறித்து தேடாதே

நீர் சித்தார்த்தரைப் போன்றது

நீர் அசோக மரத்தைப் போன்றது

நீர் வீரிய அமிலத்தைப் போன்றது கூட

– நாம்தியோ தாசல் 

குருதியில் பூக்கும் நிலம்

இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாராம்சத்தில் வர்ணாசிரமத்தையும் சாதி – தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்ப்பது மற்றும் அவற்றை அழித்தொழிப்பது என்ற சமூக, அரசியல், பண்பாட்டுச் செயல் திட்டத்தை முன்வைப்பதுமேயாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பார்ப்பனத் தலைமையில் இயங்குகின்றன. அதனால் அவர்களுக்கு இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பில் அக்கறையில்லை எனவும், இந்தியத் தேசியத்தின் கருத்தியல் அடித்தளமே இந்துத்துவம்தான் எனவும் குற்றம் சுமத்தும் தமிழ்த் தேசியவாதிகள், இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பைச் செயலாக்குவது தமது புரட்சிகர வாய்ச்சொற்களில் மட்டுமே!

– கா. இளம்பரிதி 

கொள்கை தெரியாதவர்கள்

மகாராட்டிரத்தில் பாபாசாகேப் மூன்று கல்லூரிகளையும், மும்பையில் ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப்போராடுவது பற்றி மட்டும் அம்பேத்கர் பேசவில்லை. சாதி அமைப்பு முறைக்கு எதிராகவும் அவர் பேசினார். ஆனால் இன்று, எல்லாரும் பாபாசாகேப்பின் பெயரை அரசியல் லாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய அரசியல்வாதிகள் எவரும் மாபெரும் தலித் தலைவராகத் திகழ்ந்த பாபாசாகேப்பின் கொள்கைகளுக்கு அருகில் கூட வர முடியாது. அவருடைய லட்சியங்களும், கொள்கைகளும் என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

– பகவான்தாஸ்

மே

இனத்தை அழிக்கும் இறையாண்மை

முப்பது ஆண்டுகளுக்கு மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க முழுக்க விமான குண்டு வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் குறிவைத்து அழிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் வாழ்கின்ற சம காலத்தில், கண்ணெதிரே நடக்கின்ற இனப்படுகொலை எனும் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை! எந்த நியாய விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், உலகின் எல்லா மனித உரிமைச் சட்டங்களையும் புறக்கணித்து, வல்லரசு அல்லாத ஒரு நாட்டில் இவ்வளவு தன்னிச்சையாக செயல்பட முடியுமெனில், இத்தருணத்தில் பல கேள்விகளை நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை உறுதி செய்யப்போதுமான ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கட்டுக்கடங்காத போர்க் குற்றங்களும், அங்கு நடந்தேறுவதை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியர் பாய்ல். ஜெனிவா ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 54, சாதாரண பொதுமக்களுக்கு வாழ்வாதாரமான இன்றியமையாத பொருட்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறுவது, போர்த் தந்திரமாக மக்களை உணவின்றி பட்டினியால் சாக விடுவது, மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாய நிலங்கள், பயிர்கள், கால்நடைகள், குடிநீர் நிலைகள், நீர்ப்பாசன நிலைகள் போன்றவற்றை மறுப்பது, அழிப்பது, அப்புறப்படுத்துவது, பயனற்றுப் போகச் செய்வது, மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து இடம் பெறச் செய்வது ஆகியவை போர்க் குற்றங்களாகும்.

– மாணிக்கம்

அவர்கள் சொல்லும் படியான ஓர் ஒப்புதல் வாக்கு மூலத்தை நான் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். நான் அவ்வாறு மறுத்தால் என் கண் முன்னால் எனது மனைவி வன்புணர்வு செய்யப்படுவார் என்றும், என் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டேன். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களையும் அரசியல் கைதிகள் என்று அய்.நா.அங்கீகரித்துள்ளது. அய்.நா.வின் இந்த அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. உலக அளவில் ஒன்றை ஒப்புக்கொண்டு அதில் கையெழுத்திட்டுவிட்டு, மறுபுறம் உங்கள் நாட்டில் அதை செயல் படுத்துவதில்லை.

– எஸ்.ஏ.ஆர். கிலானி: "எல்லா ஆயுதப் போராட்டங்களும் ஜனநாயகத்திற்கு எதிரானவை அல்ல'

சூன்

அம்பேத்கர் இந்து அல்லர்

அம்பேத்கரை இந்து பண்டிகைகளோடும், இந்து கடவுளர்களோடும் தொடர்புபடுத்துவது அறியாமையில் நடக்கிறது. ஆனால் இப்படிச் செய்வது அம்பேத்கரை இழிவுபடுத்துகிற செயல் என்பதை அம்மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள். தன் வாழ்நாளெல்லாம் எந்த மதத்தை விமர்சித்தாரோ, எந்த மதத்தை கண்டனம் செய்தாரோ, எந்த மதத்தை தாக்கினாரோ அந்த மதத்துடனேயே அவரைப் பிணைத்து விடுவது, துரோகச் செயலன்றி வேறென்ன? இந்த செயலை தலித் மக்களே செய்கின்றனர் என்பது தான் கொடுமையானது. அறியாமையில் இருக்கும் தலித் மக்கள்தான் இதை செய்கிறார்கள் என்றால், தலித் அரசியல் கட்சிகளிலும், அமைப்புகளிலும் இருக்கின்ற தொண்டர்களும் இந்த மாபெரும் தவறை செய்கின்றனர்.

– அழகிய பெரியவன்

அணு உலை : அரச பயங்கரவாதம்

பொதுவாக ஓர் அணு உலை இயங்கத் தொடங்கினால், அதிலிருந்து இடைவிடாது கழிவுகள் பல வழிகளில் வெளியேறிய வண்ணம் இருக்கும். இந்த ஆண்டு (2009) இறுதியில் கூடங்குளத்தின் முதல் அணு உலை இயங்கத் தொடங்கும் பொழுது, அது ஒவ்வொரு நொடியிலும் 130,000,000,000,000 கதிர் வீச்சுத் துகள்களை காற்றில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படி துகள்கள் வெளிப்படும் என்று நாம் கூறவில்லை. அய்.நா. வின் அணுக்கதிர் வீச்சை ஆய்வு செய்யும் அறிவியல் குழுவே விரிவாகக் கூறுகிறது. இவற்றின் அடிப்படையில்தான் விலக்கல் பகுதி, பாதுகாப்பான பகுதி என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், "காசா' நகரோ அணு உலையின் மய்யக் கட்டடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. அப்படி என்றால் அங்கு வசிப்பவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இளம்பருவப் புற்று நோய், ரத்தப் புற்றுநோய் எனப் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. கிராமங்களில் கூட Golter & Autoimmune Thyroiditis போன்ற நோய்கள் காணப்படுகின்றன.

– அ. முத்துக்கிருஷ்ணன் 

சூரியனை திசை மாற்றியவர்

சாதியின் இருள் கொட்டடிகளில் அடைபட்டிருந்த தலித் மக்களை துணிச்சலுடன் மீட்பதற்கு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் களமிறங்கினார்கள். அவர்கள் விடுதலையின் சூரியனை திசை மாற்றி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் மீது விழ வைத்தனர். ரெட்டமலை சீனிவாசன் அவர்களில் ஒருவர். அவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தலித் மக்களுக்காகப் போராடியவர். இதழ் நடத்தியவர். உலகம் சுற்றியவர். அரசியலில் பங்கேற்றவர். அண்மையில் அவர் பிறந்த சூலை மாதத்தில் தமிழக அரசு சென்னை காந்தி மண்டபத்தின் ஒரு மூலையில் ரெட்டமலை சீனிவாசனுக்கு சிலை எழுப்பியுள்ளது. ரெட்டமலை சீனிவாசன் நிச்சயமாக இப்படி நினைவு கூரப்படவேண்டிய ஒரு தலைவர் அல்லர். தமிழக அரசும் தலித் மக்களும் அவரை மிகச் சிறப்பாக நினைவு கூர்ந்து கொண்டாடி இருக்க வேண்டும். இந்தியாவில் தலித் மக்களின் காலம் அவரிடமிருந்தும், அவரைப் போன்ற ஒரு சிலரிடமிருந்தும் தான் தொடங்குகிறது. தலித் மக்களின் நவீன வரலாற்றின் முதல் வரியை எழுதியவர் ரெட்டமலை சீனிவாசன்.

– அழகிய பெரியவன் 

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி

சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு தேரோட்டம் என தமிழ்ச் சமூகத்தில் உட்பூசல்கள் பெருகி வளர, சாதி சங்கங்களை அரவணைத்து அழியாது காப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான், உலகம் முழுவதும்உள்ள இந்து மத சங்கங்களும் இயக்கங்களும். இதைப் புரிந்து கொள்ளாத வரை, உலகின் எந்த மூலையில் வாழும்தமிழர்களும் இன – பண்பாட்டு – மொழி அடிப்படையில் ஓர்மை கொள்வது கடினமே. ஒரு சராசரி தமிழனின் லவுகீக வாழ்வு கோயில் வழிபாடு, திருவிழா களியாட்டம், தமிழ் சினிமா ஆகியவற்றிலேயே லயித்துக் கிடக்கிறது. நவீன கால தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் குறித்து நாம் சற்றே சிந்திக்க முற்பட்டால், இவ்வகையான எளிமைப்படுத்துதலைக் கடந்து, சமூகம் எங்கே வளர்ந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக – "இந்து தமிழர்' களாகவும் "சாதித் தமிழர்'களாகவும்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கிற தமிழர்களின் பெருமை இருக்கிறது.

– இளம்பரிதி 

புரட்சித் தத்துவம் 

உலகப் புரட்சியாளர்கள் என்று சொன்னவுடனேயே நம் மனதில் தோன்றுகிற லெனின், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, பிரபாகரன் போன்றோரின் வரிசையில் அம்பேத்கரின் முகம் வருவதில்லை. புரட்சி, வீரம் என்கிற சொற்கள் போரிடுவது, உயிர்களைக் கொல்வது, எதிர்க்கருத்துக்கு இடமின்றி அடக்குவது, அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற பொருளில் புரிந்து கொள்ளப்படுவதால், அறிவு நிலைப் புரட்சிக்கு அதில் இடமிருப்பதில்லை. உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எல்லாம் அவ்வாறுதான் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். இத்தகைய ஒதுக்குதலில் சாதியம் அம்பேத்கரின் பிம்பத்தோடு ஒரு நிழல் போல பின் நிற்பதால், அவர் மேலும் ஒதுக்கப்பட்டு விடுகிறார். அவருடைய படத்தை எவ்விதக் கூச்சமும் தயக்கமும் இன்றி வீட்டில் வைத்துக் கொள்வதற்கும், புரட்சியாளர்களின் படங்களைப் போல அவருடைய படத்தையும் உடைகளில் அச்சிட்டு அணிந்து கொள்வதற்கும் இருக்கின்ற தயக்கம் எதனால் ஏற்படுகிறது? எல்லா இடங்களிலும் அவருடைய பெயரையும் எழுத்துகளையும் தடையின்றி சொல்வதற்கு முடிகிறதா? வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்த்து வந்த சாதியும் தீண்டாமையும் அவரை இறந்த பின்னும் விடுவதாக இல்லை!

 – அழகிய பெரியவன்

அன்புக்குரியவர்கள் எங்கே?

ஆகஸ்டு 30 – வலுக்கட்டாயமாக காணாமல் அடிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாளாக உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும், அரசினாலோ, அரசின் ஏவலாட்களாலோ காணாமல் அடிக்கப்பட்ட ஏராளமானோரின் குடும்பங்கள், காணாமல் போன தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடந்து வரும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் – ராணுவத்தாலும் காவல் துறையாலும் கடத்தப்பட்டு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும், காணாமல் அடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் கூடிக் கொண்டே வருகிறது. இதற்கு அரசின் "பயங்கரவாத எதிர்ப்பு' அடக்குமுறைச் சட்டங்கள் துணை நிற்கின்றன.

- பூங்குழலி

உரிமையுள்ள கீழ்ஜாதி

கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி தீண்டாமையை ஒழிக்கும் சி.பி.எம். கட்சி, 14 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை தமிழக முதல்வரிடம் கொடுக்கிறது. அவரும் அதை வாங்கிக் கொண்டு, 1969 முதல் தான் நிறைவேற்றிய நீண்ட பட்டியலை கொடுக்கிறார். இப்படி மாறி மாறி பட்டியல்களை வாசிப்பதாலும், மனு கொடுப்பதாலும் தீண்டாமை ஒழிந்து விடாது.

எது தீண்டாமை?

பிருந்தா காரத் சட்டத்தை மீறி உத்தப்புரம் செல்கிறார். அவர் காவல் துறையால் தடுக்கப்பட்டவுடன், அவரை விடுவிக்க முதல்வர் தொலைபேசியிலேயே ஆணைகளைப் பிறப்பிக்கிறார். அவரைத் தடுத்த குற்றத்திற்காக, அடுத்த நாளே ஓர் அய்.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. ஆனால், அதே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோயில் நுழைவுக்காக அதே சட்டத்தை மீறினால், அவரை கீழே தள்ளி, எட்டி உதைக்கிறது போலிஸ். பிருந்தா காரத்திற்கு ஒரு நீதி; லதாவுக்கு ஒரு நீதி. இதுதான்டா தீண்டாமை!

தீண்டாமையை ஒழிக்கும் இவர்களின் பட்டியல்கள், எதைக் கிழித்துவிடும்? ஒருவனுடைய ஜாதியை அவனுடைய பிறப்பு தீர்மானிக்கும்வரை, அதற்கு இறப்பு இல்லை. இல்லவே இல்லை.

-          தலையங்கம்

“சாதியை ஒழிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவது எப்படி? சாதியை ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் தலைமையில் அது நிகழ வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது சாத்தியமே. சாதி ஒழிப்பு குறித்த கருத்துகளை குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.'' – ரா. கிருஷ்ணசாமி : தலித்தியத்திலிருந்து உலகைப் பார்க்க வேண்டும்.

“இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும் தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்டபிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இலங்கை அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையதாகும். பன்னாட்டுச் சட்டதிட்டங்களின் இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்.'' – பிரான்சிஸ் பாய்ல் : "ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது'

ஜாதியை அடியோடு அழிக்க பன்னாட்டுச் சமூகம் முன்வர வேண்டும்

மனித உரிமையின் அடிப்படைப் பண்புக் கூறுகளான பாகுபாடு காட்டாமை, வேற்றுமையின்மை ஆகியவற்றை சாதி மறுக்கிறது. அது ஒருவனை பிறப்பிலிருந்தே பழிக்கு உள்ளாக்குகிறது. அவன் சார்ந்த சமூகத்தை சுரண்டலுக்கும், வன்முறைக்கும், சமூக ஒதுக்குதலுக்கும், வெறுத்து ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாக்குகிறது. சாதியப் பாகுபாடு மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படுபவர்களின் இன்னும் பிற சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் ஏதுவாகிறது. - நவி பிள்ளை

வீழ்ந்து கிடக்கும் இந்தியா

மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால் புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில், இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு பவுத்த விகார்களை அப்பீடங்களில் ஏன் நிறுவக்கூடாது? இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடியினர் கோயில்களைக் கட்டக்கூடாதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கொடுமையான ஒடுக்கு முறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது? வரலாற்றில் நடந்த தவறுகளுக்காக இப்போது நேர்படுத்துவதும், பழிவாங்குவதும் சரியானதுதான் என்கிற இந்து தேசியவாதிகளின் அடிப்படைக் கருத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் மறுக்கிறார்கள். இன்றைய மக்கள் தங்களது கடந்த கால வரலாறுகளின் சுமைகளை ஏன் சுமக்க வேண்டும்? அவற்றுக்காக நாம் ஏன் பரிகாரம் தேட வேண்டும்?

- ஹர்ஷ் மந்தர்

மலமள்ள வைக்கும் மதமும் ஜாதியும்

கோயில்களில் கையில் வைத்துப் பி டிக்கின்ற சிறிய மணியை ஆட்டுறதுக்கு இப்ப எலக்ட்ரானிக் மணி. ஆனால், மனித நேயமற்ற முறையில் ஒருவன் மலத்தை அள்ளுகின்ற இந்த விசயத்துக்கு ஏன் எந்திரத்தைப் பயன்படுத்தவில்லை? அப்பார்ட்மென்ட்களில் கக்கூசை அவர்கள்தானே கழுவிக் கொள்கிறார்கள். எந்தத் தாழ்த்தப்பட்டவன் வந்து கழுவுகிறான்? ஏன்னா, பின்பக்கம் வழி கிடையாது. முன்பக்க கதவு வழியா வந்தா தீட்டுப்பட்டுவிடும். நடக்குதா, இல்லையா?

- ரா. அதியமான்

சேரி மக்களை விரட்டியடிக்கும் மாநகரங்கள்

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 1,300 கோடி ரூபாயில் உயர் விரைவு பறக்கும் சாலை; கடற்கரையோரம் 1,000 கோடி ரூபாயில் அதிஉயர் விரைவு சாலை; அடையாறு ஆறு பக்கிங்காம் கால்வாய்; மாம்பலம் கால்வாய்; கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் 3,000 கோடி ரூபாயில் ஆற்றோர வட்டச் சாலைகள்; பறக்கும் ரயில்; மெட்ரோ ரயில்; சாலைகள் விரிவாக்கம்; கூவம் நதியை அழகுபடுத்தும் திட்டம் எனப் பல ஆயிரம் கோடிகளில் சென்னை "சிங்காரச் சென்னை'யாக மாற்றப்படுகிறது. சிங்காரச் சென்னை யாருக்காக, எதற்காக உருவாக்கப்படுகிறது? என்ற எதிர்க் கேள்விகள் கேட்கப்படாத சுரணையற்ற இன்றைய நிலையில், முன்பைவிட மிக வேகமாக சென்னை நகர சேரிகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.

– இசையரசு

ஹமாரா ஹிந்துஸ்தான்!

அமெரிக்கத் தொழிலாளிகளையே மனிதக் குருவிகளாக வைத்திருந்த யூனியன் கார்பைட், மூன்றாம் உலக சேரித் தொழிலாளிகளான போபால் ஏழைகள் மீது எத்தகைய அக்கறை கொண்டிருந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. அதாவது 1986 டிசம்பர் 3 கறுப்பு விடிகாலையில் போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில், நச்சு வாயு கசிவைத் தடுப்பதற்காக வைத்திருந்த ஆறு தடுப்பு ஏற்பாடுகள் ஒன்றுகூட வேலை செய்யவில்லை.

– எஸ்.வி.ராஜதுரை 

“ஓர் அரசின் கீழ் இணைந்து வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத நிலையில், அந்த அரசினை ஏற்றுக்கொள்ள இயலாத அச்சமூகம் – தனக்கே உரிய தனித்துவமான ஒரு சமூக அமைப்பினை உருவாக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருந்தால் – தனக்குரிய தனித்துவமான இறையாண்மைக்கான அடையாளங்களை கண்டுபிடிக்கும் எனில், அந்த மக்கள் சமூகம் அந்த இறையாண்மையைத் தேட உரிமை உண்டு. அதன் அடிப்படையில் தான் ஈழத்தின் இறையாண்மையை நாம் தேட வேண்டும்.''

– ராமு. மணிவண்ணன்: "ஈழத்தின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும்'

Pin It