dhanush karnan copyமாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து ‘கர்ணன்’ கொரோனா காலத்தில் வெளிவந்த ஒரு சில படங்களில் நல்லதொரு வரவேற்பை உருவாக்கிய படைப்பு. கொரோனா தீநுண்மி எவ்வாறு மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல் அதைக் கடந்தும் சாதி எனும் தீநுண்மி ஒவ்வொருவரின் மூச்சுக்காற்றோடு கலந்து மனித இனத்தை அழித்து கொண்டிருக்கிறது.

கொரோனா எனும் தீநுண்மிக்கும் சாதியத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கொரோனா தீண்டாமையைப் புனிதப்படுத்தியதோடு பொதுமைப்படுத்தியது. ஆனால், சாதியமோ ஒரு சாராரைப் பாகுபடுத்தித் தீண்டாமைக்குரியவர்களாக ஆக்கியுள்ளதைப் பார்க்கமுடிகிறது. இச்சூழலில் வெளிவந்த கர்ணன் படம், தீண்டாமையின் உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கமனநிலையின் மேல் எதிர் கலகத்தை உருவாக்குகிறது.

கர்ணன் படத்தின் தொடக்கக் காட்சி மின் கம்பியில் அமர்ந்திருந்த காகங்கள் வானில் பறக்கின்றன. சாலையின் நடுவே சிறுமி வலிப்பு நோயினால் உயிருக்குப் போராடுகிறாள். அச்சிறுமியின் நடுவே இரு புறத்திலும் வாகனங்கள் சென்று கொண்டிருக்க ஆள் அரவமற்ற நிலையில் உதவிட ஆளின்றி இறக்கிறாள். நடுரோட்டில் விழுந்து கிடக்கும்போது எவரும் கண்டுகொள்ளாமல் வாகனங்களில் செல்வது மனிதாபிமானமற்ற தன்மையாக வெளிப்பட்டாலும், அக்காட்சி மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் தொட்டால் தீட்டு வந்துவிடுமோ என்று எவரும் கண்டுகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

முதல்காட்சியில் இறக்கும் சிறுமி காட்டுப்பேச்சி தெய்வத்தோடு தானும் ஒரு தெய்வமாக உருமாறுகிறாள். கர்ணனின் தந்தைக்கு, தன் குழந்தை தெய்வமாக உலாவுகிறாள் என்பதை அறிந்துள்ளார். அவ்வப்போது அவருக்கு சாமி இறங்கிப் பேசுவதுண்டு. கர்ணனின் சிறுவயதில் தன் சகோதரியின் இறப்பின் காரணமாகவும் தன் ஊரில் பேருந்து நிறுத்தத்தைக் கொண்டுவரவேண்டும் என முறையாக முறையிட்டும் நடக்கவில்லை.

ஆகவே உரிமையைப் பெறுவதில் எதிர்நிலைச் செயல்பாட்டில் துணிந்து ஈடுபடுகிறான் கர்ணன். தன் ஊருக்குக் கிடைக்கவேண்டிய உரிமையைப் பெற, அதிகாரத்தை எதிர்த்துத் தன்னுடைய ஊரின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு சுயமுன்னேற்றத்தை இழந்து சமூகமுன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறான் கர்ணன். இச் செயல்பாடு சாதியத்தையும், அரசு இயந்திரத்தை எதிர்ப்பதும் கர்ணனின் எதிர்செயல்பாடாக வெளிப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டத்தில் உயர்காவல் அதிகாரியை வதம்செய்யக் காரணமாக இருப்பது கூட அக்காவலர் கூறிய “உன்னால தான் இந்த ஊரே அழியப்போகுது” வார்த்தையால் ஆவேசமடைந்த கர்ணன், மீனினை இரண்டாக வெட்டிய வாளால் காவலர் தலையைத் துண்டாக வெட்டுகிறான். மீனின் தலையை வெட்டுவதுகூட முன்னோக்குக் காட்சியின் வெளிப்பாடாய்க் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கர்ணனின் எதிர்நிலைச் செயல்பாடு பொடியன்குள மக்கள் நலனுக்கானதாக விரிவடைகிறது.

கொடியன்குளம் நிகழ்வே கர்ணன் படக்கதையின் மூலக்கரு. கொடியன்குளம் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டுள்ளதே தவிர முழுமையாக பதிவுசெய்யப்பட்டவில்லை. இப்படத்தில் கொடியங்குளம் என்பதை பொடியன் குளமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. 1995 இல் நடந்த வரலாற்று நிகழ்வினைப் படமாக்கியுள்ளதற்குப் படத்திற்குள் ஆண்டுக்கான குறிப்பு ஆங்காங்கே திருமண, கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டராக இரு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளபோதும் ஆண்டு தெளிவாக இல்லை.

அரசதிகார வன்முறையும் சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தாக்குதலும் தொடர்ச்சியாக கீழவெண்மணி, கொடியங்குளம், ஊஞ்சனை, சங்கரலிங்கபுரம், தாமிரபரணி, மேலவளவு எனப் பல இடங்களில் தலித்துகளின் மேல் வன்முறை, ஆணவப் படுகொலையும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

இத்தாக்குதல்களை மையப்படுத்தி ஆவணப்படங்களாக எடுக்கப்பட்டதுண்டு. வெகுசன சினிமாவாக எடுக்கும் துணிச்சல் எவருக்கும் இருந்ததில்லை. இயக்குநர் ரஞ்சித், மாரி செல்வராஜின் வருகைப்பின் ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், விளிம்புநிலை கதையாடல்களைப் படமாக எடுக்கும் சூழலை தமிழ் சினிமா பெற்றுள்ளதும் தமிழ்சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுக்கானதாகவே பார்க்கவேண்டும்.

சாதியாதிக்கத்தால் நிகழும் வலிகளையும் ரணங்களையும் எண்ணக்குமுறல்களையும் எதிர்பார்ப்புகளையும் தமிழ்த்திரைமொழியில் காட்சிகளாக ஆக்கப்படுவது அரிதிலும் அரிது. கர்ணனின் வழி ஒடுக்கப்பட்டோருக்கான மாற்று சினிமாக்களத்தை நோக்கி தமிழ் சினிமா நகர்வது சாதியாதிக்கத்தையும், அதன் பேரில் நிகழும் அரசாதிக்க வன்முறையையும் வேர்பிடுங்குவதற்கான மாரி செல்வராஜின் இம்முயற்சிகள், மனிதர்கள் மேல் நிகழ்த்தும் வல்லாதிக்க வன்முறைக்கு எதிரானதாகவும், சாதியத்திலிருந்து விடுபட மாற்றத்தை நோக்கியதாக, மேல்நிலைக்கானதாக ஆக்குவதன் உள்நோக்கமாக இருக்க வேண்டுமேயோழிய வணிகநோக்கிலேயே பயணப்பட்டு நீர்த்துப் போய்விடாமல் பயணப்படவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

தமிழ் சினிமாக்களில் காலங்காலமாக சாதிய ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் திரைப்படங்கள் வெகுசன மத்தியில் முன்வைக்கபட்டுவருகின்றன. இதற்கு மாற்றாக அண்மைக்காலத்தில் விளிம்புநிலை வாழ்வியலைப் பதிவுசெய்துள்ள அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்கள் வெகுசன சினிமாவின் அடுத்தகட்ட நகர்வாகவே குறிப்பிடலாம்.

இச்சூழலில் இப்படங்கள் குறித்து பொதுப்புத்திசார்ந்த விமர்கனங்கள் வந்ததைப் போல் கர்ணன் படம் குறித்தும் எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. “வாளேந்தி வெட்டுவது மீனை அல்ல! நட்பை,” கர்ணன் படம் வன்முறையைத் தூண்டுகிறது.” எனப் பொதுப்புத்தி சார்ந்த விமர்சனத்தை படத்திலுள்ளும், படம் வெளியான பின்னும் ஒருபோதும் சமரப்படுத்திக்கொள்ளவில்லை. அசாத்தியங்களையும் சாத்தியப்படுத்தியுள்ள விதம், மாரி செல்வராஜ் எனும் இயக்குநனின் பலம்.

துணிந்து எதிர்த்தல், நிமிர்ந்து பேசுதல், சமரப்படுத்திக் கொள்ளாத மனத்திட்பம் என்கிற தன்மையில் கர்ணனின் ஆவேசத்தன்மை அறிவுப்பூர்வமான எதிர் – செயல்பாட்டிற்கானது ஆகும். ஆதிக்கத்திமிரையும் அதிகாரம் பெறுவதற்கான ஒடுக்கப்பட்டவர்களின் திமிரையும் மோதவிட்டு அரசு இயந்திரத்தின் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் கர்ணனும், கர்ணனின் கூட்டாளிகளின் பலத்தை மாரிசெல்வராஜ் பதிவுசெய்துள்ளார்.

சிறுவர்களிடமும் துணிவு ஏற்படுத்துவதும் அவர்கள் கல்வி பெறுவதற்கான முயற்சியைக் கர்ணன் வழிக் காட்டிள்ளதும் மிக முக்கியமானது. தனக்கான உரிமையைப் போராடிப் பெற நினைப்பதும் பெற்ற உரிமையைப் பரவலாக்கம் செய்வதும் மகிழ்வோடு ஊருக்குப் பேருந்தில் வந்து பொடியன்குளம் நிறுத்தில் இறங்கி, ஊருக்குள் செல்வதில் வெளிப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் உரையாடல்கள் எதிர் - பண்பாட்டிற்கான (Counter Culture ) தன்மையைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. உழைப்பு, தொழில், நிலம், உற்பத்தி இவையிருந்தும் கீழே அமுக்கப்பட்டுக் கிடந்த சமூகம் மேலேழுந்து தன் வரலாற்றின் தடம் பதிப்பதும், மேல்நிலைபெறுவதும் ஆதிக்கவர்க்கம் ஜீரணிக்கமுடியாதவைகளை, கர்ணன் எதிர்-சொல்லாடல்வழி உணர்த்துகிறான்.

“கந்தையா மகன் கண்ணபிரானா இருக்கலாம். ஏன்டா மாடசாமி மகன் கர்ணனா இருக்கக் கூடாதா? எங்க பிரச்சன முக்கியமில்ல. உங்க முன்னாடி நா எப்படி நிக்கிறேன். எப்படி பேசுறேன்? இதுதா உங்களுக்கு முக்கியா? நிமிர்ந்து பார்த்த அடிப்பிங்களாடா?” என தன்சமூகப் பெயர் மாற்றத்தின் தேவையையும் சமூகஎழுச்சிக்கானப் பதிலுரையாக முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கர்ணன் படக்காட்சிகளிலும், உரையாடல் நிகழ்த்துவதிலும், அமிழ்ந்துகிடந்த மன உணர்விலிருந்து விடுபட, கூனிக்குறுகி வாழ்ந்த வாழ்க்கையைக் கட்டுடைத்து, மீண்டெழுந்து , சமூக நிமிர்வதற்கான தன்மைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றன. “அவனுக பஸ்ச உடச்சதுக்காக அடிக்கல. நிமிர்ந்து பார்த்தற்காக அடித்திருக்கிறானுக. ஆயுள் முழுக்க நிமிர்ந்து பார்க்காமலே வாழ்ந்து விடமுடியுமா?” எனக் கர்ணன் உரையாடல் ஆதிக்க வன்முறைக்கு எதிராக மக்களைப் போரட்டக் களத்திற்கும், வாழ்வுரிமைக்கும் அழைத்துச் செல்லும் தலித் விடுதலையை விரும்பும் போராளியாக மாறுகிறான் கர்ணன்.

நடிகர் தனுஷிற்கு புதுமுகத்தைக் காட்டியுள்ளது கர்ணன். இப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் அருமை. நடிகர் லால் தன்துணைவியின் துணிச்சலை ஒரு பாடலில் வெளிப்படுத்தியுள்ளது ஒட்டுமொத்த தலைநிமிர்வைக் காட்டுகிறது. பாடல்களின் வழி வேளாண் சமூகவாழ்வியலின் வளமையைக் காட்சிவழியாகப் பதிவு செய்துள்ளது தேர்ந்த ஒளிப்பதிவின் அடையாளமாகும். மஞ்சனத்தி எனும் பாடலில் “கக்கத்துல வச்ச துண்ட தோளுமேல போடவச்சா. தோரணையா நடக்க வாலிபத்த ஏத்திவிட்டா” என ஒட்டுமொத்த மீட்சியைப் பாடல் வரிகளின் வழிக் கொண்டு வந்துள்ளது படத்திற்குக் கூடுதல் பலம்.

ஒரு தலைமுறை இரு தலைமுறையென எதிர்ப்புணர்வு மழுங்கிப் போய் புழுவாய், கூனிக்குறுகி இரு கைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான, சமூக மேல்நிலையாக்க முன்மொழிவை பல இடங்களில் மாரிசெல்வராஜ் உரையாடல்களின் வழியாகவும், காட்சி வழியாகவும் சொல்லிச் செல்கிறார்.

கழுதையின் கட்டப்பட்ட கால்களை அவிழ்க்க, கற்களை ஆயுதமாக்கி அவிழ்த்து விடுவதும், நாய்கள் அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டிருப்பதும், காகங்கள் மின் கம்பிகளில் சோகமாய் அமர்ந்திருப்பதும், பருந்து கோழிக்குஞ்சுவைத் தூக்கிச் செல்வதும், வண்டினங்கள், ஊர்வன, பறப்பன குதித்துச் செல்வன என மனித வாழ்வியலோடு இணைந்து இருக்கக்கூடிய பல்லுயிர்கள் கர்ணன் படத்தில் குறியீடுகளாக வெளிப்பட்டுள்ளன.

பல்லுயிர் இனங்களும் இப்படத்தில் குறியீடுகளாக ஆதிக்கத்திற்கு எதிராக சமா்செய்வதை நோக்கியே நகர்கின்றன. கர்ணன், பரியேறும் பெருமாளைப் போன்று இல்லாமல் திருப்பியடிக்கும் மனவலிமையோடு வன்முறைக்கு எதிராகக் கலகம் செய்கிறான்.

ஒடுக்குண்டவர்களின் மனவெளியில் சஞ்சரிக்கும் பாத்திரம் இவ்வாறுதான் படைக்க வேண்டும் என்கிற பேதத்தை உடைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பாத்திரப்பிரவேசம், பாத்திர உரையாடல், பாத்திரங்கள் வழியாகப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அடிமை மனோபாவத்தை மீளுருவாக்கம் செய்தல் என்கிற பல தளங்களில் கர்ணனின் வழிக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.

கர்ணன் படத்தில் தலையற்ற சிலை, தலையற்ற ஓவியம் என்பதான காட்சி வெளிப்பாடு, இதுவரைக்குமான தமிழ் சினிமாவில் முதன்மைப்படுத்தப்படாத காட்சி வெளிப்பாடாகும். தலையற்ற சிலையை வணங்குவது, தலையற்ற சிலையை வழிபாட்டிற்குரியதாகக் கொண்டாடுவது என்கிற செயல்பாடு, விளிம்புநிலை சமூகத்தின் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகும்.

ஆதிக்கத்தால் வீழ்த்தப்படுவது, மனிதர்களை மட்டுமல்ல சிலைகளையும் தான் என்பதை இப்படம் சொல்லாமல் சொல்லுகிறது. சமூகநீதிக்காகவும் சமவுரிமைக்காவும் போராடியவர்களின் சிலைகளை உடைப்பதும், சேதப்படுத்தும் நிகழ்ந்து வருகின்ற சூழலில் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக் களத்தில் நின்று படுகொலைச் செய்யப்பட்டவர்களைத் தெய்வமாக வழிபடுவதும் ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட தலையில்லா உருவத்தை வழிபாட்டுக்குரியதாக நினைப்பதும் விளிம்புநிலை மக்களின் வழிபாட்டோடு தொடர்புடையதாகும். ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட ஒருவரைத் தலைவனாகவும் முன்மாதிரியாகவும் நினைக்கும் தன்மையை இப்படத்தில் தலையில்லாத சிலையை வழிபடுவதும் குறியீட்டு வெளிப்பாடாகும்.

ஒருபுறம் பொடியன்குளம் ஊர் இளைஞர்கள் மக்கள் அனைவரும் வாளேந்தி மீனை வெட்டும் கர்ணனைக் கொண்டாடுகிறார்கள். அதே சூழலில் ஊர்க்குடும்பன் மண்சிலை செய்து ஒரு கோயிலை உருவாக்கிறார். ஒன்றுகூடி மக்கள் அனைவரும் தலையில்லாச் சிலைக்கு வழிபாடு நடத்திக் கொண்டாடுகிறார்கள். ஒருபுறம் ஊர்க்குடும்பன் மண்ணைக் குழைத்துத் தலையோடு கூடிய ஒரு சிலையை உருவாக்குகிறார். இவை இரண்டுமே இணை எதிர்ச் செயல்பாடு.

தலையில்லாத சிலையைக் கொண்டாடுவதும், தலையோடு கூடிய ஒரு சிலையை உருவாக்குவதும் நாட்டார் தெய்வ மேனிலையாக்க மனநிலையைக் காட்டுகிறது. ஊர்க் குடும்பன் வளமையின் குறியீடாகச் சிலையை உருவாக்குகிறார். மீனினை வெட்டும் பொழுது தலையில்லாச் சிலையை வழிபடுவது என்பது ஆதிக்கத்தால் தாக்குதலுக்கு உள்ளான தலையிழந்த சிலையைப் புணரமைப்பு செய்யாமல் நினைவில் தேக்கிவைத்துக்கொண்டே இருத்தலும் வழிபடுதலும் நாட்டார் தெய்வ வழிபாட்டுமரபோடு பார்க்கமுடிகிறது. இருப்பினும் இவ்வழிபாடு சமர் செய்வதன் குறியீடாகவே படத்தில் வெளிப்பட்டுள்ளது.

தலையில்லாச் சிலையை வழிபடுவதும், மீனின் தலையை இரண்டாக வெட்டுவதும், வாளேந்தி வருவதும், யானை வைத்திருப்பதும், குதிரை வைத்திருப்பதும் காலவெள்ளத்தில் அடிமையாக்கப்பட்ட சூழலின் எச்சங்களாகப் பார்க்க முடிகின்றன. நந்தன் ஓர் இனத்தின் தலைவனாக இருந்ததும் அவனை வீழ்த்தப்பட்டதும் கர்ணனின் ஓவியத்தைத் தீயால் வரைவதும், ஆதிக்கத்திற்கு எதிராக, உரிமைக்காகப் போராடிய நந்தனைத் தீயிற்கு இரையாக்கபட்டதும், கடவுளர்களாக ஆக்கப்படுவதுமான சூழலை காட்டுகிறது. இதுபோலத்தான் எல்லாச்செயல்களுக்குப் பின்னால் கர்ணனோடு இருக்கும் மாமனை( நடிகர் லால்) தற்கொலைக்குத் தள்ளியுள்ள நிகழ்வும் நந்தனுக்கு நிகழ்ந்தது போலத்தான்.

நந்தனுக்கு நிகழ்ந்தது பார்ப்பனர்களின் சூழ்ச்சியே; இங்கு ஆதிக்கசாதியனர்களும், காவலர்களும் வன்முறைக்குக் காரணமாகிறார்கள். கொடியங்குளத்தில் எவ்வாறு மனிதர்களை மனிதர்களாக நினைக்காமல் மனிதர்களின் மேல் வன்முறைத் தாக்குதல் நடத்தியதையும், வீடு, உடமைகள், கட்டில், பீரோ, பணம், வாகனம், படிப்புச் சான்றிதழ்கள் என அனைத்தையும் அழித்த உண்மைநிகழ்வினைக் காட்சிப்படுத்தியுள்ளதன் வழியாக வலிநிறைந்த வாழ்வின் சுவடுகளை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வன்முறையைக் கைகளில் எடுத்துக்கொண்டு மக்கள் விரோதச் செயலில் ஈடுபடுவோரின் மீது எதிர்ப்பரசியலை முன்வைக்கிறது கர்ணன்.

கர்ணன் வன்முறையாளன் அல்ல ; ஆதிக்கத்திற்கு எதிராகக் கலகம் செய்யும் துணிச்சல்காரன். இந்தத் துணிச்சல் அரச வன்முறைக்கு எதிராக நிற்பதும், மக்களின் நலனுக்காகத் தன்னை ஒப்படைக்கும் போர்க்குணமும் தியாகி இமானுவேல் சேகரன் எனும் போராளியை நினைவுபடுத்துகிறது.

படத்தினுள் சுவரில் பச்சைநிறச் சட்டையை வரைந்து, பாதியோடு வரையாமல் விடப்பட்ட ஓவியத்தில் தியாகி இமானுவேல் சேகரன் உறைந்திருப்பதையும், பிறகு தாத்தா(லால்) பாத்திரம் தற்கொலைச் செய்த பின்னர் அவரின் தலையை ஓவியத்தில் நிரப்படுவதும் அவ்வோவியத்தைத் தெய்வமாக வழிபட்டு ஊருக்கு ஏற்பட்ட துன்பம் எல்லாம் ஒழியட்டும் என்று ஊர்மக்கள் ஓன்றுகூடி ஆடுகின்றார்கள். தம் மக்களுக்குக் கிடைத்த உரிமையைக் கொண்டாட மூதாட்டி அழைக்க, ஊர்மக்களின் ஆட்டத்தோடு படம் நிறைவடைகிறது. உரிமைப்போராட்ட வரலாற்றில் கிடைத்த வெற்றிக்கான மகிழ்ச்சியின் அடையாளமாக கர்ணன் படத்தின் இறுதிக்காட்சி வெளிப்பட்டுள்ளது.

- ம.கருணாநிதி

Pin It