சனவரி

புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்க துடித்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக, பொருளாதார நிலையின் சீர்குலைவு, பதற்றம் தரும் மன அழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான்.

– அ. முத்துக்கிருஷ்ணன் 

சேரி மக்களை விரட்டியடிக்கும் மாநகரங்கள்

குடிசை ஆதி மனிதர்களின் அடையாளம். உழைக்கும் மக்களின் தொன்மைக் குறியீடு. நிலமும் மனிதனும் பட்டா, புறம்போக்கு என்று பிரிக்கப்பட்டதால், இன்று குடிசைகள் என்பது கூலிக்காரர்களின் கூடாரமாகவும், சேரி மக்களின் இருப்பிடமாகவும் இழிவுபடுத்தப்படுகிறது. ஆனால், சேரிகளின் உழைப்பில்தான் மாநகரங்கள் உயர்ந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சேரிகள் அழகைக் கெடுப்பவை; ஆக்கிரமிப்புகள் என்று கருதப்பட்டு சென்னையை விட்டு வெளியேற்றப்படுகின்றன. நிலத்தை நஞ்சாக்கி, நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளை பட்டினிச் சாவுகளுக்கு பலிகொடுத்து வரும் இந்திய அரசின் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைதான் இன்று சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்கிற பெயரில் சென்னை நகர சேரிகளை ஊருக்கு வெளியே ஒதுக்கித் தள்ளுகின்றன.

– இசையரசு

ரவிதாஸ் ஆகிய நான்...

ஒரு சமூகத்தை அழிக் கவேண்டும் என்றால், அதன் வரலாற்றை அழித்தால் போதுமானது. அந்த சமூகம் தானாகவே அழிந்து விடும் என்றார் அம்பேத்கர். செருப்பு தைக்கும் தீண்டத்தகாதவரான குரு ரவிதாஸ், பார்ப்பனிய ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக எழுந்து, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். குரு ரவிதாஸ் சாதி அமைப்பிற்கு எதிராக நேரடியாக ஏற்படுத்திய சவாலால் அவமானத்தை சகிக்க முடியாமல் குரு ரவிதாசை ஒரு பார்ப்பனராகவோ, முற்பிறவியில் அவர் ஒரு பார்ப்பனர் என்றோ காட்ட வேறு சிலர் முனைந்தனர்.

– பர்தீப் சிங் ஆட்ரி 

பிப்ரவரி

இனப்படுகொலை

உலகமே பார்த்துக் கொண்டிருக்க இலங்கை அரசானது வேண்டுமென்றே, வெளிப்படையாக, வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. இரு அடிப்படைக் கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன் : 1. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 2. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தாங்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவும் உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு பலியாகிறார் கள் என்ற உண்மையானது, அவர்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவுவது உள்ளிட்ட அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலுசேர்க்கவும் ஆதரிக்கவும் செய்கிறது.

1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1, அதில் கையெழுத் திட்டுள்ள 140 அரசுகளையும், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையைத் "தடுத்து நிறுத்த' உடனடியாக செயல்படக் கோருகிறது. இனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளும், பிரிவு 1 க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் முதன்மையானது என்னவெனில், 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்காக உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ஹேக் பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்க வேண்டும்.

– பிரான்சிஸ் பாய்ல் 

சமூகத்திற்கு திருப்பிச் செலுத்து!

நம் சமூகத்தை விடுதலை செய்வதற்காக செயலாற்ற விழையும் மக்களே நமக்குத் தேவை. தங்களை "தலித்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தயங்குகின்ற மக்கள் நமக்குத் தேவையில்லை. இடஒதுக்கீட்டு கொள்கையால் பயன் பெற்ற ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கு திருப்பிச் செலுத்தும் கடமை இருக்கிறது. உங்களால் திரும்பச் செலுத்த முடியாது எனில், இடஒதுக்கீட்டை அனுபவிக்காதீர்கள். இல்லை எனில், நீங்கள் ஒழுக்க நெறி தவறியவர்களாவீர்கள். இடஒதுக்கீடு இல்லை எனில், நாம் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்க மாட்டோம். இடஒதுக்கீட்டு கொள்கையை நியாயப்படுத்த முடியாதவர்கள், அதன் பயனை அனுபவிக்கவும் உரிமை இல்லை. நாம் தெளிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வோம். நான் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் உருவாக்கப்பட்டவன் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். இடஒதுக்கீடு இல்லாமல் எனக்கு நல்ல கல்வி கிடைக்க வாய்ப்பே இல்லை. நல்ல கல்வி இல்லாமல், தலித் உரிமைகளுக்காக என்னால் குரல் கொடுக்க முடியாது. எனது தந்தை இடஒதுக்கீட்டு கொள்கையின் முதல் தலைமுறை பயனாளிகளில் ஒருவர். அதனால்தான் அவர் கடினமாக உழைத்து, தனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, உறவினர்களுக்கும் சேர்த்து கல்வியைக் கொடுத்தார். முதல் தலைமுறைப் பயனாளிகள் ஒவ்வொருவரும் இதைத்தான் செய்திருக்கின்றனர்.

– டாக்டர் உமாகாந்த்

சட்டமன்றத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் – 60

அனைத்து பஞ்சாயத்து நூலகங்களுக்கும் அரசு செலவில் புத்தகங்கள் வாங்கித் தரும் திட்டத்தின் கீழ் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளை வாங்கத் தடை இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? எனில், அனைத்து நூலகங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளின் தொகுதிகள் 37 எண்களும் வழங்கப்பட அரசு ஆவன செய்யுமா? இதுவரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் (தனியார் உட்பட) 222 துணை வேந்தர்கள் பதவி வகித்திருப்பினும், பட்டியலினத்தவர் ஆறுபேர் மட்டுமே மிகக் குறுகிய காலத்திற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது, பட்டியலினத்தவர் உயர் கல்வியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்பதை அரசு உணர்ந்துள்ளதா? எனில், எதிர்காலத்தில் குறைந்தது 5 துணைவேந்தர்களாவது ஒரே காலத்தில் பட்டியலினத்தவராக இருப்பதை அரசு உறுதி செய்யுமா?

டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு

தனது குறிக்கோளை சாதிப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய மிக முக்கியமான பணி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பண்பாடு, சமய மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமைகள் பிரகடனத்தைத் தயாரித்ததாகும். மிகுந்த உழைப்புடன், அவர் அந்தத் திட்டத்தைத் தயாரித்து, வருங்கால இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக, அதை சிறுபான்மையோர் துணைக் குழுவிடம் அளித்தார்.

மரணத்தால் எழுதப்பட்ட மே தின செய்தி

ஏப்ரல் 30. மாலை. உலகத் தொழிலாளர்கள், மறுநாள் பிறக்கவிருக்கும் மேதின கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கும் நேரம். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள மூன்று தலித் கிராமங்களோ பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தன. திடீரென ஏற்படும் மரணம் உருவாக்குகின்ற பீதி, துக்கம், அதிர்ச்சி, நம்பிக்கையின்மை, மனித வாழ்வின் மீதான குழப்பம் ஆகியவற்றால் நடுங்கிக் கொண்டிருந்தன அக்கிராமங்கள். சக மனித உயிரின் முக்கியத்துவத்தையும், சட்ட விதிகளின் எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டிகளில் ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் இறக்கி விடப்பட்ட 5 தலித் தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி இறந்த செய்தி, அத்தொழிலாளர் உடல்களின் சூடு ஆறுவதற்கு முன்னமே அக்கிராமங்களை எட்டிவிட்டது. தொழிலாளர்களின் பாதுகாவலர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்டிருக்கிற, நம் நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போதுதான் மேதின அறிக்கையை எழுத உட்கார்ந்திருப்பார்கள். அதற்குள் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டு, தமது உயிரைக் குழைத்து மேதின செய்தியை எழுதிவிட்டார்கள் அந்த 5 தொழிலாளர்கள்! அவர்கள் தமது மரணத்தால் விடுத்த செய்தி இது தான்: தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தலித் தொழிலாளர்களுக்கு இந்த நாட்டில் உயிர் பாதுகாப்பில்லை.

- நல்லான்

ஜாதி மொழியாள்!

ஒரு மொழியின் அடித்தளம் பண்பாடு. எந்தப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ் மொழி கட்டப்பட்டுள்ளது? சிந்து சமவெளி நாகரிகம்தான் வேர் எனில், அதற்குப் பிந்தைய தமிழ் (ஜாதி) இலக்கியங்களை மறுதலித்திருக்கிறதா தமிழ்ச் சமூகம்? சமத்துவப் பண்பாட்டை என்றைக்கு தமிழ் இலக்கியங்கள் பேசும்? அறிஞர்கள் விளக்கட்டும். தமிழின் அடித்தளமாக இருக்கும் இந்து நச்சுப் பண்பாட்டின் உறவை, வேரோடும் வேரடி மண்ணோடும் அறுத்தெறியத் துணியாத வரை வரை செவ்வியல் மொழி அங்கீகாரம், தமிழனை ஒருபோதும் ஜாதியற்ற மனிதனாக்கி விடாது; அவனை இறுதிவரை தமிழ்ச் சூத்திரனாகவே வைத்திருக்கும். தமிழ்ச் சூத்திரன் என்ன செய்வான்? அவன், தமிழ்ப் பஞ்சமனை அண்டவிட மாட்டான். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது மாநாட்டின் முழக்கமாக இருக்கலாம். ஆனால், செம்மொழி மாநாடு முடிந்த பிறகு – ஜாதித் தமிழனும்சேரித்தமிழனும் – ஊருக்கும் சேரிக்கும் தனித்தனியாகத்தான் பிரிந்து சென்றனர் என்பதை மறைத்து விட முடியாது. அடுத்த செம்மொழி மாநாடு அல்ல; இனி அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் எல்லா மாநாடுகளிலும் – "தமிழர்'களை தமிழ் மாநாடு இணைக்கும்; ஜாதி பிரித்துக் கொண்டேதான் இருக்கும்!

– தலையங்கம் 

போபால் மனிதக் குருவிகள்

பார்ப்பன – பனியா தேசியம் தனது வர்க்க நலன்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன் இந்துக்களின் உரிமைகளை மட்டுமே தேசியமாகவும், மதச் சிறுபான்மையினரின், தேசிய இனச் சிறுபான்மையினரின், பழங்குடி மக்களின், தலித்துகளின் விடுதலை வேட்கைகளை "தேச விரோதமாக'வும் கருதுகிறது. போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் நிறுவப்பட்ட அதனுடைய "ஆய்வு மற்றும் வளர்ச்சி மய்ய'த்தில் போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன என்னும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

– எஸ்.வி. ராஜதுரை

கறுப்பு மை குறிப்புகள்

காதலுக்காக உயிரை விட்டவர்களுக்கும், உயிருக்காக காதலை விட்டவர்களுக்கும் இடையில் சாதி மட்டும் தன் இருப்பை நிலை நாட்டியிருப்பது கண்கூடாகத் தெரியும். ஆதிக்க சாதியினர் தலித்துகளை கொன்றால் அது வன்கொலை. ஆதிக்க சாதியினர் சாதிக்காக தன் சாதியினரையே கொன்றால் அது கவுரவக் கொலை. வித்தியாசம் அவ்வளவே. விளைவு ஒன்றுதான். சாதியும் காதலும் இரு வேறு எல்லைகள். சாதி என்பது சர்வாதிகாரம். காதல் என்பது ஜனநாயகம். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் அழிக்க முடியாததாக நிலைத்திருக்கின்றன.

- மீனாமயில்

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்

வன உரிமைகள், நில உரிமைகள், விவசாயத்துறை மேம்பாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுரண்டல், பட்டினி, குழந்தைத் தொழிலாளர்கள், இடப்பெயர்வு, மறுவாழ்வுத் திட்டங்கள், குடிநீர் தட்டுப்பாடு, உத்தரவாதமற்ற இருப்பு என பழங்குடி இன மக்களின் வாழ்க்கை குறித்துப் பேச மறுக்கும் மய்ய நீரோட்ட ஊடகங்களும், அரசுத் துறைகளும் "மாவோயிஸ்டுகளின் வன்முறை' என்ற ஒற்றைப் பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருகின்றனர். முன்னர் நிலப்பிரபுக்கள் செய்ததையே இன்றைக்குக் காவல் துறையும், மத்திய சிறப்புக் காவல் படையும் செய்து வருகின்றன. பாலியல் வன்முறை, படுகொலைகள் ஒரு புறமிருக்க, காவல் படையினர் ஆதிவாசிகளின் ஆடு, கோழிகளைக் கூட களவாடிச் செல்வதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காடுகளில் கிடைக்கப் பெறும் பொருட்களை சேகரித்து, காடுகளுக்கு வெளியே இருக்கும் சந்தைகளில் ஆதிவாசிகள் விற்க வருகின்றனர். அப்பொருட்களை வாங்குபவர்களாக இருப்பவர்கள் "வைசிய' வணிகர்கள், பொருட்களின் விலை மதிப்பு அறியாத அவர்களை மிகக் குறைந்த விலை தந்து வணிகர்கள் ஏமாற்றுகின்றனர். ஆதிக்க பிராமணர்கள், அராஜக சத்திரியர்கள், சுரண்டும் வைசியர்கள் என்ற மூவகை மேலாதிக்கம் இங்கு நிலவுகிறது.

தங்கள் வாழ்விடமாகவும் வாழ்க்கையாகவும் இருக்கும் வனத்தை அழிய விடாமல் காப்பதற்காகத்தானே பழங்குடியின மக்களின் இப்போராட்டமே என்பதை அந்த வனத்துறை அதிகாரிக்கும் அரசு எந்திரத்திற்கும் வேறு எங்ஙனம் உணர்த்துவது?

– இளம்பரிதி 

“தலித் மக்கள் எப்பொழுதுமே இந்துக்களாக இருந்ததில்லை. டாக்டர் அம்பேத்கரைப் பொருத்தவரை, பவுத்தம்தான் தலித் மக்களுடைய உண்மையான மதமாக இருந்தது. அது, சுதந்திரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கிய மதமாகும். டாக்டர் அம்பேத்கர் மிகச் சரியாக நம்பியதைப் போல, அனைத்து முக்கிய சமூக மற்றும் அரசியல் புரட்சிகள் நடைபெறுவதற்கு முன்னால் மத மற்றும் பண்பாட்டுப் புரட்சிகள் நடைபெற்றாக வேண்டும். தலித் போராட்டத்திற்கு மதமாற்றம் என்பது ஓர் அடிப்படைத் தேவையாகும்.''

– பகவான் தாஸ்: "பவுத்தம் – சுதந்திரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கியது' 

கறுப்பு மை குறிப்புகள்

தலித்துகள் மீது திணிக்கப்பட்ட தொழில்களை எண்ணிப் பாருங்கள்! மலமள்ளும் தொழிலாளர்களுக்கான உரிமைகளைக் கோர வேண்டியதுதான். ஆனால், மனித உரிமைகளையும் மனித மாண்பினையும் சிதைக்கும் அத்தொழிலை அழிப்பதொன்றே நம் அதிகபட்ச லட்சியமாக இருக்க முடியும். பாலியல் தொழிலும் அப்படிப்பட்டதே! அதை சட்டப்பூர்வமாக்கி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுகூட, ஆறுதலுக்காக நாம் செய்து கொள்ளும் கற்பனைதான். தடுக்க முடியாது என்பதற்காகவே ஒரு குற்ற வழக்கத்தை அங்கீகரித்தல் என்பது, சிறிய அளவிலேனும் நியாயத்தை செய்யுமா என்று தெரியவில்லை. மதம் அங்கீகரிக்கும் மனித உரிமை மீறல்கள் எதையும் வெறும் சட்டத்தால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனெனில், நம்பிக்கை எனும் பெயரில் ஒடுக்கப்பட்டோரே தங்கள் மீதான உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

– மீனாமயில்

சட்டப் பஞ்சாயத்து

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, நம்முடைய பண்பாட்டுச் சின்னமாகவே மாறிவிட்ட மசூதியை இந்துவெறிக் கூட்டம் இடித்ததற்கு, நாம் ஒரே ஒரு தீர்வைத்தான் காண முடியும். அதே இடத்தில் மசூதியை கட்டுவதுதான் அதற்குத் தீர்வு. பவுத்த தலங்களை இடித்து, கட்டப்பட்டுள்ள எண்ணற்ற இந்து கோயில்களை இன்றளவும் அனுமதித்திருக்கும் தலித்துகளின் பெருந்தன்மையை இந்துக்களிடம் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரலாற்றை நேர் செய்வதற்கு, இந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சட்டப்படியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

– தலையங்கம்

ராஜராஜசோழன்

சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும்.

– தமிழேந்தி

வாச்சாத்தி: முடிவுறாத போர்

சில பெயர்கள் சமூகத்தின் முகத்தில் வடுக்களாக நிலைத்து விடுகின்றன. வாச்சாத்தி என்ற பெயரை உச்சரித்ததுமே நடுங்கும் கைகளைக் கொண்டு, ஆறாத தன் காயத்தைத் தடவிப் பார்க்கிறது இச்சமூகம். காட்டில் செம்மையான வாழ்வை மேற்கொண்டிருந்த பழங்குடியினர், ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கப்பட்ட துயர வரலாற்றின் சிறு பகுதி இது. அதிகார வர்க்கத்தினர் "என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்ற வக்கிர மனப்போக்கு, தன் ஆதிக்கத்தை ஆணவத்தோடு நிலை நிறுத்திய களம் வாச்சாத்தி. பழங்குடியினரை அதிகார வர்க்கம் வேட்டையாடிய இடத்தை களமெனச் சொல்வதுதான் தகும். எதிரி நாட்டை முற்றுகையிடுவதைப் போல சூழ்ந்து கொண்டு, ஊரையே சூறையாடி, ஆண்களைக் கொடூரமாகத் தாக்கி, பெண்களை வன்புணர்ந்து, குழந்தைகளைக்கூட உயிருக்காக ஓட வைத்தது யாரோ சர்வாதிகார நாட்டின் தலைவனில்லை... ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் உறுதிமொழியாக ஏற்றுள்ள அரசு அதிகாரிகளும், சீருடைக் காவலர்களும்தான்! ஒரு போருக்கானத் திட்டமிடலோடு நடைபெற்ற இந்த அரச பயங்கரவாதம் இந்தியாவின் போலி ஜனநாயகத்திற்கும், இந்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் கையறு நிலைக்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

– மீனாமயில்

ஒடுக்குமுறைச் சட்டங்கள்

சென்னை நகரின் சாலை ஓரங்களிலும், நடைபாதைகளிலும், கூவம் கரையோரங்களிலும் கள்ளம் கபடமற்று வாழ்ந்து கொண்டிருந்த, இன்னும் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி மக்கள் மீதுதான் மேற்கூறியவாறு நெருப்பை அள்ளி வீசுகிறது, நகர்ப்புற இந்து சமூகம். மண்ணின் மைந்தர்கள், பூர்வகுடிகள், ஆதிதிராவிடர்கள், ஆதித்தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் சேரிமக்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையே ஏன்? ஏனெனில், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்! நேற்று ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட இவர்கள், இன்று சென்னையை விட்டு விரட்டப்படுகிறார்கள். "வூடு கீற எடத்துல வேல இல்ல, வேல கீற எடத்துல வூடு இல்ல' இன்றைய நகர்ப்புற சேரிமக்களின் அடிப்படை வாழ்வியல் சிக்கல் இதுதான். வீடு என்பது நிலம் சார்ந்தது; வேலை என்பது கல்வி சார்ந்தது. பாட்டாளிகளும், பொதுவுடைமையாளர்களுமான சேரி மக்களுக்கு நிலமும், கல்வியும் மறுக்கப்பட்டது ஏன்? இக்கேள்விக்கு விடை தேடுவது விடுதலைக்கு வழிவகுக்கும்.

– இசையரசு 

வதை முகாம்களாகும் பள்ளிக்கூடங்கள்!

இந்து சமூகத்தில் காரணமே இல்லாமல் ஒருவர் இன்னொருவரை அடித்தால் அடிவாங்குபவர் கண்டிப்பாக ஒரு தலித் ஆணாகவோ, பெண்ணாகவோதான் இருப்பார். நட்ட நடுசாலையில் நூறு பேர் வேடிக்கை பார்க்க ஒருவன் விரட்டி, விரட்டி அடிக்கிறான் என்றால் – அவர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார். பெற்றவளாக இருந்தாலும் ஒரு பெண் யாரையாவது அடிக்கிறாள் என்றால், அது ஒரு குழந்தையாகத்தான் இருக்கும். சாதிப் படிநிலையில் ஒருவருக்கு கீழ் இன்னொருவர் எப்படி அடிமையோ, எதிர்த்துப் பேச முடியாதோ, எப்படி இழிவை சுமக்கிறார்களோ அதுபோலத்தான் குழந்தைகளும். அனைத்துப் பெரியவர்களுக்கும் குழந்தைகள் அடிமைகள். அதுவும் தலித் குழந்தை என்றால், அடிமையிலும் அடிமை! அடித்தால்தான் படிப்பு வரும் என்ற மூடநம்பிக்கை பெற்றோர்களிடையிலும், ஆசிரியர்களிடையிலும் ஆழமாகப் பதிந்துள்ள நம் சமூகத்தில், கல்வியை எளிதாகக் கற்க நாளாகும் பிள்ளைகளை அவமானம் செய்வதும், அடித்து துன்புறுத்துவதும் இயல்பாகிப் போயுள்ளது. அதனால்தான் மாணவர்களை அடிப்பதும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் இரண்டு நாட்களுக்கான பத்திரிகை செய்திகளாக மாறிவிடுகின்றன. அதற்கான சாதிப் பின்னணி, சமூகப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி, உளவியல் பின்னணி குறித்தெல்லாம் யாரும் பேசிக்கூட கேட்டுவிட முடிவதில்லை. ஒரு குழந்தை பள்ளிக் கூடத்தில் ஆசிரியரால் அடிக்கப்பட்டு உயிர் இழந்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. தலித் குழந்தையை சாதியை சொல்லி திட்டவோ, "மாட்டுக் கறி தின்போர்' என குறிப்பாக சாதியை உணர்த்தி அவமானப்படுத்தவோ செய்தால், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய்வதில்லை.

– அநாத்மா

தேசியத் தலைவர்

அம்பேத்கர் என்கிற மாமனிதரின் மேன்மை, போராட்டமாகவே கழிந்த அவருடைய வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றத்தில் அவருடைய பங்கு, தீண்டத்தகாத மக்களின் அரசியல் உரிமைகளையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட தனது வாழ்நாளை ஒப்படைத்த அவருடைய அர்ப்பணிப்பு, ஆதிக்க சாதிகளின் அடிவேரை அசைத்துப் பார்த்த அவருடைய புரட்சிகரப் போராளித்தன்மை இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தாமல் – அம்பேத்கரை அரசு என்கிற அதிகார வர்க்கத்திற்கும், அவருக்குமான தொடர்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அவருடைய சமூக விடுதலைக்கான அர்ப்பணிப்புகளை இருட்டடிப்பு செய்யும் தேசத்தில் வாழ்கிறோம் நாம். அம்பேத்கரை அனைத்து மக்களுக்குமான தலைவர் என்று உரக்கச் சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. திட்டமிட்ட சதியின் மூலம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்ககப்பட்ட அம்பேத்கரின் பிம்பத்தை விடுவிக்க – எடுக்கப்பட வேண்டிய பல கட்ட முயற்சிகளில் ஒரு பகுதியாகவே "அம்பேத்கர் படத்தை பார்க்க வேண்டும்.

– கவின் மலர் 

“தலித் இயக்கங்கள் மதங்களை கேள்வி கேட்காமல், தலித் பொருளாதாரம், தலித்துகளுக்கான அதிகாரம், தலித் அரசியல் என்று மட்டுமே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. ஆகவே, இந்து மதத்திற்கு எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமலேயே போனது. பிற்படுத்தப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனையே இந்து மதம்தான். பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். எனவேதான் "தலித் பகுஜன்' என்ற சொல்லை உருவாக்கினேன். இதற்குள் பெண்ணியத்தையும் அடக்கினேன்.''

- காஞ்சா அய்லையா: " இந்து பெரும்பாண்மை மாயை முதலில் தகர்க்கப்பட வேண்டும்'

ஒரு தலித்தான டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு தன்னை உயர்த்திக் கொண்டு, அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஓர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றினாரோ அதே போல, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்; அது ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு மனிதரும் கடவுள் கொடுத்த ஆற்றலை நிறைவாகப் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

– அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தில் (8.11.10)

Pin It