சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் தலித்துகள் சந்திக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி - குறிப்பாக பஞ்சமி நில ஆக்கிரமிப்பு, சாதிய ஒடுக்குமுறைகள் போன்றவற்றைப் பற்றி பேசி இருந்தது. ஆனால் கல்வியறிவு பெறுவதன் மூலமே இவை அனைத்தையும் மாற்றிவிட முடியும் என இறுதித் தீர்வாக சொல்லியிருந்தது. படம் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் அது சொல்லும் தீர்வு என்பது பல ஆண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் அரசியலற்ற, மொக்கையான தீர்வே ஆகும்.

asuran dhanushகல்வியறிவு என்பது இந்த சமூகத்தையும், அது உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல் அடித்தளத்தையும் நமக்கு கற்றுத் தரும் ஊடகமாக இருந்தாலும், அது எந்த சமூக அமைப்பில், எந்த சமூக அமைப்பின் நன்மைக்காக, சேவைக்காக உருவாக்கப்பட்டது என்பது மிக முக்கியமானதாகும். காரணம் முதலாளித்துவ கல்வி அமைப்பானது தன்னைப் போலவே அற்பவாதிகளையும், சுயநலவாதிகளையும், காரியவாதிகளையுமே உற்பத்தி செய்துள்ளது. தலித்துகளின் பிரச்சினை என்பது சாதி ரீதியான ஒதுக்குதல் என்ற பிரச்சினையோடு, இந்திய பாட்டாளிவர்க்க ஒற்றுமை என்ற மையமான பிரச்சினையின் ஓர் அங்கமாகும். இதைப் புரிந்து கொள்ளும்போதுதான் நம்மால் தலித்துக்களின் பிரச்சினை என்பது ஒட்டுமொத்த சமூக மாற்றத்தோடு தொடர்புடையது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி இன்று பல படங்களில் வெளிப்படையாகக் காட்டினாலும் தொடர்சியாக சமூக களத்தில் இயங்கி வரும் ஒருவருக்கு அது எந்தவிதமான அதிர்ச்சியையும் கொடுப்பதில்லை. கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கோகுல்ராஜின் உடலும், நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரின் உடலும், பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நந்தினியின் உடலும் கொடுக்காத எந்த வலியையும், அதிர்ச்சியையும் நமக்கு நிச்சயமாக அசுரன் போன்ற திரைப்படங்கள் கொடுப்பதில்லை. சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிய எந்த உணர்வும் அற்ற விட்டேத்திகளுக்கு வேண்டுமானால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அதிர்ச்சியை இயக்குநர் அதற்கு எதிராக களமாட வேண்டும் என்ற செயல்பாட்டை நோக்கித் தள்ளுகின்றாரா என்பதுதான் முதன்மையானது. அப்படிப் பார்க்கும் போது இந்தத் திரைப்படம் அப்படியான எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. தலித்துகளின் பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படுவதைப் பற்றியும், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளைப் பற்றியும் காட்சிப்படுத்திய இயக்குநர் இறுதியாக கல்வி ஒன்றே அதற்குத் தீர்வு என்கின்றார்.

ஆனால் இந்தியாவில் மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்றுவரை இந்தியக் கல்வி முறை என்பது ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற அடிமைகளை உற்பத்தி செய்வதாக இருக்கின்றதே ஒழிய, அது எந்த வகையிலும் சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் கருவியாக இருக்கவில்லை. அன்று மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை, 'ரத்தத்திலும், நிறத்திலும் இந்தியராகவும், ரசனைகளில், கருத்துகளில், ஒழுக்கத்தில், அறிவில் ஆங்கிலேயராகவும்' இருக்கக்கூடிய அடிமைகளை உற்பத்தி செய்தது போல, இன்றிருக்கும் கல்வி முறை 'ரத்தத்திலும், நிறத்திலும் திராவிடனாகவும், ரசனைகளில், கருத்துகளில், ஒழுக்கத்தில், அறிவில் பார்ப்பன கைக்கூலிகளாகவும், முதலாளித்துவ அடிமைகளாகவும்' இருக்கக் கூடியவர்களையே உற்பத்தி செய்துள்ளது.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் மிசனரிகள் மூலமும், ராணுவப் பள்ளிகள் மூலமும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற தலித்துகளுக்கு சுதந்திர இந்தியாவில் கல்வி பெறும் பரப்பு என்பது அதிகரித்து இருந்தாலும், அதனால் தலித் சமூகத்தின் விடுதலைக்கு எந்தவிதப் பயனும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலான கல்வி கற்ற தலித்துக்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவும், முதலாளித்துவத்தை நிபந்தனை இன்றி ஆதரிப்பவர்களாகவுமே உள்ளார்கள். ஒரளவு அரசியல் விழிப்புணர்வு பெற்ற தலித்துகள் கூட தங்களை அடையாள அரசியல் பேசும் இயக்கங்களோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் ஆளும் வர்க்கத்திடம் பேரம் பேசி குறைந்தபட்ச பலன்களை அடையும் நோக்கத்தோடே செயல்பட ஆரம்பித்தனர். இந்தியாவின் மிகப் பெரிய பாட்டாளி வர்க்கமாக விளங்கும் தலித்துகள் எக்காரணம் கொண்டும் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக பன்னாட்டு, இந்திய தரகு முதலாளித்துவக் கும்பல்களால் நிதியளிக்கப்பட்டு புற்றீசல் போல தலித் இயக்கங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி உருவான தலித் இயக்கங்கள் தலித் இளைஞர்களிடம் இயல்பாகவே இருக்கும் புரட்சிகர சிந்தனைகளைக் காயடித்து, சாதியை மூலதனமாக வைத்து இட ஒதுக்கீடு மூலமும், பாராளுமன்ற முறையின் மூலமுமே சாதியை ஒழித்துவிட முடியும் என்ற பிரம்மையை உருவாக்கி வைத்திருக்கின்றன. இதன் மூலம் ஆளும்வர்க்கம் வீசி எறியும் பதவிகளையும், ஆதாயங்களையும் பெற்றுக் கொண்டு, சுரண்டல் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை மடைமாற்றி, அந்தச் சுரண்டும் அமைப்பில் தாமும் ஒரு பங்காளியாய் மாற வேண்டும் என்ற 'லட்சிய' சிந்தனையை அவர்களிடம் விதைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான தலித் அமைப்புகள் இந்த வகையைச் சார்ந்தவை தான்.

இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் சாதி என்பது இன்னும் முன்பைவிட மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இதை ஒழிப்பதற்கான எந்தத் தீவிர போராட்ட வடிவங்களையும் கையில் எடுக்கத் துப்பில்லாத ஆளும் வர்க்க அடிவருடி அமைப்புகள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பிரச்சினையின் சாரத்தையே குறுக்கி, இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் உலகமயம், தனியார்மயம், தாரளமயம் போன்றவை நல்லதுதான், அதை ஒழித்துக் கட்டத் தேவையில்லை, அவை அடிப்படையிலேயே நன்மை செய்யக் கூடியது என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. இது போன்ற கும்பல்களின் பிடியில்தான் இன்று இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சக்தியாய் விளங்கும் தலித்துகள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (DICCI) போன்ற தலித் முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் தொடர்ச்சியாக இதே கருத்தைதான் முன்வைத்து வருகின்றன.

அடிப்படையில் சாரம்சமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது தனிமனித சாகசங்களால் ஒருபோதும் சாதி ஒழிப்பையோ, இல்லை தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, ஒதுக்குதல்கள் போன்றவற்றையோ ஒழிக்க முடியாது என்பதைத்தான். சாதி ஒழிப்பு என்ற பிரச்சினை ஒட்டுமொத்த பாட்டளி வர்க்க விடுதலை என்ற நிகழ்ச்சிப் போக்குடன் தொடர்புடையது. 2015 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணங்கள் கழகத்தின் புள்ளி விவரங்களின் படி விசாரணைக் கைதிகளில் 55 சதவீதம் முஸ்லிம்கள், தலித்துகளுமே ஆவார்கள். மேலும் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளில் 50.4 சதவீதமும் இவர்களே உள்ளனர். தனி மனித அழித்தொழிப்பு போன்றவை இந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட பயன்படுமே ஒழிய, நிச்சயம் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அழைத்துச் செல்லாது.

சாதி ரீதியாக இயங்கும் அனைத்து அமைப்புகளுமே ஏதோ ஒரு வகையில் சாதியைக் கெட்டிப்பட வைத்து, அதன் மூலம் அரசியல், பொருளாதார ஆதாயத்துக்காக வேலை செய்பவையாகவே இருக்கின்றன. அதைத் தாண்டி சாதி ஒழிப்பு என்பதற்கு எந்த உருப்படியான திட்டமும் அதனிடம் இல்லை. காரணம், சாதி ஒழிப்பு என்பது அடிப்படையில் அனைத்து வர்க்கங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்க அரசியலாலேயே சாத்தியம்.

தலித் அமைப்புகள் முதலாளித்துவத்தின் கைக்கூலிகளாய், பார்ப்பனியத்தின் அடிமைகளாய் இருப்பதால் அவர்களால் ஒருபோதும் நேர்மையாக சாதி ஒழிப்புக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அது போன்றவர்கள்தான் தொடர்ச்சியாக எந்த அரசியல் உள்ளீடும் அற்ற கல்வி மட்டுமே அனைத்தையும் மாற்றி விடும் என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அது போன்ற நபர்கள் தான் தலித்துகளை தொடர்ச்சியாக சட்டவாதப் பார்வையில் சிக்க வைப்பவர்களும்.

இடதுசாரிகள் தங்களின் செயல்பாடுகள் மூலம் தலித்துகளை தங்கள் பக்கம் வென்றெடுக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும். அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும், ஒதுக்குதல்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் அமைப்புகள் மீது தலித்துகளுக்கு இருக்கும் மாயையை உடைக்க வேண்டும். சாதி ஒழிப்பு என்ற கருத்து ஒரு நாளும் தலித் என்ற அடையாளத்தை தனித்துக் கட்டமைப்பதால் சாதிக்க முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இனியாவது தலித்துகளின் பிரச்சினைகளைப் பற்றி படம் எடுக்கும் இயக்குநர்கள் ஏற்கெனவே தலித்துகளை புரட்சிகர அரசியலில் இருந்து காயடிக்க முதலாளித்துவ, பார்ப்பன அடிவருடிகளால் முன்வைக்கப்பட்ட மொக்கையான தீர்வுகளை வைத்துப் படம் எடுக்காமல் மார்க்சியப் பார்வையில் சிந்தித்து படம் எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It