ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இமானுவேல் சேகரன் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தினம் செப்டம்பர் 11.

அதை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இமானுவேல் சேகரனை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடிக்கு நேரில் சென்று இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரிலோ அல்லது அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்தோ அவரை நினைவு கூர்ந்தனர். மேலும் அவரது வாழ்வை நினைவு கூர்ந்தனர்.

இம்மானுவேல் சேகரனாருக்கு எதிராக வேலை செய்தது முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலான மறவர் சாதி வெறியர்கள். அந்த வகையில் அமமுக கட்சித்தலைவர் டிடிவி தினகரன் இம்மானுவேல் சேகரனாரை புகழ்ந்தால் அவருக்கு கிடைக்கும் முக்குலத்தோர் ஓட்டுக்கள் குறைய வாய்ப்புண்டு. ஆனால் தினகரன் மிகச்சரியாக இம்மானுவேல் சேகரனாரின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.

ttv tweet"சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு பாடுபட்ட திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உழைத்த அவரது பணிகளை இந்நாளில் நினைவு கூர்வோம் - டிடிவி தினகரன்" .

தீண்டாமையை அகற்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உழைத்தவர் இம்மானுவேல் சேகரனார். அதை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே நினைவு கூர்ந்துள்ளார் தினகரன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இம்மானுவேல் சேகரனாரை மிகச்சரியாக நினைவு கூர்ந்துள்ளனர். கலைஞர் குடும்பத்தினரை ஒரு சாதிக்குள் அடைக்க முடியாது என்றாலும், மேற்சொன்ன தலைவர்கள் யாரும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. குறிப்பாகச் சொன்னால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இம்மானுவேல் சேகரனை கொன்ற முக்குலத்தோர் சமுகத்தை சேர்ந்தவர்கள். முக்குலத்தோர் சாதி ஓட்டுக்களை நம்பி அரசியல் செய்பவர்கள். இருப்பினும் இம்மானுவேல் சேகரனை அவரது உண்மையான பணிக்காக நினைவு கூர்ந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் ஓட்டுக்களைப் பெறவே இந்த நினைவு கூறல், மாலை மரியாதை என எடுத்துக்கொண்டாலும், இம்மானுவேல் சேகரனின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்டோர் சாதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய அமைச்சர் எல். முருகன் இம்மானுவேல் சேகரனாரை ராணுவ வீரராக மாற்ற முயல்கிறார். இது முழுப்பொய். 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இம்மானுவேல் சேகரனார் 18 வயது இளைஞராக பங்கேற்று இருந்தாலும், விடுதலைப் போராட்ட வீரர் என்பது அவரது அடையாளம் அல்ல.

ஏனெனில் அதன் பின்னர் (1945) ராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். அவர் சேர்ந்தது இந்திய ராணுவம் அல்ல. பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் சேருகிறார். இந்தியா 1947 இல் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்ற சில ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அதன்பிறகு சாதி ஒழிப்பு போராட்டதில் ஈடுபடுகிறார். அதனால் கொல்லப்படுகிறார். இம்மானுவேல் சேகரன் வாழ்வின் சாரம் "ஒடுக்கப்பட்டோர் விடுதலை, சாதித் தீண்டாமை ஒழிப்பு" அதற்காக தன் உயிரை இழந்தார்.

ஆனால் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட எல். முருகன் பேசவில்லை. விடுதலைப் போராட்ட வீரனாக சுருக்குகிறார். சரியாகச் சொன்னால் இம்மானுவேல் சேகரனாரை மொட்டையடித்து, மூவர்ண அலகு குத்தி, தேசபக்தி வண்டியில் ஏற்றுகிறார். நால்வர்ணத்தை எதிர்த்து வாழ்வை இழந்த இம்மானுவேல் சேகரனுக்கு மூவர்ணத்தை பூசுகிறது பாஜக.

lmurugan tweetஅது அவரது திட்டம் மட்டுமல்ல. பாஜகவின் திட்டமிட்ட சதி. இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை (Azadi Ka Amrit Mahotsav) ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுகிறோம் என்ற பெயரில் இம்மானுவேல் சேகரனாரை தேச பக்தி எனும் கட்டத்திற்கள் அடைக்க முயற்சித்தனர். அதன் தொடர்ச்சியே எல். முருகனின் இந்தப் பொய்.

தாழ்த்தப்பட்ட மக்களை தாழ்த்தப்பட்ட மக்களாகவே வைத்திருப்பதே பாஜகவின் நோக்கம். அதற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர்களின் வரலாற்றை திரிக்கும் வேலையில் பாஐக மும்முரமாக ஈடுபடுகிறது.

இந்துத்துவ அம்பேத்கர் என டாக்டர் அம்பேத்கரை அவமானப்படுத்தினர். நால்வர்ணத்திற்கு எதிரான அவருடைய வீரஞ்செறிந்த அறிவுப் போராட்டத்தை பின்னுக்கு தள்ளி, வரலாற்றை திரிக்கும் வேலையை செய்தனர்.

அதே வேலையை இம்மானுவேல் சேகரனாருக்கும் செய்கின்றனர். தேவேந்திரர் என்று நாமகரணத்தை சூட்டுகின்றனர். தேர்தலில் போட்டியிடவே இந்துவாக மாறினார் எனவும், முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக காங்கிரஸ் இம்மானுவேல் சேகரனாருக்கு கொம்பு சீவியதாகவும் வரலாற்றை மாற்றுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முத்துராமலிங்கத் தேவரை எதிர்க்க காங்கிரஸ்க்கு பயன்பட்ட கைக்கூலி. இது தான் இம்மானுவேல் சேகரன் பற்றிய பாஜகவின் பார்வை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எதுவும் செய்யாமல், தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் ஆதரித்தது பாஜக. அதை சட்டமாக்கி, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்த முனைந்தனர். தங்கராஜ் எனும் ஆர். எஸ். எஸ் நபர் துக்ளக் குருமூர்த்தி துணையுடன் ஒடுக்கப்பட்ட மக்களை பாஜகவுக்கு எழுதி வைக்க செய்த முயற்சி தான் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம். அதற்குத் துணையாக டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற பிழைப்பு வாதிகளையும் பயன்படுத்திக் கொண்டனர். பெயர் மாற்றத்தால் அம்மக்களின் மீது சுமத்தப்பட்டிக்கும் சாதித் தீண்டாமை நீங்கிவிட்டதா?

அம்மக்களை பாஜகவின் ஓட்டு வங்கியாக மாற்ற மோடி பயன்படுத்திய உத்தி “நான் நரேந்திரன் நீங்கள் தேவேந்திரன்” எனும் வெற்றுக்கோஷம். எனினும் நீயும் நானும் ஒன்னு என மேடையில் பகுமானமாக மோடி பேசினாலும், அந்த பம்மாத்து சட்டமன்றத் தேர்தல் வரை கூட நீடிக்கவில்லை. அந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளில் ஒன்றில் கூட தேவேந்திர குல வேட்பாளரை பாஜக நிறுத்தவில்லை. இருப்பினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேவேந்திர குல மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. பலர் பாஜக பக்கம் சாய்ந்திருக்கின்றனர். இனியும் பாஜக ஓட்டுப் பொறுக்கும் முயற்சியை தொடரும்.

சில உண்மைகளை கலந்து, பல பொய்களை உருவாக்கி மக்களை காயடிப்பது பாஜக - ஆர்எஸ்எஸின் நீண்டகால செய்முறை.

இம்மானுவேல் சேகரனுக்கு இந்த பார்முலாவை தற்போது பொறுத்துகின்றனர். இம்மானுவேல் சேகரன் நினைவு கூறப்பட வேண்டியது சாதி தீண்டாமை ஒழிப்பிற்காகவே. அவர் ஒடுக்கப்பட்டோர் சமூகத்தின் விடிவெள்ளி.

- சு.விஜயபாஸ்கர்

Pin It