அக்டோபர்

முரண்படும் உணர்வுகள்

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார்; உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு சம உரிமையை மறுக்கும் (தான் சார்ந்த) ஜாதித் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கிறார். அதேபோல, இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கான ஆதரவில் முன்னணியில் நிற்கும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஜாதி சங்கம் நடத்தும் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் வெட்கமின்றிப் பங்கேற்கிறார்; ஈழத்தமிழர்களுக்காகவும் கசிந்துருகுகிறார். பாட்டாளித் தமிழர்களுக்காக கட்சி நடத்தும் ராமதாஸ், நீதித் துறையில் வன்னியர்களுக்கு மட்டும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ, ஒரு முறையாவது சேரித் தமிழர்களுக்காக சிறை சென்றதுண்டா? சொந்த நாட்டுத் தமிழனிடம் ஜாதி வெறியோடு நடந்து கொள்கின்றவர்கள், அண்டை நாட்டுத் தமிழனிடம் மட்டும் மொழி உணர்வோடு நடந்து கொள்வதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

– தலையங்கம்

கற்றது ஜாதி

சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி வன்முறைச் செயலைக் கண்டு கவலைப்பட்ட அரசுக்கும், அதிர்ச்சியுற்ற பொது மக்களுக்கும், கண்டித்த சமூக அமைப்புகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை. சாதிக்கும் வன்முறைக்கும் எதிராக ஒரு நிலையான, வலுவான போராட்டத்தை எங்காவது யாராவது நடத்திக் கொண்டிருக்கிறார்களா? பொது மக்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி உணர்வை ஊட்டுவதில்லையா? சமூக அமைப்புகள் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமல்லாமல் சாதியை அழித்தொழிக்கவும், மக்களை சமத்துவமிக்கவர்களாக மாற்றவும்தங்கள் அன்றாட அட்டவணைகளில் ஏதாவது செயல் திட்டம் வைத்திருக்கிறார்களா? பிறகெப்படி இது மாதிரியான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும்?

– மீனாமயில்

வன்முறையின் வேர் எது?

ஜாதி அமைப்புகள் ஒருபோதும் மாமனிதர்களை உருவாக்க முடியாது. சமூகங்கள்தான் மனிதர்களை உருவாக்குகின்றன. மனிதர்களாக மட்டுமே எடுத்துக் கொண்டால், நல்லக்கண்ணுவை உருவாக்கியது அவரது சாதி அல்ல; கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் கே.ஆர். நாராயணனை உருவாக்கியது அவர் பிறந்த சமூகம். இக்கலவரத்தின் மூல காரணமாக நிலை கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சொல்வதானால், முத்துராமலிங்கத்தின் "குருபூஜை' கொண்டாட்டங்களே. எல்லா சாதிகளிலும் தனிப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள் உருவாகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதிஇந்துக்களின் குற்றங்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன.

– இளம்பரிதி 

டிசம்பர்

காலணியில் நசுங்கும் தொழிலாளர்கள்

நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு கவளம் சோற்றின் அரிசி மணிகளும் நெடுந்தூரம் பயணம் செய்து, நம் கைகளை அடைகின்றன. உணவுத்தட்டில் அவற்றைக் கொண்டு வந்து சேர்க்க எத்தனையோ பேர் உழைக்க வேண்டியுள்ளது. எல்லாமே கூட்டு உழைப்பு. நாம் உடுத்தும் வேட்டியை கூட்டு உழைப்பில் நெய்து முடிக்க இரண்டு நாட்களுக்கும் மேலாகும். ஒரு சேலையை நெய்யவோ பல பேர் பல நாட்கள் உழைக்க வேண்டும். ஒரு காலணியை செய்து முடித்திட இரண்டொரு நாள் ஆகும். அதை செய்வதற்குத் தேவையான தோல் பதப்படுத்தப்பட்டு வரவோ ஒரு மாதத்துக்கும் மேலாகிவிடும். மனிதனின் வாழ்க்கையில் இணுக்கு இணுக்காய் இப்படிப் பல்லாயிரம் மனிதர்களின் உழைப்பு ஊடுபாவாய் பின்னிப் பிணைந்திருக்கிறது. உழைப்பைப் பெற்றுக் கொள்ளும் மனிதர்கள் உழைப்பவர்களை ஒரு கண நேரமும் எண்ணிப் பார்ப்பதில்லை. முதலாளிகளும் அரசும் அதிகாரிகளும் உழைக்கின்றவர்களை உயிர்களாகவே மதிப்பதில்லை.

கடந்த இரு ஆண்டுகளாகத் தீவிரமடைவதும், ஒடுக்கப்படுவதுமாக காலணி தொழிலாளர் போராட்டங்கள் ஆம்பூரில் நடந்து வருகின்றன. இப்போராட்டங்களை நிறுத்துவதற்கு அரசு நிர்வாகம் இதுவரை எதையும் செய்யவில்லை. காவல் துறையோ முதலாளிகளின் கையாளாக நின்று தொழிலாளர்களை ஒடுக்கி வருகிறது. தமிழகத்தின் நந்தி கிராம் போலவும், சிங்கூர் போலவும் கருதத்தக்க இப்போராட்டங்கள், எந்தப் பத்திரிகைகளிலும் எழுதப்படவில்லை; எந்த தொலைக்காட்சிகளிலும் காட்டப்படவில்லை!

– அழகிய பெரியவன்

Pin It