இந்தியா (துணைக்கண்டம்) வெள்ளையர்களிடமிருந்து தனது அரசியல் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த போது, அரசியல் விடுதலையோடு சேர்த்து சமூக விடுதலையையும், மீட்டெடுக்க போராடிக் கொண்டிருந்தார் டாக்டர் அம்பேத்கர். இந்த சமூகத்திலிருந்து தீண்டாமையையும், உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்து மத மனுசாஸ்திரத்தின் பேதங்களையும், சாதி இழிவையும் துடைத்தெறிய வேண்டும் என உறுதியாக நின்றார். தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குமுறைகளிலிருந்து மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு மட்டுமான தலைவர் அல்ல. அவர் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான தலைவர்.

பார்ப்பன இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையே சமூக விடுதலைக்கான முக்கியமான அரசியல் வழியாக இருக்குமென வலியுறுத்தினார். வருண சமூக அமைப்பு முறைக்கு நேர் எதிரான நடைமுறையே இட ஒதுக்கீடு ஆகும். நவீன இந்தியாவில் குறைந்தபட்ச நல்வாழ்வை அடைவதற்கு இது உதவியது. இந்தியா விடுதலை அடைந்து 68 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.(காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே நம்மை ஆண்டு வருகின்றன). இன்னும் சாதியும் ஒழியவில்லை, சமூக நீதியும் முழுமையடையவில்லை. சாதியத் தாக்குதல்களும், சாதியக் கொலைகளும் தொடர்கதையாகி இருக்கின்றன.

பார்ப்பன இந்தியாவில் தலித்துகள் மீதான தாக்குதல்

ambedkar 402இந்தியா என்பது பார்ப்பனிய – பனியா கட்டமைப்பாகவே இருக்கிறது. அதன் ஆளும் வர்க்கம் என்பது தொடர்ச்சியாக சாதியினை பாதுகாக்கும் அமைப்பாக இருந்து வருகிறது. இந்தியாவை ஆண்ட மற்றும் ஆள்கின்ற கட்சிகளும் சாதிய மேலாதிக்கத்தினை வளர்க்கின்ற வேலையினையே செய்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் போன்றவை இதுவரை சாதிய மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வை எடுக்க முயற்சிக்காமல், சாதியப் படுகொலைகள் நிகழும் போது கள்ள மவுனத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

தேசியக் குற்றப் பதிவுத் துறைக் குறிப்புகளின்படி, இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் தலித் மக்கள் மீது, தலித் அல்லாதோரால் தாக்குதல்களாக 47,064 குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 128 தாக்குதல்கள் தலித் மக்கள் மீது நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் ஒரு தலித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். 2014 ஆம் ஆண்டில் மட்டும் 2388 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 1486 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2013 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் 19.4% அதிகரித்திருப்பதாக NCRB (National Crime Records Bureau) தெரிவிக்கிறது.

சாதிய வன்கொடுமைகள் தொடர்ச்சியாக சமூகத்தில் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒரு நாகரிகமடைந்த ஜனநாயக சமூகத்தில்தான் வாழ்கிறோமா என ஒரு கணம் எண்ணிப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். சாதியத் தாக்குதல்களின் மீதான நடவடிக்கைகள் தவிர்க்கப்படுவதோ அல்லது தாமதப்படுத்தப் படுவதோ தொடர்ந்து நடக்கிறது. இவற்றின் மீதான துரித நடவடிக்கைகளை எடுத்து, இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கம் விரும்புவதில்லை. சாதியைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதிய நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டத்தில் தலித் மக்களுக்கான குறைந்தபட்ச உரிமை. ஆனால் பெரும்பாலான தாக்குதல்களுக்கு இந்திய அதிகார வர்க்கம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதே இல்லை. சாதாரண IPC வழக்குகளின் கீழேயே சாதியத் தாக்குதல்கள் பதியப்படுகிறது. நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் கொளுத்தப்பட்டபோதும், கோகுல்ராஜ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட போதும், உடுமலைப்பேட்டை சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட போதும் சாதி ஆணவக் கொலைகள் என உறுதி செய்யப்பட்ட பின்பும் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவை பதியப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு பதிவான தலித்துகளுக்கு எதிரான 47,064 தாக்குதல்களில், 101 தாக்குதல்கள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக 465 தாக்குதல்களில் ஒரு தாக்குதல் மட்டுமே வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் விசமத்தனமான பிரச்சாரம் சாதிய சக்திகளால் நிகழ்த்தப்படுகிறது. தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக உருவாக்கப்பட்ட சட்டங்களையே இந்த பார்ப்பனிய அரசாங்கம் முறையாக அமல்படுத்தாமல் அநீதி இழைத்து வருகிறது. இந்நிலையில் இருக்கின்ற சட்டங்களையும் நீக்கக் கோரும் பிரச்சாரம் என்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். சாதிய நோக்கம் கொண்ட அனைத்து தாக்குதல்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக பயன்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும்.

சமூக நீதி காக்கப்பட வேண்டும்

பார்ப்பன இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையே சமூக விடுதலைக்கான முக்கியமான அரசியல் வழியாக இருக்குமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இந்து மத சட்ட நூலான மனுசாஸ்திரம் கற்பித்த நான்கு வர்ண அமைப்பு (பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் மற்றும் பஞ்சமன்) முறை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது இரண்டாயிரம் வருடங்களாக ஒடுக்குமுறையை செலுத்தி வந்தது. இந்த ஒடுக்குமுறையின் பாற்பட்டு கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை, பிறப்பால் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று வரையறுத்த மக்களுக்கு மறுத்து வந்தது. வருண சமூக அமைப்பு முறைக்கு நேர் எதிரான நடைமுறையே இட ஒதுக்கீடு ஆகும். நவீன இந்தியாவில் குறைந்தபட்ச நல்வாழ்வை அடைவதற்கு இது உதவியது. இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்க, மிகப் பெரும் போராட்டங்களுக்குப் பின் பெறப்பட்ட உரிமையே இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 3 சதவீத மக்கள் தொகையையே கொண்டிருந்த உயர்சாதி பார்ப்பன சமூகமே 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை ஆக்கிரமித்திருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உழைப்பாளர்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் அரசுத் துறைகளாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில், தலித் மக்கள் ஓரளவிற்கேனும் இடம் பெற முடிந்தது. இன்னும் கூட இடஒதுக்கீடு முறை பல இடங்களில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுத் தரவுகளின்படி, 71.3 சதவீதம் தலித் மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பினை துவங்குவதே இல்லை. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி, 2.24 சதவீதம் தலித் மாணவர்களே பட்டதாரிகள்.

புதிய பொருளாதாரக் கொள்கையும், சமூக நீதியும்

1990 ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, அரசு நிறுவனங்கள் தனியார்மயப் படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாதியம் நவீன வடிவம் பெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ் அரசுகள் இதை திட்டமிட்டு செய்து வருகின்றன. அரசுத் துறைகள் தனியார்மயப் படுத்தப்பட்டவுடன், தனியார் முதலாளிகளால் அவற்றில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட உயர்சாதியினர் மட்டுமே தொடர்ந்து அவற்றின் உயர் அதிகாரிகளாக நீடிக்கும் நிலை இருக்கிறது. உதாரணத்திற்கு இட ஒதுக்கீடு இல்லாத தனியார் பெருமுதலாளி ஊடகங்களின் சமூக விவரங்களை எடுத்துக் கொண்டால், தில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் 37 இந்தி மற்றும் ஆங்கில ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளிலுள்ள 315 பேரில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள். அவற்றில் ஒரு தலித் கூட இல்லை. அரச சார்பற்று சுயமாக இயங்கி, அரசின் குற்றங்களை கேள்வியெழுப்ப வேண்டிய ஊடகங்களிலேயே சமூக நீதியின் நிலை இதுதான்.

ரயில்வே துறை, வங்கித் துறை, தபால் துறை, ஆசிரியர் துறை மற்றும் இந்தியாவின் நவரத்னா என்று சொல்லக் கூடிய துறைகள் தனியார்மயமாக்கப்படுவதால், தலித்துகளுக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்படும் வாய்ப்புகளே உள்ளன. தனியார்மயம் ஒடுக்குதலிலிருந்து விடுதலை அளிக்காது. அரசுடமையே சமூக நீதிக்கும், விடுதலைக்கும் உறுதி அளிக்கும். புதிய பொருளாதாரக் கொள்கை தலித் மக்களை வேலைவாய்ப்பிலிருந்து பிரித்து சமூக நீக்கம் செய்கின்ற சதியாக இருக்கும். தனியார்மயம் தலித்துகளை மேலும் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கும். வர்ணாசிரமக் கொள்கையை உறுதி செய்யும்.

குறிப்பாக தலித்துகள் நிலமற்றவர்களாகவும், தொழிலற்றவர்களாகவும், சிறு வியாபாரத்திலும் கூட இல்லாதவர்களாகவும் இந்த துணைக்கண்டம் முழுமைக்கும் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்விற்கான வாய்ப்பாக கூலி விவசாயம், கல்வி கற்று வேலைவாய்ப்பில் ஈடுபட்டு முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகள் மட்டுமே உள்ளன. இவைதான் தனியார்மயத்தால் முடக்கப்படுகிறது.

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடூர முறை

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என தற்புகழ்ச்சி கொள்ளும் இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. சட்டப்படி இது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்டம் நடைமுறைப்படுத்தப் படாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவில் 13 இலட்சம் தலித்துகள் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வயிற்றை நிரப்பும் நிலையில் உள்ளனர். மனிதத் துப்புரவாளர்களை பெருமளவு பணியில் அமர்த்தும் ஒன்றாக இந்தியத் தொடர்வண்டித் துறை இருக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கூட ஏதுமின்றி, வெறுங்கையால் சுத்தம் செய்ய வைக்கிற காட்டுமிராண்டித்தனத்தினை இந்த அரசு செய்கிறது. நியூட்ரினோ ஆய்வகம், கூடங்குளம் அணு உலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடிகளை செலவிடும் இந்திய பார்ப்பனிய அரசு, நவீன இயந்திரங்களைக் கொண்டு மனித துப்புரவு முறையினை முடிவுக்கு கொண்டு வர எந்த செலவையும் மேற்கொள்வதில்லை. 5000 கிமீ க்கு தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்க முடிந்த பார்ப்பன இந்திய அரசால், 68 ஆண்டுகளாக இந்த மனிதகுல விரோத அவலத்தை காங்கிரஸ், பாஜக இரண்டு அரசுகளாலும் ஒழிக்க முடியவில்லை. அதற்கான குறுகிய கால அல்லது நீண்ட காலத் திட்டம் எதையும் இந்திய அரசு செயல்படுத்துவதில்லை.

உயர் கல்வி நிறுவன்ங்களில் தலித் மாணவர்கள் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுதல்

பார்ப்பன இந்தியாவின் ஆணவப் போக்கின் காரணமாக, உயர் கல்வி நிறுவன்ங்களில் பயிலச் செல்கிற தலித் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருப்போரும், பேராசிரியர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், பிற உயர்சாதியினராகவுமே இருப்பதால் தலித் மாணவர் பல இடங்களில் அவமானத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தற்கொலைகள் வரை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 9 மாணவர்கள் சாதி அரசியலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் ஹைத்ராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட விடயம் நாட்டையே உலுக்கியது.

சமூக நீதி தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கரின் பெயரினை உச்சரிப்பதையே தேச விரோதமாக சித்தரிக்க முயல்கிறது இந்திய பார்ப்பனிய அரசு. IIT என்கிற இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஒரு நவீன அக்ரகாரத்தைப் போன்றே செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற பெயரில் இயங்கிய மாணவர் அமைப்பினை தடை செய்து தனது உயர்சாதித் திமிரினை இந்த பார்ப்பனிய அரசு நிறுவியது. அதை எதிர்த்த போராட்டம் இந்தியா முழுதும் எழுந்ததால், தற்போது பாஜக அரசு அம்பேத்கருக்கு விழா எடுப்பதாக நம்மை ஏமாற்றுகிறது. அம்பேத்கர் இறுதிவரை பார்ப்பனிய மனுசாஸ்திரத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்தார். ஆனால் இன்று பார்ப்பனியம் அம்பேத்கர் பெயரையே பயன்படுத்தி நம்மை ஏமாற்ற நினைக்கிறது. மனுசாஸ்திரத்தின் நான்கு வர்ணக் கோட்பாட்டை நிலைநாட்டுவதில் பாஜக வுக்கோ, காங்கிரசுக்கோ எந்த வேறுபாடும் இல்லை.

தொடரும் ஆணவக் கொலைகள்

இந்தியத் துணைக்கண்டம் முழுவதும், குறிப்பாக தமிழகத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காகவோ, சாதிமாறி காதல் செய்வதற்காகாவோ ஒரு பெண்ணையும், ஆணையும் கொலை செய்வது தொடர்கதையாக மாறியிருக்கிறது. இதற்கு கவுரவக் கொலை என்று பெயர் வைத்து, தனது சாதி கவுரவத்தை காப்பாற்றிவிட்டதாக மீசை முறுக்கிக் கொள்கிறது ஆதிக்க சமூகம். இவை உண்மையில் கவுரவக் கொலைகள் அல்ல. சாதி வெறி ஆணவக் கொலைகள். இத்தகைய சாதிவெறி ஆணவக் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என்று இந்தக் கொலைகள் விசக் கிருமிகளைப் போன்று சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. வயது வந்த ஆணோ, பெண்ணோ தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தாங்களேதேர்வு செய்து கொள்வது அவர்களின் உரிமை. இதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது.

21ஆம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் இத்தகைய சாதியக் கொலைகளையும்,வன்கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது அவமானப்பட வேண்டிய ஒன்று. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதானஇத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக ஜனநாயகத்தை நேசிக்கிற அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

தமிழகத்தை ஆள்கின்ற, ஆண்ட கட்சிகளும் சாதி வெறி ஆணப் படுகொலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன.

சாதி வெறி ஆணவக் கொலைகள் என்பவை காண்டுமிராண்டித்தனம். இந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோர் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதுடன், பின்வரும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

சாதி வெறி படுகொலைகளை தடுத்திட தனிச் சட்டம் இயற்றிட வேண்டும். ஆணவப்படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திட வேண்டும்.அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்திட வேண்டும். அவர்களின் குடும்பத்தார்க்கு அரசு வேலைகளிலிருந்து நீக்கம் போன்ற கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்வோரை அந்த தாலுக்காவின் உயரதிகாரிகள் பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும். அந்த தாலுக்காவின் சமூக நீதி இயக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தி மேலும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு இட ஒதுக்கீட்டில் சிறப்பு சலுகை அளித்து, அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். தலித் அல்லாத பிற சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும்.

அம்பேத்கரை நினைவிலேந்துவோம், உறுதியேற்போம்

சாதி சுரண்டலை ஒழிக்காது.

சாதி ஒழிப்பே சுரண்டலை ஒழிக்கும்.

சாதி வல்லாதிக்கத்தை ஒழிக்காது.

சாதி ஒழிப்பே வல்லாதிக்கத்தை ஒழிக்கும்.

சாதி தனியார்மயத்தை ஒழிக்காது.

சாதி ஒழிப்பே தனியார்மயத்தை ஒழிக்கும்.

சாதி முதலாளியத்தை எதிர்க்காது.

சாதி ஒழிப்பே முதலாளியத்தையும் எதிர்க்கும்.

சாதி மண்ணுரிமை காக்காது.

சாதி ஒழிப்பே மண்ணுரிமையும் காக்கும்.

சாதி தமிழரை ஒன்று சேர்க்காது.

சாதி ஒழிப்பே தமிழரை ஒன்று சேர்க்கும்.

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும். அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி ஒழிந்த சமநிலைசமூகம் அமைந்திட களம் அமைப்போம். அனைவரும் வாருங்கள்.

நாள்: ஏப்ரல் 14, 2016 வியாழன் மாலை 5 மணி

இடம்: சாத்தங்காடு சாலை, திருவொற்றியூர் , சென்னை

- மே பதினேழு இயக்கம்

Pin It