நிலங்கள் உன்னுடையது
அதில் விளையும் எல்லா
வளங்களும் என்னுடையது

எல்லா நலன்களும்
நானே தீர்மானிப்பேன்
பயிரை அறுவடை
செய்ய முடியாத போது
உங்கள் உயிரையும்
அறுவடை செய்யும்
உரிமை என்னுடையது

விளைந்ததை எல்லாம்
பதுக்கி வைப்பதும்
கேள்வி கேட்டால்
உன்னை ஒதுக்கி வைப்பதும்
என்னுடைய அதிகார
எல்லைக்கு உட்பட்டது

என் காலணியின்
நூல் அவிழ்ந்தால் கூட
அவசர அவசரமாக முடிச்சுப்போடும்
என் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்
உங்கள் ஆட்சியாளர்கள்

உங்கள் முகத்துக்கு
முன்னால் தோன்றும்
அதிபர்கள் யாவரும்

என் கொல்லைப்புறத்தில்
இருந்து உருவாக்கப்பட்ட
கொலுபொம்மைகள்

உங்கள் தலையெழுத்தை
எழுதியதாக
நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும்
பிரம்மனை
உருவாக்கிய
அசல் பிரம்மாக்கள்
நாங்கள்

அச்சடிக்கப்பட்ட
பணத்தில்
காந்தி சிரிக்கலாம்

அன்றாட வாழ்வில்
யார் சிரிப்பது?
என்பதை தீர்மானிக்கும்
அரசு எந்திரத்தின்
எஜமானர்கள் நாங்கள்

உங்கள் நிலத்திற்கு மேலே
நீங்கள் வாழ்வதையும்
நிலத்திற்கு அடியில்
நீங்கள் வீழ்வதையும்
முடிவு செய்ய வேண்டிய அதிகாரம்
எங்களைச் சார்ந்தது

காற்றில் பறக்கும் பட்டம்
எவ்வளவு உயரம்
பறக்க வேண்டும்
என்பதை தீர்மானிக்கும்
நூல் இழைகளை
அறுத்திட நீங்கள்
துணியாத வரைக்கும்

உங்கள் ஒப்பாரி
ஓலங்களுக்கு
ஓய்வே இல்லை

உங்கள் குரல்வளையை
குறிபார்த்து சுடும்
துப்பாக்கித் தோட்டாக்கள்
எங்கள் விரல்களில்
இருந்த போதும்

அஞ்சாமல்
ஒன்றுசேரும்
உங்கள் போராட்டங்களின் கூக்குரல்
விண் அதிரும் வேளைவரை

சாதி மதவெறியூட்டி
சந்தனம் பூசிநிற்கும்
லாபவெறி வீதிகளில்
எங்கள் தேரோட்டம் தொடரும்

பெருநிறுவனங்கள் வளர்க்கும்
பேராசைக்காரர்களின் காலடியில்
வீழ்ந்து கதறும்
மானுடத்தின் உயிரோசை
மரிக்காமல் காப்பாற்ற
கடவுள் வரமாட்டார்

கையறு
நிலைகொண்டோர்
கைகோர்த்து ஒன்று சேரும்
வியர்வையின் ஊர்வலங்கள்
வென்றிட ஒன்றிணைந்தால்
உலகம் மாறக்கூடும்

- அமீர் அப்பாஸ்

Pin It