புகழ்மிக்க ஒருவனின்
இரகசிய கண்ணீரை
வசீகர புன்னகையை
ஒளிந்திருந்தும்
தொலைவில் இருந்தும்
ஒளிப்படம் எடுக்கிறான்
புகைப்படக்காரன்

ஒருவனின்
அந்தரங்க வாழ்வில்
அத்துமீறி நுழைந்து
கள்ளச்சாவிப் போட்டு
திறந்து விடுகின்றான்
செய்தியாளன்

வெளிச்சம் பூசிய முகத்தில்
தோற்றம் அளிக்கும்
ஒருவனின் இருண்ட வாழ்வை
விற்பனைக்காக வீசி எறிகின்றான்
வணிக வீதிகளில்

தனிமையில்
வெறுமையில்
நோய்மையில்
தவித்துக் கிடப்பவனின்
துயரத்தைப் படம் பிடிப்பவன்

சிசுக்கொலை செய்கின்ற
கருக்கலைப்பு மருத்துவரின்
கொலைக்கரங்களைக்
கொண்டிருக்கிறான்

ஒருவனின்
நிர்வாணத்தையும்
மரணத்தையும்
விற்பதற்கு துணிந்து விட்ட
ஊடகவியலாளன்

போர்க்களத்தில் வீழும்
பிணங்களுக்காகக்
காத்திருக்கும் கழுகாக
உருமாறி விடுகின்றான்

பகிரப்படாத பக்கங்களுக்காக
ஒருவனின் தனித்த வாழ்வை
சூறையாடி கழுவில்
ஏற்றி விடுகிறார்கள்
கண்ணீர் வியாபாரிகள்

புகழ்மிக்க ஒருவனின்
குருதிப்பெருக்கில்
குதூகலம் அடைவதும்

சிதைந்த ஒருவனின்
தேகத்தை
சிலுவையில் அறைவதும்

காயங்களை எல்லாம்
லாபங்களாக மாற்றும்
வித்தைக்கு
வெற்றியின் இரகசியங்களாக
விளம்பரப் படுத்தப்படுகின்றன

- அமீர் அப்பாஸ்