kavijar sirpi“ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மாதிரியில் இலக்கியத்தை ஒன்றாகக் கூற முடியாது. ஒவ்வொரு தேசிய மொழி இலக்கியத்துக்கும் தனித்தனிப் பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. நாகாலாந்து இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் தனிப் பண்புகள் கொண்டதாகத்தான் பார்க்க வேண்டும். இல்லையெனில் ஒற்றைப் பண்பாட்டு மயக்கத்தில் அடையாளம் இழப்போம்.”

ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். அந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்விச் சூழல் எப்படி இருந்தது?

அந்தக்காலத்தில் (1936-45) எங்கள் கிராமத்தில் முறையான பள்ளிக்கூடங்கள் இல்லை. எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆசிரியரை அய்யர் என்று அழைப்பது கிராமத்து வழக்கம். மலையாளத்து அய்யர் பள்ளிக்கூடம் ஒன்று; முதலியார் அய்யர் பள்ளிக்கூடம் மற்றொன்று, இரண்டிலும் தமிழ் எழுதப் பழக்குவதும் நிகண்டு, புராணங்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதும் தான் படிப்பு.

மதிய உணவுக்கும் பள்ளி முடிவதற்கும் இடையில் ஒரு இடைவேளை விடப்படும். அதற்கு இடைப்பாலை என்று பெயர். மற்றொரு வழக்கம் ஒவ்வொரு பள்ளி மாணவரும் ஆசிரியர் வீட்டுக்கு ஒரு விறகு கொண்டு வர வேண்டும். அதற்குப் படிவிறகு என்று பெயர். காலையில் முதலில் வருகிற பையன் பின்னால் வருகிறவர்கள் பெயரை வரிசையாக எழுதி வைக்க வேண்டும்.

அந்த வரிசைப்படி 1, 2 என்று ஆசிரியர் பிரம்படி கொடுப்பார். அதற்கு ஏதானடி என்று பெயர். மிகவும் குறும்பு செய்கிற மாணவர்களின் கைகளைக் கட்டி விட்டத்தில் தொங்கவிட்டு, நேர் கீழே நெருப்புப் போட்டு விடுவார்கள். அதற்குக் கோசாணம் என்று பெயர். பள்ளிக்கு மட்டம் போடுகிறவனின் ஒரு காலில் சங்கிலி போட்டுக் கனமான மரக்கட்டையை இணைத்து விடுவார்கள்.

எங்கே போனாலும் கட்டையைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். எய்டெட் எலிமெண்டரி ஸ்கூல் என்று ஒரு பள்ளி பின்னால் வந்தது. மாரிமுத்து பிள்ளை அதன் நிறுவகர். அவரே வீதியில் திரிந்த என்னைப் பள்ளியில் உட்கார வைத்து எழுத்து அட்டை, சிலேட்டு, பை ஆகியவற்றையும் வாங்கிக் கொடுத்தவர். பெற்றோர் பள்ளியில் சேர்க்கவில்லை, பிள்ளை அவர்களே என் கல்விக் கற்பகம்.

தமிழகக் கிராமத்து வாழ்க்கையில் இருந்து கிளம்பி, நீங்கள் கேரளாவில் பள்ளிப் படிப்புப் படிக்கப் போனது ஏன்?

கிராமத்துப் பள்ளியிலிருந்து நான் நேரடியாகக் கேரளம் செல்லவில்லை. பொள்ளாச்சி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ‘ஐந்தும் எட்டும் அறியாத’ என்னைச் செல்வாக்கு மிக்கவர் ஒருவர் ஐந்தாம் வகுப்பில் கொண்டு போய்ச் சேர்த்தார். கிராமத்திலிருந்து சென்ற எனக்குப் பள்ளிக் கல்வி சற்றும் பிடிக்கவில்லை. அதனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் உறவினர் வீட்டுக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டேன்.

பொள்ளாச்சியில் இரண்டாவது திரைப்படக் காட்சி முடிந்து, இரவில் கேரளம் செல்லும் பார வண்டிகளின் பின்னால் நடந்து உறவினர் ஊரை அடைந்தேன். இரண்டாவது சினிமா காட்சி பார்த்துச் சென்றதால் பல ஆண்டுகள் எங்கள் கிராமத்தில் என்னை, ‘ரெண்டாவது ஆட்டக்காரர் வருகிறார்’ என்று கேலி செய்ததுண்டு.

என்னை என்ன செய்வதென்று தவித்த என் அப்பாவிடம் எங்கள் கிராமத்துப் பெட்டிக் கடைக்காரர் கண்ணுச்சாமி, கேரளத்தில் கண்டிப்பான ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். படிக்காதவர்களையும் படிக்க வைப்பார் என்று சொல்ல, அங்கே (நல்லேப்பிள்ளி) சாமியப்ப பிள்ளை என்ற தமிழாசிரியரிடம் என்னை ஒப்படைத்தார்கள்.

அவருடைய வீட்டில் தங்கி, தத்தமங்கலம் என்ற ஊரில் அவர் பிரம்புக்குப் பயந்து பள்ளியிறுதி வகுப்பு வரை படித்து முடித்தேன். அது தமிழ்நாட்டுக்கு அருகில் இருந்ததால் தமிழும் மலையாளமும் கலந்த சூழலில் என் கல்வி நிகழ்ந்தது. ஒன்றைச் சொல்ல வேண்டும் பள்ளியில் நான் ஒரு சராசரி மாணவன். தேர்ச்சி பெறுகிற அளவு மதிப்பெண்களையே பெற்று வந்தவன். முதல் தர மாணவனாக நான் இருந்தில்லை.

இலக்கியத் தொடர்பு என்பது பெரும்பாலும் பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பில் இருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் இலக்கியத்துடன் அறிமுகமான சூழல் பற்றி...

தத்தமங்கலம் பொது நூலகத்திலும் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். மலையாளப் பகுதியென்பதால் தமிழ்ப் பத்திரிகைகள் கிடைப்பது அரிது. தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ இதழுக்குச் சந்தா கட்டி அதை வாங்கிப் படித்தேன். பொள்ளாச்சி செல்ல நேர்ந்தால் ‘அணில்’ பத்திரிகை தவறாமல் வாங்குவேன். தமிழ்வாணனின் சிறு நாவல்களான அல்வாத் துண்டு, சுட்டுத் தள்ளு நூல்களைப் படித்திருக்கிறேன்.

இவைதவிர அங்கு வசித்த தமிழ்ப் பிராமணர்கள் வீட்டில் தமிழ் நாவல்கள் படிப்பார்கள். கெஞ்சிக் கூத்தாடி என் வகுப்புப் பிராமணப் பையன்கள் மூலம் அவற்றை இரவல் வாங்கிப் படித்தேன்.

விலைக்கு வாங்கிப் படிக்கிற அளவு என் பொருளாதாரம் இடம் தரவில்லை. இரவலாகப் படித்த நூல்களில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு. கோதைநாயகி அம்மையார் எழுதிய சாகசக் கதைகளை மட்டுமே அந்த வயதில் படிக்க முடிந்தது.

உங்களுடைய கிராமத்தில் அல்லது குடும்பத்தில் இலக்கிய ஆர்வலர் யாரும் இருந்தனரா?

எங்கள் குடும்பத்தில் இலக்கிய ஆர்வலர்கள் என்று என் முன்னோர்கள் எவரும் இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. என் அப்பாவின் சிறிய தாயாரையும், தாய்மாமாவையும் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் உழைப்பு மிக்க உழவுத் தொழில் வல்லவர்களே தவிர கையப்பம் இடவும் அறியாதவர்கள். என் தந்தையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவர். நாடகம் நடத்த மதுரை, கரூர், சென்னையிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து நாடகம் போடுவார். கலைஞர்களை மிகவும் ஆதரிப்பவர்.

என் சிற்றப்பா (என்னைத் தத்தெடுத்த தந்தை) வில்லிபாரதத்தை அருமையாகப் பாடுவார். என் ஒன்றுவிட்ட பெரியப்பா கடும் வைணவ சமய மரபை ஏற்றுக்கொண்டவர். ஆழ்வார் பரசுரங்களில் ஆழங்கால் பட்டவர். எம் பெருமானார் தரிசன சபை என்ற அமைப்பை நெடுநாள் நடத்தியவர்.

என் தாய்மாமா உடுமலை முத்துச்சாமி கவிராயர் எழுதிய இராம நாடகத்தைப் படித்து நடிக்க வல்லவர். இராமனாக வேடமிட்டவர். (கவிராயர்தான் உடுமலை நாராயண கவியின் குரு). இவர்களிடம் இருந்த இசை நாடக மரபுகளும், பக்திப் பாடல் ஈடுபாடும் சின்ன வயதில் நான் பார்த்து அனுபவித்தவை. மற்றபடி அப்பாவுக்குக் கையெழுத்துப் போட வரும். அம்மாவுக்குக் கல்வி அறவே இல்லை.

தமிழிலக்கியக் கல்வியின் மீது எப்படி ஈடுபாடு ஏற்பட்டது? கல்லூரி மாணவனாக இருக்கும்போது, யாருடைய படைப்புகள் உங்களை வசீகரித்தன?

கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படிக்க திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சேர்ந்தேன். என் ஆசிரியராகத் திகழ்ந்த இறையருட் கவிமணி அப்துல் கபூர்தான் தமிழ் இலக்கிய ஆர்வத்தை நெருப்பாய் எனக்குள் மூட்டியவர். தமிழின் பழமையும் பெருமையும் தெரியாத கொடு மலையாளக் குடியிருப்பில் இருந்த எனக்குத் தமிழ் இலக்கியத்தின் விசுவரூபத்தைக் காட்டியவர் அவரே.

அப்போது தெ.பொ.மீ., ம.பொ.சி, பேராசிரியர் க.அன்பழகன், கலைஞர் உரைகளைக் கேட்டு லயித்துப் போயிருக்கிறேன். என்னை முற்ற முழுக்கக் கவர்ந்திழுத்துத் தன்னுள் ஈர்த்துக்கொண்டு வாழ்நாள் முழுவதையும் தன்னுடையதாக்கிக் கொண்டவர் பாரதியார். இதே காலகட்டத்தில் வாழும் கவிஞராய் விளங்கிய பாரதிதாசனின் பாடற் கலையிலும் நான் வசப்பட்டேன்.

என் கல்லூரியின் தொடக்க நாட்களில் அண்ணாவைக் குறித்துப் பெரிய வியப்பு இருந்தது. திருச்சி திராவிடப் பண்ணையிலிருந்து கம்பரசம், ரோமாபுரி ராணிகள், பணத் தோட்டம் முதலிய நூல்களை ஆர்வத்துடன் படிக்கிறவனாகவும் இருந்தேன். தாய்மொழி தமிழை அறியாத என் போன்ற பாமரனுக்குக் கற்றுக் கொடுக்கிற பள்ளிக்கூடமாக அந்நூல்கள் விளங்கின.

பாலசுப்ரமணியம் எப்பொழுது சிற்பியாக மாறினார்?

கண்ணதாசனின் தென்றல் நான் தவறாமல் படித்த இதழ். புதிதாக யாப்புக் கற்றுக்கொண்ட நான் அவ்விதழ் நடத்திய வெண்பாப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

ஒரே ஈற்றடிக்குப் பல வெண்பாக்கள் அனுப்ப வேண்டிய சூழலில் சிலவற்றைக் கொங்கு நாடன், செந்தாமரை, சிற்பி, ஆ.பொ.பாலன் என்று பல புனைபெயர்களில் அனுப்பிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு கவிஞனாகும் ஆசை ஏதும் இருக்கவில்லை.

நண்பர்கள் வற்புறுத்தலால் மணிவாசகர் பதிப்பக நண்பர் மெய்யப்பன் ஈடுபாட்டால் ஒரு தொகுதி வெளியிடலாம் என்று முடிவு செய்தபோது புனைபெயர் ஒன்று வேண்டுமே என்று தேடினேன். அன்று பெரிய கவிஞர்களெல்லாம் புனைபெயர் பூண்டிருந்தார்கள்.

பாரதிதாசன், கம்பதாசன், கண்ணதாசன் எனப் பலர். எனவே வெண்பாப் போட்டிகளில் பயன்படுத்திய பெயர்களில் ஒன்றான ‘சிற்பி’ என் புனை பெயராயிற்று. அந்தப் பெயரை நான் தெரிவு செய்ததற்குக் கவிதைச் சிற்பம் போல் செதுக்கப்பட வேண்டும் என்ற காரணமும் இருந்தது. அது 1963 ஆம் ஆண்டு.

பொதுவாகப் பேராசிரியர்கள் பாடம் நடத்துவது, ஆய்வு எனத் தங்களுடைய செயற்பாடுகளை வரையறுத்து ஒதுங்கிடும் சூழலில், நீங்கள் கவிஞராகப் பரிணமித்த சூழல் பற்றி...

பாரதி, பாரதிதாசன் தவிர, சென்ற நூற்றாண்டில் நான் நேசித்த கவிஞர்கள் பலர் இருந்தார்கள். பெ.தூரன், தமிழ்ஒளி, ச.து.சு.யோகியார், திருலோக சீதாராம், சோமு, அசீரா (நாணல்), மு. அண்ணாமலை, சாமி பழனியப்பன், நாரா நாச்சியப்பன் என்ற பெருங்கூட்டம் ஒன்றிருந்தது.

இவர்களில் சிலர் lilting lyrics என்று கூறத்தக்க எளிய இனிய தன்னுணர்ச்சிப் பாடல்களைப் புனைவியல் நயத்தோடு தந்து கொண்டிருந்தார்கள். அவற்றின் அழகு மயக்கத்தில் நானும் கவிதைகளை எழுதத் தொடங்கினேன்.

பாரதிதாசன் என் முதல் கவிதை நூலை மிகவும் மெச்சி எழுதியபோது நான் கவிதையை என் களமாகக் கருதினேன். ‘நாவூறிப் போனேன் நான்’ என்று அவர் எழுதியது எனக்கு அந்த உலகத்தில் நுழையக் கிடைத்த அனுமதியாக எண்ணினேன்.

பேராசிரியப் பணியை நான் மிகவும் நேசித்தேன். அதனால் என் ஆற்றல் முழுவதையும் அப்பணிக்கு அர்ப்பணித்தேன். ஆய்வு என்பது என் ஆசிரியப்பணித் தொடக்க நாட்களில் கல்லூரிகளில் இருந்ததே இல்லை. ஆய்வு, முனைவர் பட்டம் என்பதெல்லாம் எழுபதுகளின் பின்னரே கல்லூரிகளில் அடியெடுத்து வைத்தன. அதற்குள் என் மூன்று தொகுதிகள் வெளிவந்துவிட்டன.

பல்கலைக்கழகங்களுக்கே ஆய்வு உரியது என்று கல்லூரிகளில் நாங்கள் கருதியிருந்த நாட்கள் அவை. எனவே கவிதை எழுதவும் படிக்கவுமான காலம் நிறைய இருந்தது. அடுத்த கட்டமாகப் புதுக்கவிதை யுகம் வந்தது. மெல்லமெல்ல எழுத்து இதழின் செல்வாக்குப் படித்தவர்களிடையே பரவிய போது நான் அதில் ஈர்ப்படைந்தேன்.

சி.சு. செல்லப்பா என் வீட்டில் தங்கி நூல்களை விற்பனை செய்யவும் உதவினேன். ஆனால் நான் அதில் எழுதவில்லை. ஆனால் க.நா.சு. வின் இலக்கிய வட்டத்தில் என் கவிதை வெளிவந்தது.

உங்கள் முதல் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வாங்குவதற்காக பாரதிதாசனைச் சந்தித்த தங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

என் முதல் நூலான நிலவுப் பூ வெளிவந்த ஆண்டு 1963. அப்போது என் ஆதர்சக் கவிஞராகப் பாரதிதாசன் இருந்தார். பாரதியை அறிந்தவர் என்பதே அவரிடம் நான் பேரன்பு பூணக் காரணமாயிற்று. எனவே அவர் என் நூலுக்கு வாழ்த்துரை நல்கினால் பெருமையாக இருக்குமே என்று ஆசைப்பட்டேன். காரைக்குடி இலக்கியப் பதிப்பகம் சோமையா நலிந்துபோய்ச் சென்னையில் வாழ்ந்திருந்தார்.

பதிப்புத் துறையில் அரும்பணி செய்த அருமையான மனிதர். அவரும், நானும், மணிவாசகர் மெய்யப்பனும் நூலின் அச்சுப் பக்கங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தி.நகர், ராமன் தெருவில் குடியிருந்த பாரதிதாசனைப் பார்க்கப் போனோம். அன்று அவர் சிங்கமாக இருந்தார். யாப்புக் கலையில் பெரிய வல்லமை இல்லாத நான் நடுங்கிய நடுக்கம் எனக்கு மட்டுமே தெரியும்.

கட்டிலில் அமர்ந்திருந்த கவிஞரை அணுக அருமை நண்பர் பொன்னடியான் பேருதவி புரிந்தார். பக்கத்தில் போனதும் என்னை நான் அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய இல்லத்தில் உதவியாளராக முன்பு இருந்தவரும்,

அண்ணாமலையில் எனக்கு ஆசிரியராக இருந்தவருமான பேராசிரியர் மு. அண்ணாமலையின் மாணவன் நான் என்று தட்டுத் தடுமாறிச் சொன்னேன்.

புரட்சிக் கவிஞரின் கண்கள் மலர்ந்தன. என்னை அருகில் வரும்படி அழைத்தார். ‘அப்படியானால் நீ என் பேரன்’, என்று சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டார். அவர் எழுதியதுண்டு ‘எதிர்பாராத முத்தம்’; எனக்கு அன்று அவர் தந்ததும் ‘எதிர்பாராத முத்தம்’. பின்னர், இரண்டு எண்சீர் விருத்தங்களை அணிந்துரையாக நல்கினார்.

‘நாட்டுத் திறம் என்னே நாற்கவியும் முத்தமிழும்
நல்கும் பயன் என்னே நாவூறிப் போனேன் நான்‘

என்பது அப்பாடலின் அடி. எனக்கு அவர் எழுதிய அணிந்துரைக்கு நிகராக அவர் வேறு யாருக்கும் எழுதித் தரவில்லை.

ஜமால் முகம்மது கல்லூரியில் புதுமுகப்படிப்பு அனுபவங்கள்...?

எளிய மதிப்பெண்கள் பெற்றிருந்த எனக்கு ஜமால் முகமது கல்லூரி மருத்துவக் கல்லூரி செல்வதற்குரிய அறிவியல் பிரிவை நல்கி வாழ்வளித்தது. 1951 ஆம் ஆண்டில் கல்லூரி தொடங்கியது. அதன் முதல் அணி மாணவன் நான். அப்போது கல்லூரியில் வசதிகள் குறைவு.

நல்ல மாணவர் விடுதி இல்லை. ஆனால் தங்கமான முதல்வர் முகமது சயீது மாணவர்களை அரவணைத்து வளர்த்தார். அங்கேதான் என்னைத் தமிழ் இலக்கியம் நோக்கித் திசை திருப்பிய செஞ்சொல் வித்தகர் அப்துல் கபூர், மந்திரவாதி போல் தமிழால் என்னை மயக்கினார்.

ஆங்கிலத் துறையில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் கற்பித்த சி.எஸ். கமலபதி இருந்தார். அவருடைய உடல் மொழி இன்னும் என் மனதில் தங்கியிருக்கிறது. எனக்கு இயற்கை அறிவியல் கற்பித்த ஹரிராவ், இயற்பியல் கற்பித்த எஸ்.என்.தேவநாதன் இவர்களெல்லாம் இன்னும் எனக்குள் வழிபாட்டுக்குரியவர்கள்.

கேரளத்தில் இறுக்கமான கட்டுப்பாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற நான் திருச்சியில் முழு சுதந்தரத்தை அனுபவித்தேன். வகுப்புகளைவிடப் பொதுக் கூட்டங்களிலும், திரையரங்குகளிலும் பெரும் பொழுதுகளைக் கழித்தேன். அவையும் எனக்குப் பாடங்களைக் கற்பிக்கும் கல்லூரிகளாக இருந்தன.

இரண்டு ஆண்டுகளில் 150 திரைப்படங்களாவது பார்த்திருப்பேன். திருச்சி நகரம் எனக்குத் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக இருந்தது. அதில் முக்கியமாகக் கலைஞர் மு.கருணாநிதி துணைவேந்தராக இருந்தார் என்றே கூறலாம். அவருடன் பலநாள் ஒரு தொண்டனாக இருந்திருக்கிறேன். என்னைப் பிற்காலத்தில் அவர் நினைவில் வைத்திருக்க முடியாதபடி அரசியலில் உயர்ந்து விட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் வாழ்க்கை பற்றியும் உங்களைக் கவர்ந்த பேராசிரியர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1953-1956) மூன்றாண்டுகள் பயின்றேன். எங்கள் பேராசிரியர் முனைவர் அ. சிதம்பரநாதனார் மிடுக்கும் புலமையும் கம்பீரமும் மிக்கவர். தமிழகத்தில் தமிழ்த்துறையில் முதன்முதல் முனைவர் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். ஒவ்வொரு மாதமும் Honours club என்ற ஆய்வு மன்றத்தை நடத்தி மாணவர்களை ஆய்வுக் கட்டுரைகள் வழங்கத் தூண்டியவர்.

எங்கள் துறையில் எனக்கு வழிகாட்டிகளாக விளங்கியவர் இருவர். ஒருவர் அன்று கவிதை, திறனாய்வு, சமயத் தத்துவங்களில் வல்லவராக விளங்கிய மு. அண்ணாமலை. அவரே என் கவிதை ஆசான். மற்றொருவர் கல்வியுலகில் முதன்முதலாகப் பாரதி ஆய்வை மேற்கொண்டவரும் பின்னாளில் கல்லூரிக் கல்வி இயக்குநராக விளங்கியவருமான கா. மீனாட்சிசுந்தரம்.

அவரே பின்னர் என் ஆய்வு நெறியாளராகவும் அமைந்தவர். அவற்றையெல்லாம்விட வாழ்வில் அறநெறி பிழையா ஆசிரியராக விளங்கி எனக்கு முதல் மாதிரியானவர்.

எழுபதுகளில் கோவையில் வெளியான வானம்பாடி இலக்கிய இதழில் உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருந்தது?
அப்போது பூம்பொழில் இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பை முல்லை ஆதவன் நடத்தி வந்தார். அதனுடன் எனக்குத் தொடர்பில்லை.

புவியரசு, இளமுருகு, சி.ஆர். ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் ஓர் இலக்கிய இதழ் தொடங்கத் தீர்மானித்தார்கள். அது குறித்து விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் பல நடைபெற்றன.

அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். ஞானி, ஜன. சுந்தரம், அக்கினி புத்திரன் இன்னும் பல நண்பர்களும் பங்கு கொண்டார்கள். அந்தக் கூட்டங்கள் ஒன்றில் இளமுருகு, வானம்பாடி என்று பெயரிட்டார். அது மிகு புனைவியலாகப் பட்டதனால் மானுடம் பாடும் வானம்பாடி என அழைக்கலாம் என நான் தெரிவித்தபோது அனைவரும் அதை வரவேற்றனர். இதழின் பெயர் வானம்பாடி. அதன் கீழே மானுடம் பாடும் வானம்பாடிகளின் விலையிலாக் கவிமடல் என அச்சிடப்பட்டது.

1971 அக்டோபர் 9ஆம் நாளில் முதல் இதழ் பிரசுரமானது. 1983 இல் கடைசி இதழ் வந்தது. முதல் 13 இதழ்கள் கோவையில் புவியரசு மற்றும் நண்பர்களின் கூட்டுப் பொறுப்பில் வெளியானது. 14 முதல் கடைசி இதழான 22 ஆம் இதழ் வரை பொள்ளாச்சியிலிருந்து என் முயற்சியில் வெளிவந்தது.மொத்தம் 221 கவிஞர்களின் 504 கவிதைகள் வெளிவந்தன.

13 கவிதைகளுக்கு ஆசிரியர் பெயர் இல்லை. யாரையும்விட அதிகமாக 22 கவிதைகளை வானம்பாடியில் நான் எழுதினேன். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த மதுரை வீரன், துணை, சர்ப்பயாகம், நாய்க்குடை, முள்.. முள்.. முள்.., ரோஷம், இது எங்கள் கிராமம் கவிதைகள் வானம்பாடியில் வெளிவந்தவை. இது எங்கள் கிராமம் கவிதையே பிற்காலத்தில் ஒரு கிராமத்து நதி, உருவாக விதையாக அமைந்தது.

அதுபோன்றே 19 மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் எழுதியிருக்கிறேன். சச்சிதானந்தன், வயலார், செம்மனம் சாக்கோ, கடம்மனிட்ட ஆகிய மலையாளக் கவிஞர்களை மொழிபெயர்த்து வெளியிட்டேன். எனக்கு வானம்பாடி ஒரு பயிற்சிக் களமாக, பரிசோதனைகள் நிகழ்த்தும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது.

பொருளாதார வசதி இல்லாத காலப்பகுதியில் புவியரசு, ஞானி, சக்திக்கனல் பிற தோழர்கள் வானம்பாடி இதழை நடத்தி, நிகழ்த்திய சாதனை மகத்தானது என்று இன்றும் கருதுகிறேன். கங்கை கொண்டான், மு. மேத்தா, புவி, சக்திக்கனல், தேனரசன் போன்றவர்களின் சிறந்த படைப்புகள் வானம்பாடியில் வந்தவை.

மீரா, ரகுமான், பா.செயப்பிரகாசம், நா.காமராசன், தமிழன்பன் ஆகியோர் விருந்தினர்களாக வானம்பாடியில் எழுதியிருக்கிறார்கள். நான் வானம்பாடியில் வேராக, விழுதாக, கிளையாக, அடிமரமாக இருந்தவர்களில் ஒருவன். கடைசிவரை வானம்பாடி இதழை நிறுத்திவிடக் கூடாது என்ற அக்கறையினாலேயே கடைசி ஒன்பது இதழ்களை விடாமல் நடத்த முயன்றேன். ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை.

வானம்பாடிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக 1973 இல் வெளிச்சங்கள் வெளியானது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கவிதையான ‘வானம்பாடிகள் நாங்கள்... வசந்த மின்னல்கள் நாங்கள்’ என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அந்தச் சூழல் பற்றி...

வானம்பாடி தொடங்கிய காலத்தின் உற்சாகம் அபரிமிதமானது. அதனை இன்னொரு எல்லைக்குக் கொண்டு போகும் ஆசையால் கவிராத்திரி என்ற நிகழ்வை மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் கொண்டு சென்றோம். அது ஒரு வித்தியாசமான கவிதை வாசிப்பு. தொடக்கத்தில் எங்களை அறிமுகம் செய்து கொள்ளும்வகையில் சில வரிகளை அனைவரும் சேர்ந்திசை போல ஒலித்து வந்தோம். அந்த வரிகளை நான் எழுதியிருந்தேன்.

’வானம்பாடிகள் நாங்கள்
வசந்த மின்னல்கள் நாங்கள்...’

என்று அது தொடங்கும். அது மகத்தான கவிதை அல்ல. ஒரு தொடக்க முழக்கம். ’வெளிச்சங்கள்’ சேலம் தமிழ்நாடனால் தொகுத்து வெளியிடப்பட்டது. அவர் தெரிவு செய்த கவிதைகள் அதில் உள்ளவை.

ஐம்பதுகளில் பிரசுரமான ‘எழுத்து’ பத்திரிகை வெளியிட்ட இருண்மையான கவிதைப் போக்கினுக்கு எதிரானதாக வானம்பாடி பத்திரிகை கவிதைகளைச் சொல்ல முடியுமா?

உண்மையில் ’எழுத்து’ எனக்குப் புதுக்கவிதை பற்றிய தூண்டுதல் தந்தது. தொடக்கத்திலிருந்தே அவ்விதழை நான் படித்து வந்திருக்கிறேன். தருமு சிவராம், பசுவய்யா, நகுலன், எஸ்.வைதீஸ்வரன், தி.சோ. வேணுகோபாலன் முதலியவர்கள் எழுதி வந்தார்கள். அக்கவிதைகளில் சில அருமையானவை. புதிய வடிவை அங்கிருந்துதான் பெற்றுக்கொண்டோம். மொழியின் சாத்தியங்களை முயல்கிற அந்தக் கவிதைகளின் வடிவமற்ற வடிவத்தைக் கைக்கொண்டு சமுதாயம், மனிதன் என்று மடைமாற்றலாம் என்ற எங்கள் முயற்சியே வானம்பாடி.

‘பாட்டாளிக்கு
உங்கள் ரொமான்டிக் புஷ்பங்கள்
என்ன எழவென்றே
புரியாது’

என்று தருமு சிவராம் விமர்சித்தபோது வானம்பாடிக் கவிஞர் கங்கை கொண்டான்,

‘போகட்டும்
இன்டலக்சுவல்களுக்கு
நீ எழுதாமலே
எல்லாம் புரியும்
அவருக்காய் நீ
எதற்கெழுதோணும்’

என்று பதிலளித்தார். இப்படிச் சில வாதம் - எதிர் வாதங்கள் நிகழ்ந்ததுண்டு. என் கவனம் படைப்பில் மட்டுமே இருந்தது.
அவர்கள் வெகுதூரம் பிரமாதப்படுத்திய இருண்மை உத்தியைப் பயன்படுத்தித்தான் ’மதுரை வீரன்’ கவிதையை எழுதினேன்.

படைப்பாளிக்கு அனுபவம் முதன்மையானது என்பது அதன் கரு. அதனை யாரும் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பாலியல் கோணத்தில் விளக்கவுரை எழுதிப் பக்கம் பக்கமாக ஞானி எனக்கு அனுப்பியதுதான் பெரிய வேடிக்கை. இருண்மை தோற்றுப் போய்விட்டது.

வானம்பாடி கவிதைகள், நவீன கவிதைகளை மலினப்படுத்தி விட்டன, அரசியல் பிரச்சாரம் செய்கின்றன என்ற கூற்று சரியானதுதானா?

சரியல்ல. வெளிவந்த 504 கவிதைகளில் அதிகபட்சமாக ஐம்பது கவிதைகள் அரசியல் பேசியிருந்தாலும்கூட பல கவிதைகள் சமூகம், பெண்ணியம், சாதி, காதல், போர், பழைய தொன்மங்களுக்குப் புதிய விளக்கம், நாத்திகம், அறிவுப் புரட்சி, பிறமொழிப் படைப்புகள் என்று பன்முகங்களைப் பேசின. ஆனால் அரசியல் பிரச்சாரம் என்பது ஒரு எதிர்ப்பிரச்சார வதந்தி போலப் பரவிவிட்டது. பரிசுத்தக் கவிதைக்காரர்கள் இரவல் கருப்பைகளில் விதைத்த விஷ வித்து இது.

வானம்பாடிக்கும் கசடதபற இதழுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் கருத்து முரண்களை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?

கசடதபற இதழே எழுத்து இதழோடு முரண்பட்டு வந்த இளைஞர்களின் முயற்சிதான். உண்மையில் என் ஒளிப் பறவை, தேனரசனின் வெள்ளை ரோஜா நூல்கள் எல்லாம் கசடதபறவில் நல்ல விமர்சனத்தையே பெற்றன. ஞானக்கூத்தன் எனக்கு நல்ல நண்பராகவே இருந்தார்.

இப்படி ஒரு எதிர்நிலை அவசியமா என்று கருதி ஒருமுறை கசடதபற நண்பர்களை நேரில் சந்தித்து விவாதித்திருக்கிறேன். மஹாகணபதி என்பவரின் அறையில் அன்று கசடதபற எழுத்தாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் வினாக்களுக்கு விடையிறுத்தேன். என் கவிதை ஒன்றைச் சொல்லச் சொன்னார்கள். வாசித்தேன். Animation இல்லையே என்றார்
ஞா.கூ. அவர் கவிதை ஒன்றைச் சொல்லச் சொல்லி நானும் அதே வார்த்தைகளைச் சொன்னேன்.

பின்னர் ஒரு சமயம் சுப்பிரமணிய ராஜூவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: நாங்கள் உங்களில் பலர் மீது பெரிய மரியாதை வைத்திருந்தோம். எங்கோ போய் விடுவார்கள் என்று பயந்ததும் உண்டு என்று மிக நட்போடு பேசினார். அவர்களுடையது Urban poetry எங்களுடையது Rural poetry. முக்கியமான முரண்பாடு நாங்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ற கருத்தில் முளைத்தது.

ஆனால் வானம்பாடிக் கவிஞர்களில் காந்தியவாதிகளும் இருந்தார்கள். எடுத்துக்காட்டு மு. மேத்தா. கவித்துவம் என்ற அளவில் நான் கசடதபற கவிஞர்களை மதித்தது போன்றே அவர்களுக்கும் மரியாதை இருந்தது. ஆனால் ஞானக்கூத்தனின் பிராமணியம் குறுக்கே நின்றது என்பதும் உண்மை. ஆனால் பேச்சுக்குப் பேச்சு வானம்பாடி உரத்த குரலில் பேசுகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதனால் கவிதை புல்லாங்குழலும் ஆகும் பேரிகையும் ஆகும் என்று நான் சொல்ல நேர்ந்தது. காலம் இந்த இரண்டு குழுக்களையும் கடந்து சென்று விட்டது. முன்னைவிட இருண்மையோடு எழுதுகிற கவிஞர்களும் இப்போது இருக்கிறார்கள். முன்னைவிட அருமையாகவும் எளிமையாகவும் எழுதுகிறவர்களும் வந்து விட்டார்கள். ஒரு காலகட்டச் சோதனை முயற்சியாக வானம்பாடி வரலாற்றில் நிற்கிறது.

சர்ப்பயாகம் கவிதையில் பரமபதம், ஆதிசேசன், கார்கோடகன் போன்ற புராணத்துப் பெயர்கள் மூலம் தேசத்தில் நச்சுப் பாம்புகள் காத்துக் கிடக்கின்றன. தொடங்கினோம் சர்ப்பயாகம் என்ற கவிதைமொழி அன்றைய காலகட்டத்தில் புதியது. அப்படியான கவிதையை எழுதிய மனநிலை குறித்து...

சர்ப்பயாகம் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வு. நான் இளம்பிள்ளையாக இருக்கிற காலத்தில் பாரதத்தை என் குடும்பத்தாருக்குப் படித்துக் காட்டுகிற பழக்கம் இருந்தது. அந்தக் கதை ’கேளும் ஜனமோஜய மகாராஜனே’ என்று ஒவ்வொரு காண்டத்திலும் தொடங்கும்.

அது மனதுக்குள் வட்டம் அடித்துக்கொண்டே இருந்தது. அந்த அரசன்தான் சர்ப்பயாகம் செய்து பாம்புகளை அழித்தான். அவன் பெயர் ஜனம் - ஜயம் என்றிருந்தால் தீயவை அழிந்தால் மக்கள் வெற்றி பெறுவர் என்ற உணர்வைத் தந்தது. இந்த அடித்தளத்திலிருந்து ’சர்ப்பயாகம்’ பிறந்தது.

கவிஞரான நீங்கள் மொழிபெயர்ப்பாளராக மாறிய சூழல் பற்றி...

பள்ளி வயதிலிருந்தே ஆங்கிலமும் மலையாளமும் எனக்கு உகந்த மொழிகளாக இருந்தன. அதிலும் மலையாளம் என் இரண்டாவது தாய்மொழியாக இருந்தது. என்னைக் கவர்ந்த சில ஆங்கிலக் கவிதைகளை என் முதல் தொகுப்பிலேயே மொழி பெயர்த்திருக்கிறேன்.

இப்போது என் மொழிபெயர்ப்புப் பட்டியலில் ஆங்கில நூல்களும் இருந்தாலும் என்னை வளர்த்த மலையாள மொழிக்கு நான் பட்ட நன்றிக் கடனாக மொழிபெயர்ப்புச் செய்ய முனைந்தேன்.

முதல் வாய்ப்பாக லலிதாம்பிகா அந்தர் ஜனத்தின் ’அக்கினி சாட்சி’யை மொழிபெயர்த்தேன். அதற்குக் கிடைத்த பாராட்டிலிருந்து மொழிபெயர்ப்புகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஓ.என்.வி. குறுப்பு, சச்சிதானந்தன், கே.ஜி. சங்கரப்பிள்ளை, எம்.டி.வி, பெரும்படவம் எனப் பல ஆசிரியர்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முன்னமே பல மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் கலீல் ஜிப்ரானின் நூல்களை வரிசையாக மொழிபெயர்த்து வருகிறேன். முதுமை, கடுமையான பணிகள் செய்யத் தடையாக இருந்தாலும் நல்ல நூல்களை மொழிபெயர்க்க இன்னும் ஆசைப்படுகிறேன்.

கவிதையை மொழிபெயர்ப்பது என்பது மொழிபெயர்ப்பாளர்க்குப் பெரும் சவால். நீங்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தபோது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

மலையாளத்திலிருந்து நேருக்கு நேராக என்னால் மொழிபெயர்க்க முடியும். சிறிய வேறுபாடுகளைத் தவிர்த்தால் மலையாள மொழிபெயர்ப்பு எனக்குச் சிக்கல்கள் எதையும் தரவில்லை. அற்புதமான சூழலியல் நாவலான அம்பிகா சுதன் மாங்காடின் ‘என்மகஜெ’வை நான் மொழிபெயர்த்தேன். ஏனோ தமிழில் பேசப்படவே இல்லை.

அப்படி ஒரு நாவல் தமிழில் இல்லை. நடை, உத்தி, பேசுபொருள் அனைத்திலும் புதுமையான இந்நாவல் உண்மையான தகவல்களை மையமாகக் கொண்டது. கவிதைகளைப் பொறுத்தவரை ஒ.என்.வியின் மரபுக் கவிதை, சச்சிதானந்தனின் புதுக்கவிதை, சங்கரப் பிள்ளையின் கடுமையான உள்ளர்த்தங்கள் கொண்ட நுட்பமான கவிதை எல்லாவற்றையும் இயல்பாகச் செய்திருக்கிறேன். எங்கேனும் சில இடங்களில் காணப்படும் உள்ளுறையைத் தருவதற்கு மட்டுமே கொஞ்சம் யோசித்திருக்கிறேன்.

மலையாளத்தில் இருந்து சச்சிதானந்தம் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுத்தமைக்கான தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கிறதா?

உலகத்துக் கவிஞர்களிடையே என்னைக் கவர்ந்த கவிஞர் சச்சிதானந்தன். கலைத்திறன், எண்ணற்ற உத்திகள், உலகளாவிய வாசிப்பின் வீச்சுக்கள், புதிய வடிவங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மலையாள மண்ணில் ஊன்றி நிற்கும் பண்பாட்டுச் சார்பு இவையனைத்தும் என்னை அவரிடம் நெருங்க வைத்தன.

’ மேற்கு மலைச் சிகரங்கள் போல் உயரும் திராவிட குலத்தின் ஆதி கவிகளே’ என்று சங்கப் புலவர்களை அழைத்தவர் அவர். இத்தனைக்கும் அப்பால் அவருடைய இடதுசாரித் தன்மையுள்ள மனிதநேயம் எனக்கு மிகவும் பிடித்தமானது. மலையாள மொழி சச்சிதானந்தனிடம் மந்திரக்கோலுக்கு ஆடும் மோகினி போல் ஆடுகிறது. அவர் ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் உலகக் கவிதைகள் அவர் உள்ளங்கையில் களிநடம் புரிகின்றன.

மலையாளப் படைப்புகள் தமிழ்ப் படைப்புகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் இடம் / கோணம் யாது?

மலையாளக் கவிதைகளும் தமிழ்க் கவிதைகளும் நவீனத்துவ பின் நவீனத்துவ எல்லைகளில் நடை பயின்றாலும் சில முக்கியமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. மலையாளக் கவிதைகள் வளமான தொன்மங்களை இந்திய மரபிலிருந்து எடுத்தாளத் தயங்கவில்லை. தமிழ்க் கவிதைகளில் இந்தக் கூறு குறைவு.

இன்னும் மலையாள மொழியில் ஆற்றலோடு எழுதும் மரபுக் கவிஞர்கள் இருக்கிறார்கள். மதுசூதனன் நாயர், ரமேசன் நாயர், பிரபா வர்மா போன்றோர் ஒ.என்.வி. குறுப்புக்குப் பிந்திய கவிதை முறையில் எழுதி வருகிறார்கள். அண்மையில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பிரபா வர்மாவின் சியாமா மாதவம் கண்ணன் மரணத்தறுவாயில் தான் இழைத்த வஞ்சனைகளுக்கு மன்னிப்புக் கேட்கும் காட்சிகளாக விரிகிறது - மரபுக் கவிதையில். ஆனால் தமிழில் மரபுக் கவிதை ஏறத்தாழப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மலையாளத்தில் புதுக் கவிதையென்றாலும் இசையோடு கவிதை சொல்லும் மரபு தொடர்கிறது. தமிழில் இசை மரபு காணப்படவில்லை. தமிழில் இன்று பெண்களின் கவிதை பல சிகரங்களைத் தொட்டுள்ளது. மலையாளத்தில் பெண்கள் எழுதும் கவிதை தமிழின் வீச்சுக்கு எட்டவில்லை. அனிதா தம்பி விதிவிலக்கு.

கவிதை நூல்கள் விற்பனையில் தமிழகத்தில் தேய்மானம் கண்டிருக்க, மலையாளத்தில் இன்னும் வாசகர்களின் ஆதரவு காணப்படுகிறது. என்றாலும் நாவலாசிரியர்கள், சிறுகதைப் படைப்பாளிகள் பெறும் செல்வாக்கை எட்டும் கவிஞர்கள் இன்று அங்கும் குறைவுதான்.

சச்சிதானந்தன், சங்கரப்பிள்ளைக்கு இணையாகச் சொல்லக்கூடிய கவிஞர்கள் இங்கு இல்லை. தேவையற்ற இருண்மையில் இளைஞர்கள்கூட இங்கு எழுத ஆசைப்படுகிறார்கள். கவிதையில் மகாரதர்களுக்காக இரண்டு மொழிகளும் காத்திருப்பதாகத் தோன்றுகிறது.

2000 ஆம் ஆண்டில் அக்னி சாட்சி நாவலுக்கு சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தபோது, கவிஞரான தங்களுடைய மனநிலை என்னவாக இருந்தது?

அக்கினி சாட்சி என் உழைப்பை மிகுதியாய்க் கேட்ட ஒரு மொழிபெயர்ப்பு. காரணம் அது நம்பூதிரி குடும்பத்தின் கதை. பல சொல்லாடல்கள், பழக்கவழக்கங்கள் நம்பூதிரி மரபு சார்ந்தவை. எனவே மொழிபெயர்ப்பதில் சிரமங்கள் இருந்தன.

மலையாளத் திறனாய்வாளராக விளங்கிய வணக்கத்துக்குரிய டாக்டர் லீலாவதியிடம் என் சிரமங்களைச் சொன்னபோது அவர் நம்பூதிரி அகராதி ஒன்றை எனக்கு அளித்தார். அந்த அகராதி முழு வெளிச்சம் தந்ததால் வெற்றியோடு மொழிபெயர்ப்பை முடித்தேன்.

சாகித்திய அகாதெமி விருது அந்த உழைப்புக்கு ஒத்தடம் கொடுப்பதாய் அமைந்தது. நான் பரிசு பெற்றபோது நூலாசிரியரின் பேரன் பேத்திகள் நிகழ்ச்சிக்கு வந்து பாராட்டியது இன்னும் பெரிய பரிசாக இருக்கிறது.

இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்திட அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்துவது எந்த அளவில் உதவும்?

கோட்பாடுகளைக் கொண்டு படைப்புகளை ஆய்வது ஒரு கலைத்திறன். இன்றைய கோட்பாடுகளைக் கொண்டு நவீன இலக்கியங்களை ஆராய்வது வேண்டத்தக்கதும் கூட. ஆனால் பண்டை இலக்கியங்களைப் புதிய மேலைக் கோட்பாடுகள் கொண்டு அளந்து பார்ப்பது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை. எடுத்துக்காட்டாக மேலைக் காப்பியக் கோட்பாடுகள் அவர்களின் காப்பியங்களை ஆராய உருவானவை.

அதைக் கொண்டு சிலப்பதிகாரத்தை, கம்பன் காவியத்தை, சேக்கிழார் படைப்பை ஆராய்வது நியாயமாகாது. அந்த அந்தக் காலத்தின் மரபுகளை உள்வாங்கி அமைக்கப்பெறும் கோட்பாடுகள்தான் அந்தப் படைப்புகளை அளந்து பார்க்க உதவும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பிறந்த மனித அனுபவத்தைக் கணினி யுகம் கொண்டு பார்ப்பது படைப்புக் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி.

காலத்தை ஒட்டிப் பிறப்பதே இலக்கிய விதி. அதை எந்த அளவுக்கு வெட்டிச் செல்கிறார் நூலாசிரியர் என்று பார்க்க வேண்டுமே தவிர சேக்கிழார் தேரை விட்டுவிட்டு சைக்கிளில் போயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான பார்வை ஆகாது.சரியான பார்வை காலத்தை ஒட்டிய கருத்தோடு பிறக்கும். எழுத்து காலத்தைக் கடக்க முயன்றிருக்கிறதா என்று பார்க்க மார்க்சிய அளவுகோல்கள் சரியாக இருக்கும்.

மேலைக் கோட்பாடுகளைக் கொண்டாடும் திறனாய்வாளர்கள் ஏன் உலகின் மிகச் செழுமையான நம் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து கோட்பாடுகளை உருவாக்கத் தவறினார்கள் என்பது என் மனதில் வெடிக்கும் வினாக்களில் ஒன்று. படைப்பாளன் கோட்பாடுகளைப் படித்து இலக்கியம் படைப்பவன் அல்ல. அவன் படைப்பிலிருந்துதான் கோட்பாடுகள் பிறக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதனையாளராக விளங்கினாலும், அதிகமாக அறியப்படாத சே.ப.நரசிம்மலுநாயுடு, பெ.தூரன் போன்ற ஆளுமைகள் குறித்து நீங்கள் எழுதியிருக்கிற நூல்கள் முக்கியமானவை. அவர்களைப் பற்றி எழுதிய உங்களுடைய அனுபவங்கள்...

தங்கள் கேள்வியிலேயே விடை பொதிந்திருக்கிறது. அதிகம் பேசப்படாதவர்களாக அதே சமயம் அற்புதமான சாதனைகள் செய்தவர்களாக சே.ப.நரசிம்மலு நாயுடுவும், பெ.தூரனும் விளங்குகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த சே.ப.நரசிம்மலு நாயுடு நூறு நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

சென்னைக்கு அப்பால் ஒரு சிறிய நகரில் இருந்தபடி இதழ்கள் நடத்தியுள்ளார். பொது நலனுக்காக அயராது உழைத்திருக்கிறார். பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவர் அவர்.

தன் பயண அனுபவங்களை விரிவாக திவ்யதேச யாத்திரை, தக்ஷிண தேச யாத்திரை என இரண்டு பெரிய நூல்களாகத் தந்து பயண இலக்கியத்தின் தந்தையாகத் திகழ்ந்தவர். எனவே அவரைத் தமிழகம் அறியும்பொருட்டு அவரைக் குறித்து எழுதினேன்.

பெ. தூரனும் பன்முகம் கொண்டவர். பள்ளி ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சிறுகதைப் படைப்பாளி, சிறுவர் இலக்கிய முன்னோடி, பத்திரிகை ஆசிரியர், எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மொழிகளிலேயே முதன்முறையாகக் கலைக் களஞ்சியம் உருவானபோது அதன் ஆசிரியராக அரும்பணி புரிந்தவர்.

குழந்தைகள் கலைக் களஞ்சியத்தையும் உருவாக்கி அளித்தவர். இன்னும் ஒரு பெருஞ்சிறப்பு - தமிழில் இசைப் பாடல்களைப் பல தொகுதிகளாக அளித்தவர். ஒரு மனிதருக்குள் இத்தனை சாதனையாளர்களா என வியக்க வைத்தவர். எனவே அவரையும் மறந்துவிட்ட மக்களுக்கு நினைவூட்ட அவரைக் குறித்தும் எழுதினேன். அண்மையில் கையெழுத்துப் பிரதியாக இருந்த அவருடைய நினைவுக் குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன்.

1958 இல் கோவை நல்லமுத்துக் கவுண்டர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது அன்றையச் சூழல் பற்றி...
பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் கல்லூரியில் 1958 முதல் 1989 வரை 31 ஆண்டுகள் பணியாற்றினேன். நான் பணியேற்ற காலத்தில் என் சம்பளம் ரூ.105/- ஆனால் என் ஆசிரியர்களைப் போல நானும் நல்லாசிரியனாக இருக்க வேண்டும் என்று உழைத்த நாட்கள் அவை.

காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை அன்று பணியாற்ற நான் சலிப்புற்றதில்லை. சில நாட்களில் இரவாகிவிடும் வீடு திரும்ப. அந்தக் கல்லூரிப் பணிக் காலத்தில் அன்று நிர்வாகமே சம்பளம் வழங்கி வந்தது. ஒரு சமயம் மூன்று ஆசிரியர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. ஆசிரியர்கள் பாதுகாப்பின்றி அஞ்சினார்கள்.

அப்போது சென்னையில் இருந்த ஆங்கிலப் பேராசிரியர் முரளிதரன் நாயர் ஆலோசனைப்படி சென்னைக் கல்லூரி ஆசிரியர் சங்கமாக இருந்த AUT (Association of University Teachers) இல் எங்கள் கல்லூரி ஆசிரியர் சங்கத்தை இணைக்க விரும்பினேன். சென்னையில் இருந்தவர்கள் எங்கள் சங்கத்துக்கு விதிகள் கிடையாது; பாராட்டு விழா, ஓய்வு பெறுகிறவர்களை அனுப்பும் விழாதான் நடத்துகிறோம்.

இணைப்புகளும் கிடையாது; நாங்கள் போராடும் சங்கம் அல்ல என்று மறுத்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி, நாங்கள் உங்கள் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கேட்டுத் தமிழகத்திலேயே முதன்முறையாகப் பொள்ளாச்சிக் கல்லூரியில் AUT கிளையை ஏற்படுத்தினேன்.

அதுபோன்றே ஈரோடு சி.என்.கல்லூரியில் பெரியாரிய அறிஞர் எம்.கே. சுப்பிரமணியம் ஏற்படுத்தினார். நாங்கள் இருவரும்தான் AUT யை முதன்முதல் கல்லூரிகளில் ஏற்படுத்தியவர்கள். மற்ற கல்லூரிகளில் பல ஆண்டுகள் சங்கம் உருவாகவில்லை. எனவே ஈரோட்டில் முதல் மாநாட்டையும் நடத்தினோம்.

இந்த வரலாறு இன்றையே AUT நண்பர்களுக்குத் தெரியாது. இன்று பெரிய அமைப்பாக விளங்குகிற AUT பின்னாளில் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டது என்பதுகூட வரலாற்று விசித்திரம்தான்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, நீங்கள் செய்த செயல்கள் என்ன?

1989 நம்பரில் பாரதியார் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தேன். எனக்கு அந்த உலகம் புதியது. அப்போது பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக இருந்த முல்லை ஆதவன் பெற வேண்டிய பேராசிரியப் பொறுப்புக்கு நான் வந்து விட்டதாகக் கருதியதால் அவர் ஒத்துழைப்பு, தொடக்கத்தில் எனக்குக் கிடைக்கவில்லை.

மாணவர்கள் முதுகலை பயில்கிறவர்களாகவும், ஆய்வு செய்கிறவர்களாகவும் இரு பிரிவினராக இருந்தனர். என் வகுப்புக்கள் அவர்களைக் கவர்ந்தன. அவர்களின் பேருதவியால் பல சிரமங்களைக் கடந்தேன். என்னுடைய பணிக் காலத்தில் என் ஆய்வுத் திறனைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். பல்வேறு புதிய தலைப்புகளில் ஆய்வு செய்ய ஆய்வாளர்களைத் தூண்டினேன்

தமிழ்க் கல்வியில் குறிப்பாக ஆய்வுக் கட்டுரை எழுதுவதிலும், ஆய்வேடு எழுதுவதிலும் மாணவர்களின் அக்கறை தாழ்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டு சரிதானா?

ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம், ஆய்வேட்டின் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பது உண்மையே. நானே பல ஆய்வேடுகள், பள்ளிக்கூடக் கட்டுரைகள் போல் இருப்பதைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். இது குறித்துத் துறைகளில் தீவிரமாகக் கவலை கொள்ள வேண்டும்.

விதிகளைக் கடுமைப்படுத்த வேண்டும். பிற துறை கலந்த ஆய்வாக இருந்தால் ஆய்வேட்டுத் தேர்வாளராக அத்துறை வல்லுநரையும் சேர்க்க வேண்டும். முன்பு மதுரைப் பல்கலைக்கழக வாய்மொழித் தேர்வில் கேள்விகள் தந்து பதில் எழுதும் சோதனையும் இருந்தது.

வாய்மொழித் தேர்வில் பதில் சரியாகச் சொல்லாவிட்டால் தேர்ச்சி தராமல் மீண்டும் வாய்மொழித் தேர்வு நடத்த வேண்டும். தலைப்புத் தேர்வு முதல் வாய்மொழித் தேர்வு வரை விதிகளை மேலும் கடுமைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

சாகித்திய அகாதெமி விருதுகளை வென்ற நீங்கள் அதன் ஒருங்கிணைப்பாளராக சாதித்தவை எவை?

சாகித்திய அகாதெமியில் பல காலம் பணியாற்றி இருக்கிறேன். அதன் சட்டதிட்டக் குழுக்களிலும் இருந்திருக்கிறேன். நான் செய்த மனநிறைவுள்ள பணிகள் பல.

1. புதிய தமிழ் இலக்கிய வரலாறு மூன்று பாகங்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளேன். பலர் முடிக்காமல் விட்ட திட்டத்தை பதினைந்து ஆண்டுகள் முயன்று முடித்தேன்.

2. பாரதியார் கவிதைகள் அனைத்தையும் ஐந்து மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்திருக்கிறேன்.

3. பாரதியார் உரைநடை விரிந்த களம் என்பதால் Selected Essays and Stories என்று தெரிவு செய்த தொகுப்பின் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளேன்.

4. மொழிபெயர்ப்பு நூல்கள், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சே.ப. நரசிம்மலு நாயுடு, பெ. தூரன், ஆர். சண்முகசுந்தரம், கம்பதாசன் வரலாறுகள் எழுதியிருக்கிறேன்.

5. இப்போது தேர்ந்தெடுத்த சங்கப் பாடல்களின் தொகுப்பு ஒன்றை (ஏறத்தாழ 250 பாடல்கள்) ஆங்கிலத்தில் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன். பணிகளுக்கு ஓய்வில்லை. புதிய ஆலோசனைகள் வருமானால் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.

மானுடம் பாடிய வானம்பாடிகள் கனவுகண்ட சமூக மாற்றம், புரட்சி, போன்றவற்றில் உங்களுக்கு உடன்பாடு இருந்த சூழலில் உங்களை இடதுசாரி செயற்பாட்டாளாராகக் கருதமுடியுமா?

வானம்பாடிகள் கனவு கண்ட மாற்றங்கள் இன்னும் கனவாகவே உள்ளன. இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும். நான் ஒரு நல்லாசிரியனாகவும், பொறுப்புள்ள படைப்பாளனாகவும் உருவாக இடதுசாரிச் சிந்தனைகளே காரணம். வானம்பாடி அதற்கு வழிவகுத்துத் தந்தது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தோடு தங்களுக்குத் தொடர்பு முதலில் எப்படி ஏற்பட்டது?

ஜீவாவின் மானசீகச் சீடனாக இருந்து வந்த நான் அவர் உருவாக்கிய கலை இலக்கியப் பெருமன்றத்தில் தீவிரப் பணியாற்றுமுன் அவர் மறைந்துவிட்டார். எனவே பெருமன்றத்துடனான என் உறவு 1966 இல் பொள்ளாச்சியில் நடந்த மாநில மாநாட்டிலிருந்து தொடங்கி வலுப் பெற்றது.

எங்கள் ஊர்க் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அந்த நெருக்கத்தை மேலும் உரமூட்டி வளர்த்தார். கலாச்சார மறுமலர்ச்சியின் தூதுவனாக இருந்த பெருமன்றத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பல நிலைகளில் பணிபுரிந்தேன்.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியே ரகுநாதனுடனும் எஸ். இராமகிருஷ்ணனுடனும் அருகிலிருந்து செயல்பட முடிந்தது. ஜீவாவுக்குப் பின் ஆர்.கே. கண்ணன், சிதம்பர ரகுநாதன், எஸ்.ஆர்.கே. ஆகியோர் எழுத்தாலும் பேச்சாலும் என்னை ஆட்கொண்டனர்.

பொதுவுடைமை இயக்கப் போராளி பாலதண்டாயுதத்தைத் தாங்கள் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்...
பாலன் என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலதண்டாயுதம் வீர சாகச நாயகனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே அறியப்பட்டவர்.

அப்போது துணைவேந்தராக இருந்த ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியாரை, Mr.Sastri You Are neither right nor your deeds honourable என்று விமர்சித்து அவராலேயே பாராட்டப்பட்டவர். என்றாலும் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிறகு நெல்லை சதி வழக்கில் அவர் சிறையிலிருந்த காலத்தில் நான் விரும்பிப் படித்த சாந்தி இதழில் கட்டுரைகள் எழுதினார். அவர் என் ஈர்ப்புச் சக்தியாக விளங்கினார். ஒரு சமயம் பொள்ளாச்சிக்கு அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தபோது இளைஞர்களை அழைத்து, ‘எது இலக்கியம்’ என்ற தலைப்பில் அவரைப் பேச வைத்தேன்.

வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத உரை, அது. பின்னர் பொள்ளாச்சி கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின்போது அவரை அடிக்கடி சந்தித்தேன். விமான விபத்தில் அவர் காலமானபோது என் துக்கத்தை ஒரு கவிதையில் இறக்கி வைத்தேன்.

பாலன் என் இலக்கிய வழிகாட்டி. ஆழ்ந்த படிப்பு, எல்லையற்ற துணிவு, மக்கள் நேசம், ஆற்றல் மிக்க உரைத்திறன் இவைகளின் வடிவாக பாலன் என் மனதில் வாழ்கிறார். அத்தகைய தலைவர்களைக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இன்று காணோம்.

“பலமொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்றே” என்ற தத்துவமேதை இராதாகிருஷ்ணனின் கூற்று பொருத்தமானதுதானா?

இல்லை. பொருத்தமானதல்ல. ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மாதிரியில் இலக்கியத்தை ஒன்றாகக் கூற முடியாது. ஒவ்வொரு தேசிய மொழி இலக்கியத்துக்கும் தனித்தனிப் பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. நாகாலாந்து இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் தனிப் பண்புகள் கொண்டதாகத்தான் பார்க்க வேண்டும். இல்லையெனில் ஒற்றைப் பண்பாட்டு மயக்கத்தில் அடையாளம் இழப்போம்.

இந்திய இலக்கியங்களில் இந்தியத் தன்மை என்ற ஒன்று இருக்கிறதா?

முந்தைய கேள்விக்குரிய பதிலையே இதற்கும் உரியதாக எடுத்துக் கொள்ளலாம். மனிதச் சிக்கல்கள் பொது என்று கூறுவதுகூடச் சரியல்ல. போரை ஐரோப்பிய சமூகம் எப்படி எதிர் கொள்கிறதோ அப்படி இந்தியச் சமூகம் எதிர் கொள்ளாது.

பண்பாட்டுப் பின்புலங்கள், சமயப் பின்புலங்கள், நிலவியல் பின்புலங்கள், மொழியின் பாரம்பரியப் பின்புலங்கள் ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும் தனித்துவம் உள்ளதாக மாற்றுகின்றன. எல்லாவற்றையும் மொத்தமாக ஒரே ‘லேபிளு’க்குள் அடைக்க முடியாது. இராமன் கதையே ஊருக்கு ஊர் மாறுகிறதே. காரணம் பண்பாட்டுப் பின்புலங்கள் மாறுவதால் தானே?

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலம் உயர்கல்விப் பணியில் சிறப்புடன் செயல்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய கல்விப்பணி திருப்திகரமாக இருந்ததா?

நான் முன்னரே குறிப்பிட்டது போல இன்றும் நான் மனநிறைவு கொள்வது என் கல்விப்பணியைக் கருத்தோடு மேற்கொண்டேன் என்பதனால்தான். நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது என்ற உயர்ந்த கருத்தை நம்புகிறேன். அதன்படி நான் செயல்பட்டேன் எனத் தன்னிறைவு கொள்கிறேன்.

சந்திப்பு: பா. ஆனந்தகுமார்

- கவிஞர் சிற்பி