கோடையின் கடைசி
வெப்பத்தை விரட்ட
அடிக்கடி
வந்துபோகிறது மழை
மாமா வீட்டிலிருந்து புதுக்கல்யாணம் ஆன
அக்காவும் வந்தாயிற்று
ஆடியில் ஐசுவரியம் பெருக
அம்மன் கோவிலுக்கு
முதல் வெள்ளியில் பொங்கலும்
வச்சாச்சு
கடைசி வீட்டுப் பாட்டி
குளிருக்குச் சுள்ளி நறுக்கி கட்டுகள்
சேகரிக்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரரும்
ஹீட்டர பழுது பார்த்து மாட்டி விட்டார்
சும்மா அடிக்கிறது காத்து
சும்மா பெய்கிறது மழை
இது காத்து காலம்
வேப்பம் பழமும் நாவல்பழமும்
பொறுக்கி சாப்பிட்டு
நீல நாக்கை நீட்டும்
சிறுவர்களுக்கு மீண்டும்
அழகென வீசுகிறது ஆடிக்காத்து
எந்த காலத்திலும் சாராயம்
குடித்து விட்டு ஆடி வரும்
அப்பாவைப் பார்க்கும் நேரத்திலெல்லாம்
மனது ரசிக்காமல் போனது மழையை
ரசிக்காமல் விட்டது காற்றை
என்ன காலமிது?
அக்காவிற்கு
ஆடிவரிசை செய்ய வேண்டுமென
துன்பப்படும் அம்மாவிடம்
ஆட்டம் காட்டி
அடிக்கடி
அடுப்பில் ஏறிக்கொள்கிறது இரண்டுப் பூனைகள்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It