2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி, உள்ளே செங்கோலை நிறுவினார். அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் நாட்டில் செங்கோல் வைப்பது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, திறப்பு விழாவில் இந்த நாட்டின் முதல் குடிமகளே நிராகரிக்கப்பட்ட பேரவலம் நடந்தது. பாலிவுட் நடிகைகள் கூட நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மட்டும் அழைப்பு இல்லை. காரணம் அவர் ஒரு பழங்குடிப் பெண், அதை விட மிக முக்கியமாகக் கணவரை இழந்த பெண். ஒரு விதவையை நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைக்கக்கூடாது என்ற சனாதன சிந்தனையே அதற்குப் பின்னால் ஒளிந்திருந்தது. அதுதான் ஆரிய சனாதன மாடல்.

இப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமன விவகாரத்திலும் சனாதன தர்மம் என்றால் என்ன என்று சங்கிகள் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயார் ருக்மணி அம்மாளை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு அரசு நியமித்தது. சித்திரைத் திருநாள் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவரிடம் செங்கோல் வழங்குவதே கோயில் வழக்கமாக இருக்கிறது. கைம்பெண்ணாக இருந்தாலும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலாம், செங்கோலைப் பெறலாம் என்பதுதான் திராவிட மாடல்.

ஆனால் ருக்மணி அம்மாள் கணவரை இழந்தவர், எனவே அவரிடம் செங்கோலை கொடுக்கக் கூடாது என்று மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது என்றும் அவர் வாதிட்டார். ஆனால் மனுதாரரின் முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த நவீன காலத்திலும் இதுபோன்ற அபத்தமான கருத்துக்களை முன்வைப்பதா எனக் கண்டித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

சனாதனம் என்ற பெயரால் சமூகத்தை பின்னோக்கி இழுக்க முயலும் சங்கிக் கூட்டத்திற்கு சவுக்கடியாய் இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது. இச்சமயத்தில் இன்னொரு வரலாற்றையும் புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியம். 2001ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு தேர்வாணையக் குழு கோயில் நிர்வாக அதிகாரிகள் பதவிக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில் பெண்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற அறிவிப்பை எதிர்த்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நடத்தியவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி. அந்த வழக்கில் பெண்களுக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது. 22 பெண்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆனார்கள் என்பது வரலாறு.

இப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராலாம் சட்டப்படி, பெண்கள் சில கோயில்களில் ஓதுவார்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பண்பு மேலும் வளர்ந்து அர்ச்சகர்களாகவும் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். அதை நோக்கி சமூகத்தை முன்னகர்த்துவதே சமத்துவத்தை வளர்க்கும். அதை விடுத்துவிட்டு, மீண்டும் பின்னோக்கி இழுக்க முயற்சிப்பது ஆரிய சனாதன மாடல். அத்தகைய முயற்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிந்திருப்பது வரவேற்கத்தக்கது.

விடுதலை இராசேந்திரன்