கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர்.

இந்த முன் பிணை வழக்கின் விவாதம் ஏப்ரல் 22 அன்று காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிமன்றத்தில் தோழர் சங்கீதாவுக்கு ஆதரவாக தோழர் ப.பா.மோகன் மற்றும் திராவிடர் கழக வழக்கறிஞர் பாண்டியன் ஆகியோர் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது என்று ஆஜராகி வாதிட்டனர்.

முதன்மை அமர்வு நீதிபதி அவர்கள் பாஜகவினர் தோழர் சங்கீதா மீது நடத்திய கொலை வெறி தாக்குதல் காணொளியை பார்த்தார்.

அதன் பின்பு இந்த வழக்கில் முன்பிணை வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி முன் பிணை கோரி குற்றவாளிகள் விண்ணப்பித்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தோழர் சங்கீதா அவர்களுடன் கழகத்தின் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, தெற்கு பகுதி பொறுப்பாளர் ராமசாமி, 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, மாநகர அமைப்பாளர் தனபால், கழகத் தோழர் ராஜ்குமார், கழக சமூகவலைதளப் பொறுப்பாளர் பரிமள ராசன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்.

- பெ.மு. செய்தியாளர்