இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களைப் பாரபட்சமற்ற வகையில் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அப்படித்தான் நடந்து வருகிறதா என்பது எப்போதுமே கேள்வியாகவே இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் முழுமையாக ஆளும் கட்சியின் கிளை அமைப்பு போலச் செயல்படுவது என்பது இதுவரை நாம் காணாத காட்சியாகும்.

இந்தியா என்பது உலக அளவில் பரந்த நிலப்பரப்பு கொண்ட நாடுகளுள் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடுமாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றும் போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாக ஆளுங் கட்சியின் அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்படுவது என்பது உலக அளவில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகவே இருக்கிறது.

election commissionபாஜகவின் இந்தச் செயல்பாடுகள் இந்தியாவைக் கடந்து உலக அளவிலும் ஜனநாயகவாதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மதவாதத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்புணர்வையும் தூண்டுவது தேர்தல் பரப்புரைகளில் இது முதல் முறையன்று. இதற்கு முன்னர் சிவசேனாவின் பால்தாக்கரே இதுபோல வெறுப்புணர்வைத் தூண்டி பரப்புரை செய்த போது நீதிமன்றம் அவருக்கு தேர்தல் பரப்புரை செய்யத் தடை விதித்தது

இன்று இத்தனைக் கோடி மக்களுக்குப் பிரதமராக இருக்கும் மோடி, தொடர்ச்சியாக அப்படிப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். எத்தனையோ புகார்கள் கொடுக்கப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்யும் புகார்களுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை, தேர்தல் செயல்முறையின் நடுநிலையான ஆணையத்தின் பங்கைப் பற்றிக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. மிகத் தெளிவாக நரேந்திர மோடியை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கூடிய குற்றச்சாட்டை இவ்வளவு வெட்கக்கேடான வகையில் கையாளுவதற்கு ஒரு ஆணையம் எதற்கு?

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி என்பது உலகின் அரசியல் வரலாற்றில் பல்வேறு தவறான போக்குகளுக்கு முன்னுதாரணமான செயல்களை அரங்கேற்றி வருகிறது. அப்படி அரங்கேற்றப்பட்ட செயல்களுள் உச்சகட்ட செயல்தான் தேர்தல் ஆணையச் சீர்குலைப்பு ஆகும்.

டெல்லியில் இருந்து வெளியாகும் அரசியல் மற்றும் பண்பாட்டு மாத இதழான ‘The Caravan’, ஏப்ரல் மாத வெளியீட்டில் “The Taming of the Election Commission of India” என்கின்ற தலைப்பில் Cover Story (அட்டைப்படக் கட்டுரை), வெளியிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பாரதிய ஜனதா கட்சி எப்படியெல்லாம் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்தது, அதற்காக எப்போது இருந்து அதன் வேலைகளைத் தொடங்கியது என்பது தொடங்கி, தேர்தல் ஆணையராக அருண் கோயலின் அதிவேக நியமனம், தேர்தல் ஆணையர்கள் பதவி விலகல்கள், நேர்மையான தேர்தல் அதிகாரிகளின் பணியிடை நீக்கங்கள், வாக்கு இயந்திரக் குளறுபடிகள், எதிர்க் கட்சியினர் அரசியல் கைதுகள், NaMo தொலைக்காட்சி ஒளிபரப்பு என பல்வேறு விசயங்களில் தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு ஆளுங்கட்சிக்கு அடிபணிய வைக்கப்பட்டிருக்கிறது என்பது விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சியினர் என்ன செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்கின்ற திட்டமிட்ட முடிவுடன் தேர்தல் ஆணையம் இருக்கிறது. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது, இவ்வளவு நேரம் நெருப்பிலிருந்தும் வெடிக்கவில்லை என்றால இது வெடிகுண்டு அல்ல வெறும் குண்டு என்பதைப் போல, இவ்வளவு வெளிப்படையாக தேர்தல் விதிமீறல்கள் நடக்கும் போதும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றால், இது தேர்தல் ஆணையம் அல்ல.

தேறாத ஆணையம்!

- மா.உதயகுமார்

Pin It