தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்?

10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் நரேந்திர மோடி, சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத அவலத்தில் இருக்கிறார். பணமதிப்பழிப்பு கொண்டு வந்து பல லட்சக் கணக்கானோரை வரிசையில் நிற்க வைத்து, அதில் ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்க வைத்ததுதான் பாஜக ஆட்சியின் சாதனை. ஜிஎஸ்டியை திணித்து பல்லாயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்களுக்கு பூட்டுப் போட வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை. பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக வேளாண் சட்டங்களை திருத்தியமைத்து விவசாயிகளின் பெருங் கோபத்தை பெற்றதுதான் பாஜக அரசின் சாதனை. கொரோனா பேரிடரில் கொத்து கொத்தாக மக்கள் செத்து கொண்டிருந்தபோது வாசலில் நின்று கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னதுதான் பாஜக அரசின் சாதனை.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருகிறோம் என்று உறுதியளித்துவிட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்ததுதான் பாஜக அரசின் சாதனை. சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு, எல்லோர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்று வங்கிகள் 5 ஆண்டுகளில் 21,000 கோடி ரூபாயை வசூலிக்க வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை. இந்த சாதனைகளையெல்லாம் மக்கள் மத்தியில் பேசினால் 200 தொகுதிகள் கூட தேறாது. அதனால் இம்முறை சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதை விட, ஜாதியையும் மதத்தையும் சொல்லி பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வது என்று நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் அஜெண்டாவை கையிலெடுத்துவிட்டது பாஜக.modi in election campaign rajasthanபிரதமர் மோடியின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா.. பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.” என்றார்.

மோடி பேசிய கருத்துக்கள் அப்பட்டமான பொய், உண்மைக்கு மாறானவை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமான குழந்தை பிறப்பு விகிதத்தில் பெரிய மாறுபாடு இல்லை. தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு 5-இன் படி இசுலாமிய பெண்கள் கருத்தரித்தல் விகிதம் 2.36ஆக உள்ளது. இந்துப் பெண்கள் கருத்தரித்தல் விகிதம் 1.94ஆக உள்ளது. வெறும் .42 மட்டுமே வித்தியாசம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பெண்கள் கருத்தரித்தல் விகிதம் 1.8-ஆக மட்டுமே உள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 2.4ஆகவும், பீகாரில் 3.0ஆகவும் உள்ளது. ஆக, உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு நாட்டின் செல்வங்களை சுரண்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசிவிடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் 29 காசு மட்டுமே திரும்பி வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு 2.73 ரூபாயாகவும், பீகாருக்கு 7 ரூபாயாகவும் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

மோடியைத் தொடர்ந்து மற்ற பாஜகவினரும் மிகத் துணிச்சலாக சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர். நடைபெற இருக்கும் தேர்தலே 80 %-க்கும் 20%-க்கும் இடையிலான தேர்தல் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது 80% என்பது இந்துக்களின் மக்கள்தொகையாம். 20% என்பது இசுலாமியர்களின் மக்கள் தொகையாம். நடைபெற இருக்கும் தேர்தலானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டி. 80% இந்துக்கள் பாஜகவின் பக்கம் நிற்பார்கள் என்று கூறுவார்களேயானால், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதனால் தமிழ்நாட்டில் இந்துக்களே இல்லை என்று அறிவித்து விடுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அதேபோல மன்மோகன் சிங் நாட்டின் சொத்துக்களை இசுலாமியர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறார் என்றும் மோடி கூறினார். அதுவும் அப்பட்டமான பொய். மோடி குறிப்பிடும் வீடியோ 2006-இல் மன்மோகன் சிங் பேசியது. “தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு நாட்டின் வளர்ச்சி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்றுதான் மன்மோகன் சிங் பேசியிருந்தார். விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கான பகிர்வுதான் உண்மையான சமத்துவத்தைக் கொடுக்கும் என்பதுதான் மன்மோகன் சிங் பேச்சில் கூறியது.

இதற்கு முன்பு எந்த பிரதமரும் பேசத் துணிந்திராத எல்லைக்குச் சென்று, மிக அநாகரீகமான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் நரேந்திர மோடி. மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்ற ஒரு பிரதமர் சாதாரண காலங்களில் இப்படி பேசுவதே பேராபத்தானது. ஆனால் தேர்தல் காலத்தில் வெறுப்புப் பேச்சுக்களை பேசக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி மிகத் துணிச்சலாக இப்படி பேசியிருக்கிறார் நரேந்திர மோடி. இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு 16,000-க்கும் அதிகமானோர் மோடியின் பேச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பிவிட்டனர்.

மோடியின் பேச்சானது தேர்தல் நடத்தை விதிகள், (ஆ) பிரிவுகள் 123(3) மற்றும் (3 ஏ), 125 ஆகியவற்றை மீறுவதாகும். மக்கள் சட்டம், 1951 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153A-இன் படி இது தண்டிக்கத்தக்கது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், பி.யு.சி.எல். போன்ற மனித உரிமை அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளன. பிரதமர் மோடியை தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோள். ஆனால் தேர்தல் ஆணையமோ, இதுவரை எந்த நடவடிக்கையும் மோடி மீது எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது, பாஜகவின் கிளை போல செயல்படுகிறது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவாவது நடவடிக்கை எடுக்க துணிந்திருக்கலாம். ஆனால் அதற்கான சிறு முயற்சிகளில் கூட இதுவரை ஈடுபடவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கெனவே கோவையில் 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்து, அதை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் மந்தமாகவே செயல்பட்டது. நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் 4 கோடி ரூபாய் எடுத்துச்சென்று பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க தேவையில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறது அமலாக்கத்துறை. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் கடைசி நாளில் திரும்பப்பெறப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது. முன்மொழிந்த 4 பேரும் அது தங்கள் கையெழுத்து இல்லை எனக் கூறியதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்தது என்றால் நம்பும்படியாக இல்லை. தொடர்ந்து பலமுறை பாஜக வென்ற சூரத் தொகுதியிலேயே இதுபோன்ற மோசடித்தனங்களை அரங்கேற்றியே வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது. தேர்தல் தோல்வி அச்சத்தில் எத்தகைய கீழான நிலைக்கும் செல்ல பாஜகவும், மோடியும் தயார் என்பதையே இவை உணர்த்துகின்றன.

- விடுதலை இராசேந்திரன்