புனிதங்களின் வழியாக
பொருத்தமற்ற மணவாழ்வில்
தன்னை பூட்டிக்கொண்டவள்

வண்டி மாடு ஒன்று வண்ணத்துப்பூச்சியாக
ஆசைப்பட்டது போல
வாழ்வைப்பார்த்து
திகைத்து நிற்கிறாள்

நடுவானில்
பறந்து கொண்டிருக்கும் வேளையில்
எதிர்பாராமல்
எரிபொருள் தீர்ந்துவிட்ட
விமானம் போல

திரும்ப வழியில்லாமல்
அகவாழ்வின் அந்தரத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறாள்

காலம் காலமாக
விழுங்கப்பட்டு வந்த
தவளையொன்று
முதன்முறையாக
பாம்பை விழுங்கப்
பார்ப்பது போல

புதிராகவே
புறக்கணிக்கப்பட்ட
வாழ்வைப் பார்க்கிறாள்

முரண்பாடுகளின்
மூட்டைகளை
மூளையில் சுமப்பவள்
சந்திக்கும் யாரையும்
சமாதானத்திற்கு வாய்ப்பின்றி
சண்டைக்கு அழைக்கிறாள்

அவள் நிலத்தில் பெய்த
அமுத மழையெல்லாம்
அமில மழையாக
மாறுவது கண்டு
கண்ணீர் வற்றிப்போன
கண்களால் வெறித்துப்பார்க்கிறாள்

ஒருமுறை
மலர்வது போலவே
மறுமுறையும்
காதல் மலர்ந்தாலும்
மாலையாக முடியாமல்
மண்ணில் உதிர்கிறது

உதிர்ந்த மலர்களை
ஒன்று சேர்க்க முடியாமல்
வேரில் வீழ்வதை வேதனையோடு
வேடிக்கை பார்க்கிறாள்

- அமீர் அப்பாஸ்