அம்மா

வெகு தொலைவில் இருந்து

உன்னைத்

தொடர்பு கொள்கிற போதெல்லாம்

நம் வீட்டுத் தொலைபேசி,

துண்டிக்கப்பட்டதாகவே

எனக்குத் கேட்கிறது...

 

உன் குரல் கேளாமல் நான்

தவிக்கும் இந்த நிமிடம்

ஊரில் நீ

யாரிடமோ

தொலை பேசிக் கட்டணத்திற்கு

கடன் கேட்டுப் போயிருப்பாய்...

 

நம் கிணற்றின் குறுக்கே

போட்டிருக்கும்

ஒதிய மரக் கட்டை

கால் வைக்கும் போது

வழுக்கி விடுவதாக

என்னிடம் சொன்னாய்...

 

நான் அதை

மாற்றியமைத்து சீர் செய்யாமல்

விளையாட்டுத் தனமாகவே மறந்து

நகரம் வந்து விட்டேன்...

 

இப்பொழுதும் அந்த மரம்

எனக்குப் பயம் தருகிறது...

 

மாத முதல் வாரத்தில்

தபால் காரனை எதிர்ப்பார்த்து

நீ அந்த மாமர வேரிலேயே

அமர்ந்திருப்பாய்...

 

பணம் தராமல் அவன் உன்னை

கடந்து போகையில்

அதுவரை ஆசை சுமந்திருந்த

உன் மனசுக்கு எப்படியிருக்கும்?

 

ஒவ்வொரு வேளை

உணவு நேரத்தில்

என்னைப் பற்றி நீயும்

உன்னைப் பற்றி நானும்

நினைத்துக் கொண்டுதான் இருப்போம்...

 

ஆனாலும் இவ்வளவு தொலைவில்?...

 

உன் குரலை நானும்

என் குரலை நீயும்

கேட்டு மகிழவைக்கும்

நம் வீட்டுத் தொலைபேசி

தொடர்பு கொள்ளும் போது

துண்டிக்கப் பட்டிருந்தாலும்,

 

அம்மா!...

 

நீ நினைக்கும் போது

எனக்கு ஏற்படுகிற

தும்மலை

யாரால் துண்டிக்க முடியும்...?