ஏறி மிதித்தாலும் எட்டி உதைத்தாலும் குடி கெடுத்தாலும், கொன்றுப் போட்டாலும் கேட்பதற்கு நாதியற்ற கூட்டம் விவசாயிகள் என்று ஏசி அறையில் உட்கார்ந்து சதித்திட்டம் தீட்டிய தீவட்டி கும்பலுக்கு எதிராக விண்ணதிர முழக்கமிட்டு வீறு கொண்டு எழுந்து தங்களின் கதிர் அருவாக்கள் பயிர்களை மட்டுமல்ல அகம்பாவமும், ஆணவமும் பிடித்த உழைப்புறிஞ்சி கூட்டத்தில் கொட்டத்தையும் அறுக்கும் என நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள் பஞ்சாப், அரியாணா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள்.
முள்வேலிகளையும், தடுப்பரண்களையும், குழிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் தாண்டி நாட்டையே அடிமைப்படுத்தும் முதலாளிகளின் அடியாள்கள் வசிக்கும் டெல்லி கோட்டையை முற்றுகையிட ‘டெல்லி சலோ’ என மூர்க்கமாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
கடும் குளிரையும், கொரோனோ நோய்த் தொற்றையும் பொருட்படுத்தாமல் சாலைகளையே சமையல் கூடங்களாக்கி சாப்பாட்டோடு போராட்ட உணர்வையும் பகிர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதை தங்களது செயல்பாடுகள் மூலம் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்..
அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்ற மார்க்சின் வரிகள் உயிர்ப்போடு இருக்கின்றது போராட்ட களத்தில். விவசாய வர்க்கத்தோடு இன்னும் மோடி ஆட்சியில் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு குப்பை தொட்டியில் வீசி எறியப்பட்ட கோடிக்கணக்கான தொழிற்துறை பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்தால் நிச்சயம் டெல்லியின் கொடுங்கோலர்களின் பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
டெல்லியை நோக்கி முன்னேறும் ஒவ்வொரு விவசாயியையும் அடித்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்திவிட்டு இன்று என்ன செய்தாலும் விவசாயிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து பாசிச பிஜேபி அரசு பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் எப்போதுமே தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
சங்கிகளுக்கு எப்போதுமே தாங்கள் சொல்லும் பொய்களை மக்களை எளிமையாக நம்பவைக்க முடியும் என நினைத்து அடித்துவிடுவது வழக்கம்.
ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் பணம் போடுவோம், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்தை ஒழிப்போம், தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என சகட்டு மேனிக்கு கூச்சமே இல்லாமல் புளுகி ஆட்சிக்கு வந்த மோடி ஏற்கெனவே சுயமாக தொழில் செய்து கொண்டிருந்தவர்களையும் பணமதிப்புழப்பும், ஜிஎஸ்டி மூலம் தெருவுக்கு கொண்டுவந்ததோடு கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பையும் பறித்ததுதான் நிதர்சனத்தில் நடந்தது.
எனவே விவசாயிகள் மோடி அரசின் ‘மான் கி பாத்’ பித்தலாட்டங்களை இனியும் நம்பி மோசம் போக தயாராக இல்லை. அதனால் தான் தற்போது விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களையும் திரும்ப பெற வேண்டும் என போர்க்கோலம் பூண்டிருக்கின்றார்கள்.
பாராளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பாமல் மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி விவசாய விரோத மசோதாக்களை நிறைவேற்றியதோடு மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் குரல் வாக்கெடுப்பு என்ற மோசடி மூலம் இந்த மசோதக்களை மோடி அரசு நிறைவேற்றியது.
இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கும் அரசுக்குமான பிணைப்பு என்பது முற்றிலும் உடைக்கப்பட்டு விவசாயிகளுக்கும் கார்ப்ரேட் வர்த்தக சூதாடிகளுக்குமான பிணைப்பு வலுப்படுத்தப் பட்டிருக்கின்றது.
பெரும் பணம் படைத்த கார்ப்ரேட்கள் விவசாயிகளை ஒப்பந்தம் மூலம் தங்களது கொத்தடிமைகளாக மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு மாநில அரசின் மீது இருக்கும் உரிமையைப் பறித்து முழுக்க முழுக்க அவர்களை கார்ப்ரேட்களையும் சூதாடிகளையும் மட்டுமே நம்பி இருக்கச் செய்துள்ளது.
இத்தனை நாட்களாக விவசாயப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும்போது குறிப்பிட்ட விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், அதே போல விலை உயர்வை எதிர்கொள்ள இறக்குமதி செய்தும் சாமானிய பொதுமக்களை குறைந்த பட்சமாகவேனும் காப்பாற்றும் நடவடிக்கையை மாநில அரசுகள் எடுத்து வந்தன. இனிமேல் அதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் செய்துள்ளது
விவசாயிகளிடம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட சூதாடிகள் அதை எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியும். விவசாயப் பொருட்கள் களத்திற்கு வருவதற்கு முன்பே ஒப்பந்தப் பத்திரங்கள் பல கைகள் மாறி நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வை அடைந்திருக்கும்.
மேலும் ஒப்பந்த விவசாயமானது அடிப்படை உணவுத் தானியங்களை உற்பத்தி செய்யும் நிலங்களை ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்யவும், உணவு பதப்படுத்தும் தொழிலுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்யவும் திருப்பி விடுகின்றது.
விவசாயிகள் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எதை உற்பத்தி செய்யக்கூடாது என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளே தீர்மானிக்கும் சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகளின் சுதந்திரம் பறி போகிறது. உள்நாட்டு மக்களின் தேவை புறக்கணிக்கப்படுகின்றது. மண்ணுக்கேற்ற பயிர் முறையும் பாரம்பரிய விதைகளும் ஒழிக்கப்பட்டு விடும்.
அதுமட்டுமல்ல பெரும் கார்ப்ரேட்கள் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் கபளீகரம் செய்யும் போது சந்தையில் அவர்கள் வைத்ததுதான் விலையாக இருக்கும். இனி தன்னுடைய வாழ்க்கைக்கு கார்ப்ரேட்களை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவிநியோகத் திட்டம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும். விவசாயிகளிடம் இருந்து முதலில் அதிக விலைக் கொடுத்து அனைத்து விவசாயப் பொருட்களையும் கொள்முதல் செய்வதன் மூலம் உணவு தானியக் கொள்முதலில் இருந்து அரசுகளை ஒழித்துக் கட்டிவிட்டு தான் வைக்கும் விலைக்கு அரசுகள் தங்களிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொள்ள நிர்பந்திக்கும்.
உலக வங்கியின் திட்டமும், பன்னாட்டு பெருமுதலாளிகளின் திட்டமும், இந்திய பெரு முதலாளிகளின் திட்டமும் அவர்களின் ஏவல் நாய்களான ஆளும் வர்க்கத்தின் திட்டமும் அதுதான். இதனால் அரசானது பொதுவிநியோகத் திட்டத்தை இழுத்து மூடிவிட்டு வங்கிக் கணக்கில் மானியம் போட்டு விடுகின்றோம், அதை வைத்துச் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள் என ஒதுங்கிக் கொள்ளும்.
அதுவும் கூட 2012ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32 எனவும், நகர்ப் புறங்களில் ரூ.47 எனவும் வறுமைக் கோட்டுக்கான வரையறையாகத் தீர்மானித்துள்ளதால் இதற்கு மேல் சம்பாதிக்கும் ‘பணக்காரர்களுக்கு’ அதுவும் கிடைக்காது. இப்போது எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும்.
எல்லாவற்றையும் சந்தையே தீர்மானித்தால் என்ன ஆகும்? வழக்கம் போல இந்தியாவில் கார்ப்ரேட்களிடமிருந்து அதிக தேர்தல் நிதி வாங்கும் கட்சியாகத் தொடர்ந்து பாஜகவே நீடிக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் விவசாயிகளை அழித்தொழிக்க ஊருகாய் மாமிகள் கார்ப்ரேட்களின் ஆணைக்கிணங்க நிதி அமைச்சராக ஆக்கப்படுவார்கள். மோடியே இந்தக் கார்ப்ரேட் கூலிப்படைகளின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்.
உண்மையில் உழைக்கும் விவசாய வர்க்கத்தின் மீது இவ்வளவு வக்கிரத்தையும் குரூரத்தையும் உழைத்துச் சோறு திங்கும் வர்க்கத்தால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. உடல் உழைப்பை வெறுத்து, அதை அவமானமாகவும், அருவருப்பாகவும் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட புழுவினும் இழிந்த பிறவிகளால்தான் முடியும். அப்படிப்பட்ட பிறவிகளின் ஒட்டுமொத்த குவிமையமாக இன்றைய மோடி ஆட்சி இருக்கின்றது என்றால் அது மிகையில்லை.
விவசாயத் துறையில் அரசின் ஆதிக்கம் இருக்கும் போதே விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடக்கும் போது இன்று அதை முழுவதுமாக கார்ப்ரேட்கள் கைகளில் தாரை வார்ப்பதால் என்ன நடக்கும்?
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கொடிய நச்சு சூழலில்தான் பாசிச மோடி அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்றி இருக்கின்றது.
இன்று பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களின் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டமானது உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க உணர்வு இன்னும் செத்துப் போய்விடவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பாசிச மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் திமிரி எழுந்துகொண்டு இருக்கின்றார்கள். இது மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் துண்டாடி நாட்டை கார்ப்ரேட்டுகளுக்கு விற்கத் துடிக்கும் தேசத்துரோக கும்பலுக்கு ஒரு சாட்டையடியாகும்.
இன்று விவசாய வர்க்கத்தின் மத்தியில் வெடித்திருக்கும் இந்தப் போராட்டம் அனைத்து தரப்பு மக்களையும் ஆலிங்கனம் செய்துகொண்டு ஒரு பெரும் வெடிப்பாக வெடிக்கப் போவதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.
அதிகாரத்தை வைத்துக் கொண்டு கொட்டமடிக்கும் கோழைகள் ஓடி ஒளிய இடமில்லாமல் தவிக்கப் போகும் நாள் நிச்சயம் வரும். புரட்சியின் இடி முழக்கங்கள் பாசிச இருளை கிழித்துக் கொண்டு மின்னலென பாய்கின்றது. அது ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கும் வழி காட்டுகின்றது.
- செ.கார்கி