நீண்ட உழவர் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்த மூன்று வேளாண் சட்ட்டங்களையும் விலக்கிக் கொள்வதாக இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். இது உழவர் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள பெருவெற்றி!
மோதி இப்படி அறிவித்திருப்பது ஏன்? தான் செய்த பிழையை உணர்ந்து விட்டாரா? உழவர் தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா? உழவர்களின் போராட்ட உறுதியும் ஈகமும் மோதியின் மனத்தை மாற்றி விட்டனவா? இல்லை, இல்லை, இல்லை!
மோதி சொல்கிறார்: நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்களாம்! உழவர்களின் நலனுக்காகப் புதிய வேளாண் சட்டங்கள் இயற்றினார்களாம்! சிறு குறு உழவர்களுக்கு முன்னேற்றமும் அதிகாரமும் வழங்க நினைத்தார்களாம்! கிராமத்து வறியவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக, நல்லெண்ணத்துடன், நல்ல நோக்கத்துடன் சட்டம் கொண்டு வந்தார்களாம்!
மோதி கொஞ்சம் கூட சிரிக்காமல் சொல்கிறார்: சட்டம் கொண்டுவருவதற்கு முன்பு அனைத்து உழவர் சங்கங்களோடும் விவாதித்தார்களாம்! எவ்வளவு பெரிய பொய்? மோதி தன் வீட்டுத் தோட்டக்காரருடன் விவாதிருப்பரோ? வேளாண் சட்டங்களின் நற்பயனை உழவர்களுக்கு விளக்கிச் சொல்ல எவ்வளவோ முயன்றும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையாம்! ஆகவே பழி யார் மீது? போராடிய உழவர்கள் மீதுதான்! சட்டம் தொடர்பான தவறான தகவல் பரப்பப்பட்டு அதையே அவர்களும் நம்பி விட்டார்களாம்! ’இது எப்படி இருக்கு?’
இருந்தும், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வேளாண் சட்டங்களைப் புரிந்து கொண்டு ஆதரித்தவர்களுக்கு நன்றி சொல்கிறார் மோதி! யாரோ அவர் யாரோ? அண்ணாமலையா? அமித்சாவா?
மோதியின் பசப்பு வார்த்தைகள் உழவர்களிடம் அன்றும் எடுபடவில்லை, இன்றும் எடுபடாது! என்றும் எடுபடப்போவதில்லை. இந்த வெற்றி எளிதில் வரவில்லை. அமைதியான அறப்போராட்டத்தில் 700க்கு மேற்பட்ட உழவர்கள் உயிரீகம் செய்தார்கள். கடைசிக்கும் கடைசியாக உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் ஊர்வலம் சென்ற உழவர்கள் மீது வண்டியேற்றிக் கொன்றது காவிக்கும்பல். உழவர்களின் உயிரிழப்புக்காகவோ அவர்கள் அடைந்த துன்பங்களுக்காகவோ வருந்தி ஒரே ஒரு சொல் உதிர்க்கவில்லை மோதி! லக்கிம்பூர் கெரி படுகொலை பற்றியெல்லாம் திருவாய் திறக்க நேரம் ஏது?
போராடிய உழவர்களை சீன, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும், காலிஸ்தானியர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் எத்தனை எத்தனைப் பழிதூற்றல்கள்! சாலைகளில் பள்ளம் வெட்டியும், பெரிய பெரிய ஆணி அடித்தும், தடியடி, கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப் பீரங்கி ஏவியும் எத்தனை எத்தனை அடக்குமுறைகள்! மிரட்டல்கள், பிரித்தாளும் சூழ்ச்சிகள், பொய்மைகள் என்று எத்தனை எத்தனை இழிந்த உத்திகள்? அத்தனைக்கும் அயராமல் முகங்கொடுத்து உழவர்களின் ஒற்றுமையும் கட்டுப்பாடும் குலையாமல் வழிநடத்திய உழவர் கூட்டமைப்பான ’சம்யுக்த கிசான் மோர்ச்சா’வை எவ்வளவு போற்றினாலும் தகும். ஆனால் போற்றினால் மட்டும் போதாது! இனி வரும் களங்களுக்கு அவர்களிடமிருந்து பாடம் கற்கவும் வேண்டும்.
மோதி ஏன் பின்னடித்தார்? இடைத்தேர்தல்களில் விழுந்த அடி ஒலித்த எச்சரிக்கை மணி! வரவிருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தோற்று விடுவோம், அடுத்த நாடளுமன்றத் தேர்தலிலும் தோற்று விடுவோம் என்ற அச்சம்தான் காரணம் என்பது அண்ணாமலைக்கே விளங்கக் கூடிய எளிய செய்திதான்! மோதியை மக்கள் நம்ப மாட்டார்கள், வரப்போகும் தேர்தலிலும் தோல்வியே தருவார்கள் என்பது நல்ல உள்ளங்களின் நம்பிக்கை.
வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல மோதியின் குற்றம்! இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்காக எதிர்க்கட்சிகளைக் கருத்துக்கூட சொல்ல விடாமல் குடியாட்சியத்தைக் கேலிக்கூத்தாக்கியது குற்றமல்லவா? ஒவ்வொரு சிக்கலிலும் நாடாளுமன்றத்தில் குடியாட்சியம் கொல்லப்படுகிறதே, அது எவ்வளவு பெரிய குற்றம்!
மோதி உழவர்களுக்குச் செய்த நன்மைகள் என்று பீற்றிக் கொள்வதெல்லாம் பொய் மூட்டை! காட்டாக, உரத்துக்கு நல்கை (மானியம்) என்பார்! அது போய்ச்சேரும் இடம் உரநிறுவனங்களும் பெருங்குழுமங்களுமே என்பதுதான் உண்மை!
மோதி அரசின் வேளாண் சட்டங்களும் அவற்றுக்கு எதிரான உழவர் போராட்டங்களும் உலக அலவில் கவனம் பெற்றன. ஐநா உணவுரிமைச் சிறப்புக் குழு இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பிற்று. ஆனால் இப்போதும் மோதி மனம் வருந்தவில்லை, குணம் திருந்தவில்லை என்பதை மறந்து விடலாகாது.
மேலும், மின்சாரத் திருத்தச் சட்டம், விளைபொருளுக்கு சிறும ஆதரவு விலை (MSP) போன்ற பல சிக்கல்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை. மூன்று வேளாண் சட்டங்கள் வழியாகச் செய்ய நினைத்தவற்றை வேறு வழிகளில் செய்ய பாசக அரசு முயலும் என்ற எச்சரிக்கை உணர்வும் தேவை.
இறுதியாக, உழவர் போராட்ட வெற்றியின் வரலாற்று முகன்மை மக்கள் போராட்டங்களின் மாவல்லமையை உணர்த்தியிருப்பதாகும். நம்மால் பாசிச ஆற்றல்களைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை உழவர்கள் விதைத்துள்ளார்கள். நீரூற்றி வளர்க்க நாமனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
- தியாகு