farmers protestநமக்கான விவசாய கொள்கைகளை முன்வைப்போம்! முன்னெடுப்போம்!

அன்பிற்கினிய விவசாயிகளே! தமிழக மக்களே!

விவசாயிகள் விரோத கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடி பாசிஸ்ட் மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விவசாயத்தை தாரை வார்க்கும் 3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ‘நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்’ என்று வடிவேல் சினிமாவில் சொன்னதுபோல, ‘நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான்’ என்று சொல்லித் திரியும் எடப்பாடி பழனிச்சாமி, மோடியின் எடுபிடி எடப்பாடி அரசு இந்த மூன்று சட்டங்களை வரவேற்றுள்ளது.

விவசாயிகளும், தமிழக மக்களும் இந்த மூன்று சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வதும், பெரும் விவசாய போராட்டங்களை, தமிழக அளவிலான மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், விவசாயிகளுக்கான, தமிழகத்திற்கான விவசாய கொள்கையை முன்வைத்து, முன்னெடுப்பதும் மிக, மிக அவசியமாகும்.

மூன்று சட்டங்கள்

  1. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், 2020
  2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
  3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020

மோடி கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களில், முதல் மற்றும் இரண்டாவது சட்டங்களை முதலில் பார்ப்போம்.

விளைபொருள்களின் விலை நிர்ணயம், சேமிப்பு கிடங்குகள், விவசாய விளை பொருள்கள் வணிகம் என அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைப்பதே மோடியின் முதல் இரண்டு சட்டங்கள்

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 என்ன சொல்கிறது? ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி விவசாயிகள் மட்டும்தான் விளைபொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கலாம் என்று இருந்தது. இடை தரகர்களோ, வணிகர்களோ விவசாய விளை பொருள்களை இருப்பு வைக்கக் கூடாது. மீறி வைத்தால் அது பதுக்கலாகும். அப்படி அவர்களுக்கு உரிமையளித்தால் அது உணவு பொருள்களை பதுக்குவதற்கு வழி வகுக்கும். மேலும் செயற்கையான உணவு பொருள்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பார்கள்.

இதனால் மக்கள் உணவு பொருள்களை வாங்குவது சிக்கலாகும். ஏனெனில் உணவு பொருள்கள் மக்களுக்கு அத்தியாவசியம் என்ற அடிப்படையிலேயே ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டம்’ இருந்தது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிப்பார்கள். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காது என்பதால் இதனைத் தவிர்க்கவே இச்சட்டம் இருந்தது. இச்சட்டம் நடைமுறையில் இருந்தபோதே இடைத் தரகர்களும், பெரும் வணிகர்களும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்குத்தான் வாங்கினார்கள். உணவு பொருள்களை பதுக்கினார்கள்.

இந்நிலையில் பாசிஸ்ட் மோடி என்ன செய்திருக்க வேண்டும்? பதுக்கலை தடுக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் செய்திருக்க வேண்டும்.

இதற்கு மாறாக, கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடி கொண்டு வந்துள்ள ‘அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் (2020)’ இடைத் தரகர்கள், வணிகர்கள், முக்கியமாக பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் விவசாய விளைப் பொருள்களை சேமித்து (பதுக்கி) வைத்துக் கொள்ளலாம் என சட்ட உரிமையை அளிக்கிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இனி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காது. அடி மாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து விளைப் பொருள்களை வாங்குவார்கள், மக்களுக்கு மிக அதிக விலைக்கு விற்பார்கள். இதனால் மிகவும் பாதிக்கப்படபோவது விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து மக்களும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் மட்டும் விற்க அனுமதி என்று விவசாய விளைப் பொருள்களைத்தான் விற்றார்கள்.

மற்ற பொருள்கள் இல்லாமல் உயிர் வாழலாம். ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்கள் இல்லாமல் மக்கள் உயிர் வாழ முடியாது. அத்தகைய உணவுப் பொருள்களைத்தான் ‘இனிமேல் அத்தியாவசிய பொருள்கள் இல்லை’ என பாசிஸ்ட் மோடி அறிவிக்கின்றான். இதுதான் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்.

இந்த அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் பெரிய, பெரிய சேமிப்பு கிடங்குகள் (பதுக்கல் கிடங்குகளை) கட்டுவார்கள். இந்த பதுக்கல் கிடங்குகளைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்குகிறது.

மோடியின் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசாங்கம் உணவு பொருள்களுக்கான சேமிப்பு கிடங்குகளைக் கட்டுவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ளும். இருக்கும் பாதுகாப்பு கிடங்குகளையும் பராமரிக்காமல் விட்டு விடுவார்கள். எப்படி பி.எஸ்.என்.எல். அலைபேசி அரசு நிறுவனத்தை காணாமல் செய்தார்களோ, அப்படி செய்து விடுவார்கள்.

படிப்படியாக இடைத்தரகர்கள், விவசாய விளைப் பொருள்களை விற்பனை செய்யும் மண்டிகள், சிறு வணிகர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள். பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் மட்டுமே மிகப் பெரும் அரக்கனாக வளர்ந்து நிற்கும். இதைத்தான் பாசிஸ்ட் மோடி அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளார்.

இரண்டாவது சட்டம் : விவசாய விளைப்பொருள்கள் வியாபார மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப் படுத்துதல்) சட்டம் (2020) என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்யலாம் என்கிறது. இச்சட்டமானது ‘தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் 1987’ மற்றும் APMC (Agricultural Product Market Commitee) போன்றவை விவசாயிகளை அடிமையாக்கி வைத்திருப்பதைப் போல சித்தரிக்கிறது.

கொஞ்சமாவது விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது என்றால் அது மேற்கூறியவற்றின் மூலமும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலமும் தான். இச்சட்டம் மேற்கூறியவற்றை விவசாயிகளுக்கு எதிரானதாக காட்டுவதுதான் வேடிக்கை. உண்மையில் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்குத்தான் மேற்கூறியவை எதிரானதாகும்.

இந்தச் சட்டம் சொல்வதுபோல் எந்த விவசாயி, அதுவும் பெரும்பான்மையாக உள்ள சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், யார் வெளி மாநிலங்களுக்குச் சென்று விற்பனை செய்கிறார்கள்? பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களைத் தாங்கள் கடன் வாங்கிய கடன்காரர்களிடமும், இடைத் தரகர்களிடமும் தங்கள் பகுதியிலேயே விற்று விடுகின்றனர்.

6 அல்லது 7 சதவீத விவசாயிகளே அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கின்றனர். மேலும் மண்டி எனப்படும் சிறு கொள்முதல் நிலையங்களில் விற்கின்றனர். தமிழகத்தில் தஞ்சை, பஞ்சாபில் விவசாயிகள் பின்னணியில் இருந்து வந்தவர்கள் பெருமளவில் உரிமம் பெற்று மண்டிகளை நடத்தி வருகின்றனர். இந்த மண்டிகளால்தான் மாநில அரசுகளுக்கு 7 சதவீதம் பரிவர்த்தனை வருமானம் கிடைக்கின்றது.

கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடி சொல்வது போல் பெரிய வணிகர்களால் பீகாரில் திறக்கப்பட்ட தனியார் மண்டிகள் அறுவடை காலத்தில் மிகக் குறைவான விலைக்கு விவசாயிகளிடமிருந்து மக்காச் சோளத்தை வாங்கியது. இதனால் டன் ரூபாய். 2,200-/ஆக இருந்த மக்காச்சோளம் டன் ரூபாய். 1,300-/ஆக வீழ்ச்சியடைந்தது.

இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், பீகாரில் மக்காச் சோளத்தை வாங்கிய பெரிய வணிக நிறுவனங்கள், பாஞ்சாப், அரியானாவில் அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்றனர். ‘அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்தால் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும்’ என்று பாசிஸ்ட் மோடி சொல்வதன் லட்சணம் இதுதான்.

பாசிஸ்ட் மோடியின் உண்மையான நோக்கம் விளைப் பொருள்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கி கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக படிப்படியாக, ‘அரசு கொள்முதல் நிலையங்களை’ ஒழிப்பதற்கான சதியைக் கொண்டதுதான் இந்தச் சட்டத் திருத்தம். சிறு, சிறு மண்டிகளை ஒழித்து பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்வதுதான் இச்சட்டம் கொண்டு வருவதன் உண்மை நோக்கமாகும்.

கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடிக்கு விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு நியாயமான விலையை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே எண்ண மிருந்தால், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை சட்டமாக்கி இருக்க வேண்டும்.

சுவாமிநாதன் கமிட்டி கீழ்வரும் பரிந்துரையை முன்வைத்தது:

‘விவசாயத்திற்கான ஒட்டுமொத்த செலவு மற்றும் அதோடு ஐம்பது சதவீதத்தை அதிகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும்’ என்கிறது.

2014 தேர்தலில் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை ஆட்சிக்கு வந்த 12 மாதங்களில் நிறைவேற்றுவேன் என கார்ப்பரேட் எடுபிடி மோடி வாக்குறுதி அளித்தான்.

பின்பு 2015ஆம் ஆண்டில் 12 மாதங்களில் இதை நிறைவேற்ற முடியாது என உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தான் மோடி.

2016ஆம் ஆண்டில் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ‘இதுபோல ஒரு வாக்குறுதியை நாங்கள் எப்பொழுதுமே தரவில்லை’ என்றான்.

இதுதான் கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடி விவசாயிகள் மீது காட்டும் அக்கறையாகும்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை கிடைக்க வேண்டுமென்று மோடி உண்மையிலேயே நினைத்திருந்தால் ‘சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை’ சட்டமாக்கி இருக்க வேண்டும். அதைவிட்டு விவசாயிகள் மாநிலத்தின் எல்லா பகுதியிலும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று சொல்வது, விவசாயிகள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல, கார்ப்பரேட் முதலாளிகள் மீது கொண்ட அக்கறையினாலேயே, கார்ப்பரேட் வணிக நிறுவனங்களிடம் விவசாயிகளை காவு கொடுக்கத்தான் என்பதை நாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால், விவசாயிகளாகிய நம்மைப் போல் இளிச்சவாயர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.

இந்த இரண்டாவது சட்டத்திருத்தம் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விவசாய விளை பொருள்களை வாங்கலாம், விற்கலாம் என்பதற்காகத்தான். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. மாநிலங்களுக்கு ஏற்கனவே கிடைத்து வந்த வருவாயும் இல்லாமல் போகும். மாநிலங்களில் படிப்படியாக நியாய விலைக்கடைகள் (ரேசன்) இழுத்து மூட வேண்டிய நிலையும் வரும். இதை மாற்ற விவசாயிகள் கீழ்வரும் கொள்கையை முன்வைத்து - முன்னெடுக்க வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய, விளைபொருள்களை சந்தைப்படுத்த, சேமிப்பு கிடங்குகளை விவசாயிகள் கட்டுப்பாட்டில் அமைக்க, தாங்கள் எந்த விளைப் பொருள்களை விளைவிக்கலாம் என்பதை விவசாயிகளே தீர்மானிக்க - விவசாயிகள் செய்ய வேண்டியது –மாவட்டந் தோறும் முழு அதிகாரம் படைத்த “விவசாய ஒழுங்கமைப்பு குழுக்களை” அமைப்பதுதான் ஒரே வழி!

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ‘விவசாய ஒழுங்கமைப்பு குழுக்களை’ உருவாக்கிக் கொள்ளவேண்டும். தொடர்ந்த வளர்ச்சிப் போக்கில் ‘விவசாய ஒழுங்கமைப்பு குழு’ உறுப்பினர்கள் விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்டவர்களாக அமைக்கலாம்.

இந்த “விவசாய ஒழுங்கமைப்பு குழு”வானது விளைப் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யவேண்டும். சந்தைப்படுத்துதல் சம்மந்தமாக திட்டம் வகித்து, விளைபொருள்களை சந்தைப் படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசிடம் மான்யத்துடன் கடனுதவி பெற்று அல்லது அரசே முன்வந்து விவசாய ஒழுங்கமைப்பு குழுவுடன் இணைந்து ஒப்பந்தங்கள் செய்து சேமிப்பு கிடங்குகளை கட்டியமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன விளைபொருள்களை விளைவிக்கலாம் என்பதைத் திட்டமிடும் குழுவாகவும் இது இருக்க வேண்டும். சந்தைப்படுத்துதலுக்கு அரசின் முழு ஒத்துழைப்பு பெற விவசாய போராட்டங்கள் மூலம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மூன்றாவது சட்டம் : விவசாயிகளுக்கு (அதிகார மளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்த மற்றும் விவசாய சேவைகள் சட்டம் (2020)

இந்தச் சட்டம் ஒப்பந்த விவசாய முறையை சட்டப்பூர்வ மாக்குகிறது. இந்தச் சட்டப்படி ஒப்பந்தங்களை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்வது கட்டாயமில்லை. விருப்பமிருந்தால் செய்யலாம். தற்போது விவசாயிகள் தரகர்களுடன் வாய் வார்த்தையை நம்பி ஒப்பந்தம் செய்வதுபோல.

ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருளுக்கு நல்ல விலையைப் பெறலாம் என்று நம் காதில் பூ சுற்றுகிறார் கார்ப்பரேட் எடுபிடி பாசிச மோடி.

நம் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதா? இல்லவே இல்லை. கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராடி அரசை நிர்ப்பந்தித்து கரும்பிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி உள்ளனரே தவிர, எந்த சர்க்கரை ஆலையும் விவசாயிகளுக்கு நல்ல விலையைக் கொடுத்தது கிடையாது. சர்க்கரை ஆலை முதலாளிகள் தங்களுக்கான சந்தை போட்டியில் கரும்பிற்கு விலை ஏற்றியதும் இல்லை. இதை தமிழக விவசாயிகள் நன்கு அறிவோம்.

ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்ட கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய 14 நாள்களில் அவருக்கு ‘கரும்பு கட்டுப்பாடு நிர்ணய விலையை’ சட்டப்படி வழங்க வேண்டும். 2019ஆம் ஆண்டில் திருவலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 44.50 கோடியை நிலுவை வைத்துள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள சர்க்கரை ஆலையின் 3 பிரிவுகளும் அரசு அறிவித்த ஆதார விலையின்படி ரூ. 1,450 கோடி பாக்கி வைத்துள்ளன. கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் 4 சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும்

திரு. ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பு கொடுத்தது. இந்த நிறுவனம் வங்கிகளுக்கு வட்டியும் முதலுமாக ரூ. 149.36 கோடி பாக்கி வைத்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ. 125 கோடியை நிலுவை வைத்துள்ளது. விவசாயிகளின் பெயர்களில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 360 கோடியும் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. இப்படி தமிழகத்தில் பல்வேறு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வைத்துள்ள நிலுவை தொகை பற்றிய விவரங்களையும், விவசாயிகள் பெயரில் செய்த வங்கி மோசடிகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஒப்பந்த விவசாயத்தின் லட்சணம் குறித்து விவசாயிகள் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களை நினைவுபடுத்தவே மேற்கூறிய விவரங்கள்.

கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடியின் ஒப்பந்த சட்டத்தின் படி இனி கரும்பு மட்டுமல்ல, உருளைக்கிழங்கு (ஏற்கனவே வட மாநிலங்களில் லேஸ் தயாரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் ஒப்பந்த விவசாயம் செய்கின்றனர்) கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை என பல காய்கறி விவசாயிகளுடனும், நெல் சாகுபடியாளர்களுடனும், மாந்தோப்பு, தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுடனும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் நிலை வரும்.

லாப வெறிப் பிடித்த பிசாசுகளான கார்ப்பரேட் முதலாளிகள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளிடம் தொடர்ந்து குறைந்த விலையில் பொருள்களைத் திருடிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்காமல் பல லட்சம் கோடிகளை நிலுவையில் வைத்து கொள்ளையடிப்பார்கள். விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி வங்கி மோசடி செய்வார்கள். திடீரென்று திவால் என்று அறிவித்து விவசாயிகளுக்கு பட்டை நாமம் போடுவார்கள்.

இதைவிட அபாயகரமான ஒன்று உள்ளது. அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் ஒப்பந்தப்படி விவசாயிகளிடம் தங்கள் சந்தைக்கு என்ன தேவையோ அதையே விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள். கடன் கொடுத்து பின்பு கடனைச் சுட்டிக்காட்டி மிரட்டி குறைந்த விலைக்கு விளைபொருள்களை வாங்குவார்கள். விவசாய விளைபொருள்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகளே விலை நிர்ணயம் செய்வார்கள்.

கடனைத் திருப்பி செலுத்த முடியாத விவசாயிகள் மீது வழக்கு போட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சேவைக்காகவே அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் மூலம் நிலத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள். இப்படிப் படிப்படியாக விவசாய நிலங்கள் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு, ‘முதலாளித்துவ பண்ணைகளாக மாற்றப்படும்.’ இப்படி முதலாளித்துவ பண்ணைகளாக மாறும் செயல் தொடர்ந்தால் விளைவு மிக மோசமானதாக அமையும்.

இன்று நமது தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 92%க்கும் மேல் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளிடமே உள்ளது. இதுபோல் இந்திய அளவில் 82%-க்கு மேல் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளிடமே சொத்துடமை உள்ளது. இந்திய அளவில் விவசாய உற்பத்தியில் உள்ளவர்கள் கிட்டத்தட்ட 55% பேர் உள்ளனர். இந்தியாவில் வேளாண் சார்ந்து ரூ. 16,58,700 கோடி பணம் புரளுகிறது.

அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் 42% பேர் இருந்தனர். ஆனால் அதன்பின் முதலாளித்துவ பண்ணைகள் அமைக்கப்பட்ட பிறகு இன்று 1.3% பேர் மட்டுமே விவசாய உற்பத்தியில் உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 9150 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்தியாவில் 3946 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் மட்டுமே உள்ளது. இன்று 78 கோடி மக்கள் வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர். முதலாளித்துவ பண்ணைகள் படிப்படியாக அதிகரித்தால் வேளாண் நிலங்களிலிருந்து சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், விவசாய கூலிகள் விரட்டியடிக்கப்படுவார்கள். சில பத்தாண்டுகளில் 50 முதல் 60 கோடி விவசாயிகள் வேளாண் நிலத்திலிருந்து விவசாய துறையிலிருந்து வீதிக்குத் தூக்கி யெறியப்படுவார்கள்.

அமெரிக்காவில் 41% இருந்த விவசாயிகள் 1.3%ஆக குறைந்த போதும் விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட 38.7% விவசாயிகளை நகர்புற தொழில் வளர்ச்சி உள்வாங்கிக் கொண்டது. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு.

நகர்ப்புறங்களில் சரியான தொழில் வளர்ச்சி இல்லாததாலும், கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடியால் முட்டாள்தனமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், நிஷிஜி வரி விதிப்பாலும் பல கோடி சிறு முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் வீதியில் தூக்கியெறியப்பட்டு வேலையில்லா பட்டாளத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் வேலையில்லா திண்டாட்டம் மிகப் பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் 50 அல்லது 60 கோடி விவசாயிகளும் சேர்ந்தால் நிலைமை என்ன என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சிறு, குறு தொழில் முனைவோராக, தொழிலாளிகளாக, விவசாய கூலிகளாக, சிறு, குறு, விவசாயிகளாக உள்ள தலித் மக்களே இச்சிக்கலினால் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். உழைக்கும் மக்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இது மட்டுமல்லாமல் மோடியின் விவசாய சட்டத்தால் விவசாய விளைபொருள்களை விற்று வரும் பல கோடி சிறு வணிகர்கள் பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள். இப்படி வீதிக்கு வந்த பல கோடி சிறு வணிகர்களும் வேலையில்லா பட்டாளத்தில் இணைவார்கள்.

விவசாய விளை பொருள்களின் விலையோ கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறியால் பல மடங்கு உயரும். இன்று பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைத்த பிறகு விலை உயர்வை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதுதான் விவசாய விளைபொருள்களுக்கும் ஏற்படும். உணவு பொருள்களை வாங்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள்.

வேலையில்லா திண்டாட்டமும் உணவு பொருள்களின் விலை உயர்வும் வருங்காலத்தில் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும். இதுதான் பாசிஸ்ட் மோடியின் மூன்று விவசாய சட்டங்கள் மக்களுக்கு அளிக்க இருக்கும் பெரும் நன்மை... பரிசு...

இத்தகைய பேரழிவிலிருந்து மக்களை, விவசாயத்தை, விவசாயிகளை, சிறு வணிகர்களைக் காப்பாற்ற மக்கள் சனநாயக விவசாய சங்க மையம் கீழ்வரும் மூன்று கொள்கைகளை முன் வைக்கின்றது.

I. முதலாளித்துவ பண்ணைகளை அமைக்கும் மோடியின் சதியை முறியடிப்போம்! சிறு, குறு, நடுத்தர விவசாயிகளை முதலாளிகளாக மாற்றும் கூட்டுப் பண்ணைகளை கட்டியமைப்போம்!

கார்ப்பரேட் முதலாளிகளின் முதலாளித்துவ பண்ணைகளை நிறுவும் சதியை முறியடிக்க வேண்டுமென்றால், தொடர்ந்து கடுமையாக உழைத்தும் எந்தப் பலனும் கிடைக்காமல் அவதியுறும் சிறு, குறு, நடுத்தர, பணக்கார விவசாயிகள் ஒன்று பட்டு ஒவ்வொருவரின் சொத்து எவ்வளவு பங்கு கூட்டுப் பண்ணையில் இணைந்துள்ளது என்பதற்கேற்ப, லாபத்தில் பங்கு பிரித்துக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

சிறு, சிறு துண்டுகளாக உள்ள நிலங்களில் விவசயாம் செய்யும் போது நம்மால் பெரிய அளவிலான விவசாயத்தையோ, சந்தைப்படுத்து தலையோ, லாபத்தையோ பெற இயலாது. இதனடிப் படையிலும் நாம் கூட்டுப்பண்ணைக்கான அவசியத்தை உணர வேண்டும்.

பெரும் கார்ப்பரேட் பண முதலைகளின் சதியை முறியடிக்க சிறு, குறு, நடுத்தர விவசாயிகளாக பிரிந்து விவசாயம் செய்தால் முடியாது. சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஒன்றுபட்டு (பெரும் விவசாயத்தை) கூட்டுப் பண்ணையை அமைத்துப் பெரும் சக்தியாக மாறும்போது மட்டுமே நம்மால் கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்கொள்ள முடியும்.

தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி விவசாயிகளை சுய உதவிக் குழுக்களை போல் குழுவாக சேர்ந்து வாருங்கள், கூட்டுப் பண்ணை அமைக்கலாம், அதற்கான உதவிகளை அரசு செய்யும் என்றார். பின்னர் வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

ஆனால் இத் திட்டத்தினை விவசாயிகளிடம் பரவலாக கொண்டு சென்று நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கு எத்தகைய பெரிய முயற்சியையும் இரு அரசுகளும் செய்யவில்லை. ஏனென்றால் இவர்களுக்கு விவசாயிகள் மீது பெரிய அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.

தற்போது பாசிஸ்ட் மோடியால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று விவசாய சட்டத்தால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளை உணர்ந்து, இத்தகைய கூட்டுப் பண்ணைகள் பற்றிய திட்டத்தை விவசாயிகள், விவசாய சங்கங்கள் பரவலாக விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் தங்களுக்குள் குழுக்களை அமைத்து கூட்டுப் பண்ணையை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசை செய்ய வலியுறுத்த வேண்டும். அரசு செய்ய மறுத்தால் போராடி உதவிகளைப் பெறவேண்டும்.

இதுவே சிறு, குறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின் எதிர் காலத்திற்கான, முன்னேற்றத்திற்கான, கார்ப்பரேட் முதலாளிகளை முறியடிப்பதற்கான ஒரே வழி என்பதை உணரவேண்டும். இதை செய்யத் தவறினால் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் நிலத்தை பறி கொடுத்த நாம் வீதிக்கு வருவது உறுதி என்பதை விவசாயிகள் உணரவேண்டும்.

II. கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்கு வழி வகுக்கும் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களைப் புறக்கணிப்போம்! அறிவியல் அடிப்படையிலான இயற்கை வேளாண்மையை நடைமுறை சாத்தியமாக்குவோம்!

விவசாயிகளின் கடுமையான உழைப்பை கார்ப்பரேட் முதலாளிகள் வீரிய வித்து விதைகள் விற்பனை, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனையின் மூலம் கொள்ளையடிக்கின்றனர். உழுதவன் கணக்கு பார்த்தால், உழக்குக் கூட மிஞ்சாது என்ற நிலையே உள்ளது. வீரிய வித்துகள், இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தினால் அதிக லாபம் பெறலாம் என்ற மாயையிலிருந்து விவசாயிகள் வெளி வரவேண்டும்.

நவீன அறிவியல் அடிப்படையிலான புதிய, புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் மூலம் இயற்கை விவசாயத்தை நம்மால் செய்ய முடியும். இயற்கை விவசாயத்தை நம்மால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கையிலிருந்து விவசாயிகள் வெளிவரவேண்டும்.

இன்று இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாலும், இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களுக்கு நல்ல சந்தை இருப்பதாலும், கார்ப்பரேட் முதலாளிகள் இதிலும் இறங்கி உள்ளனர். இயற்கை உரங்கள், இயற்கை வேளாண் பொருட்களை கவர்ச்சியாக்கி, மிக அதிக விலைக்கு விற்று கொள்ளையடிக்கின்றனர்.

எனவே, விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் உள் நுழைவதைத் தடுக்க வேண்டும். கூட்டுப் பண்ணை அமைத்தல், சந்தை படுத்துதல், இயற்கை உரங்களை தயாரித்தல் போன்ற வற்றை விவசாயிகளே செய்ய முன்வரவேண்டும்.

இயற்கை வேளாண்மை செய்வதில் அனைத்து விவசாயிகளும் உறுதியுடன் செயல்படவேண்டும். அறிவியல் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையை முறியடிக்க முடியும். விவசாயிகளும் தங்கள் உழைப்பிற்கேற்ற பலனை, லாபத்தை ஈட்டமுடியும்.

III. கார்ப்பரேட் வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுவதை, விவசாய விளை பொருள்களை விற்பதைப் புறக்கணிப்போம்! ‘விவசாய ஒழுங்கமைப்பு குழுவை’க் கட்டியமைப்போம். சிறு வணிகர்கள் குழுக்கள், சிறு தொழில் முனைவோர் குழுக்களுடன் ஒன்றிணைந்து ‘புரிந்துணர்வு குழுக்களை’ உருவாக்குவோம்!

ஒவ்வொரு மாவட்ட அளவிலும் முழு அதிகாரம் படைத்த ‘விவசாயிகள் ஒழுங்கமைப்பு குழுவை’க் கட்டவேண்டும். இந்த விவசாய ஒழுங்கமைப்பு குழுவானது, அந்தந்த மாவட்டத்தின் மண் வளம், நீர் வளம், சந்தைப்படுத்துதல், இதுவரை பயிரிட்டு வந்துள்ள பயிர் வகைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்தந்த மாவட்டத்தில் விவசாயிகள் எத்தகைய விளை பொருள்களை விளைவிக்கலாம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாய ஒழுங்கமைப்பு குழுக்கள் கூட்டுப் பண்ணை, அறிவியல் அடிப்படையிலான இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து விவசாயிகளிடம் பரப்புரை செய்து இதை நடைமுறை சாத்தியமாக்க வேண்டும்.

விவசாய விளைப்பொருள்களை சந்தைப்படுத்த ‘சிறு வணிகர்கள் குழுக்களுடன்’ ஒன்றிணைந்து ‘புரிந்துணர்வு குழுக்களை’ அமைத்து, விளைப் பொருள்களைத் திட்டமிட்ட வகையில் சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாய விளைப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். விவசாயிகளே விளைப் பொருள்களுக்கு ‘விலை நிர்ணயம்’ செய்யவேண்டும்.

‘விவசாய ஒழுங்கமைப்பு குழுக்கள்’ அரசுடன் ஒப்பந்தங்கள் போட்டு பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகளை நிறுவுவதுடன், தேவைக்கேற்ப விவசாய விளைப் பொருள்களை ‘அரசு கொள்முதல் நிலையங்களில்’ விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்பந்தங்களைச் செய்யவேண்டும்.

மேலும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாய விளை பொருள்களை வாங்கிப் பல்வேறு விளைப் பொருள்களை தயாரித்துக் கொள்ளையடிப்பதைத் தடுக்க, ‘விவசாயிகள் ஒழுங்கமைப்புக் குழுவானது’ விவசாய விளைப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக சிறு வணிகர் குழுக்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்வதோடு நில்லாமல், சிறு தொழில் முனைவோர் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன விளைப் பொருள்கள் அதிகமாக விளைகின்றதோ அந்த விளைப் பொருள்களை வைத்து செய்யக்கூடிய உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவவேண்டும்.

கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாம்பழம் அதிகமாக விளைவதால் மாம்பழத்தை வைத்து தயாரிக்கக்கூடிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை, இவ்விரு மாவட்டங்களில் பரவலாக நிறுவலாம். நிலக்கடலை அதிகமாக உற்பத்தியாகும் பகுதியில் நிலக்கடலையை வைத்துச் செய்யக்கூடிய வேர்க்கடலை உருண்டை, வேர்க்கடலை பர்பி... இன்னும் இதுபோன்ற பல்வேறு உணவு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளையும் சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி, அரோட்டிமாவு, குளுக்கோஸ் போன்ற வற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அதிக தென்னந்தோப்புகள் இருப்பதால் தேங்காயில் இருந்து செய்யக்கூடிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளை நிறுவவேண்டும்.

இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து விளையும் விளைப்பொருள்களை வைத்து உணவு பொருள்களைத் தயாரிக்கும் பல்வேறு சிறு அளவிலான தொழிற்சாலைகளைப் பரவலாக அமைக்கவேண்டும். ‘விவசாயிகள் ஒழுங்கமைப்பு குழுக்கள்’ தொழில் முனைவோர் குழுக்கள் மற்றும் அரசுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் இயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் தயாரிக்கவும் சிறு தொழில் முனைவோருடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட் எடுபிடி, பாசிஸ்ட் மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான மூன்று விவசாய சட்டங்களை முறியடிப்போம்! மக்கள் சனநாயக விவசாய சங்க மையம் முன் வைக்கும் விவசாயிகளுக்கான மூன்று விவசாய கொள்கைகளை நடைமுறை சாத்தியமாக்குவோம்!

விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிறு, குறு தொழில் முனைவோரும் தமிழக மக்களும் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரான தலித்துகளும், பெண்களும் கார்ப்பரேட் எடுபிடி பாசிஸ்ட் மோடியின் மூன்று விவசாய சட்டங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விவசாயிகளை, விவசாய நிலங்களை, விவசாயத்தை, விவசாய விளை பொருள்களை தாரை வார்க்கும் சதி என்பதை உணர்ந்து உடனடியாக பெரும் விவசாயிகள், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் முறியடிக்க வேண்டும்.

மக்கள் சனநாயக விவசாய சங்க மையம் முன் வைத்துள்ள மூன்று விவசாய திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கான வேலைகளை விவசாயிகளும், விவசாய சங்கங்களும் முனைப்புடன் எடுக்க முன் வரவேண்டும்.

நமக்கான வழியை நாமே உருவாக்க வேண்டும். இம் மூன்று விவசாய கொள்கையை விவசாயிகள் வேகமாகவும், துணிவுடனும், நம்பிக்கையுடனும், தேவைப்படின் விவசாய போராட்டங்களை முன்னெடுத்தும் நடைமுறை சாத்தியமாக்க வேண்டும் என்று மக்கள் சனநாயக விவசாய சங்க மையம் அறை கூவி அழைக்கிறது.

- மக்கள் சனநாயக விவசாய சங்க மையம் 

Pin It