2020 ஜூன் 5 அன்று மோடி அரசாங்கம் மூன்று அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அவை இந்திய விவசாயத்திற்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவிருக்கின்றன. அந்த மூன்று அவசரச் சட்டங்கள் பின்வருமாறு:
1. அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தில் மாற்றங்கள்:
இந்தச் சட்டம் 1955 இல் கொண்டு வரப்பட்டது, அது உணவு தானியப் பங்கு வர்த்தகர்கள் அல்லது நிறுவனங்கள் இருப்பு வைத்து கொள்ளக் கூடிய வரம்புகளை நிர்ணயிக்கவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கத்துக்கு அதிகாரமளித்தது.
தற்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் முந்தைய சட்டத்தின் பற்களைப் பிடுங்குகிறது. இந்த அவசரச் சட்டத்தின்படி, போர், பஞ்சம், இயற்கைப் பேரிடர் இன்னபிற அசாதாரண காலங்களில் மட்டும் அரசாங்கம் தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் வழங்கலை ஒழுங்குபடுத்த முடியும். மேலும் தோட்டப் பயிர்களின் விலைகள் 100 விழுக்காடு உயரும்போதும், பிற அழுகிப் போகாத இனங்களின் விலைகள் 50 விழுக்காட்டுக்கும் மேல் உயரும்போதும் மட்டுமே விலைக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
இருப்பு வைப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவது என்பது பெரிய வியாபாரிகள் (அல்லது வியாபாரக் கூட்டுச் சங்கங்கள்) ஏராளமாக இருப்பு வைப்பதற்கும், அதன் மூலம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதன்மூலம் விலைகளை உயர்த்தி, ஊகவணிகத்தில் ஈடுபடவும் வழிவகுக்கும், இதனால் ஏகபோக வர்த்தகர்களும் நிறுவனங்களும் பெரும் கொள்ளையில் ஈடுபடவும் வழிவகுக்கும். இது ஒன்றும் வெகுதொலைவில் இல்லை. அத்தியாவசியச் சட்டத்திற்குள் அடங்கி இருந்தாலும் வெங்காயம் விடயத்தில் அது ஏற்கெனவே அடிக்கடி நிகழ்ந்துள்ளது.
2. விவசாய உற்பத்திப் பொருட்கள் சந்தைக் குழுக்கள் சட்டங்கள் அகற்றப்படுதல்
இரண்டாவது அவசரச் சட்டம் இந்தியாவில் விவசாய விளைபொருளை விற்பதற்கும் வாங்குவதற்கும் உள்ள தற்போதைய நடைமுறை முழுவதையும் அகற்றுகிறது. விவசாய உற்பத்திப் பொருட்கள், சந்தைக் குழுக்கள் மாநில அரசாங்ககளால் உரிமம் பெற்ற நபர்கள் அல்லது கமிசன் முகவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நாடெங்கும் 2477 முதன்மைச் சந்தைகளும் 4843 துணைச் சந்தை வளாகங்களும் இருந்தன.
இந்த முறையின் நோக்கம் பேராசைக்கார, சக்தி வாய்ந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து மோசடி செய்வதைத் தடுப்பதாகும். இந்தச் சந்தைகள் அரசாங்கம் தானியக் கொள்முதல் செய்வதற்கான நிலையங்களாக ஆகியிருந்தன. கடந்த பல ஆண்டுகளாக வியாபாரிகளும் முகவர்களும் கூட்டுச் சங்கங்கள் அமைத்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலையைக் குறைக்கச் செய்தனர். ஆனால் இதைத் தடுப்பது என்ற பெயரில் அரசாங்கம் இப்போது இராட்சத விவசாயப் பெருங்குழுமங்கள் விவசாயிகளிடமிருந்து
நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு அனுமதித்துள்ளது.
3. ஒப்பந்த விவசாயம்
மூன்றாவது அவசரச் சட்டம், உணவு பதனிடுதல், அல்லது விவசாய வர்த்தக அல்லது பெருங்குழும நிறுவனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனமும் விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாய ஏற்பாட்டைச் செய்து கொள்ள அனுமதிக்கிறது.
இந்த அவசரச் சட்டங்களின் பின்விளைவுகள்
இந்த மூன்று அவசரச் சட்டங்கள் ஒரு திட்டத்தின் பகுதியாகக் காணப்பட வேண்டியவை. ஒப்பந்த விவசாயத்திற்கான அனுமதி மற்றும் சந்தைக் குழுக்கள் அகற்றச் சட்டங்கள், இருப்பு வைப்புக் கட்டுப்பாட்டை அகற்றும் மாற்றி அமைக்கப்பட்ட அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத் திருத்தத்துடன் சேர்த்துக் காணப்பட வேண்டும். இது பெரும் வியாபாரிகளுக்கும் (கார்பொரேட்) பெருங்குழுமங்களுக்கும் விவசாய வர்த்தகத்தில் ஏகபோகத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகை செய்கிறது.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதால் அவற்றுக்கிடையிலான போட்டி விவசாயிகளுக்கு நல்ல விலைகள் கிடைக்க வழிவகை செய்யும் என்று இந்தச் சீர்திருத்தத்தின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். அதில்தான் விடயமே அடங்கியுள்ளது – இராட்சதக் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதில்லை; ஏனென்றால் அவை மிகப் பெரியவை, ஏராளமான நிதியை வைத்திருப்பவை, விலைப் போட்டியில் ஈடுபடுவது அவர்கள் அனைவருக்கும் அழிவைக் கொண்டு வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவை விலை விடயங்களில் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன; உண்மையில் அவை தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துச் சந்தையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன.
இந்திய விவசாயத்தில் இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு, விவசாய வர்த்தகக் கார்ப்பரேட்டுக்கள், குறிப்பாக அந்நிய நிறுவனங்கள் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரியவை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, 2017 – 2018 இல் மராட்டிய மாநில சந்தைக் குழுக்கள் அனைத்திலும் விவசாய உற்பத்திப் பொருட்களின் வருகையின் மொத்த மதிப்பு ரூ.51,093 கோடியாகும், அதே நேரத்தில் ஒரு தனிப்பட்ட இராட்சத கார்ப்பரேட்டின், அதாவது, பாயர்-மான்சான்டோ குழுமத்தின் (இப்போது பாயர் குழுமம் என்று அறியப்படுகிறது) மொத்த விற்பனை 36,742 மில்லியன் யூரோக்கள் ஆகும், அதாவது 2.97 இலட்சம் கோடியாகும். வேறு சொற்களில் சொல்வதானால், பாயர் மராட்டிய மாநிலம் முழுவதிலும் விளையும் விவசாய உற்பத்திப் பொருட்களை வாங்கும் அளவுக்கு மிகப் பெரியதாகும்.
ஆகவே, இந்த இராட்சதக் கார்ப்பரேட்டுக்கள் ஒரு பகுதி முழுவதிலும் உள்ள சிறிய விவசாயிகளுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடியும். மேலும் அவர்களிடம் ஏராளமான நிதி குவிந்து கிடப்பதால் தொடக்கத்தில் விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க முன்வரலாம். இருப்பு வைப்பு வரம்புகள் அகற்றப்படுவதால், சந்தைக் குழுக்கள் சட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதால், விவசாயிகளிடமிருந்து அவர்கள் மிகுதியான அளவில் தானியங்களை வாங்கி, இருப்பு வைத்துக் கொள்ள முடியும். அதன்மூலம், சில ஆண்டுகளிலயே பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் படிப்படியாக விவசாய உற்பத்திப் பொருட்களை வாங்குவதில் ஏகபோகத்தைப் பெறுவார்கள். கொள்முதலில் ஏகபோகத்தை அடைந்ததும் அவர்கள் சிறிய வியாபாரிகள் அனைவரையும் விரடியடித்து விட்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான விலைகளைக் குறைக்கத் தொடங்குவார்கள். விவசாயிகளுக்கு அவர்கள் கேட்கும் விலைக்கு விற்பதைத் தவிர வேறு வழியிருக்காது.
இதுதான் வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில எடுத்துக்காட்டுக்களை இங்கே காணலாம்: பத்தாண்டுகளுக்கு முன்பு, 30 பில்லியன் டாலர்கள் உலகச் சந்தையில் மூன்றாம் உலகக் காபி உற்பத்தியாளர்கள் 10 பில்லியன் டாலர்கள் ஈட்டினர். இப்போது அவர்கள் 60 பில்லியன் டாலர் உலகச் சந்தையில் 6 பில்லியன் டாலர் மட்டுமே ஈட்டுகிறார்கள். ஒட்டுமொத்த ஆப்பிரிக்க உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாகும் ஓர் ஆப்பிளின் சில்லரை விலையில் 9 விழுக்காடு மட்டுமே பெறுகிறார்கள். இதுபோன்ற எடுத்துக்காட்டுக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நீண்ட காலப் போக்கில், இது சிறிய விவசாயிகளைப் பிழிந்தெடுத்து, விவசாயத்தைக் கைவிட இட்டுச் சென்றுவிடும். மேலும் விவசாய வணிகக் கார்ப்பரேட்டுக்கள் அவர்களுடைய நிலத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெற்று, பெரும் பண்ணைகளை நிறுவுவார்கள். இதுதான் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதாகும்.
இரண்டாவதாக, இப்போது மண்டிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நமது இலட்சக்கணக்கான சிறிய வியாபாரிகளை வணிகத்திலிருந்து இது விரட்டியடித்து விடும். மண்டிகள் கூட்டுச் சங்கங்கள் அமைத்து அதன் மூலம் விவசாயிகளை மோசடி செய்யலாம் அல்லவா என்று பலரும் வாதிடலாம். ஆனால் இதில் பெரிய தீங்கு எதுவும் இல்லை; ஆனால் இந்த மண்டிகள் பெரிய கார்ப்பரேட்டுக்களால் அகற்றப்படும்போது, நிலைமையை இன்னும் மோசமாகி விடும். ஊழலை அகற்றுவதற்காக சந்தைக் குழுக்களை மூடுவது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுவதாகும். அதற்குப் பதிலாக, விவசாயிகளின் அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கும் ஜனநாயகமான சந்தைக் குழுக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, இது ஏற்கெனவே பட்டினியையும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் நமது நாட்டில் அதிகரிக்கச் செய்யும். மண்டிகளில் தான் அரசாங்கக் கொள்முதல்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. அதனால், அவற்றைக் கலைத்துவிட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்குத் தனியார் வர்த்தகர்களை அனுமதிப்பது என்பது, ஏற்கெனவே மோடி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்திலேயே செய்வதற்குத் திட்டமிட்டிருந்தபடி, உணவு தானியங்களை அரசாங்கம் கொள்முதல் செய்வதை அனுமதிப்பதையும், படிப்படியாக பொது விநியோகத் திட்டத்தை ஒழிப்பதையும் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றம் செய்வதையும் நிறைவேற்றுவதை நோக்கிய நடவடிக்கையாகும்.
இது அரசாங்கத் தலையீட்டின் மூலம் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கான விவசாயிகளின் அனைத்து நம்பிக்கைகளுக்கும் முடிவு கட்டுவதாகும். மேலும் பொது விநியோகத் திட்டத்தை ஒழிப்பது வர்த்தகர்கள் உணவு தானிய விலைகளில் ஊகவணிகத்தில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும். பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதே உணவு தானிய விலைகளில் ஊகவணிகத்தை ஒழிப்பதற்குத்தான். இது அரசாங்கம் ஏழை மக்களுக்கு அளிக்கும் ரொக்க மானியத்தை அதிகரிக்கச் செய்யும். பொது விநியோகத் திட்டத்தை ஒழிப்பதன் மூலம் உணவு மானியத்தைக் குறைக்கலாம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தைச் சாத்தியமில்லாமல் செய்துவிடும். இதன் மூலம் நாட்டில் உள்ள கோடானு கோடி ஏழை மக்களின் துன்பம் மிகப் பெரிய அளவுக்கு அதிகரிக்கும்.
இறுதியாகவும் மிகவும் முக்கியமாகவும், இது நமது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும், அதன்மூலம் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக ஆகும்.
1991 இல், உலகமயமாக்கலின் தொடக்கத்தில், அந்நியப் பெருங்குழுமங்களுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்து விட்டதிலிருந்தே, இராட்சத விவசாய வணிகப் பெருங்குழுமங்கள் இந்திய விவசாயத்தைக் கையகப்படுத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றன. பொருளாதாரத்தின் இதர துறைகளில் நுழைய அந்நியப் பெருங்குழுமங்களை அனுமதித்தாலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் விவசாயத்திற்குள் அவை நுழைவதைத் தடுத்து வந்தன. இப்போது, ஊரடங்கலைப் பயன்படுத்தி, தேச விரோத பா.ஜ.க.அரசாங்கம் அந்த நிறுவனங்கள் இந்திய விவசாயத்தைக் கைப்பற்றுவதற்கு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
உலகின் மிகச் சிறந்த வளமான விவசாய நிலம் இந்தியாவில் இருப்பதால் அந்நிய விவசாய வர்த்தகப் பெருங்குழுமங்கள் இந்தியாவின் விவசாயத்தை கைப்பற்றுவதற்கு விரும்புகின்றன. ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதால், இந்தியாவில் பற்பல வகைப்பட்ட காய்கறிகளும் பழங்களும் உணவு தானியங்களும் பயிறு வகைகளும் எண்ணெய் வித்துக்களும் விளைகின்றன. இன்னொரு புறம், பெரும்பாலான வளர்ச்சி பெற்ற நாடுகள் உலகின் குளிர்ப் பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அவற்றால் இப்படிப்பட்ட வகைப் பயிர்களை வளர்க்க முடியாது, வளர்த்தாலும் ஆண்டு முழுக்கவும் வளர்க்க முடியாது. ஆகவே, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய விவசாய வர்த்தகப் பெருங்குழுமங்கள் இந்திய விவசாயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்குத் தேவையான பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேநேரத்தில் இந்தியாவை அந்த நாடுகளின் உணவு தானியங்களை இறக்குமதி செய்யவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
இன்றைய சூழலில், இந்த முறை இந்தியாவுக்குப் பயனளிப்பதாகத் தெரியலாம். ஏனென்றால் இந்தியா மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யவும் குறைந்த விலை உணவு தானியங்களை இறக்குமதி செய்யவும் முடியும் என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு கட்டுக்கதை. சர்வதேச மூலதனம் அவிழ்த்து விடும் இன்னொரு புதிய தாராளவாதக் கட்டுக்கதையாகும். ஏனென்றால் விவசாய வர்த்தகப் பெருங்குழுமங்கள் விவசாய வர்த்தகத்தின் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் வசம் வைத்திருக்கும். நாம் மலர்களையும் பழங்களையும், காய்கறிகளையும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யும்போது, ஏற்றுமதிகளும் விலைகளும் அவர்களுடைய காட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், நமது ஏற்றுமதிகளுக்கு குறைந்த விலைகளையே நிர்ணயிப்பார்கள்.
நாம் உணவு தானியங்களை இறக்குமதி செய்யும்போது, அந்த வர்த்தகமும் அவர்கள் கையிலேயே இருக்கும் என்பதால் நாம் அதிக விலைகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தோடு மட்டும் முடிந்து விடாது. இந்த விடயத்தில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், அத்தியாவசியப் பண்டங்களில் மிகவும் அடிப்படையான தேவை உணவு தானியங்கள் என்பதால், மலர்களும் பழங்களும் அந்த அளவுக்கு முக்கியமானவை அல்ல என்பதால், நமது உணவுத் தேவைகளுக்கு வளர்ச்சி பெற்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்ததும், நமது இறையாண்மையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும், அவர்கள் விரும்பும் எந்த நிபந்தனையையும் நம் மீது திணிக்க முடியும்.
நாம் எதையும் மிகைப்படுத்தவில்லை. இது ஏற்கெனவே ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது – சகாராவிற்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் அவ்வப்போது பஞ்சம் ஏற்படுவதற்குக் காரணம் இந்த நாடுகள் உணவு தானியங்களுக்குப் பதிலாக உணவு சாராத பயிர்களை உற்பத்தி செய்வதை நோக்கித் திருப்பி விடுவதற்கு மேற்கத்திய பெருங்குழுமங்களை அனுமதித்ததுதான்.
இவ்வாறாக, இந்த மூன்று அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் தேசியவாத பா.ஜ.க. அரசாங்கம் அயல்நாட்டு விவசாய வர்த்தகப் பெருங்குழுமங்களை இந்திய விவசாயத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டைப் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுவதற்கும் வழி வகுக்கிறது. மேலும் கொரோனாப் பெருந்தொற்றின் ஊரடங்கலைப் பயன்படுத்திக் கொண்டு, பா.ஜ.க. திருட்டுத்தனமாக இதைச் செய்துள்ளது.
விவசாய சங்கங்கள், நாட்டின் சாமானிய மக்களுடன் சேர்ந்து, இந்த விவசாயம் தொடர்பான அவசரச் சட்டங்களை எதிர்ப்பதும் இவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் கோருவதும் மிகவும் முக்கியமாகும். விவசாய கார்பொரேட் பெருங்குழுமங்கள் நுழைவதற்கு ஆதரவான அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு நாம் மிகுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு, விவசாயத் துறையில் அரசாங்க முதலீட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; விவசாயத்துக்கான சாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டும்; விவசாய ஆராய்ச்சியில் அரசாங்கத்தின் முதலீட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றில் விவசாய வர்த்தகப் பெருங்குழுமங்களின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரச் செய்ய வேண்டும்; பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்தி, அதை நாடு தழுவியதாக விரிவாக்க வேண்டும்.
(நன்றி: Janatha Weekly)
ஆங்கிலத்தில்: நீரஜ் ஜெய்ன்
தமிழில்: நிழல்வண்ணன்