farmers protest delhiதொடங்கியது விவசாயிகளின் போர்

‘டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் கையாளாக இருந்து இந்திய விவசாயத்தைச் சூறையாட, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடும் மோடி அரசை எதிர்த்து, டெல்லியை முற்றுகையிடப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் கடந்த நவம்பர் 26 முதல் டெல்லியும் அதன் அருகாமைப் பகுதிகளும் போராட்டக் களமாகவே மாறியுள்ளன.

2019 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சாப் விவசாயிகள் இரயில் பாதைகளில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஆனால், இந்திய அரசு விவசாயிகளோடு பேசத் தயாரில்லை. நாடு முழுவதும் செப்டம்பர் 25ஆம் நாள் மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ இந்திய அளவில் போராட்டங்களை இப்போது ஒருங்கிணைக்கிறது. விவசாயிகளின் போராட்டங்களை மோடி அரசு கண்டு கொள்ளாத நிலையில், போராட்டம் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

பஞ்சாப் - அரியானா மாநில விவசாயிகள நவம்பர் 26 முதல் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்லத் தொடங்கினர். அரியானாவில் ஷம்பு பகுதியில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினரின் தடுப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, காவல்துறையினரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீர்த் தாக்குதல்கள் ஆகியவற்றை மீறிப் பேரணி தொடர்ந்தது.

பல்லாயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள் நவம்பர் 27-இல், டெல்லி - ஹரியானா மாநில எல்லையான சிங்கு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எதிரி நாட்டுப் படைகளை எதிர்கொள்ளுவது போலச் சாலைகளின் குறுக்கே குழிகளை அமைத்து, மணல் மூட்டைகள் ஏற்றப்பட்ட வாகனங்களைக் குறுக்கே நிறுத்தி, கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பீய்ச்சி அடித்தல் உள்ளிட்ட தாக்குதல் வழி முறைகளோடு, விவசாயிகளைக் காவல் படைகள் தடுத்து நிறுத்த முற்பட்டன. இதை எதிர்கொண்ட விவசாயிகள் கற்களையும், கம்புகளையும் வீசத் தொடங்கிய நிலையில் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

விவசாயிகளைக் கைது செய்து வைக்க டெல்லி அரசிடம் ஒன்பது மைதானங்களை டெல்லி காவல்துறை கோரியபோது, அவற்றை அளிக்க டெல்லி அரசு மறுத்துவிட்டது.

டெல்லி சாலைகளில் முகாமிட்ட விவசாயிகள், நவம்பர் 27 அன்று, மத்திய அரசின் காவல்படைகளின் தடைகளை உடைத்தெறிந்து, டெல்லி எல்லையைச் சென்றடைந்தனர். அடக்கு முறைகளைக் கைவிட்டு “டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்; இராமலீலா மைதானத்தில் விவசாயிகளைப் போராட அனுமதிக்க வேண்டும்; வேளாண்மையை ஒட்டு மொத்தமாகக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

“வேளாண்மையை ஒழித்துக்கட்டும் மூன்று சட்டங்களையும் நீக்கும் வரையில் போராட்டங்கள் தொடரும்” என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

டெல்லி எல்லையில் முகாமிட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர், ராமலீலா மைதானங்களைப் போராட்டம் நடத்த ஒதுக்கக் கோரியும் மத்திய அரசு மறுத்த நிலையில், டெல்லி எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் விவசாயிகளால் நிரப்பப்பட்டு விட்டன. ஏழு நாட்களாகத் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது.

அங்கேயே விவசாயிகள் சமைத்துச் சாப்பிடுகின்றனர். டெல்லியில் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் புராரி பகுதிக்குப் போய் போராட்டம் நடத்தினால் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

அமித் ஷாவின் பசப்பு வார்த்தைகளை விவசாயிகள் புறந்தள்ளி விட்டார்கள். நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த முன்வராவிட்டால் டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளையும் முற்றுகையிட்டு மூடுவோம் என்று நவம்பர் 30ஆம் நாள் விவசாயிகள் நிபந்தனை விதித்தனர்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லியில் குவிந்து, வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்குக் காரணம் என்ன? இந்தச் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்ததற்கான காரணங்கள் என்ன?

மத்திய அரசு கூறுவதுபோல, அது இயற்றிய வேளாண் சட்டங்கள் இந்திய வேளாண்மையையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாக்குமா? அல்லது விவசாயிகள் கூறுவது போல இந்திய வேளாண்மையையும், விவசாயிகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுமா? - என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வேளாண்மையே விற்கிறது மோடி அரசு !

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அனைத்துத் தொழில் துறைகளையும், வணிக நிலையங்களையும் முடம் ஆக்கியது மோடி அரசு. அடுத்து ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்று சொல்லி, ஜி.எஸ்.டி (Goods and Service Tax) மூலம் மாநிலங்களின் வரி வருவாயை முற்றிலுமாகப் பறித்துக் கொண்டது. இப்போது விவசாயத்தின் மீதான மாநிலங்களின் உரிமையையும், வருமானத்தையும் பறித்துக் கொள்கிறது.

பொருளாதாரப் பிரச்சனைகளை முறையாகக் கையாள மோடி அரசுக்குத் தெரியாது என்று முன்னமே பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது, 101 இலட்சம் கோடிகளுக்கு மேல் இந்தியக் கடன் உயர்ந்துவிட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த பணத்தையும் இதற்கு முன்னமே வற்புறுத்திப் பறித்துக் கொண்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை கூறி விற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இனி விற்பதற்கு ஏதுமில்லை என்று கருதிய மோடி அரசின் கண்ணில் இந்திய விவசாயம் பட்டுவிட்டது.

அன்னிய முதலீடுகளைப் பெறுவது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய விவசாயத்தையும் இப்போது கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கிறது.

வேளாண் சட்டங்களை அவசரமாகக் கொண்டுவர வேண்டியதன் தேவைதான் என்ன ?

கொரோனா பெருந்தொற்று முடக்கத்துக்கு ஆளாகும் முன்பே இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து விட்டது. கிட்டத்தட்ட இந்தியா திவாலாகிவிட்டது. இப்போது இந்தியாவின் கடன் 101.3 இலட்சம் கோடி. இதை ஒரு காலத்திலும் இந்திய அரசால் அடைக்கமுடியாது. மோடி பதவியேற்ற பிறகு ஐந்து ஆண்டுகளில் 28 இலட்சம் கோடி யைக் கடனாகப் பெற்று ஊதாரிச் செலவு செய்துள்ளது, இந்திய அரசு. இந்நிலையில் கொரோனா முடக்கம் வேறு.

இப்போது அன்னிய முதலீடுகளை ஈர்த்து, நிலைமையைச் சமாளிக்க முடியுமா என்று இந்திய அரசு எத்தனிக்கிறது. முதலீடு செய்வதற்கான தகுதி பற்றி ஆய்வு செய்து ‘ரேட்டிங் கிரேடு’ (தரம்) பற்றிய அறிவிப்பை அளிக்கக் கூடிய 'மூடிஸ்' நிறுவனம், மொத்தம் உள்ள 10 கிரேடுகளில் 10-வது இடத்தில் (3 என்ற கடைசி இடத்தில்) இந்தியா இருப்பதாக அறிவித்துவிட்டது. அந்நிய முதலீடுகளைப் பெற எதையும் செய்ய மோடி அரசு தயாராகிவிட்டது.

ரிசர்வு வங்கியையும் சூறையாடிய மோடி அரசு, தன் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள, 2018 சூன் நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் இருந்த 9.63 லட்சம் கோடியைப் பிடுங்கிவிட முயற்சி செய்தது. 2016-லேயே, ரிசர்வ் வங்கியை சூறையாட மோடி முயன்ற நிலையில், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகினார்.

அடுத்து உர்ஜித் படேல் 2018 திசம்பரில் பதவி விலகினார். ‘நிதி ஆயோக்’ துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா 2017-இல் பதவி விலகினார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சூன் 2018-இல் பதவி விலகினார். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த பகுதிநேர உறுப்பினர் சுர்ஜித் பல்லா டிசம்பர் 2019-இல் பதவி விலகினார்.

இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை களையும், தாறுமாறான ஊதாரிச் செலவுகளையும் கண்டு, அரண்டு போய் இவர்கள் தப்பியோடினார்கள். கோளாறு மிக்க பொருளாதாரக் கொள்கையால் இந்தியப் பொருளா தார வளர்ச்சிக் குறியீடு இப்போது 2-க்கும் கீழே வந் துள்ளது.

அரசின் சொத்துக்களை விற்றுத் தின்னும் மோடி அரசு!

பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள 257 நிறுவனங்களை பங்கு விற்பனை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் விற்றுவிடத் துடியாய் துடிக்கிறது மோடி அரசு. பல நிறுவனங்கள் முன்னமே விற்கப்பட்டுவிட்டன.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், கார்கோ மோவர் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், டிஎச்.டிஎச் நிறுவனம், நீப்கோ நிறுவனம், கன்கார் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனம் என்று ஏராளமான நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் மீது அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிடும் அளவிற்குத் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. திட்டமிட்டே பிஎஸ்என்எல் நிறுவனம் நட்டத்திற்குள் தள்ளப்பட்டது.

ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனமாகிய இந்தியன் இரயில்வே தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இரயில்கள் கார்ப்பரேட்டுகள் வசம் அளிக்கப்பட்டுவிட்டன. நாட்டின் மிகப் பெரும் பொருளாதார நிறுவனமாகிய இந்திய இரயில்வே 13,523 இரயில்களைத் தினமும் ஓட்டுகிறது.

இந்திய அரசு இரயில்வே நட்டத்தில் இயங்குவதாகக்கூறி தனியாருக்கு விற்கிறது. இராய்ட்டர்ஸ் நிறுவனம் 52 பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழுவின் மூலம் ஆய்வு செய்து, இந்தியாவில் 2019-20 நிதி யாண்டு காலத்தில் 2.1 மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று அறிவித்தது.

மோடி அரசின் அடுக்கடுக்கான ஊதாரிச் செலவுகள் !

அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இந்திய வளங்களை சூறையாடிக் கொள்ள வருமாறு பன்னாட்டுப் பெருமுதலாளிகளை அழைப்பதைத் தலையாயப் பணியாக கொண்டிருந்தார் மோடி. 5 ஆண்டுக் காலத்தில் 825 நாட்கள் பிரதமர் மோடி பயணத்திலேயே இருந்தார். சராசரியாக 10 நாட்களுக்கு ஒருமுறை வெளிநாடு சென்றார்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை உள்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். குறைந்த மதிப்பீடாக, மோடி யின் பயணச் செலவு 2021 கோடி. இதுமட்டுமன்றி 90,000 கோடி செலவில் புல்லட் இரயில், 4,800 கோடி செலவில் விளம்பரங்கள், 3,600 கோடி செலவில் சிவாஜி சிலை, 2,989 கோடி செலவில் பட்டேல் சிலை, 4,200 கோடி செலவில் கும்பமேளா, 7304 கோடி செலவில் (இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்) கங்கையைச் சுத்தம் செய்தல் என்று ஊதாரிச் செலவுகள் வரைமுறை இல்லாமல் நீண்டன.

கார்ப்பரேட்டுகளுக்குக் கடன் தள்ளுபடிகள்!

இவை போதாதென்று, தன் கட்சிக்கும், தன் தேர்தல் வெற்றிகளுக்கும், நன்கொடைகளை வாரி வழங்குகின்ற கார்ப்பரேட்டுகளுக்கு எல்லையில்லாக் கடன் தள்ளுபடி களைச் செய்தார் நரேந்திர மோடி. 2018 நவம்பரில், 15 கோடிசுவரர்கள் நான்கு ஆண்டுகளில் 3.5 இலட்சம் கோடி கடன் தள்ளுபடியைப் பெற்றார்கள் என்ற செய்தி வெளியானது. 2019ஆம் ஆண்டு, நிலுவையில் இருந்த பெரு முதலாளிகளின் கடன் 68,607 கோடி கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 7 இலட்சம் கோடி வரை பெருமுதலாளிகளின் கடன் தொகை கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் மட்டுமே மிச்சம் இருக்கிறது!

ஊதாரிச் செலவுகள் இன்றுவரை நின்றபாடில்லை. கிட்டத்தட்ட இந்தியா திவாலாகி விட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாகச் சரிந்துபோன இந்தியப் பொருளா தாரத்தை மீட்கமுடியாத நிலையில், என்ன செய்வது என்று மோடி அரசு திகைக்கிறது.

இன்றுவரை வளர்ச்சியில் இருக்கக் கூடிய ஒரே துறை விவசாயம் மட்டுமே. விவசாய உற்பத்தியை பெருமளவிற்கு அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவது, விவசாயத்தைக் கார்ப்பரேட்டு களின் கையில் ஒப்படைப்பதன் மூலமாக அதிக அந்நிய முதலீடுகளைப் பெறுவது, இதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பது என்று, இந்திய அரசு சில அபாயகர முடிவுகளை எடுத்தது.

வெளிநாடுகளுக்குச் செலுத்தவேண்டிய 101.3 இலட்சம் கோடி கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில், அந் நாடுகள் கேட்பதைக் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. அந் நாடுகள் ஏற்கத்தக்க வகையில், விவசாய உற்பத்திப் பொருட்களையும், கனிமங்களையும் ஏற்றுமதி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.

ஊதாரிச் செலவு செய்து ஓட்டாண்டி ஆகிவிட்ட நிலையில், இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து, கடன் கணக்கில் வரவு வைக்க இந்தியா முயற்சிக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த, ‘நடப்பு கணக்கில் சரிகட்டுதல்’ என்ற முறையில், ஏற்றுமதி சம்பாத்தியத்தின் மூலமாக அன்னியச் செலாவணி கை யிருப்பு பெற்று, கடனை அடைக்க முயற்சி செய்கிறது.

இந்திய விவசாய அத்தியாவசியப் பொருட்கள், கனிம வளங்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்து கடனுக்கான வட்டியையும் முடிந்த அளவிற்கு அசலையும் குறைக்க இந்திய அரசு முயற்சி செய்கிறது.

இந்திய அரசின் வேளாண் அவசரச் சட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை இப்படிப் புரிந்துகொள்ளலாம் :

“தன் விருப்பம்போல விவசாய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடையாக இருக்கக்கூடிய சட்டங்களை தளர்த்தவோ அல்லது நீக்கவோ மோடி அரசு முடிவு செய்தது. வேளாண் உற்பத்தி, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மாற்றி அமைக்காமல், தன் விருப்பப்படி விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால் அச்சட்டத்தை மோடி அரசு அவசர மாகத் திருத்த விரும்பியது.

இந்தியாவிலிருந்து விவசாயப் பொருட்களை, கார்ப்பரேட்டுகள் தங்கள் விருப்பம்போல ஏற்றுமதி செய்துகொள்வதை எளிதாக்கும் வகையில், பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தடையில்லா வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தையும் உடனடியாக உருவாக்க விரும்பியது.

இதுவரை உள்நாட்டு மக்களின் தேவைக்குப்போக எஞ்சியிருந்த அத்தியாவசிய வேளாண் பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இனி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதுபோக எஞ்சியிருந்தால் அது இந்திய மக்களுக்கு உண்ணக் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காகவோ அல்லது மக்களுக்காகவோ அல்லாமல், தன் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே, அவசரகதியில் மூன்று வேளாண் அவசரச் சட்டங்களை 2020 சூன் மாதம் மோடி அரசு பிறப் பித்தது. 1955-இல் உருவாக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.

இங்கு இதுவரை மக்களின் தேவை கருதி அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதிசெய்யும் சட்டம் மாற்றப்பட்டு, அத்தியா வசிய விவசாயப் பொருட்களை சகட்டுமேனிக்குக் கொள் முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடிய வகையில் சட்டம் திருத்தப்பட்டது.

‘வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம் - 2020’ என்பது வேளாண் பொருள்களை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடைகளை எல்லாம் நீக்கியது. ‘உழவர்கள் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டம் - 2020’ என்பது ஒப்பந்த வேளாண்மையை அவசரச் சட்டம் மூலமாக திணித்தது. இவை அனைத்தும் அவசியமற்ற அவசர சட்டங்கள்.

சனநாயகத்தின் கழுத்தை நெரித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்

சூன் 5ஆம் நாள், அவசரமாக வேளாண்மை தொடர்பான மூன்று ஆணைகளை பிறப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவந்த மோடி அரசு, பின்னர், இந்த அவசரச் சட்டங்களை மாற்றி, மூன்று சட்டங்களாக நாடாளுமன்றத்தில் இயற்றும் நோக்கத்தோடு, செப்டம்பர் 14 அன்று சட்டங்களின் முன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.

இவற்றை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பே நடத்தாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, சனநாயக மாண்புகளையும், மரபுகளையும் மீறி, மாநிலங்கள் அவையின் துணைத் தலைவர் அறிவித்தார்.

வேளாண்சட்ட முன்வடிவுகளுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு இருந்த நிலையில், அதை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. அவ் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. நாடாளு மன்றத்தின் கீழ் அவையில் (மக்கள் அவை) பாரதிய சனதா கட்சிக்கு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் இருப்பதால் கீழ் அவையில் மசோதா நிறைவேறியது. ஆனால், மேலவையில் அவற்றை எளிதில் நிறைவேற்ற முடியவில்லை.

சட்டங்களுக்குத் திருத்தங்கள் கோரிய நிலையில், திருத்தங்கள் செய்யவும் அரசு மறுத்துவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை ஏற்க மறுக்கப்பட்டது. ஒரேஒரு உறுப்பினர் இரகசிய வாக்கெடுப்பு கோரினாலும் அது ஏற்கப்பட வேண்டும் என்பதுதான் மரபு.

ஆனால், எந்த மரபையும் மதிக்காத மேலவையின் துணைத் தலைவர் அதை ஏற்க மறுத்தார். வாக்கெடுப்புக்கு வைக்காமல், வாக்கெடுப்பே நடத்தாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டம் நிறை வேற்றப்பட்டு விட்டதாக அறிவித்தார்.

18 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. அத் தீர்மானத்தையும் அனுமதிப்பதற்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் மறுத்துவிட்டார். அதுவும் ஒரு விதிமுறை மீறலாகும். இதைக் கண்டித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்த போது, அதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, 30-க்கு மேற்பட்ட மசோதாக்களை மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டது. சனநாயகத்திற்கு இது இருண்ட காலம் ஆகும்.

கொரோனா நமக்கு பாதிப்பு; மோடிக்கு அரிய வாய்ப்பு !

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு முன்னாலேயே இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை அடைந்திருந்தது. இந்நிலையில் கொரோனா முடக்கத்தின் காரணமாக, மேலும் இந்தியப் பொருளாதாரம் பலத்த அடியை வாங்கியுள்ளது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயம் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந் நிலையில், அந்நிய முதலீடுகளைப் பெறவேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகச் சட்டத்திலேயே அரசு தெரிவித்திருக்கிறது. அந்திய முதலீடுகளைப் பெறுவதற்காகவே இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகையில், ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020’, ‘விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்தல்) சட்டம் - 2020’, விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயச் சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2020’ ஆகிய இந்த மூன்று சட்டங்களையும் மோடி அரசு முறைகேடாக நிறைவேற்றி உள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020

இச் சட்டம் ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்க இருக்கிறது. இச் சட்டப்படி, எந்தக் கட்டுப்பாடும் அத்தியாவசிய விவசாய விளைபொருட்களின் மீது இல்லாமையால், இப் பொருட்களை வரம்பின்றிக் கொள்முதல் செய்து, நாட்டின் எந்தப் பகுதிக்கும் கொண்டுசெல்லலாம். பொருட்களை வரம்பின்றிப் பதுக்கலாம். இதுவரை நுகர்வோர் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்து வந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை இத்திருத்தச் சட்டம் சீர்குலைக் கிறது.

மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச் சட்டப்படி, போர் மற்றும் பஞ்சம் போன்ற அசாதாரண சூழல்கள் ஏற்படும் போது மட்டுமே விலை ஏற்றத்தைத் தடுக்கவும், பொருள் இருப்பை முறைப்படுத்தவும் மத்திய அரசு தலையிடும்.

ஆகவே இச் சட்டம், பொருட்களைப் பதுக்கவும், கள்ளச் சந்தையில் விற்கவும், செயற்கையாக உணவுப் பற்றாக் குறைகளை உருவாக்கவும், செயற்கைப் பஞ்சங்களை உருவாக்கவும், வரம்பில்லாமல் விலையை உயர்த்தி இலாபம் சம்பாதிக்கவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அத்தனை உரிமைகளையும் வழங்குகிறது. அதாவது, பதுக்கல், கள்ளச் சந்தை போன்ற சட்ட விரோதச் செயல் பாடுகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன.

ஒரு நிறுவனத்திற்கு சேமிப்புக் கிடங்கு இருந்தால் போதும் அது எவ்வளவு வேண்டுமானாலும் கொள்முதல் செய்து இருப்புவைக்க இச் சட்டம் அனுமதிக்கிறது. சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கி, அங்கு உணவுப் பொருளைச் சேமித்து, பிறகு நாட்டில் எங்கு வேண்டு மானாலும் கொண்டு செல்லவும், வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிமையை வழங்குகிறது.

“விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உற்பத்திப் பொருளைக் கொண்டு சென்று விற்றுக் கொள்ளலாம்” என்று சட்டத்தில் கூறப்பட்டாலும், எந்த விவசாயியும் வெகுதூரம் பொருளை எடுத்துச் சென்று விற்கப் போவதில்லை. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் சென்று எந்த விவசாயியும் விற்கப்போவதில்லை.

ஆகவே, தங்கள் உற்பத்தியை அடிமாட்டு விலைக்குக் கம்பெனிகளிடம் விவசாயிகள் விற்றுவிடு வார்கள். அதன் விலையைப் பலமடங்கு உயர்த்தி விற்று, கொழுத்த இலாபம் அடையப்போவது கார்ப்பரேட்டுகள் தான்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் நடை முறைக்கு வந்த பிறகு, விவசாய உற்பத்திப் பொருட்களை வகை தொகையில்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதால், உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயேகூட செயற்கைப் பஞ்சம் ஏற்படும்.

தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளை கார்ப்பரேட்டு களிடம் கொடுத்துவிட்டு, அதைவிடப் பல மடங்கு அதிக விலையில் அதே பொருளை உற்பத்தி செய்த விவசாயி களே வாங்கவேண்டிய நிலை ஏற்படும்.

விவசாயகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் விவசாயச் சேவைகள் (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு) சட்டம் - 2020

எதிர்காலப் பெரும் துன்பங்களை நல்ல சொற்களில் மூடிமறைக்கும் இச்சட்டம் விவசாயிகளையும், விவசாயத் தையும் படுபாதாளத்தில் தள்ளக்கூடியது. “விவசாய உற்பத்திப் பொருட்களைப் பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு, நல்ல விலை யைப் பெறுவார்கள்” என்று இச்சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளை இச்சட்டம் ஈர்க்கும் என்கிறது மோடி அரசு. தனியார் முதலீட்டை ஈர்ப்பது, “உற்பத்தி மற்றும் விநி யோகத்திற்கான ஒரு சங்கிலித்தொடரை உருவாக்குவது, மட்டுமன்றி, தேசிய அளவிலான மற்றும் பன்னாட்டுச் சந்தை, மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் பணிகளைச் செய்யக்கூடிய கார்ப்பரேட்டு நிறுவனங்கள் ஆகியவர்களை விவசாய ஒப்பந்தத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய தேசிய அளவிலான ஒரு ஏற்பாடு” என்று இந்தச் சட்டத்தை மோடி அரசே குறிப்பிடு கிறது. இந்திய விவசாயத்தை இனி இவர்களே கையாளுவார்கள்.

மோடி அரசுக்கு அன்னிய முதலீடு வேண்டும். அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக எந்தப் பாதகத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறது.

‘விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற் கான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் - 2020’ என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது விவசாயிகளின் உற்பத்திக்கு ஏற்ற நல்ல விலையைக் கம்பெனிகள் அளிக்க வழி செய்ததுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில் அந்த விலையையும் கார்ப்பரேட்டுகளே நிர்ணயிப்பார்கள்.

விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான விலையை அறுவடைக்கு வரும் முன்னரே, பயிர்கள் வயலில் இருக்கும் நிலையிலேயே, நிர்ணயிக்கிறார்கள். ஒப்பந்தப்படி, நிர்ணயித்த விலைக்கு நிறுவனங்கள் அறுவடை செய்துகொள்ளும். ஆனால், அதைப் பலமடங்கு அதிக விலைக்கு நிறுவனங்கள் விற்றுக் கொள்ளும்.

இந்த ஒப்பந்த விவசாயத்தில் நிலம் மட்டுமே விவசாயி களிடம் இருக்கும். மீதியுள்ள அத்தனையையும் கார்ப்ப ரேட் நிறுவனமே தீர்மானிக்கும். நிலத்தில் விதைக்க வேண்டிய விதை, இடப்பட வேண்டிய உரம், பயன்படுத்த வேண்டிய பூச்சிக்கொல்லி, அந்த நிலத்தில் பயன்படுத்த வேண்டிய விவசாயத்திற்கான கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் அத்தனையையும் கார்ப்பரேட் நிறு வனங்களே தீர்மானிக்கும்.

அவற்றைச் செலவுக் கணக்கில் கொண்டுவந்து, அறுவடை செய்தவுடன், முன்பு ஒப்பந் தத்தில் தீர்மானித்த விலைப்படி மொத்த உற்பத்தியையும் கணக்கீடு செய்து, செலவுகளைக் கழித்துக்கொண்டு மீதி உள்ளதை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கும்.

கார்ப்பரேட்டுகள் ஐந்தாண்டுக் காலத்திற்கு விவசாயி களுடன் ஒப்பந்தம் இடலாம். இந்த ஒப்பந்தங்கள் மேலும் நீட்டிக்கப்படலாம். ஒப்பந்த மாதிரியை அரசு வழங்கும். ஒப்பந்தத்தின்படி உற்பத்திப் பொருளை நிறுவனங்கள் பெறும்போது, அதற்கான விநியோக நேரம், விலை, தரம், அளவு, தரநிர்ணயக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றி, மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்குவார்கள். வாங்கும் பொருள் குறித்துக் கட்டாயப் பரிசோதனை காத்திருக்கிறது.

எதிர்பார்த்தத் தரமில்லை என்று பொருளைக் கொள்முதல் செய்ய மறுக்கும் பிரச்சனைகளும் காத்திருக்கின்றன. “விவசாயிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதிகாரிகளைத் தலைவராகக் கொண்ட அமைப்புகள் ஒப்பந்தப் பிரச்சனைகளுக்கு 90 நாட்களில் தீர்வு காண்பார்கள்” என்று சட்டம் கூறுகிறது.

இடையில் வெள்ளம் அல்லது வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டால், அதற்குக் கார்ப்பரேட் நிறுவனம் பொறுப்பேற்காது. இப்போது உள்ளதுபோல அரசாங்கமும் வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் ஆகியவற்றை வழங்காது. இனி விவசாயம் என்பது விவ சாயிக்கும், கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு பிரச்சனையே ஒழிய, அரசாங்கத்திற்கு இதில் தொடர்பு இல்லை.

அறுவடை செய்து, உற்பத்திப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘தரக் கட்டுப்பாடு’ என்ற பெயரில் உற்பத்திப் பொருளின் தரத்தைப் பரிசோதித்துப் பார்த்து, எதிர்பார்த்த தரம் இருப்பதாகத் தரச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிறுவனங்கள் கொள்முதல் செய்துகொள்ளும். இல்லா விட்டால், உற்பத்திப் பொருளின் விலை மிகக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்வார்கள். விவ சாயிகள் நிச்சயமாகப் பெரும் நட்டத்தை அடைவார்கள். நிறுவனங்களிடமிருந்து பெற்ற முன்தொகைக்கு ஈடு செய்ய உற்பத்திப் பொருளை கொடுக்க இயலா நிலையில், தங்கள் நிலங்களை ஏலம் விடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படலாம்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் - 2020

இச் சட்டம் உற்பத்திப் பொருளை விற்பதிலும் வாங்கு வதிலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் ‘தேர்வு செய்துகொள்ளும் உரிமையை’ வழங்கு வதாக இந்திய அரசு பெருமை பேசுகிறது. பொருட்களை விற்பனை செய்யக் கைக்கொள்ளும் ‘மாற்று வழிகளின் மூலமாக’ இலாபகரமான விலை விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்கிறது. மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக் கிடையிலும், விவசாய உற்பத்திப் பொருள் விற்பனை தடையில்லாமல் நடைபெறும் என்று இச் சட்டம் கூறுகிறது.

இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பொருள்கள் எங்கோ உலகின் ஒரு மூலையில் இருப்பவருக்கு உரிமையாகும். மின்னணு வர்த்தக மேடை மூலம் வணிகமும், வர்த்தகமும் நடை பெறும். மின்னணு வர்த்தகத்தின் மூலமாக பூதாகரக் கார்ப்பரேட்டுகள் சிற்றூர்களில் உள்ள மொத்த உற்பத்திப் பொருளையும் கொள்முதல் செய்து, அதே ஊரில் கிடங்கில் இருப்பு வைத்துவிட்டு, ஆன்லைன் மூலமாக உலக நாடுகளுக்கு விற்றுவிடுவார்கள். அதைத்தொடர்ந்து, உற்பத்திப் பொருள் ஏற்றுமதியாகிவிடும்.

அந்தப் பொருளை உற்பத்தி செய்த ஊரில் உள்ளவர்களுக்குக் கையளவு உணவுப்பொருள்கூடக் கிடைக்காமல் போகும். விளைச்சலைக் கண்ணால் பார்க்கும் மக்களுக்கு வாய்க்கு ஒரு பிடிச் சோறு கிடைக்காமல் போகும். இவ்வாறு, ஒரு பகுதியில் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்க முடியும். நுகர்வோர் எனப்படும் மக்கள் இன்று உணவுப் பொருளுக் குக் கொடுக்கும் விலையைவிடப் பலமடங்கு கொடுத்து அப் பொருளை வாங்கவேண்டிய நிலை ஏற்படும். இயலாதவர்கள் பட்டினி கிடந்துச் சாக நேரிடும்.

கற்பனைக்கு எட்டா பாதிப்புகள்

‘ஒரே இந்தியா, ஒரே விவசாயச் சந்தை’ என்று மோடி அரசு குறிப்பிடுகிறது. இந்த ஒரே சந்தைக் கோட்பாடு உள்ளூர்ச் சந்தையை ஒழித்துக்கட்டும்; உழவர் சந்தை களைக் காணாமல் அடிக்கும். இந்த மூன்று சட்டங்களும், விவசாயம், விவசாயிகள், விவசாயக் கூலிகள், நுகர்வோர், மாநில உரிமைகள், கூட்டாட்சி முறைமை ஆகிய அனைத் தையும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக் கூடியதாகும்.

மோடி சாதித்துக்கொள்வது என்ன?

இச் சட்டங்களின் மூலமாக இரண்டு திட்டங்களை மோடி அரசு சாதித்துக்கொள்கிறது. முதலாவதாக, மோடி அரசு தன் கார்ப்பரேட்டுக் கூட்டாளிகளுக்கு இந்திய விவ சாயத்தைத் தாரைவார்த்து, இதுவரை கார்ப்பரேட்டுகள் தமக்கும், தம் கட்சிக்கும் அளித்த பேருதவிகளுக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொள்கிறது. இனியும் கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து துணை நிற்க, அவர்களுடைய எதிர்காலப் பங்களிப்பை உறுதி செய்துகொள்கிறது. இச் சட்டங்கள் யாருக்கு இலாபகரமானது என்றால், கார்ப்பரேட்டு களுக்கு மட்டுமே இலாபகரமானது.

அடுத்து, இச் சட்டங்களின் மூலம் இன்னொன்றையும் இந்திய அரசு சாதித்துக்கொள்கிறது. தன்னுடைய ஏக இந்திய வல்லாதிக்கக் கனவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது. மாநில உரிமைகளைப் பறிமுதல் செய்வதன் மூலம், விவசாயத்திலிருந்து மாநிலங்களுக்குக் கிடைக்கக் கூடிய வருவாயைத் தடுப்பதன்வழி, ‘ஒற்றை இந்தியா’ உருவாக்கத்திற்கு இன்னொரு படி முன்னோக்கிச்செல்கிறது.

இப்போதே நிதி நெருக்கடியாலும், மிகக்குறைவான அதிகாரங்களாலும், வரி வாய்ப்புகளையெல்லாம் மத்திய அரசுக்கு வழங்கிவிட்டு, நிதி கோரிக் கையேந்தி நின்று, தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநிலங்கள், இப்போது விவசாயத்தையும் மத்திய அரசு பிடுங்கிக்கொள்வதால், ஏதுமற்ற வெற்றுப் பாத்திரங்களாக மாறிப்போகும். இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், மாநிலங்கள் வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மட்டுமே இருக்கும்.

இந்திய அரசுக்கு வருமானவரி கட்டப்போகும் விவசாயிகள்!

வேறொரு ஆபத்தும் விவசாயிகளை எதிர்நோக்கி இருக்கிறது. இதுவரை விவசாயத்திலிருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரி இல்லை. ஆனால், விவசாயிகள் ஒப்பந்தங்களை இடுவதால், சட்டபூர்வமான பரிவர்த்தனையில் நுழைவதால், விவசாயத்தின் வரு மானம் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு, விவசாயம் என்ற தொழில் இனி வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல்!

இந்திய அரசியல் சட்டப்படி விவசாயம், சந்தை ஆகிய இரண்டுமே மாநில அதிகாரத்தில் இருக்கின்றன (அரசியல் சட்டம் : மாநில அதிகாரப் பட்டியல் கூறு 14 மற்றும் 28). ஆனால், உணவுப் பொருள் வணிகம் என்பது பொதுப் பட்டியலில் இருக்கிறது. இதையே காரணமாகக் காட்டி இந்திய அரசு மாநிலங்களின் விவசாயத்தின் மீதான உரிமையை ஒட்டுமொத்தமாகப் பறித்துக்கொள்கிறது.

மாநிலத்தின் கொள்முதல் கட்டமைப்பே நொறுங்கிப்போகும்

இப்போதுள்ள முறைப்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளின் நலமும், வியாபாரிகளின் நலமும் பாதுகாக்கப்படுகிறது. விவசாய உற்பத்திப்பொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சில முக்கிய வேலை களைச் செய்துவருகிறது. விவசாயப்பொருள் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது.

விவசாய உற்பத்தியை வாங்கும் வணிகர்களுக்கு லைசென்சும், கமிஷன் ஏஜென்ட்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரமும் வழங்குகிறது. ஒரு சந்தை வரியை யும் வசூல் செய்கிறது. விவசாயிகள் தாங்கள் விரும்பும் விலை கிடைக்காவிட்டால் பொருளை விற்காமல் இருப் பில் வைத்துக்கொள்ளலாம். நட்டமில்லாமல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருள்களை விற்றுக்கொள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வழிவகை செய்கிறது.

கொத்தடிமை விவசாயிகள்

வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகள் ஒப்பந்த அடிமைகளாக மாறுவார்கள். விவசாயம் கொத்தடிமை விவசாயமாக மாறும். நில வுடைமையாளர்கள் விவசாயக் கூலிகளாக மாறுவார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த உற்பத்தியையும், விதை, உரம், பூச்சிக்கொல்லி, இயந்திரங்கள், பூச்சி மருந்து அடிக்க ஹெலிகாப்டர் செலவு என்று மொத்தத்தையும் நிறுவனங்கள் பறித்துக் கொள்ளும். ஆண்டு இறுதியில் அறுவடை முடிந்து உற்பத்தியை ஒப்படைக்கும்போது கணக்குப் பார்த்தால் தன் விவசாய நிலத்தில் வேலை செய்ததற்கான கூலி மட்டுமே விவசாயிக்கு எஞ்சும்.

விவசாய மானியங்கள் இதன்பிறகு விவசாயிகளுக்குக் கிடையாது. விவசாயிகளின் உற்பத்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய கொள்முதல் கட்டமைப்பு என்பதே காணாமல் போகும். இடைநிலைத் தரகர்கள் என்று அரசு வருணிக்கக் கூடிய இடைநிலை வணிகர்கள் சிறு குறு விவசாயிகளிடமிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்பவர்களாக இப்போது இருக்கிறார்கள்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் களம் இறங்கும் நிலையில், இடைநிலை வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறிய அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடியவர்கள் உற்பத்திப் பொருளை விற்கும் வழி தெரியாமல் திகைத்து நிற்பார்கள். பெருநிறுவனங்கள் நிர்ணயிக்கும் அடிமாட்டு விலைக்கு உற்பத்தியைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, கிடைக்கும் காசைப் பெற்றுக்கொண்டு செல்வதும், விரைவில் விவ சாயத்தைக் கைவிட்டு, நிலத்தை விற்றுவிட்டு வெளியேறு வதும் மட்டுமே அவர்கள் முன் இருக்கக்கூடிய ஒரே வழி.

வேளாண் சட்டங்களால் புகுத்தப்படும் ஒப்பந்த விவ சாயம் என்பது கொத்தடிமை விவசாயமாகும். பணத் தேவையில் உள்ள விவசாயிகள் நிச்சயமாக முன்பணம் பெற்றுக் கொள்வார்கள். அத்துடன் அவர்களுடைய சுதந்தரமும் முடிந்து போகும்.

ஒப்பந்தத்திற்குப் பிறகு, விவசாயத்தின் ஒவ்வொரு அசைவையும் நிறுவனங்களே நிர்வகிக்கும். சிறு விவசாயிகளின் பகுதிகளை அந்த விவசாயிகளுக்கு ஆசைகாட்டி அல்லது அச்சுறுத்தி, நிலங் களை இணைத்து, கம்பெனியே விவசாயத்தை நடத்தும். உற்பத்திக்கான விலை, விதைக்கும் முன்பே நிர்ணயிக்கப்படுகிறது அல்லது பயிர்கள் வயலில் இருக்கும்போதே விலையை நிர்ணயித்து விடுகிறார்கள்.

அறுவடையின் போது விலை கூடினாலும்கூட ஒப்பந்த விலைக்குத்தான் பொருளை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். கம்பெனியிடம் பெற்ற பணத்திற்கு ஈடாக உற்பத்திப் பொருளைக் கொடுக்க முடியாநிலை ஏற்பட்டால், நிலத்தை ஏலத்தில்விட்டு அந்தப் பணத்தைக் கம்பெனிக்குக் கொடுத்துவிடக்கூடிய நிலை ஏற்படலாம்.

இல்லாவிடில் அந்த விவசாயியை நீதிமன்றத்தில் கொண்டுபோய் கார்ப்பரேட் நிறுவனம் நிறுத்தும். வெள்ளம், பஞ்சம், வறட்சி ஆகியவை காரணமாக விவசாயம் பாதிக்கப் பட்டால், அரசிடம் நிவாரணம் கோரமுடியாது. விவசாயத் தின் மீது வங்கிக் கடன் பெறவும் முடியாது.

ஒப்பந்தப்படி, தரம் ஆய்வு அடிப்படையில்தான் ஒப்புக்கொள்ளப்பட்ட விலை தரப்படும். ஆகவே, ஒப்புக் கொள்ளப்பட்டதைவிடக் குறைவான தொகையை அல்லது விலையைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதார விலை, பொதுவிநியோக முறை ஒழியும்!

இப்போது மத்திய அரசு நிர்ணயிக்கின்ற விலை என்று சொல்லப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறை காணாமல் போகும். அரசின் கொள்முதல் கட்டமைப்பே காணாமல் போவதால், இந்திய உணவுக் கழகம் என்பது இழுத்து மூடப்படும். விவசாய உற்பத்திப் பொருளை அரசு கொள்முதல் செய்யாத நிலையில், பொதுவிநியோக முறையும் காணாமல் போகும். மாநில அரசுக்கு உற்பத்திக் கொள்முதலுடன் தொடர்பு அறுந்துபோனால், ரேஷன் கார்டுக்கு எங்கிருந்து இலவச அரிசி வரும்?

எதிர்காலத்தில் பட்டினிச் சாவுகளை எதிர்பார்க்கலாம்!

இப்போது விவசாயக் கூலிகள் செய்துவரும் வேலை களை, கார்ப்பரேட்டுகளின் தேவைக்கு ஏற்ப, இயந் திரங்கள் மூலமாக விரைவாகச் செய்வதால், மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கும் விவசாயக் கூலிகள் வேலை யற்றவர்களாக மாறி, தற்கொலையை நோக்கித் துரத்தப் படுவார்கள். அவர்களை என்ன செய்வதாக இருக்கிறது அரசு என்பது தெரியவில்லை.

உண்மையை உணர்ந்து, தமிழக அரசு வேளாண் சட்டங்களை ஏற்கமுடியாது என்று அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அடாவடியாக சனநாயக விரோதமாக இயற்றி, விவசாயிகளின் மீது கட்டாயமாகத் திணிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்.

நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் ஓர் அரசுக்கும் அதன்கீழ் வாழும் குடிமக்களுக்கும் இடையிலானப் போராட்டமாகத் தோன்றவில்லை. இரண்டு எதிரெதிர்ப் படைகளுக்கு இடையே நடக்கும் போர் முன்நகர்வுகள் போல நடந்துகொண்டிருக்கின்றன. இப் பிரச்சனைகள் அனைத்தும் 2020 செப்டம்பர் மாதம் மோடி அரசு நிறை வேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியே நடந்துகொண்டிருக்கின்றன.

மக்களின் பேரெழுச்சியாக மாறும் விவசாயிகளின் போராட்டம் !

நாடுமுழுவதும் கடந்த செப்டம்பர் 25-ஆம் நாள் மறியல் மற்றும் சட்டநகல் எரிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மூன்று சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இன்றுவரை வலியுறுத்தப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சாப் விவசாயிகள் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆனால், இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வரவே இல்லை. இந்நிலையில் இந்திய அளவில் விவசாயச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நவம்பர் 26 அன்று ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தோடு டெல்லியை நோக்கி விவசாயிகள் விரைந்துள்ளனர். டிராக்டர்களிலும் பிற விவசாய வாகனங்களிலும் தங்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் மட்டுமன்றி, படுக்கை போன்ற வற்றை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இப் போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைத்து நடத்துகிறது.

இந்திய அரசின் இக் கொடுஞ் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் ‘பீம் ஆர்மி’ மற்றும் சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந் துள்ளனர். போராட்டம் பல நகரங்களுக்கும் பரவி வரு கிறது. கொல்கத்தா, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

போராடும் விவசாயி களை ஏமாற்ற மோடி அரசு முயற்சி செய்துகொண்டிருக் கிறது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன் களுக்கானவை என்றும், விளைபொருள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் வேறு இடங்களுக்கு உற்பத்தியைக் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு முழுச் சுதந்தரம் உண்டு என்றும் இந்திய ஒன்றிய அரசு கூறுகிறது.

ஆனால், விவசாயிகள் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நவம்பர் 26 முதல் டெல்லியில் நடந்த போராட்டத்தை இந்திய அரசால் ஒடுக்கமுடியவில்லை. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் பல்லாயிரம் பேர் சிங்கு, திக்ரி எல்லையில் 6-வது நாளாக முற்றுகையிட்டிருந்தனர். இந்திய அரசு திசம்பர் 3 அன்று நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு வரும்படி விவசாயிகளை அழைத்தது.

ஆனால், அதற்கு முன்பே பேச்சுவார்த்தைக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைத்தார். 35 விவசாய சங்கப் பிரதிநிதிகள் டிசம்பர் 1 அன்று டெல்லி விக்யான் பவனில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற் றனர். இதில் மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மற்றும் இரு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆனால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் ஏமாற மறுக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் உள்ளூர் மண்டி முறை தொடரும் என்று மத்திய அரசின் தரப்பில் உறுதி கூறப்பட்டது. “வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்று அரசு தரப்பில் கூறப்பட்டதை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நடந்தும் பயனற்றதாகப் போனது. டிசம்பர் 3ஆம் தேதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு கூறியிருக்கிறது. விவசாயிகள் தரப்பில் அனைத்து விவசாயக் குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு அழைப்புவிடும் வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

போராட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை தலையிடக் கூடாது என்றும், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு விவசாயச் சங்கங்களை அழைக்கவேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் உச்ச அதிகாரம் கொண்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்கவேண்டும் என்றும், இவற்றை ஏற்காவிட்டால் டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளையும் முற்றுகையிடுவோம் என்றும் விவசாயிகள் நிபந்தனை விதித்து விட்டனர். இந்நிலையில்தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 3ஆம் தேதி நடக்கிறது.

சனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரம் : டெல்லி சுல்தான்களுக்குப் பாடம் கற்பிக்கும் விவசாயிகள்!

“இந்தியாவின் வேளாண்மையை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் சட்டங்களை இரத்து செய்வதே பிரச்சனைக்கான தீர்வு. அதுவரை போராட் டத்தைக் கைவிடுவதற்கில்லை” என்று விவசாயிகள் அறிவித்துவிட்டார்கள். நாடாளுமன்ற மக்களவையில் 303 உறுப்பினர்கள் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று பா.ச.க அரசு கருதுகிறது. இடைக்காலத்தில் ஆட்சி செய்த டெல்லி சுல்தான்களை விடவும் தாங்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்ற போக்கில் நரேந்திர மோடி சர்வாதிகாரம் செய்ய முனைகிறார்.

எல்லை மீறினால், மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து பாடம் புகட்டும் என்பதைத் தற்போது இந்திய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப் பினர்களும் மக்களின் எசமானர்கள் அல்ல; மக்களுக்கு விசுவாசமாகத் தொண்டு செய்யவேண்டிய வேலைக் காரர்கள்!

எதிர்காலத் திருப்பங்களுக்கும் விழிப்பிற்கும் இது ஒரு முன்னுரையாக அமையட்டும்!

- பேராசிரியர் த. செயராமன்

Pin It