இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், நவம்பர் 18, 2020-யில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஒப்புதலுக்கு வரும் அரசு மற்றும் தனியார் செயல்திட்டங்களை பரிசீலித்து அனுமதியளிக்க ஏதுவாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிபுணர் குழு குறைந்தபட்சம் மாதத்திதிற்கு இருமுறையாவது கூடுவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிபுணர் குழு எனும் இக்குழு தான் அரசின் ஒப்புதலுக்கு வரும் திட்டங்களை அங்கீகரிப்பதற்கும் நிராகரிப்பதற்குமான அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இக்குழு ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே. இருந்தபோதிலும், பெரும்பாலான திட்டங்களை இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பவதையே நடைமுறையாகக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம்.
இந்தச் சூழ்நிலையில், மாதத்திற்கு இரண்டு கூட்டம் எனக் கொண்டு வந்திருப்பது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கக்கூடிய திட்டங்களுக்கு விரைந்து அனுமதியளிக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.
மேம்போக்காக பார்க்கும்பொழுது, மாதத்திற்கு குறைந்தது இரண்டு கூட்டங்கள் என்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தோன்றுவதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் சுற்றுச்சூழலைப் பேணுவது என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்த நிபுணர்க்குழு எல்லா வேலை நாட்களிலும் கூடுவது அவசியமாகும்.
இதற்குச் சொல்லப்படும் காரணம் எளிமையானது. அதாவது, அரசின் ஒப்புதலுக்கு வரும் திட்டங்களை ஆராய்ந்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் அறிக்கைகளைத் தயாரிப்பது, பொதுமக்களின் கருத்துக்களை கேட்பது, நிறைவாக அந்தத் திட்டத்தினை அனுமதித்தல் அல்லது மறுத்தல் தொடர்பான முடிவுகளை எடுப்பது போன்ற முக்கியப் பணிகளைச் செய்வதற்காக இந்தக் கூடுகையின் அவசியம் கூறப்படுகிறது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட இந்தச் செயல்பாடுகள் யாவும் மிக எளிமையாகச் செய்யக் கூடியவையல்ல. அதிக எண்ணிக்கையில் திட்டங்களை பரிசீலிப்பதற்கும் முடிவு காண்பதற்குமென தனித்தனியாக நிபுணர்க்குழுக்கள் இருக்கின்ற போதிலும் மேற்குறித்த செயல்முறைகளை செய்து முடிப்பது என்பது கடினமானப் பணியே. அந்தக் குழுக்களில் சில, ஒரு வேலை நாளில் 60 முதல் 80 வரை எண்ணிக்கையிலான திட்டங்களைக் கூட சில சமயங்களில் மேலாய்வு செய்கின்றன.
அளவு கடந்த எண்ணிக்கையில் ஒப்புதலுக்கு வரும் திட்டங்களை பரிசீலிப்பது மிக ஆபத்தானது. ஏனெனில், எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது, பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு திட்டத்தினாலும் விளையப்போகின்ற சுற்றுச்சூழல் கேடுகளைப் பற்றி முழுமையாக ஆராயமல், விரைவாக முடிவுகளை எட்டி விடுவதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும். முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் பெருங்கேடு நிகழக்கூடும்.
இது தொடர்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு உத்கர் மண்டலுக்கும் ஒன்றிய அரசிற்கும் இடையேயான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், “சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு வரும் திட்டங்களில், ஒரேயொரு நாளில் 5-ற்கும் மேற்பட்ட திட்டங்களை எடுத்துக் கொண்டு அவற்றைப் எப்படி ஒரேயோரு கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுக்க முடிகிறது என்பதனை எங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்.
ஆனால், ஒன்றிய அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக அமையுள்ள தலைநகரை உருவாக்கும் செயல்திட்டத்திற்கு ஒரேயொரு ஆய்வுக்கூட்டத்தின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் அதே கூட்டத்தில் மேலும் 80 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே, சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஒரு மாதத்திற்கு எத்தனை முறை கூடுகிறது என்பது சிக்கலில்லை. மாறாக, அந்த நிபுணர்க் குழுவில் இடம்பெற்றிருக்கிற நபர்களின் தகுதி, திறமை, நம்பகத்தன்மை; மேலும் அவர்களை துறை சார்ந்த ‘நிபுணர்’ என்று வரையறுப்பது யார்?; ஒப்புதலுக்கு முன் அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் தன்மை; இறுதியாக அவர்கள் எடுக்கும் முடிவின் நம்பகத்தன்மை என்பன போன்ற விடயங்களே இங்கே முக்கியமானதாகின்றன.
இந்தச் சிக்கலின் தீவிரத்தை அறிய வேண்டுமெனில், சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக் குழுவிற்கு நிபுணர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உண்மையிலேயே துறை சார்ந்த ’நிபுணர்’ தகுதியுடைவர்களா? திட்டங்களை ஆராய்ந்து யாருடைய வற்புருத்தலுக்கும் ஆளாகாமல் சுயமாக முடிவெடுக்கும் தகுதியும் திறமையும் அவர்களுக்கு உண்மையாகவே இருக்கின்றனவா என்பன போன்ற கேள்விகளை எழுப்பவது மிக அவசியமாகின்றது.
ஏனெனில், சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவில் ‘நிபுணர்’ என்ற சொல் அவ்வளவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வளவு கணம் கொண்ட அந்தச் சொல்லுக்குப் பொருத்தமான நபர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றால்தான், உண்மையான ஆய்வுகளையும் முடிவுகளையும் எட்ட முடியும். ஒன்றிய அரசு இந்த ஆண்டு மட்டும் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கும் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள ஓர் அனல் மின்னிலைய செயல்திட்டத்திற்கும், ஆற்றுப்படுகையில் அமையவுள்ள ஒரு செயல்திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது அனுமதியளிக்கும் குழுவில் உள்ள ‘நிபுணர்களின்’ தரம் குறித்த கேள்வி இயல்பாக எழுகிறது.
துறைசார்ந்த ‘நிபுணர்களுக்குப்’ பதிலாக ’அலுவலமுறை சாராதவர்களை’ நிர்ணயித்தல் :
கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் அளிக்கும் குழுவில் துறை சார்ந்த ‘நிபுணர்களும்’ நிபுணர்கள் இல்லாதச் சூழலில் துறைசார்ந்த ‘வல்லுநர்களும்’ கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
மேலும், இந்த நிபுணர்க்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், சுற்றுச்சூழல் குறித்த கொள்கைகளை வகுப்பதில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவராகவும் அந்தத்துறையில் பரந்துபட்ட அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இந்நிலையில், ஆற்றுச் சமவெளி செயல்திட்டத்திற்கும் அனல் மின்னிலையம் செயல்திட்டத்திற்கும் உரிய அனுமதி வழங்குவது தொடர்பான நிபுணர்க்குழு ஆலோசனைக் கூட்டத்தை கடந்த சூலை மாதம் 13-ஆம் நாள் சுற்றுச்சூழல் அமைச்சகம் கூட்டியது.
அந்த நிபுணர்க் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் 9 பேர், இந்தக்குழுவிற்கு சற்றும் தொடர்பில்லாதவர்களாகவும் 6 பேர் அலுவல் ரீதியான தொடர்புள்ளவர்களாகவும் இருந்தனர். 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் அறிக்கையில் ‘நிபுணர்கள்’ இடம்பெறுவது இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் கூட, அரசு அந்த வழிக்காட்டுதல்களை தவிடுபொடியாக்கிவிட்டு, தொடர்பில்லாத 9 பேரை அனுமதியளிக்கும் குழுவில் இடம்பெறச் செய்திருக்கிறது.
’அலுவல்முறைச் சாரதவர்கள்’ (Non officials) என்பது தெளிவற்ற சொல்லாடல் என்பதால், இந்தப் பதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அரசுப்பணியில் இல்லாத ஒருவரையும் நிபுணர்களாக நியமிக்க முடியும். எனவே, நிபுணர் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலேயே ‘அலுவல் முறைச்சாரதவர்கள்’ என்ற சொல்லாடலை ஒன்றிய அமைச்சகம் பயன்படுத்துகிறது, என்பதனை மனதில் இருத்தியே, அந்த உறுப்பினர்களை நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆற்றுபடுகைத் திட்டத்திற்கும் அனல் மின்னிலையத் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கும் நிபுணர்க்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் கே. கோபக்குமார் (K. Gopakumar). இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ((IISc)) இயங்கும் மின்னியலமைப்பு சார் பொறியியல் (electronic system engineering துறைப்பேராசிரியர் ஆவார்.
அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் இவரைப் பற்றியச் செய்திக் குறிப்புகளின்படி, அவரது பணிகள் மின்னியல் அமைப்புச் சார்ந்தவனாக இருக்கின்றனவேயொழிய, அனல் மின்னிலையத் திட்டங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவராகவோ அல்லது அந்தப்புலத்தில் குறைந்தபட்ச அனுபவமோ இருப்பது குறித்த எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை. மேலும் இதற்கு முந்தைய எந்த நிபுணர்க்குழுவிலும் அவர் இடம்பெற்றவரும் அல்ல. குறிப்பிட்டுச் சொல்வதெனில், சமூக நிர்வாகப்பணி சார்ந்த எந்த அனுபவமும் அவருக்கில்லை. அவர் வெறும் ஒரு துறை சார்ந்த பேராசிரியர் மட்டுமே. எனவே, சமூகப்பணி சார்ந்த நிபுணர்க்குழுவிற்கு தலைவராக இடம்பெற குறைந்தபட்ச தகுதிகூட இல்லாதவர் இவர்.
இந்தக்குழுவில் உள்ள மற்றொரு ‘அலுவல்முறை சாரா உறுப்பினர்களில்’ ஒருவர் பி.கே. பனிக்கிரகி (B.K. Panigrahi). இவர் தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயங்கி வரும் மின்னியல் பொறியியல் துறையிலும், தானியங்கி ஆய்வியல் மற்றும் புறப்பரப்பு இயங்கியல் (Tribology) துறைத்தலைவராகவும் உள்ளார். இவரைப் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பிலும் இவர் நிபுணர்க்குழுவில் அதுவும் ஆற்றுப்படுகைத் திட்டத்தில் இடம்பெறுவதற்கு எந்தத் அனுபவமும் உடையவராகயில்லை என்பது தெளிவாகிறது. இவரது ஆய்வுப்புலங்கள் யாவும் ஆற்றல் அமைப்பியலிலும் செயற்கையறிவு தொழில்நுட்பத்திலும் கணிப்புமுறையியலிலுமே அமைந்துள்ளன.
இந்தக்குழுவின் இன்னொரு உறுப்பினரான உதய்.ஆர்.வி (Uday R.V) என்பாரது தகுப்பாடும் இத்தகையதே. அவர் செய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (Malaviya National Institute of Technology) இயக்குநராகப் பணியாற்றுகிறார். இவரது ஆய்வுப்பணிகள் கம்பித்தடம் இணைப்புக்கொண்ட ஒளிமின்கல அமைப்பியலிலும் (photovoltaic systems) அனல் மின் நிலையங்களிள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடரபான ஆய்வுப்பணிகளாவும் உள்ளன. இந்தக் கல்வியியல் பின்புலங்கள் சுற்றுச்சூழல் நிபுணர்க்குழுவில் இடம்பெறுவதற்கான தகுதிப்பாடுகளை உடையனவா எனும் கேள்விக்கு இட்டுச் செல்கின்றது.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழுவில் இடம்பெறும் நிபுணர்களில் சுற்றுச்சூழல் சார் பொருளியல் நிபுணர் ஒருவர் இடம்பெற வேண்டும் என 2006-ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு இக்குழுவில் இடம்பெற்றிருக்கும் நிபுணர் சந்திரதாசு தேசுபாண்டே (Chandrahas Deshpande) என்பவராவார். இவர், மகராட்டிரத்தில் உள்ள வெளிங்கர் மேலாண்மை மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Welingkar Institute of Management Development and Research) பேராசிரியாராகப் பணிபுரிபவர்.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர் “தொழிற்சாலைசார் பொருட்களின் விலையிடல்– கோட்பாடுகளும் நடைமுறைகளும்” (‘Industrial Pricing – Theory And Practice’) என்பதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் ஆறாண்டு கால கற்பித்தல் பணி அனுபவமும் மகராட்டிர மாநிலத்தின் பொருளாதர மேம்பாட்டுக் குழுவில் 18 ஆண்டுகாலம் பணிபுரிந்த அனுபவமும் கொண்டிருக்கிறார். ஆனால், சுற்றுச்சூழல் பொருளியலில் இவருக்கு நிபுணத்துவமோ அனுபவமோ இல்லை.
பால்ராஜ் ஜோசி (Balraj Joshi) என்பவர் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொமொரு உறுப்பினர். இவர் தேசிய புனல்மின் நிலைய கழகத்தின் (NHPC Ltd) முன்னாள் தலைவராகவும் இயக்குநராகவும் இருந்து கடந்த திசம்பர் 2019-ஆம் ஓய்வுப் பெற்றவர். ஓய்வுப்பெற்றதிலிருந்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவில் அலுவல் முறையற்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்தக்குழுவின் உறுப்பினராக இருப்பது தான் அதீத கேள்விக்குரியதாக இருக்கின்றது. ஏனெனில் இவரது பணிக்காலத்தில் ஏராளாமான புனல்மின் நிலைய வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார். அதைப்போல சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதலுக்கு வரும் பெரும்பாலான திட்டங்கள் யாவும் தேசிய அனல் மின் நிலையத்தின் திட்டங்களாகவே உள்ளன.
ஆற்றுப்படுகை திட்டத்தை ஆய்ந்து ஒப்புதல் வழங்கும் குழு போலவே, அனல் மின் நிலையத்திட்டத்தையும் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தையும் ஆராயும் நிபுணர்க்குழுவின் உறுப்பினர் அமைந்துள்ளனர் என்பது மேலும் கவலைக்குரியதாகின்றது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் குருராஜ் பி. குண்டர்கி (Gururaj P. Kundargi,). இவர், இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின் (Manganese Ore India, Ltd) முன்னாள் தலைவராகவும் இயக்குநராகவும் இருந்தவர்.
இவரைப் பற்றிய தகவல்களை பார்க்கும்போது, இவர் நவ பாரத் முனையம் எனும் தனியார் நிறுவனத்தின் (Bharat Ventures Pvt. Ltd) நிர்வாக்குழு உறுப்பினர் உள்பட பல தனியார் நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராக உள்ளார். சாம்பியவின் (Zambia) மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமான மாம்பா நிலக்கரிச் சுரங்கம் (Maamba Collieries) நவ பாரத் முனையத்திற்குச் சொந்தமானது. மேலும், தெலுங்கானாவிலும் ஒதிசாவிலும் இந்நிறுவனம் சில அனல் மின் நிலையங்களையும் இயக்கி வருகிறது.
இந்தக்குழுவின் மற்றொரு உறுப்பினர் சந்தோசு அம்பன்னவர் (Santosh Hampannavar), சிறந்த மின் பகிர்மான அமைப்பு, முறையற்ற மின்னாற்றல் அமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கிடையேயான தோராய மாதிரிகள் (stochastic modelling of intermittent renewable energy resources) ஆகிய புலங்களில் அவரது ஆய்வுப்பணிகள் அமைந்துள்ளன.
மற்றொரு உறுப்பினர் உமேசு செகன்னாத கலேகர் (Umesh Jagganath Kahalekar). இவர் ஔரங்கப்பாத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிப் பேராசிரியர். இவர் கழிவுநீர் நீக்க அமைப்புகள் (flushing systems and sewage treatment) தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுப்பட்டவர். இறுதியாக பிரசந்த குமார் முகபாத்திரா (Prasanta Kumar Mohapatra). இவர் இந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் நிலையமான தேசிய அனல் மின் நிலைய கழகத்தின் (National Thermal Power Corp) முன்னாள் இயக்குநர்.
இவ்வாறு, முக்கிய முடிவெடுக்கும் பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமான ஆட்களை நியமனம் செய்வது இது முதன்முறையன்று. இதுகுறித்து தில்லி உயர் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டில்”நான்கு தனியார் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் இருப்பவரை சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக நியமித்திருப்பது விந்தையாக இருக்கின்றது.
சுரங்கத் தொழிற்சாலையை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்ட செல்ல வேண்டும் என விரும்புகின்ற ஒரு நபரை, அத்தகைய திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் குழுவின் தலைவராக நியமித்திருப்பது, அரசின் மிக மோசமானப் போக்கைக் காட்டுகிறது என்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய நியமனம் சுற்றுச்சூழல் நிபுணர்க்குழுவின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கி விடும். ஆதாயம் தேடுபவர்களே, ஒப்புதல் அளிக்கும் குழுவின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் இருப்பது ஆரோக்கியமற்ற போக்கு.” என்று கூறியிருக்கிறது.
இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு என்பது அந்தத் துறைசார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவாக இல்லையென்பதோடு மட்டுமல்லாது, இந்தக்குழுவானது யாருடைய தலையீடுமில்லாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் குழுவாகவும் இல்லையென்பது தெளிவு.
அனல் மின்னிலையத்திட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை, தாக்கங்களை ஆராயும் குழுவின் உறுப்பினர்கள் மின்சாரப் பொத்தான்களைப் பற்றியும், மின் சேமிப்புக்கலனைப் பற்றியும், தொழிற்சாலை சார் விலையிடல் பற்றியும் தானியங்கி எந்திரங்கள் பற்றியும் இன்னபிற பாடங்களை படித்தவர்களாக இருக்கிறார்களேயொழிய, அவர்கள் யாரும் சுற்றுச்சூழல் குறித்த குறைந்தபட்ச அறிவு கொண்டவர்களாக இல்லை.
சுரங்கத் தொழிற்சாலைத் திட்டமும், அனல் மின் நிலையத்திட்டங்களும் ஏராளமான குடியிருப்புகளை அகற்றி விடும் என்பதோடு மட்டுமில்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களோ கழிவுகளை வெளியேற்றும் கலையறிந்தவர்கள். அவர்களுக்கு குடியிருப்புகள் அகற்றப்படுவது குறித்தோ, சுற்றுச்சூழல் சுகாதார மாசுபாடு குறித்தோ எவ்வித அக்கறையும் இருக்கப்போவதில்லை.
மேலும் ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் எத்தகைய வெளிப்படையான நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. சான்றாக, இது குறித்த அறிவிப்புகளோ, நேர்முகத் தேர்வுகளோ நடைபெறவில்லை. முழுக்க முழுக்க ஆளும் வருக்கத்தின் வழிக்காட்டுதலின் பேரில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆக, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மனிதர்கள் உட்பட எண்ணிலடங்கா உயிரினங்களின் தலையெழுத்தும் இந்த அலுவல்முறையற்ற குழு உறுப்பினர்களின் கைகளில் சிக்கியுள்ளது. மேலும் இந்திய உச்ச நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், சுற்றுச்சூழல் பசுமைத் தீர்ப்பாயங்கள் என பல நீதி அமைப்புகளும் ‘அலுவல் முறையற்றவர்கள்’ என்ற சொல்லின் மீது கேள்வி எழுப்பியிருக்கின்ற நிலையிலும் இவர்கள் ‘நிபுணர்களாகவே’ தொடர்கிறார்கள்.
இதெற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்ற இன்னொரு இடியும் நம் தலை மேல் விழுகிறது. அதாவது, இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மக்களின் கேள்விகளுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை. எந்த விதிமுறைகளும் சட்டங்களும் அமைப்புகளும் இவர்களை நோக்கி கேள்வி எழுப்ப முடியாது. அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இவர்கள்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இந்த ‘அலுவல் முறை சாராதவர்கள்’ கைகளில் ஒப்படைக்கக் கூடாது. அவர்கள் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து வந்தாலும் சரி அல்லது இந்திய அறிவியல் நிறுவனத்திலிருந்து வந்தாலும் சரி.
ஏனெனில் சுற்றுச்சூழல் என்பது மிகுந்த அக்கறையுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. சுற்றுச்சூழல் பன்மைத்தன்மையைப் பேணுவது மிக இன்றியமையாதது. எனவே, சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு மாதத்திற்கு எத்தனை முறை கூடுகிறது என்பது முக்கியமல்ல. அந்தக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் எவரும் அந்த அமைப்பின் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படுபவர்களாக இருப்பதில்லை; மாறாக அதன் வழி தனது சகாக்களின் நலனைப் பாதுகாத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இத்தகைய கட்டமைப்புடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு செயல்படக்கூடாது.
இவ்விடத்தில், தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கும் தில்லிப் போக்குவரத்து மசுதூர் காங்கிரசுக்கும் இடையேயான வழக்கில் (DTC v. DTC Mazdoor Congress (1990), 1990-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கியமானச் செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
”அதிகாரமிக்க உயர்ந்த பொறுப்பிலும் பதவியிலும் இருப்பதாலேயே ஒருவர் அறிவாளியாக இருப்பார் என்று கூறிவிட முடியாது. பொறுப்பும் பொதுநலமும் நேர்மையும் எச்சரிக்கையுணர்வும் உயரிய பதவியில் இருப்பதனாலேயே வந்துவிடாது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர், உயரிய பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வார்கள் என்று பொதுவாக நம்பபடுகிறது; அவ்வளவே.
ஆனால், இந்த நம்பிக்கை சட்டப்படியானதும் பகுத்தறிவானதும் கிடையாது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள், உயர்ந்த பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் என்பதற்கு வரலாற்றிலும் சான்றுகள் இல்லை; நடைமுறையிலும் அதற்கு உறுதி கொடுக்க முடியாது.”
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்தப் பொறுப்பற்றவர்களின் கையில் கண்மூடித்தனமாக ஒப்படைக்க முடியாது. எனவே, இந்தக்குழு மாதத்திற்கு இருமுறை கூடுவதும் அல்லது எல்லாம் நாளும் கூடுவதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் எத்தனை முறை கூடினாலும் சிக்கலிலில்ல. ஆனால், அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் சட்டத்தின் பார்வைக்கு உட்படாதவை அல்லது சட்ட விலக்குப் பெற்றவை என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வதுதான் மிக முக்கியமானது.
கட்டுரையாளர் : ரித்திவிக் தத்தா (Ritwick Dutta), சூழலியல் வழக்கறிஞர்
தமிழில் : ப.பிரபாகரன்