உலகெங்கும் பொருளியல் மந்த நிலையில் உள்ளதை பொருளியல் வல்லுநர்கள் ஒப்புக் கொள்கிறார்கள், நாமும் கண்கூடாகக் காண்கிறோம். இந்தியாவில் பொருளியல் தேக்கம் படுமோசமாக உள்ள நிலையில் இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சருக்கு மட்டும் இந்தியப் பொருளியல் சீராகவும் சிறப்பாகவும் தெரிவதன் மாயம் என்ன!
காஃபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தாவின் மறைவைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பெருங்குழுமங்கள் (கார்ப்பரேட்டுகள்) பெருமளவிற்குக் கூக்குரலிட்டனர். தங்கள் இலாபத்தைப் பாதுகாக்க ’கார்ப்பரேட் வரி’ என்னும் கொடுந்துன்பத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், கார்ப்பரேட் வரி பெறுவதே தீவிரவாதம். எனவும் பெருமுதலியர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, நினைத்ததைச் சாதித்தும் கொண்டனர். மூன்று இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது இவர்கள் குரலெழுப்பவே இல்லை. அரசும் அவையெல்லாம் குடும்பப் பிரச்சினைகளால் நேர்ந்தவை எனப் பொறுப்பேற்காமல் அரசு அறிக்கைகளில் அவற்றைத் தடந்தெரியாமல் அழித்தது.
உழைக்கும் மக்களின் கூலியையே பெருமளவு சுரண்டும் மறைமுக வரி விதிப்பு வரி தீவிரவாதம் இல்லையா? அரசு தர வேண்டிய கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை, உணவுப் பாதுகாப்பைத் தனியாரிடம் அதிக விலைக்குப் பெறுமாறு மக்களை நிர்ப்பந்தித்து அவர்களைப் பட்டினியால் கொல்வது அரசு மக்கள் மீது ஏவும் பொருளாதாரப் போர் இல்லையா?...
மோதி அரசைப் பொறுத்த வரை உழைக்கும் மக்கள் நாட்டின் வளங்களை உருவாக்கவில்லை. உழைப்பிற்குத் துளியும் தொடர்பில்லாத பெருங்குழுமங்களே நாட்டின் வளங்களை உருவாக்குகிறார்களாம். நாட்டின் வளத்தை உருவாக்கும் பெருங்குழுமங்களை மதிக்க வேண்டுமாம்! வளம் உருவாக்குபவர்களை சந்தேகத்துடனோ, தாழ்வாகவோ பார்க்கக் கூடாதாம்! வளம் ஆக்கபடவில்லையெனில் வளப்பங்கீடும் இல்லை. படைப்புகளை உருவாக்குபவர்களையே தான் தேசத்தின் வளமாகப் பார்ப்பதாகவும் மோடி உரையாற்றியுள்ளார். பெருங்குழுமப் பேர்வழிகள் எப்பேர்பட்டவர்கள்! சமூகத்தின் இலாபங்களை மட்டுமே தமதாக்கிக் கொண்டு, நட்டமோ இழப்போ ஏற்பட்டால் அதை சமூகமயமாக்கி விடும் தயாளர்கள்! சமூக சொத்துக்களை, வளங்களை, மனிதவளங்களின் உழைப்பை ஒட்ட சுரண்டுபர்களையே தேசத்தின் வளர்ச்சியாளர்களென அப்பட்டமானதொரு பொய்யை பகிரங்கமாகப் பரப்புரை செய்கிறது மோதி அரசு.
பெருங்குழுமச் சமூகப் பொறுப்பு நெறிகளை (CSR) மீறுவது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. வளம் உருவாக்குபவர்களை மதிப்பதாகவும், மரியாதை செலுத்துவதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார். பெரு நிறுவன சமூகப் பொறுப்பின் படி 2000 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட பெரு நிறுவனங்கள் இலாபத்தில் 2% அளவிற்கு சமூக நலத் திட்டங்களில் செயல்படுத்த வேண்டும் .இதை அவர்களின் கார்ப்பரேட் வரிகளின் மூலமாகவே கூடுதலாகப் பெற்று அரசே இந்தத் திட்டங்களை நேரடியாக செயல்படுத்தலாம்.
ஆனால் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால் இந்த ஏற்பாட்டின் நோக்கமே பெருங்குழுமக் கொள்ளையர்களை சமூக சேவகர்களாகக் காட்டி சமூகத்தில் அவர்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதுதான். என்ன தான் அரசு ’கார்ப்பரேட்டு’களை சமூகப் பொறுப்புள்ளவர்களாகக் காட்ட முயன்றாலும் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை, இலாபத்தைக் குறைத்து காண்பிக்கப் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு மோசடி செய்யும் பெருங்குழுமங்கள் யார்? பொருளியல் குற்றவாளிகள்தானே? குற்றத்திற்குத் தண்டனை விதிப்பதுதானே முறை? ஆனால் அது குற்றமாகக் கருதப்படாது. நாட்டின் வளத்தை உருவாக்கும் ’கார்ப்பரேட்டு’களை மதித்து மரியாதையுடன் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன பொருள்? குற்றத்திற்குத் துணையாக ஆட்சியாளர்கள் இருப்போம் என்றுதானே பொருள்? இப்படித்தானே இவர்கள் விஜய் மல்லையாவையும், நீரவ் மோதியையும் மதிப்பு மரியாதையுடன் பாதுகாத்தார்கள்!
கார்ப்பரேட்டுகளின் துயர்துடைக்கப் பெருங்குழும வரி 30% லிருந்து 25% ஆகக் குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே இந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் 400 கோடி வரை வருமானம் பெறும் 99.3.% கம்பெனிகளின் வரியை 25% குறைத்துள்ள நிலையில் மீதமுள்ள 0.7% பெருங்குழுமங்களின் கார்ப்பரேட் வரியையும் 30% லிருந்து 25% ஆகக் குறைக்கப் போகின்றனர். மொத்த கார்ப்பரேட் வரி வருவாயில் 80% இந்த 0.7% நிறுவனங்களிடமே பெறவேண்டிய நிலையில், அதில் 5% குறைத்தால் அதனால் 1.2 லட்சம் கோடி நிதிவருவாய் குறையும்.
நிதியமைச்சர் கார்ப்பரேட்டுகளின் குறைகளைச் சரிசெய்ய நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வதாக வாக்களித்துள்ளார். பெருங்குழும முதலாளர்கள் தங்கள் இருக்கையில் இருந்தவாறு குரல் கொடுத்தாலே அரசு செவி சாய்க்கும். நிதியமைச்சர் நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். அவர்கள் அணிசேரவோ போராடவோ தேவையில்லை, காவல்துறையின் தடியடிக்கோ, கண்ணீர் புகைக் குண்டுக்கோ வேலையில்லை, தேசதுரோக வழக்கிற்கோ, பொய் வழக்குகளுக்கோ இடமில்லை, ஏனென்றால் இது அவர்களின் அரசு.
உழைக்கும் மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுடன் எத்தனை முறை நாடாளுமன்றத்துக்குப் பேரணியாகச் சென்றாலும் அவர்களை மோதியோ, நிதியமைச்சரோ கண்டுகொள்வதே இல்லை. மக்களின் அமைதியான அறப் போராட்டங்கள் அனைத்து வழிகளிலும் கொடூரமாக அரசு வன்முறை யால் ஒடுக்கப்படுகின்றன. எப்பேர்பட்ட முரண் இது! இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல, பெருமுதலாளிகளின் ஆட்சி என்பதே இந்த முரணின் பொருள்.
நிதிநிலை அறிக்கை வெளியீட்டிற்குப் பிறகு 3.2 பில்லியன் டாலர் அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியேறியதால் கலக்கமடைந்த மோடி அரசு அந்நிய நிதி முதலீடுகளின் மீதான கூடுதல் வரியை நீக்கியுள்ளது. இதுவரை பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI).அந்நிய நிதி முதலீடுகளை மூன்று வகையாகப் பிரித்திருந்தது, தற்போது அந்நிய நிதி முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அதிக நெறிமுறைகளைக் கொண்ட மூன்றாம் பிரிவை நீக்கியுள்ளது.(III category FPI), மேலும் அந்நிய நிதி முதலீடுகளைப் பதிவு செய்தலை மிகவும் எளிமைப்படுத்தி நெறிகளைத் தளர்த்தியுள்ளது. இந்த நகர்வு நிதிகள் வெளியேறாமல் நிலைநிறுத்த உத்தரவாதம் அளிக்காது. இந்தியாவின் நிதிநிலையை மேலும் பலவீனமாக்கி ஊகமுதலீடுகளையே ஊக்குவித்துக் கடன்-குமிழிப் பொருளியலாக்கும்.
நாட்டின் மொத்தத் தேவையும் நுகர்வும் தொழில் முதலீடுகளும் பெருமளவில் குறுகிச் சுருங்கிவிட்டன. இரும்பு, சிமெண்ட் ஆக்கம் (உற்பத்தி) குறைந்துள்ளது. பொருளாக்க, கட்டுமானப் பணிகளும் நசிவடைந்துள்ளன. மோட்டார் வாகனங்களிலிருந்து, ரொட்டி வரை நுகர்வுப் பண்டங்களின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது.
வங்கி நிதிநெருக்கடி, பணச் சுற்றோட்ட நெருக்கடிகளால் வங்கிக் கடன்களின் அளவே குறைந்துள்ள நிலையில், கிடைத்த கடன்களையும் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், 18 முக்கியத் தொழில் துறைகளில் சேவைத் துறை உட்பட 14 தொழில்துறைகளில் வங்கிக் கடன் பெறுவது குறைந்துள்ளது எனத் தலைமை வங்கி அறிவித்துள்ளது.
தலைமை வங்கி மலிவுக் கடன் கிடைக்க வங்கிக் கடன் வீதத்தை 5.4%ஆகக் குறைத்திருந்தாலும் அதன் இறுதிப் பயன்பாட்டை நுகர்வோர் அடையும் விதமாக வங்கிகள் அதைப் பரிமாற்றி வட்டி வீதத்தைக் குறைக்கவில்லை. அப்படியே குறைத்தாலும் அது மட்டுமே இன்றைய பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வாகாது.
நவீனத் தாராளியம் பணக் கொள்கையில் மட்டும் மாற்றம் கொண்டு வருவதாலேயே அனைத்து பொருளியல் நெருக்கடிகளையும் சரி செய்ய முடியும் என்கிறது. ஆனால் ஒவ்வொரு பொருளியல் நெருக்கடியும் அது பொய் என்பதையே மெய்ப்பிக்கிறது.
மூலமுதலின் இலாபத்திற்கும், கூலி வீதத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தில் இருப்பதே இந்தப் பொருளியல் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. கூலி வளர்ச்சி வீதம் மிகவும் குறைந்ததால், தனிநபர் வருமானம் குறைந்து, சேமிப்பும் குறைந்து ஒட்டுமொத்த நுகர்வுத் தேவையைக் குறுக்கியுள்ளது. 2017ல் 176 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச அடிமட்டக் கூலியை வெறும் 2 ரூ மட்டும் உயர்த்தி 178 ரூ நிர்ணயித்த இந்திய அரசு, 17 தொழிலாளர் சட்டங்களை இரண்டு தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்களாக்கி, முத்தரப்பு பேச்சுவார்த்தை இல்லாமல், தொழிற்சங்கங்களை ஆலோசிக்காமல் முதலாளிகளுக்கு சாதகமாக அவசர அவசரமாக நிறைவேற்றிய இந்திய அரசு இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை கண்டு கொள்ளுமா?
இந்தப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குஅரசே நேரடியாகப் பயனுள்ள பொருளாக்கத்தில் முதலீடு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சமூகத்தில் பெருமுதலாளர்களுக்கான இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நவீனதாராளமயத்தில் இதற்கான வெளி மிகவும் குறுக்கப்பட்டுள்ளது. பொருளியல் முதலீடுகளுக்கான கடனைத் தனியார் நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதே அரசின் பிரதான வேலையாகிப் போனது.
இந்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதாகக் கூறி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் மூலம் 1.03 இலட்சம் கோடி வருவாய் பெறவும், தலைமை வங்கியின் இலாபத்தைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கவும், கூடுதல் கடன்களுக்கு அந்நியக் கடன் சந்தையை நம்பியுள்ள நிலையில், அரசே நேரடியாகப் புதிய சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்பில்லை.
சமூகத்தின் மொத்தத் தேவையும், நுகர்வும் குறைந்துள்ள நிலையில், உற்பத்தியான பொருள்களே விற்கப்படாத போது, இலாபத்தைக் கையாடுவதற்கான சூழல் இல்லாத நிலையில் பெருமுதலாளர்கள் எவ்வாறு முதலீடு செய்வார்கள். மூழ்கும் கப்பலில் முதலீடு செய்ய அவர்கள் என்ன முட்டாள் சமூக சேவகர்களா?