அனைத்து சாதியினரும்  அர்ச்சகர் ஆகலாம்  என்று தி.மு.க அரசு கொண்டுவந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பானது பெரும் குழப்பத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது. காரணம் இந்தத் தீர்ப்பை இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு என்று கொண்டாடுகின்றனர். ஆகம விதிகளின் படியும், ஏற்கெனவே அந்தந்த கோவில்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளையும் கண்டிப்பாக அர்ச்சகர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது. ஆகம விதிகளின் படி மட்டுமே நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தால் நாம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கூறுவதால் இது ஒரு பக்கம் பார்ப்பனர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

Brahmins Maha Sabha

  ஆகம விதிப்படிதான் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்றால் நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியும். காரணம் எந்த ஆகமமும் இந்தச் சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேதபிராமணர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது. ஒரு கோவிலில் ஒருவர் அர்ச்சகராக அல்லது பூசாரியாக வருவதற்குள்ள ஒரே சோதனை தீட்சை மட்டுமேயன்றி சாதியோ, வகுப்போ அல்ல. தீட்சை பெறாத ஒரு பிராமணன் கோவிலில் சமையற்காரன் போன்ற கீழ்நிலைப் பணியாளனாகக்கூட இருக்க முடியாது. ஓர் இந்துக்கோவில் கருவறைக்குள் அவன்  நுழைய முடியாது. அங்குள்ள கடவுள் சிலைகளை அவன் தொடவும் கூடாது. பிராமணர்கள் போன்றும், இதர வகுப்பினரைப்போன்றும் ஒரு சண்டாளன் கூட தீட்ச பெற்றுக் கொள்ள முடியும். ஆகமங்களின் கொள்கைப்படி, ஆலயத்துனுள் நுழையவும், வழிபாடு செய்யவும் சாதி முக்கியமல்ல. ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் சலுகை காட்டவோ, வேறு வகுப்பினரை வெறுத்தொதுக்கவோ இடமில்லை.( ஆலயபிரவேச உரிமை:ப.எண்: 75)

   ஆகம விதிகளைப் பின்பற்றிமட்டுமே அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொண்டால் ஏற்கனவே கோவில்களில் தீட்சை பெறாமல் சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பூசை செய்து வரும் பார்ப்பனர்கள் கோவிலில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும். ஆனால்  அந்த அந்தக் கோவில்களில் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் மரபுகள், சம்பிரதாயங்கள் என்ற போர்வைக்குள் பார்ப்பனர்கள் அவர்கள் பூசை செய்யும் கோவிலிலேயே நிரந்தரமாக தங்கிவிட இந்தத் தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றது. எனவே இந்தத் தீர்ப்பு இருசாராருக்கும் உடன்பாடாக இருக்கின்றது.

  ஆகம விதிப்படி கோவில்களில் தீட்சை பெற்ற அனைவரும் பூசை செய்ய முடியும் என்ற நிலை இருந்தாலும் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் அதற்காக எப்போதும் பெரிய அளவில் முன்முயற்சி எடுத்ததில்லை என்பதுவே உண்மை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 சட்டம் இயற்றிய தி.மு.க அரசுதான், 2011 ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மடப்பள்ளியில் நிவேத்தியம், மற்றும் பிரசாதம் தயாரிக்கும் வேலைக்குப் பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை மூலம் ஆணையிட்டது. இப்போது இந்த வழக்கை நடத்திக் கொண்டு இருக்கும் அ.தி.மு.க அரசு 2013 அம் ஆண்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு ஆள் எடுத்த போது பிரதான ஆலய ஸ்ரீபாதன் மற்றும் உபகோயில் ஸ்ரீபாதம் என்ற இரண்டு வேலைக்கும் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை மூலம் ஆணையிட்டது. இதுதான் இவர்களின் உண்மையான நிலைப்பாடு. எனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 மாணவர்களும் இந்த இரண்டு கட்சிகளையும் இன்னும் நம்பி இருந்தால் மிகப் பெரிய ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டி இருக்கும்.

  ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோவில்களில் கருவறைத் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு மற்றொரு உண்மை ஆகம விதிகள் கடைபிடிக்காத பெரும்பான்மையாக உள்ள நாட்டார் தெய்வ வழிபாட்டு கோவில்களில் கருவறைக்குள் மட்டும் அல்ல, கோவிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத அளவிற்கு தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது என்பது. தமிழகம் முழுவதும் உள்ள பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதியினர் கட்டிய அம்மன் கோவில், முனியப்பன் கோவில், கருப்பனார் கோவில் போன்ற கோவில்களில் இன்றும் தீவிரமான சாதிய தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால் நம்மில் பல பேர் அதுபற்றி மறந்தும்கூட வாய் திறப்பதில்லை. சேசசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் தேரைக் கொளுத்தியது யார்? வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தானே.

நிறுவனப்படுத்தப்பட்ட கோவில்களில் மட்டுமே ஆகமவிதிகளின் அடிப்படையில் பூசைகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கோவில்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மிகவும் குறைவு. திருவிழா காலங்களைத் தவிர பெரும்பாலான நேரங்களில் மக்கள்  தங்கள் ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோ உள்ள நாட்டார் தெய்வ கோவில்களுக்கே அதிகம் செல்கின்றனர். ஆனால் இந்த கோவில்களில்தான் தீண்டாமை பெரிய அளவில் தலைவிரித்து ஆடுகின்றது.

  ஒரு பக்கம் நாம் நாட்டார் தெய்வவழிபாட்டை தூக்கிப் பிடிக்க காரணம் அது பார்ப்பன இந்துமதத்தின் புனிதத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதுதான். ஆனால் அதுவே பார்ப்பனிய  மேலாண்மையின் இடத்தில் தன்னுடைய மேலாண்மையை உறுதி செய்தால் அதை நிச்சயமாக எதிர்க்காமல் இருக்க முடியாது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதும் அவற்றில் பெரும்பாலானவை நாட்டார் தெய்வ கோவில்கள் என்பதும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை நமக்கு உணர்த்தும்.

 எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகமங்களை முறைப்படி கற்ற அந்த 206 மாணவர்களையும் ஆகம விதிப்படி  நடைபெறும் கோவில்களில் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நாம் போராடும் அதே சமயம் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படாத ஆயிரக்கணக்கான நாட்டார் தெய்வ கோவில்களில் நிலவும் தீண்டாமையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர நாம் அடுத்தக் கட்ட போராட்டத்தைத் துவக்க வேண்டும். இதைச் செய்யாமல் நிச்சயம் சாதிய தீண்டமையை ஒழிக்க முடியாது.  நம்முடைய நோக்கம் எங்கெல்லாம் சாதியின் பெயரால் மக்கள் கருவறைக்குள்ளும் கோவிலுக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்படுகின்றார்களோ அதை அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியும்.

- செ.கார்கி

Pin It