நாகரிகம் அற்றவர்களாய், நாடோடிகளாய், கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஆரியர்கள் மய்ய ஆசியப் பகுதிகளிலிருந்து நகர்ந்தபோதே அவர்களின் சில குழுக்கள் – கிரீஸ், ஸ்காண்டிநேவியா, ஜெர்மன், இத்தாலி போன்ற பகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்தனர்.ஆனால் அப்பகுதிகளிலெல்லாம் வர்ணப்பாகுபாடோ, அதற்குப் பிறகான சாதி முறையோ உருவாகவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் இம்முறைகள் ஏன் உருவாயின? இதற்கு சிந்து சமவெளி மக்களின் நாகரிக நிலையைத்தான் விடை யாக சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. உலகின் பிற பகுதிகளில் அப்போது நாகரிக வளர்ச்சி இல்லை.
வேளாண்மையை தமது தொழிலாகக் கொண்டிருந்த சிந்துவெளி மக்கள், சிறுசிறு நகரங்களில் வீடுகளைக் கட்டி வாழ்ந்திருக்கின்றனர். அணிகலன்களை அணிந்திருக்கின்றனர். மொழியை எழுத்து வடிவில் எழுதும் முறையை அறிந்திருக்கின்றனர். பகுத்தறிவிற்குகந்த ஒழுக்க முறைகளை கடைப்பிடித்திருக்கின்றனர். இத்தகைய உயர்ந்த பண்பாட்டைப் பார்த்தபோது – ஆரியர்களுக்கு தாழ்வுணர்வும், வெறுப்பும், காழ்ப்புணர்வும் ஏற்பட்டிருக்கும் என்பதை எளிதில் ஊகித்துவிட முடிகிறது.
சிந்துவெளி மக்கள் வெள்ளம், இடப்பெயர்வு போன்ற காரணங்களால், தாம் நிலை கொண்டிருந்த ஆற்றுப்படுகைகளிலிருந்து இந்தியாவின் வேறு பகுதிகளுக்கு சிதறிப் போயிருந்தாலும், ஆரியப் படையெடுப்பினால்தான் அளவுக்கதிமாக சிதறடிக்கப்பட்டிருப்பார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கங்கைச் சமவெளி மற்றும் சிந்து சமவெளி பகுதிகளை கைப்பற்றிப் பரவிய ஆரியர்கள், தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வர்ணமுறையைப் புகுத்தியிருக்கின்றனர்.
போர் என்றாலே அது ஏதோவொரு வகையிலான மேலாதிக்கத்தை காட்டுவதற்கானது என்றே பொருள்படும். ஆநிரைகளை கவர்தலும், கொள்ளையடித்தலும்கூட இதில் அடங்கும். வேதங்களில் எண்ணற்ற இடங்களில் குதிரைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. கி.மு. 1800–க்கு முன்பு போரில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, ஆரியப் படையெடுப்பு 1700– க்கு முன்பு இல்லை என்கிறார் தர்மானந்த கோசம்பி (பகவான் புத்தர் – தர்மானந்த கோசம்பி, புத்தா 2006).
சிந்து பகுதியிலும், கங்கை சமவெளிப் பகுதியிலும் நிலைப்பெற்ற ஆரியக் கூட்டம், தங்களை ஆதிக்கம் மிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்கான அத்தனையையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தம்மை எதிர்த்த தொல்குடி மக்களை கணக்கின்றி கொன்றிருக்கின்றனர். வேதங்களில் குறிப்பிடப்படும் "தஸ்யூக்கள்' இந்தியாவின் தொல்குடிமக்களைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல்லுக்கு "உயர்குடித் தோன்றல்' என்ற பொருள் உண்டு. பிற்காலத்தில் "அடிமை' என்ற பொருள் இச்சொல்லுக்கு ஏற்பட்டுள் ளது என்கிறார் தர்மானந்த கோசம்பி. ஆரியர்கள், இந்தியாவின் பூர்வகுடி மக்களைக் கொன்று அழித்ததற்கான ஆதாரங்கள் அவர்களின் வேதங்களில் இருக்கும் பாடல்களிலேயே காணக் கிடைக்கின்றன.
“ஓ, இந்திரனே! பிப்ரூ மிருகாய அசுர அரக்கர்களை ஆரிய மன்னனான விதாதின் மகன் ரிஜிஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய். அய்ம்பதாயிரம் இருப்புப் படை களை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப்பது போல் பல கோட்டைகளைப் பாழாக்கினாய்'' (ரிக் வேதம், 4:30 (31).
“ஓ, இந்திரனே! சோமனே! அரக்கர்களை எரி, எரி. நசுக்கு, நசுக்கு. இருண்ட காடுகளில் ஒன்று, பத்து நூறாய்ப் பெருகி வரும் அந்த அரக்கர் கூட்டங்களை அடக்கு, அடக்கு. சின்னாபின்னப்படுத்து. மடையர்களைத் தீகொழுந்திலிட்டுப் பொசுக்கு. வன்கொடுமை செய். நார் நாராகக் கிழித்தெறி. துண்டு துண்டாக வெட்டு'' (ரிக் வேதம், 7:104 (1) – ("பிராமணியம்', தமிழ் மகன், பாவேந்தர் மன்றம், 1974).
இப்படி ஆரியர்களின் போர்களின் மூலம் சிதறடிக்கப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும், அடிமைகளாக்கப்பட்டும் கிடந்த இந்தியாவின் தொல்குடி மக்களிடையே ஆரிய இனக்கலப்பும், கருத்தியல் கலப்பும் நிகழ்ந்தன. இக்கலப்புச் செயல் வடக்கிலிருந்து மெல்ல தெற்கு நோக்கி நகர்ந்தது. இக்கால வெளியில் உருவான நால் வர்ணக் கோட்பாடு நெகிழ்வாகவே இருந்திருக்கிறது. அது சாதியாக தன்னை இறுக்கமாக்கிக் கொள்வதற்கு ஆண்டுகள் பல பிடித்திருக்கின்றன. புத்தரின் காலத்தில் சாதியம் தனது புதிய வேர்களை விட்டு, இந்திய மண்ணில் ஊன்றத் தொடங்கியிருந்ததை நூல்களின் வழியே நம்மால் அறிய முடிகிறது. புத்தர் ஒரு முறை வடமதுரை எனும் இடத்திற்கு அருகில் இருந்த குந்தாவனத்தில் இருந்தபோது, அப்பகுதி அரசனான அவந்தி அவரைக் காணச் செல்கிறார். அவருடன் உரையாடுகையில் அவந்தி கேட்கிறார் : “காத்தியாயரே, அந்தண வர்ணமே வெண்மையானது, மற்றவை கறுப்பானவை, அந்தணர்களுக்கே முத்தி கிடைக்கும், மற்றவர்களுக் கிடைக்காது; அந்தணர்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து உண்டானவர்கள், அவனுடைய சொந்தப் பிள்ளைகள் என்று அந்தணர்கள் கூறுகிறார்களே! இதைப் பற்றி உங்கள் கருத்து யாது?''
புத்தர் சொல்கிறார் : “நான்கு வர்ணங்களும் சமமே என்று உறுதியாகத் தோன்றுகிறது. அவற்றுள் எவ்வகை வேறுபாடும் எனக்குப் புலப்படவில்லை... அந்தணவர்ணமே சிறந்தது என்பது அந்தணர்களின் பேச்சு, வெறுங்கூச்சல். அந்தணன், சத்திரியன், வைசியன், வேளாளன் எனும் நால் வர்ணத்தவர் உயிர்க் கொலை முதலிய பாவங்களைச் செய்தால், சமமாகவே தாழ்நிலை எய்துவார்கள்.'' மஜ்ஜிம நிகாயத்தில் உள்ள மதுர சூக்கத்தில் (84) இந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது என புத்தரைப் பற்றிய பல நூல்கள் கூறுகின்றன. ஆரியர்களின் வருகைக்கும் – புத்தர் தோன்றிய காலத்துக்குமான சுமார் ஆயிரம் ஆண்டு இடைவெளியில் இந்தியாவில் வர்ணம் சாதியாக இறுகி நிலைப்பெற்றுள்ளது.
சாதியத்தின் வேரைக் கண்டறிந்து, அதைத் துளிர்க்க விடாமல் பவுத்தம் பிடுங்கி எறிய முயன்ற ஒரு சில நூற்றாண்டு களுக்குள்ளாகவே ஆரியம், மீண்டும் வலுவாக தன்னை இந்திய மண்ணுள் ஊன்றிக் கொண்டு விட்டது. பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட மவுரியப் பேரரசின் 140 ஆண்டுகால ஆட்சியின் கடைசி மன்னரான பிருகதிராதாவை அவரின் தளபதியான புஷ்யமித்திரன் கொன்றார். புஷ்யமித்திரன் ஒரு சாமவேதப் பார்ப்பனர். கி.மு. 204இல் அரசாட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் சுமார் அறுபது ஆண்டுகள் ஆண்டான். இவன் ஆட்சியின்போது பவுத்தம ் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது. புத்த விகாரைகள் தரைமட்டமாக்கப்பட்டன. பவுத்த துறவிகள் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு பவுத்த துறவியின் தலைக்கும் நூறு தங்கக் காசுகள் விலையாக அறிவிக்கப்பட்டன.
இந்தியாவில் பார்ப்பன, பார்ப்பனிய ஆதிக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பாடல் ஒன்றே போதுமான சான்று :
“தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்
மந்ராதீனம் து தைவதம்
தன் மந்ரம் ப்ராஹ்மணா தீனம்
ப்ராஹ்மணோ மமதைவதம்''
உலகில் அனைத்தும் இறைவனுக்குக் கீழே உள்ளவையாகும். இறைவன் மந்திரத்துக்குக் கீழே உள்ளான். அந்த மந்திரம் பார்ப்பனனுக்குக் கீழே இருக்கிறது. ஆகவே பார்ப்பனனே கடவுள் என்பதே இப்பாடலின் பொருள். பூமியில் நடமாடும் தெய்வங்களாக தம்மை பார்ப்பனர்கள் அறிவித்துக் கொண்டது புஷ்யமித்திரனின் காலத்தில்தான். அவன் ஆட்சியில் மநுஸ்மிருதி சட்டத் தொகுப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. மநுஸ்மிருதி இந்து நூல்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு வானளாவிய அதிகாரத் தையும், சலுகைகளையும் அளிக்கிற இந்த நூலை பார்ப்பனியச் சட்டத் தொகுப்பு என்று அழைக்கிறார் அம்பேத்கர்.
புஷ்யமித்ர சுங்கனின் காலம் இந்தியாவின் பார்ப்பனிய மறுமலர்ச்சிக் காலம். இம்மறுமலர்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் பார்ப்பனர்கள் பின்னோக்கிப் பார்க்கவில்லை. அவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான். இரண்டாயிரம் ஆண்டுகளாக அது தொடர்ந்தது. வெட்கமும் தன்மானமும் இன்றி உழைக் காமலேயே வயிறு வளர்க்கும் வேலையை பல நூறு ஆண்டுகளாய் ஒரு சமூகம் தொடர்ந்திருக்கிறது என்பதே, இந்த இந்திய வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.
பார்ப்பனர்களே இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாகவும், பல ஆயிரம் சாதிகளாகவும் பிரித்து தமது காலடியில் வைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கீழ் இருக்கும் சாதி அடிமைகள் கேள்வி கேட்காத வண்ணம் இருந்தது, அவர்கள் உருவாக்கிய படிநிலைப்படுத்தப்பட்ட சாதிய அமைப்பு. இந்த ஒடுக்குமுறைக்கு இந்து மதம் காவல் அரணாக உருவாக்கப்பட்டது. இந்தியச் சமூகத்தில் இவ்வளவு நுட்பமாக, வீழ்த்துவதற்கு சவாலானபடி உருவெடுத்து நிற்கும் சாதி அமைப்பை உருவாக்கிய பார்ப்பனர்களின் அறிவை பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள் (காந்தியும் இதில் அடக்கம்). ஆனால் இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. இது ஓர் ஏமாற்று வேலை. திருடர்களிடம் இருக்கும் அறிவு!
பகுத்தறிவை பயன்படுத்தி இம்முறையை தூக்கியெறிய முயலாத இந்திய மக்களின் முட்டாள்தனமே சாதி அமைப்பை இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது. சாதிக்கு ஆதரவான இந்திய மக்களின் முட்டாள்தனம் வளர்த்தெடுக்கப்பட்டதும், பயிற்றுவிக்கப்பட்டதுமான ஒன்று ஆகும். இந்த பயிற்றுவிப்புக்கு இந்து மத நூல்கள் அத்தனையும் பாடநூல்களாகப் பயன்படுத்தப் பட்டன; பயன்படுகின்றன.
“நீங்கள் இந்துவாக இருக்க விரும்பினால் அவற்றை (வேதங்களை) நம்பியே ஆகவேண்டும். கடவுளைப் பற்றிய எந்த விசித்திர கொள்கையை நம்பினாலும், வேதங்களை ஒப்புக் கொள்ளாவிடில் நீங்கள் நாத்திகர்களே'' என்கிறார், இந்த நூல்களைப் பற்றி விவேகானந்தர் (வேதாந்த சொற்பொழிவுகள் ராமகிருஷ்ண மடம், சென்னை 4) எவ்வளவு கவனமோடு இப்பயிற்றுவிப்பு நடைபெறுகிறது என்பதை இக்கூற்றிலிருந்து நம்மால் உணரமுடியும். மரபுகள், ஆச்சாரங்கள், வழக்கங்கள், நியமங்கள் என்று பார்ப்பனர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட மதிப்பு அளவிடற்கரியது. பார்ப்பனர் பூமியில் உலவும் தேவர்களாக அறியப்பட்டார்கள். இன்றள வும் இந்நிலை தொடர்கிறது.
"அனைத்துப் படைப்புகளிலும் மிகச்சிறந்தது உயிரினங்களே; அவற்றிலும் மிகச் சிறந்தவர் தம் அறிவில் வாழ்பவர்களே! அறிவில் சிறந்தது மனிதகுலம், அதிலும் சிறந்தவர்கள் பார்ப்பனர்கள்' (மனுஸ்மிருதி 1:96)
பார்ப்பனர் ஒருவர் அவரின் திறமையின் அடிப்படையிலோ, அவர் சமூகத்துக்குச் செய்த அளப்பறிய தொண்டின் அடிப்படையிலோ, அவர் பெற்ற அறிவின் அடிப்படையிலோ மதிக்கப்படுவாரெனில் தவறேதும் இல்லை. ஆனால் அவர் பார்ப்பனர் என்பதாலேயே மதிக்கப்பட வேண்டும் என்கிறது மநுஸ்மிருதி.
“வேள்வித்தீயாக இருந்தாலும் சரி, சாதாரணத் தீயாக இருந்தாலும் சரி, நெருப்பு தெய்வீக ஆற்றலோடு திகழ்கிறது. அதைப் போலவே படித்தவனாக இருந்தாலும் சரி, முட்டாளாக இருந்தாலும் சரி, பார்ப்பனனே மேலான கடவுள்'' (மநுஸ்மிருதி 9:317)
இந்தியாவில் வாழும் மக்களுக்கு பார்ப்பனரே எல்லாம் என்ற போலி கருத்துகள் உருவாக்கப்பட்டன.
“பார்ப்பனன் உடல் புனித யாத்திரையின் மய்யம்
புனித கங்கை அவன் வலது காதில் உள்ளது
புனித நெருப்பு அவனின் வலது கை
புனித இடங்கள்
அவனின் வலது பாதம்
அவன் வாய் உலகிற்கு நன்மையையும்
அமைதியையும்
கொண்டுவரும்''
– என்று இந்து மத நூல்களில் எழுதி வைத்து மக்களை ஏமாற்றினர் பார்ப்பனர். இப்படி மதிப்பையும் மரியாதையையும் பெற்றதால், அரசுகளின் உயர் பதவிகளுக்கு அவர்களால் வரமுடிந்தது. அரசர்கள் பார்ப்பனரின் கால்களில் விழுந்தனர். அவர்களின் சூழ்ச்சியானது "பார்ப்பன மதிநுட்பம்' என்று புகழப்பட்டது.
பார்ப்பனர்களுக்கு தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. கொலை, வன்புணர்ச்சி, களவு என எது செய்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை மொட்டையடிப்பதும், நாடு கடத்துவதும் மட்டுமே. அதுவும் அவர்களை நாடு கடத்துவதெனில் சொத்துக்களுடன் நாடு கடத்திடவேண்டும் என்பதே இந்து மத நூல்கள் சொல்லும் விதி. அண்மையில் பாலியல் குற்றங்களை செய்த கத்தோலிக்க பாதிரியார்கள் சிலர், அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. மதபிரச்சாரகர்களும், குருக்களும் குற்றமிழைத்தால் தண்டனைக்குள்ளாவது, உலக அளவில் இயல்பானதொரு நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இது நினைத்தும் பார்க்க இயலாத ஒன்று. சட்டங்கள் சில நேரங்களில் அவர்களை கைது செய்கின்றன. நீதிமன்றங்களோ அவர்களை எப்போதுமே விட்டுவிடுகின்றன என்பதுதான் இந்திய நடைமுறை.
இந்திய சமூகத்தின் அட்டைகள் பார்ப்பனர் என்றால் அது மிகையான கூற்றாக இருக்க முடியாது. தங்களது "உயர்சாதி' நிலையை காரணம் காட்டி அவர்கள் பெற்ற சலுகைகளையும், பயன்களையும் சொல்லி மாளாது. நிலங்களும், பொருட்களும், செல்வங்களும், பணமும் தானமாக வழங்கப்பட்டன. ஒரு மனிதன் பசுவை விற்றால் நரகம் கிடைக்கும். பார்ப்பனருக்கு தந்தால் சொர்கம் கிடைக்கும். நிலத்தையும், வீட்டையும் அவர்களுக்கு தானமாக தந்தாலும் சொர்கம் கிடைக்கும். குடையை தந்தால் தானம் தருபவரை வெப்பம் தாக்காது. செருப்பு அளித்தால் கால் வலிக் காது. வாசனை திரவியம் தந்தால் கெட்ட வாடை முகர முடியாதபடி ஆகும். உணவு தருவதோ மதிப்பை தரும் என்று சொல்லி மக்களை ஏமாற்றினர்.
புண்ணியம் பெறுவதற்காக மன்னன் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் செல்வம் அழியாதது. வேள்விகளை நடத்த பொன்னையும் மணிகளையும் கணக்கின்றி தரவேண்டும் என மநுஸ்மிருதி சொல்கிறது. வேதமறிந்த, வேதபாராயணங்களை அறிந்த பார்ப் பனர்களுக்கு தரும் தானம் கணக்கிட முடியாத படியான பலன்களைத் தரும் என நம்ப வைக்கப்பட்டது.
வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் கணக்கின்றி பெற்ற தானங்கள் பற்றிய குறிப்புகள் விரவியிருக்கின்றன. தங்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குப் பரிசில்களை தந்த தமிழ் அரசர்கள், பார்ப்பன அறிஞர்களுக்கு மட்டும் நிலங்களை தானமாக வழங்கியதாக சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறுகள் கூறுகின்றன. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் "பிரம்ம தேயங்கள்' என்று அழைக்கப்பட்டன. பேஷ்வாக்களின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு குடும்பச் செலவுக்கென ஏராளமான பணம் வழங்கப்பட்டது. இதனால் பேஷ்வாக்களின் கருவூலமே காலியானது. மராட்டிய மன்னர் சிவாஜியை, சத்திரிய வர்ணத்துக்கு மேல்நிலையாக்கம் செய்ய அவரின் அனைத்து செல்வங்களையும் பிடுங்கிக் கொண்டனர் பார்ப்பனர்கள்.
கேரளாவில் திருவிதாங்கூர் அரசர்கள் பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்ததைப் பற்றிய குறிப்புகள் பல உண்டு. மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது பாவங்களிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்று பார்ப்பனர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவர்கள் தமது வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் மன்னருக்கு சில ஆலோசனைகளை வழங்கினர். "பத்ரி தீபம்', "முறை ஜெபம்' போன்ற சடங்குகளை நடத்தச் சொல்லினர். "முறை ஜெபம்' என்ற சடங்கு 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து 56 நாட்கள் நடக்கும். அதில் கலந்து கொள்ளும் பார்ப்பனருக்கு கணக்கின்றி தட்சணை வழங்கப்படும். மேலும் மன்னன் இருபிறப்பாளன்தான் (சத்ரியன்) என அறிவிக்க "ஹிரானிய கர்பா' என்ற சடங்கும் நடத்தப்பட்டது. 1749ஆம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா "துலா புருஷதானம்' என்ற சடங்கை செய்தார். அப்போது அரசருக்கு சமமான எடையுள்ள தங்கம் நிறுத்தப்பட்டது. அதை பார்ப்பனர்கள் பங்கிட்டுக் கொண்டனர். அரசு செலவில் பார்ப்பனர்களுக்கென உணவு சத்திரங்களும் (ஊட்டுப்புரைகள்) தங்குமிடங்களும் (வழியம்பலங்கள்) நாட்டின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டன (கோயில் நுழைவு உரிமை. பி. சிதம்பரம்பிள்ளை, சாளரம், 2005)
பார்ப்பன புரோகிதர்கள், அவர்கள் தொழில் செய்யும் இந்து கோவில்களின் நிலங்களையும் ஆண்டு அனுபவித்தனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் நாற்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் உண்டு. நாடு முழுக்க இப்படி எண்ணற்ற கோயில்கள் உள்ளன. சில கோயில்களின் வருவாயும் புரோகிதர்களுக்கே போய்ச் சேரும். காசி விசுவநாதன் ஆலய வருமானம் புரோகிதர்களுக்கு சொந்தமாகும். பெரும் வருவாய் வருகின்ற கோயில் கள் பார்ப்பனர்களின் நிர்வாகத்திலும், ஆதிக்கத்திலும் இருந்து வருகின்றன. மரபு வழிபட்ட அர்ச்சக உரிமை என்று சொல்லி இன்றளவும் பார்ப்பனர்கள் கோவில் கருவறைகளை விட்டு வராமல் இருப்பதற்குக் காரணம், வெறுமனே தமது சாதி மேலாதிக்கத்தை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல; அக்கோயில்களால் கிடைக்கும் பொருள் பயன்களும்தான்.
திருப்பதி கோயிலுக்கு 32 ஆயிரம் கோடி அசையா சொத்துகளும், 50 ஆயிரம் கோடி நகைகளும் இருப்பதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இச்சொத்து மதிப்புக் கணக்கை தாண்டி மதிப்பிடப்படாத நகைகள் குவிந்திருப்பதாகவும், பல திருடு போனதாகவும் சொன்னார்கள். இவை அனைத்துமே புரோகிதர்கள் கையிலிருக்கும் சொத்துகள்தான். பிள்ளை பெயரைச் சொல்லி பூதம் தின்ற கதை இவை!
இவ்வளவையும் செய்த பார்ப்பனர்கள் தமக்குக் கீழுள்ள மூன்று வர்ணத்து பெண்களையும் விட்டுவைத்திருப்பார்களா என்பதைச் சொல்லத் தேவையில்லை. பார்ப்பனச் சமூகத்துப் பெண்களுமே கூட பார்ப்பன ஆண்களின் பிடியிலிருந்து தப்பவில்லை. பார்ப்பனர்களுக்கு கட்டற்ற பாலுறவு உரிமையை வழங்குவதை, சாதி கலப்பு தடுக்கும் நோக்கோடு மநுஸ்மிருதி தடை செய்தது.
“சூத்திரப் பெண்ணை தன் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லும் பார்ப்பனன், தன் இறப்பிற்குப்பின் நரகத்தையே அடைவான். அவன் மூலமாகக் குழந்தைப் பெற்றுக் கொண்டாலோ அவன் பார்ப்பனன் என்ற தகுதியை இழந்து விடுவான்'' (மநுஸ்மிருதி, 3 : 17)
ஆனால், காமத்தினால் ஒருவன் இரண்டாவது திருமணம் செய்வதாய் இருந்தால் சூத்திரன் தன் சாதியிலும், வைசியன் தன் சாதியிலும், சூத்திர சாதியிலும், சத்திரியன் தன் சாதியிலும், வைசிய சூத்திர சாதிகளிலும், பார்ப்பனன் தன் சாதியிலும் மற்ற 3 சாதிகளிலும் திருமணம் செய்து கொள்ளலாம் (மநுஸ்மிருதி 3:12, 13) என்ற விதிவிலக்கையும் அளித்தது.
பார்ப்பனர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் தன் சாதி பெண்கள் மற்றும் பிற சாதி பெண்களுடனான முதல் உறவு உரிமையை வலியுறுத்திப் பெற்றிருக்கின்றனர். பல வர லாற்றாசிரியர்கள் இவ்வழக்கத்தைப் பற்றிய குறிப்புகளை தமது நூல்களில் எழுதியுள்ளனர். அம்பேத்கர் தமது "பார்ப்பனியத்தின் வெற்றி' எனும் நூலில் இவ்வழக்கத்தைப்பற்றிய சில குறிப்புகளைத் தருகிறார். "இந்தப் பார்ப்பனர்களைப் பற்றி அறிந்து கொள்வது தேவையானதும் அதே நேரத்தில் மனதுக்கு இனிமையானதும் கூட, நம்மிடை யே யுள்ள மத குருமார்களைப் போல சமய விஷயங்களில் இவர்கள் முக்கியமான ஆட்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
"மன்னன் திருமணம் செய்யும்போது மிகவும் மதிப்பும், மரியாதையும் உள்ள இந்த பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவை கழிக்க அவரை அனுப்பிவிடுவார்' (லூடேவிகோ டி. வர்த்தேமா (கி.பி.1502)வின் குறிப்பு, மேற்கோளாக) மன்னனின் புதுமனைவியோடு பார்ப்பனர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் தமது இனப் பெண்கள் மற்றும் கீழ்த்தட்டுப்பெண்களின் முதல் இரவு உரிமையையும் கோரினார்கள்.
– தொடரும்