தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் - மத்திய அரசின் ஏ, பி போன்ற உயர் பதவிப் பிரிவுகளில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை என்ற உண்மைகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளில் குரூப்-ஏ பதவிக்கான பதவி உயர்வில் உச்சநீதி மன்றம் வழங்கிய பிழையான தீர்ப்பு - இப்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உச்சநீதிமன்றம், குரூப்-ஏ பிரிவுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. அதில் ரூ.5,700க்கு அதிகமாக ஊதியம் பெறுவோருக்கு இந்த பதவி உயர்வுக்கான விதி பொருந்தும் என்று கூறியது. இப்படி, ஒரு ஊதிய வரம்பை நிர்ணயித்தால், பதவி உயர்வுக்கான கதவுகள் அடைக்கப் பட்டுவிடும்.

இந்த தவறான தீர்ப்பால் கடந்த ஒராண்டு காலமாக பதவி உயர்வு பெற முடியாமல், பட்டியலினப் பிரிவினர் முடக்கப்பட்டனர். இப்போது மத்திய வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்த பிறகு, நீதிபதிகள் செலமேஸ்வர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பிழையானது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

ரூ.5700க்கும் குறைவாக மாத ஊதியம் பெறுவோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே சரியான தீர்ப்பு. அப்படி எழுதாமல் ‘ரூ. 5700க்கு அதிகமாக’ என்று பிழையாக தீர்ப்பை எழுதி விட்டார்கள். இது தவறு என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த பிழையால் ஓராண்டு காலமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளை எத்தனை பேர் இழந்திருப்பார்கள்?

மோடியின் ‘ஜியோனிச’க் குரல்

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அந்நாட்டில் குடியுரிமைப் பெற்ற இந்தியப் பார்ப்பனர்கள், தொழிலதிபர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அந்நாடுகளில் வாழும் ‘ஜியோனிசம்’ என்ற இஸ்லாமிய வெறுப்பைக் கொள்கையாகக் கொண்ட யூதர் அமைப்புகள் பெருமளவில் உதவி செய்வதோடு, பார்ப்பனர்கள் தொழிலதிபர்களும் பங்கேற்று வருகிறார்கள் என்றும், இது ஆபத்தான போக்கு என்றும் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (டிச.11, 2015) ஜப்பான் மற்றும் கனடா பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட் டுள்ளனர்.

இஸ்லாமிய எதிர்ப்பு இனவாதமான ‘ஜியோனிசம்’ முன்வைக்கும் கருத்துகளையே மோடியும் இந்த நிகழ்வுகளில் பேசி வருகிறார்.  “இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு வந்துவிட்ட குற்ற உணர்விலிருந்து விடுபடுங்கள். இந்தியா வுக்கு எல்லைகள் கிடையாது.

எந்த நாட்டிலிருந்தாலும் நீங்கள் ‘இந்தியர்’தான்; ‘குடிமகன்’ என்ற அடையாளத்தைவிட ‘இந்தியா’ என்ற தேச அடையாளமே உங்களுடன் பிரிக்க முடியாமல் பிணைந்து நிற்கிறது.

இந்தியாவின் புனிதத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும்” என்று மோடி பேசி வருகிறார்.

குறுகிய இனவாதத்தோடு தேசப்பற்றை இணைக்கும் இந்தப் பேச்சுகளால் பார்ப்பனர்களும் தொழிலதிபர்களும் ‘இந்துத்துவா’வின் தூதர்கள் என்ற உணர்வைப் பெற்று வருகிறார்கள் என்று  அந்த கட்டுரை கூறுகிறது.

வளைகுடா நாடுகளுக்கு சென்ற மோடி, அங்கு மிக மோசமான சூழ்நிலையில் கடுமையான உடல் உழைப்பில் அவதிப்படும் இலட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால், இந்து கோயில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை கட்டுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகம் முழுதும் பரவிக் கிடந்த யூதர்கள், தங்களுக்காக இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டதுபோல் உலகம் முழுதும் வசதி வாய்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனர்களை ஒருங்கிணைத்து இந்தியாவை ‘இந்து தேசியமாக்கும்’ முயற்சிகள் மோடியின் உலகநாடுகள் பயணத்தின் வழியாக நடப்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.

Pin It