’தலித் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்’ என ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 4.09.2018 அன்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் அச்சொல்லின் உண்மையான பொருளை இணையத்தில் தேடியிருப்பர். இந்தியர்களைப் பொருத்தவரை தலித் என்றால் ஒரு சாதிப் பெயர் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தடை அச்சொல்லின் பொருளையும் வரலாற்றையும் தேடும், விவாதிக்கும் நல்வாய்ப்பை இச்சமூகத்திற்கு வழங்கியிருக்கிறது என்ற வகையில் - கேட்டிலும் ஒரு நன்மை விளைந்திருப்பதாக - பெருந்தன்மையோடு புரிந்து கொள்ளலாம்.
இப்பிரச்சினையைத் தொடங்கி வைத்த மகாராட்டிரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பங்கஜ் மேஷ்ராம், ’தலித் என்பது ஒடுக்கப்பட்டோரைக் குறிக்க அரசமைப்பு அங்கீகரித்த சட்ட ரீதியான சொல் அல்ல. மேலும், அது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும், மாண்பிற்கான அவர்களின் பயணத்தைப் புறக்கணிக்கும் வகையிலும் உள்ளது’ என்று தடை கோரினார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்திய பத்திரிகை அவை (Press Council of India) மூலம் ஊடகங்களுக்கு அறிவுறுத்தச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. உண்மையிலேயே தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் சொல் தானா என்பது குறித்து நீதிமன்றமோ, மத்திய அமைச்சகமோ ஆராயவில்லை. மனுதாரரின் விளக்கங்களை அப்படியே ஏற்று அத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு சட்டரீதியான சொல் அல்ல என்பதால் அரசு ஆவணங்களில் தலித் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.
தலித் என்ற சொல் இழிவானது எனக் கூறி அதை அழித்தொழிக்க இவ்வளவு துரித நடவடிக்கையை நீதிமன்றமும் மத்திய அரசும் எடுக்கின்றன. தலித் மக்களின் மரியாதையைக் காப்பாற்றும் அவற்றின் இந்த முனைப்பு வரலாறு காணாததாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு, ‘இதுதான் உனக்கான அடையாளம்’ என ஏதோ ஒன்றை உத்தரவிட யாருக்கும் உரிமையில்லை. அச்சமூகம் தனக்கான அத்தனை அடையாளங்களையும் தானே கண்டறியும். அவ்வகையிலேயே தலித் என்ற சொல் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி புலே, அம்பேத்கர் போன்றவர்களால் அவ்வபோது பயன்படுத்தப்பட்டு, சமகாலத்தில் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும் அரசியல் குறியீடாக மாறியிருக்கிறது.
அச்சொல்லின் நேரடியான பொருள் ’நொறுக்கப்பட்டவர்கள்’, ’சிதறடிக்கப்பட்டவர்கள்’ என்பதாக இருந்தாலும், தீவிர அரசியல்வயப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் வகையிலான நடைமுறைப் பொருளை அது அடைந்திருப்பதுதான் அச்சொல் எதிர்கொள்ளும் இன்றைய தடைகளுக்கான காரணம். அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்கையில், சாதி இந்துக்களால் தீண்டத்தகாதோர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு தனித்த பிரதிநிதித்துவத்தை வழங்கும் நோக்குடன் அவர்களை தனிப் பட்டியலில் சேர்த்தார் அம்பேத்கர். பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்கனவே அழுத்தப்பட்ட வகுப்பினர் (Depressed Classes), பட்டியல் சாதியினர் (Scheduled Castes) என்ற பதங்கள் புழக்கத்தில் இருந்ததால் அதுவே அரசமைப்பில் இடம் பிடித்தது.
கிராமங்களில் இழிவான சாதிப் பெயர்களால் வதைக்கப்பட்டு அடிமைகளாக இருந்த ஒடுக்கப்பட்டோர், இட ஒதுக்கீட்டின் பலனால் கல்விக் கூடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் காலடி எடுத்து வைத்தபோது, அவர்களை நேரடியாக சாதிப் பெயர் சொல்லி அவமானப்படுத்த சமூக ரீதியான ஒரு கட்டுப்பாடு உண்டானது. அதனால் எஸ்.சி. என்ற பதத்தையே இழிவானதாக விளிக்கத் தொடங்கினர் சாதி இந்துக்கள். குறிப்பாக பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இப்பதத்தால் அலைக்கழிக்கப்படுவது இன்று கூட நடக்கிறது. ‘எஸ்.சி.’ என்ற பதம் தன்னளவில் இழிவான பொருளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், நடைமுறைப் பயன்பாட்டு முறையில் அது ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்கும் சொல்லாகவே (Offensive) இருக்கிறது.
எனினும், அரசமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்க அந்தப் பதமே வழங்கப்பட்டுள்ளது என்பதால், அரசின் ஆவணங்களில் நிர்வாக வசதிக்காக அதைப் பயன்படுத்தச் சொல்வதில் எந்தத் தவறோ, தவறான நோக்கமோ இருக்கும் என கற்பனை செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஊடகங்கள் எஸ்.சி. என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என வற்புறுத்துவது, ஒடுக்கப்பட்ட மக்களை சமூக ரீதியாக தாழ்த்தும் உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியும்.
பள்ளன், பறையன், சக்கிலியன் என்பது போன்ற தனிச் சாதிப் பெயர்களாலும், தாசா, ராட்சசர்கள், அசுரர்கள், அவர்ணர்கள், பஞ்சமர்கள், ஹரிஜன், சண்டாளர்கள், கீழ் சாதியினர் என்பது போன்ற இழிவான பொதுப் பெயர்களாலும் சாதி இந்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள், தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட முதல் ’சாதியற்ற’பெயர் தான் தலித். அரசும், நீதிமன்றமும், சில தனிநபர்களும், அமைப்புகளும் கதறுவது போல இழிவிற்கும் இச்சொல்லுக்கும் எந்தத் தொடர்புமில்லை. உண்மையில் அது சனாதன ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட மக்களின் இழிமைகளுக்கு எதிரான சொல்.
காந்தி ’ஹரிஜன்’ என ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயர் சூட்டிய போது அதில் ஒளிந்திருந்த போலி அக்கறையை அம்பலப்படுத்தி கடுமையாக எதிர்த்தார் அம்பேத்கர்.
’தீண்டத்தகாதோர்’ என அப்போது அழைக்கப்பட்டு வந்த மக்கள் விடுதலையைப் பெறுகிற வரை அப்பெயராலேயே அழைக்கப்படட்டும்’ என்றும் அவர் கூறினார்.
"தீண்டத்தகாதோர் தம்மை தீண்டத்தகாதோர் என்று அழைக்கப்படவே விரும்புகின்றனர். தவறானதை அதன் தெரிந்த பெயராலேயே அழைப்பதுதான் சரி என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு நோயாளிக்கு தான் என்ன நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வேண்டும். தவறைச் செய்பவர்களுக்கு தவறு இருக்கிறது, அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனத் தெரிய வேண்டும். நடைமுறையில் இருக்கும் உண்மைகளை மறைக்கப் பார்ப்பது இருவருக்குமே தவறான உணர்வை அளிக்கும். இப்புது வார்த்தை (ஹரிஜன்) தீண்டத்தகாதோரின் உண்மை நிலையை மறைத்து மோசடி செய்வதோடு, இந்துக்களுக்கு ஒரு போலியான பெருந்தன்மை உணர்வையும் அது வழங்குகிறது" என்றார்.
’கசப்பானது எனினும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளே சரி’ என்ற அம்பேத்கரின் விளக்கத்திற்கு ஏற்ப, அம்பேத்கர் நூற்றாண்டான 1990களுக்குப் பிறகு தலித் என்ற சொல் பெரும் கவனத்தைப் பெற்றது. சாதியால் நொறுக்கப்பட்டவர்களின் இயல்பான சமூக நிலையைக் குறிப்பதோடு அதுவொரு எழுச்சி உணர்வையும் அளிப்பதாக இருந்தது. தலித் பான்ந்தர் போன்ற இயக்கங்கள் அதற்கு முன்னரே தடம் பதித்திருந்த நிலையில், தலித் என்ற முன்னொட்டுடன் இயக்கங்களும், இலக்கியங்களும், சமூக அரசியல் போராட்டங்களும் இக்காலகட்டத்தில் எழுச்சி பெற்றன. எழுத்தாளர்கள், போராளிகள், அரசியல்வாதிகள் என எல்லா தரப்பினருக்கும் விடுதலை உணர்வை அளிக்கும் குறியீடாக ’தலித்’ மாறியது. இந்தியா முழுவதும் உள்ள 1300 ஒடுக்கப்பட்ட சாதியினரையும் அரசியல் ரீதியாக இணைக்கின்ற பதமாகவும், சர்வதேச மனித உரிமைத் தளங்களில் கவனம் பெற்ற சொல்லாகவும் அது உயர்ந்த அங்கீகாரத்தை இன்று அடைந்திருக்கிற நிலையில் - அச்சொல்லுக்கு தடை போடுவது என்பது கூட - ஒருவகையான சாதிய ஒடுக்குமுறைதான். உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் பல சொற்களும், செயல்களும் இங்கே ஈராயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தலித் மக்களின் அடையாளத்தையே அவர்களுக்கெதிராக நிறுத்துவதை வேறெப்படி வகைப்படுத்துவது?
சரி, எத்தனை மனுக்கள் போடப்பட்டாலும் இந்த நீதிமன்றங்களோ, அமைச்சகங்களோ ’பிராமணர்’ என்ற சொல்லுக்குத் தடை விதிக்குமா? வர்ணாசிரமத்தின் செங்குத்தான படிநிலையின் அடிப்படையில் பிரம்மனின் தலையில் இருந்து பிறந்ததால் ’பிராமணர்கள்’ சமூகத்தில் உயர்வானவர்கள். இப்படிநிலையில் சூத்திரர்கள் கீழ் நிலையிலும், பஞ்சமர்கள் அடிமைகளாக இப்படிநிலைக்கு வெளியிலும் - கற்பிதங்களின் அடிப்படையில் வைக்கப்பட்டு - இத்தனை ஆண்டு காலமும் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஒருவர் தன்னை ’பிராமணர், என்றழைத்துக் கொள்வது மற்றவர்களை தாழ்ந்தவர் என்று கூறுவதற்குச் சமம். இச்சொல்லுக்கு உயர்ந்த ஆன்மாக்கள், கடவுளின் பிரதிநிதிகள், புனிதமானவர்கள் என்றெல்லாம் பல வகையான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
தலித் மக்களை இழிவுபடுத்தும் முதல் சொல் என்றால், அது ’பிராமணர்’ என்பதுதான். ஆக்ஸ்போர்ட் அகராதி ’பிராமணர்கள்’ என்ற சொல்லுக்கு ’சமூகப் பண்பாட்டு ரீதியாக உயர்ந்தவர்கள்’ என்று பொருள் காட்டுகிறது. அப்படியென்றால் அச்சமூகத்தில் வாழும் மற்றவர்கள் யார்? தாழ்ந்தவர்கள் தானே! ஆக்ஸ்போர்ட் அகராதியில் ’ஒயிட்ஸ் அல்லது ஒயிட் பீப்பிள்’என்று தேடினால் எந்த அர்த்தத்தையும் அது காண்பிக்கவில்லை. ’ஒயிட்’என்ற சொல்லுக்கான பல அர்த்தங்களில் ஒன்றாக, ’வெள்ளை நிறத் தோல் கொண்ட மனிதக் குழுவைக் குறிக்கும் சொல்’ என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் உலகையே கட்டி ஆண்ட போதும், கறுப்பர்களையும் பிற இனத்தவர்களையும் அடிமைப்படுத்தியிருந்த போதும் அவர்கள் எந்த அடிப்படையிலும் உயர்வானவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் இன்னொரு இனப்போரே மூண்டிருக்கும்.
அதே போல ’நீக்ரோ’ என்ற சொல்லுக்கான விளக்கமாக “சகாராவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கறுப்பு நிறத் தோல் கொண்ட குழுவினர்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே தாக்குதலான சொல் (offensive) என்ற எச்சரிக்கையையும் அது அளிக்கிறது. ’நீக்ரோ’ என்ற சொல்லின் உண்மையான பொருளில் எந்த இழிவுமில்லை என்றாலும், கறுப்பர்களை காயப்படுத்தும் வகையில் அச்சொல்லை வெள்ளையர்கள் பயன்படுத்தி வந்தனர். ’எனக்கொரு கனவிருக்கிறது’ என்ற தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் பல இடங்களில் நீக்ரோ என்ற சொல்லை மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்துகிறார். அம்பேத்கர் தீண்டத்தகாதோர் என்ற சொல்லைப் பயன்படுத்துவது போலத்தான் இதுவும்.
ஆனால், 1960களில் கிளர்ந்தெழுந்த கறுப்பின சிவில் உரிமை இயக்கங்கள் இச்சொல் அடிமைத்தனத்தைக் குறிப்பதாக இருப்பதால் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. குறிப்பாக மால்கம் எக்ஸ். கறுப்பர் அல்லது கறுப்பு அமெரிக்கர் என்று அழையுங்கள் என்றார். கறுப்பர்களின் உரிமை நிலைநிறுத்தப்பட்ட சம காலத்தில் இச்சொல் பொதுப் பயன்பாட்டில் இல்லை. 2016 இல் அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா, ’நீக்ரோ’ மற்றும் ’ஓரியண்ட்டல்’ (கிழக்காசியர்களை இன ரீதியாக களங்கப்படுத்தும் சொல்) குறிக்கும் ஆகிய வார்த்தைகளை யு.எஸ் கூட்டாட்சி சட்டங்களில் பயன்படுத்த தடை விதித்தார். நீக்ரோவைப் போல கறுப்பர்களை இழிவுபடுத்த பயன்படுத்தப்பட்ட பல சொற்களும் காலத்திற்கேற்ப தடையை எதிர்கொண்டு வருகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளிலும், உரிமைகளிலும் அக்கறை கொண்ட ஆளுமைகளும், போராளிகளும் அது குறித்த ஓர்மையுடன் தொடர்ந்து செயலாற்றுகின்றனர். ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்படியான எல்லா வார்த்தைகளுக்கும் ’காயப்படுத்தும் சொல்’ (Offensive) என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். வெள்ளை இனம் பண்பட்ட விதத்தையும் கறுப்பின மக்கள் சம உரிமைகளை வென்றெடுத்ததையும் இந்த ஒற்றை எடுத்துக்காட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்தியாவில் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கிற சூழலில் ஆக்ஸ்போர்டு அகராதி கூட பிராமணர் என்பதற்கு ’இந்திய சாதிகளுள் ஒன்று’ என்று பொருள் தராமல், ’உயர்ந்தவர்கள்’ எனக் குறித்ததன் மூலம் ’பிராமணர்’ அல்லாத இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்துகிறது. இந்தியா உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாடாக இருந்திருந்தால், தம்மை உயர்த்துவதன் மூலம் பிறரைத் தாழ்த்தும் பிராமணர் என்ற வார்த்தைக்கு எப்போதோ தடை விதித்திருக்கும்.
ஆனால், பார்ப்பனர்கள் சுதந்திரமாக தமது ’வர்ணத்தை’ பறைசாற்றிக் கொள்ளும் அவலம் இன்றும் தொடர்கிறது. ஊடகங்களிலும் பரவலாக இச்சொல்லே திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள், கட்டுரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ’பிராமணர் மட்டும்’என்று வீட்டு வாடகை மற்றும் ’மேட்ரிமோனி’ விளம்பரங்களில் அந்தச் சொல் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது. அரசமைப்பின்படி பார்த்தால் பொதுப் பிரிவினர் அல்லது இதர சாதியினர் (General category or other castes) என்றுதானே இவர்கள் எல்லா இடங்களிலும் தம்மைக் குறிப்பிட்டாக வேண்டும்? அதை விடுத்து பெயர்கள், பேட்டிகள், செய்திகள், விவாதங்கள், பணியிடங்கள், பொது வெளிகள், வெளிநாடுகள் என எல்லா இடங்களிலும் தம்மை ‘பிராமணர்’ என்றே அடையாளப்படுத்துகின்றனர். Change.Org என்ற இணையதளம் மூலம் பார்ப்பனர்கள் ’பிராமணர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ வேண்டுமென கையெழுத்துப் பரப்புரை செய்து உச்சநீதிமன்றத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் மனு அனுப்பிய கொடுமை கூட அண்மையில் நடந்தது. கடந்த ஆண்டு ஆந்திர அரசு ’பிராமணர் மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்கி அதற்கு சுமார் 200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. பிராமணர் என்ற சொல்லை இவ்வாறு அரசாங்கமே பயன்படுத்துவது ’அரசமைப்புக்கு எதிரானது’ என்று சொல்லி இதற்கு தடை விதிக்கும் துணிவு யாருக்காவது இருக்கிறதா?
அது மட்டுமல்ல, இவ்வளவு முன்னேறிய காலத்திலும் தமது பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துப் போட்டுக் கொள்ளும் இழிவான வழக்கத்தை எல்லா மாநில சாதி இந்துக்களும் கடைப்பிடிக்கின்றனர். மிஸ்ரா, பாண்டே, தீட்சித், சென், பரத்வாஜ், தேஷ்முக், தேஷ்பாண்டே, குல்கர்னி, தேசாய், பாட்டில், ஜோதி, கௌல், திரிவேதி, சதுர்வேதி, அக்னிஹோத்ரி, முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, ஆச்சார்யா, கோஸ்வாமி, தேசாய், பட், ராவ், ஹெக்டே, ஷர்மா, சாஸ்திரி, திவாரி, ஷுக்லா, நம்பூதிரி ஐயர், ஐயங்கார்- நாடு முழுவதும் உள்ள பார்ப்பனர்கள் பெருமையோடு பெயருக்குப் பின்னால் குடும்பப் பெயர் என்ற இடத்தில் இந்த சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்கின்றனர். உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் குடும்பப் பெயர் என்ற இடத்தில் உண்மையாகவே தம் குடும்பப் பெயரைத் தான் போட்டுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் குலப் பெயர் தான் குடும்பப் பெயர். பார்ப்பனர்களைப் போல எல்லாவற்றையும் செய்து பழக்கப்பட்ட சாதி இந்துக்களும், அதே வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி, குலப்பெயர் முறை இங்கே நிலைப் பெற்றுவிட்டது.
பல்வேறு மொழி, பண்பாடு, உணவுமுறையால் இந்தியர்கள் வேறுபட்டிருக்கின்றனர். ஆனால் காஷ்மீரிலிருக்கும் ஒருவரை கன்னியாகுமரியில் வாழும் ஒருவரோடு ஒரே ஒரு விஷயம் இணைக்க முடியுமெனில் அது சாதிதான். காஷ்மீரின் பட், பஞ்சாபின் ஷர்மா, குஜராத்தின் திரிவேதி, மகாராஷ்டிராவின் கோகலே, வங்காளத்தின் முகர்ஜி, ஒடிஷாவின் மிஸ்ரா, அஸ்ஸாமின் கோஸ்வாமி, கர்நாடகாவின் ஆச்சார்யா, ஆந்திராவின் சாஸ்திரி, கேரளாவின் நம்பூதிரி, தமிழகத்தின் ஐயர். மொழி வேறு, உண்கிற உணவு வேறு, உடுத்துகிற உடை வேறு என்றாலும் அனைத்து மாநிலப் பார்ப்பனர்களையும் சாதி எனும் நூல் இணைத்து விடுகிறது.
சாதிப் பெயரை சொந்தப் பெயரோடு சேர்க்கும் வழக்கம் இதற்காகவே உருவாக்கப்பட்டது. அதுவொரு வாய்மொழி சாதிச் சான்றிதழ். சாதியோடு பெயரைச் சொன்னால் போதும், அத்தனை கதவுகளும் திறந்து வழிவிடும். அடுத்தடுத்தப் படிக்கட்டுகளில் ஏறிப் போய் உயரே அமர்ந்து கொள்ளலாம். எந்த சிரமும் இருக்காது. இப்படித்தான் இந்தியா முழுவதும் இருக்கும் பார்ப்பனர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
இந்தியாவின் ஆறாயிரம் சாதிகளுக்கும் இதுதான் விதிமுறை. பார்ப்பனரா, சத்திரியரா, வைசியரா, சூத்திரரா, பஞ்சமரா என்பதைப் பெயரிலேயே கண்டறிந்து, அவர்களுக்கான எல்லையை நிர்ணயித்துவிட முடிகிறது. இந்த நவீன காலத்திலும் சாதி இந்துக்கள் பெருமையாகவும், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இழிவாகவும் தம் பெயருக்குப் பின்னால் சாதியை சுமக்க வைக்கப்பட்டுள்ளனர். இது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆதிக்க - அடிமை முறையை வலியுறுத்தும் சாதிப் பெயரை சுமக்கிறோமே என யாரையும் கூச்சப்பட வைக்கவில்லை.
குறிப்பாக இந்திய முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், பெண்ணுரிமைவாதிகள். சாதிப் பாகுபாட்டை கண்டித்துப் பேசும், எழுதும், செயலாற்றும் போராளிகள் பலருக்கும் தம் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதி பற்றிய ஓர்மையே இல்லை. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்/நடிகைகள், சமூகப் போராளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுவுடைமைவாதிகள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் என இந்திய அளவில் பெயரில் சாதியைக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரை இங்கே பட்டியலிட முடியும். சமூகத்தை நேர் செய்வதற்கு முன் தன்னை சரி செய்ய வேண்டியதன் அவசியத்தை யாரும் உணராததுதான் இந்திய ஜனநாயகத்தின் தோல்விக்குக் காரணம்.
இந்திய முற்போக்காளர்கள் பலரும் சாதி என்பது வெளியில் இயங்குவதாகவே நம்புகின்றனர். உண்மையில் சாதியானது ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் இயங்குகிறது. சாதி இந்தியர்களின் உணர்வற்ற மனதில் (unconscious mind) இயங்குவதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தன் பெயரில் அது ஒட்டிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அது அணுக்களில் இரண்டறக் கலந்திருக்கிறது. சாதியைப் பெயரில் வைத்துக் கொண்டே சாதிக்கு எதிராக செயல்படும் போது அது எப்படி ஒழியும்? இந்திய முற்போக்காளர்களின், கல்வி பெற்ற தலைமுறையின் சிக்கல் இதுதான். சாதியைப் பொருத்தவரை வெளியில் பிறரிடம் காட்டும் கறார்த்தனத்தை தனக்குத் தானே யாரும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் ஒவ்வொருக்குள்ளும், ஒவ்வொரு வீடுகளிலும் குடும்ப வழக்கமாக, சாஸ்திர சடங்குகளாக, பெருமையாக, பண்பாடாக, நம்பிக்கைகளாக அது கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்திய முற்போக்குச் சமூகம் சாதி எதிர்ப்பில் குறைந்தபட்ச நேர்மையையேனும் கடைப்பிடித்து இருக்குமானால் நிலைமை சற்றேனும் மாறியிருக்கும்.
ஆணாதிக்கத்திற்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகத் தீவிரமாக இயங்கும் பெண்ணுரிமைப் போராளிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்லர். இந்துத்துவத்தின் அட்டூழியங்களை எதிர்க்கும் அதி தீவிர பெண்ணியவாதிகளுக்குத் தம் பெயரில் ஒட்டியிருக்கும் சாதி உறுத்துவதில்லை. உண்மையில் இந்து சாதி அமைப்பு பெண்களை இழிவானவர்களாகவே கருதுகிறது.
என்னதான் சேஷாத்திரி, மிஸ்ரா, ராய், பட்கர், காந்தி, சென், காரட், அய்யர் என்ற குலப் பெயர்களைத் தூக்கிச் சுமந்தாலும் இந்துமதத்தின்படி பெண்கள் இழிவானவர்களாகவே கருதப்படுகின்றனர்! முந்தைய ஜென்மத்தில் பாவம் செய்பவர்களே இந்த ஜென்மத்தில் பெண்களாகப் பிறப்பர் என மநுதர்மம் கூறுகிறது. இந்து மதத்தில் இந்துப் பெண்களின் நிலை பற்றி பெரியார் மற்றும் அம்பேத்கர் இருவரும் விரிவாக எழுதியுள்ளனர். அவற்றைப் படித்திருந்தால், சுயமரியாதை உணர்வு கொண்ட பெண்கள் ஒரு போதும் சாதியை தம் பெயரோடு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
"பெண்கள் எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பதே மத சம்பிரதாயம். ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய் தகப்பன் மேற்பார்வையிலும், வாலிபப்பருவத்தில் புருஷன் மேற்பார்வையிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்கள் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே ஒழிய, சுதந்திரமாய் இருக்க விடக்கூடாதென்று மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதுமாத்திரமல்லாமல் பெண்களை கடவுள் பிறவியிலேயே விபச்சாரியாய் பிறப்பித்திருப்பதால், அவர்களை சர்வ ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும் என்று மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கின்றது" - 05.02.1933 அன்று குடி அரசு இதழில் வெளியிடப்பட்ட பெரியாரது சொற்பொழிவின் ஒரு பகுதி இது.
சாதி குறித்த பெரியாரின் தெளிவுதான் பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் ஒழியக் காரணமாக இருந்தது. சாதி ஒழிப்பிற்காக வேலை செய்வோர் முதலில் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற அறத்தின் அடிப்படையில் 1929 இல் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கம் நடத்திய முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெயரிலிருந்து சாதியை ஒழித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நினைத்துப் பாருங்கள், அக்காலகட்டத்தில் பார்ப்பன மேலாதிக்கம் எவ்வளவு மூர்க்கமாக இயங்கியிருக்கும்? அப்போதே பெரியாரோடு சேர்ந்து பலரும் பெயரில் சாதியைத் துறந்தனர். ’ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான் இன்றிலிருந்து ஈ.வெ.ராமசாமி ஆகிறேன்’ என உறுதிமொழி எடுத்தார். பல சாதி அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்று மேடைக்கு மேடை பெயரில் சாதியை நீக்குங்கள் எனப் பிரச்சாரம் செய்தார்.
அதன் விளைவாக இப்போது வரை தனிநபர்கள் தமது பெயர்களில் சாதியைப் போட்டுக் கொள்வதில்லை. அரசாணை, தனிச்சட்டம் எதுவுமின்றியே தமிழகம் இதை சாதித்தது. சாதியை பெயரில் போட்டுக் கொள்பவர்களை நாகரிகமற்ற மற்றும் கேலிக்குரியவர்களாகக் கருதும் போக்கு உருவானது. பிராமணர் என அழைக்கப்பட்டவர்கள் ‘பார்ப்பனர்’ ஆக்கப்பட்டனர். பார்ப்பனர் என்பது இழிவான குறியீடு என இப்போது முழங்கினாலும், உண்மையில் அது அவர்களது தொழில் சார்ந்த பெயரே! மனிதர்களின் இழிவை ஒழிக்கப் போராடிய பெரியாருக்கு பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் நோக்கம் எப்போதுமே இருந்ததில்லை. “ஒரு தெருவில் பத்து வீடு இருக்கிறதென்றால், ஒரு வீட்டில் மட்டும் ’இது பத்தினி வீடு’ என எழுதி வைத்தால் என்ன அர்த்தம்” - பிராமணரை பார்ப்பனராக்கியதற்கு இவ்வாறு விளக்கமளித்தார் பெரியார்.
சாதியைப் பெயரில் போட்டுக் கொள்ளும் பழக்கத்தை தமிழகப் பார்ப்பனர்களும் கூட விட்டொழித்தனர். சாதிப் பெயரில் அரசியல் செய்பவர்கள் மைய நீரோட்ட அரசியல் தளத்தில் வெற்றி பெறவே முடியாது என்ற கட்டாயம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. பண்பாட்டு ரீதியான மாற்றம் என்பது மக்களின் விழிப்புணர்வாலும் மனமாற்றத்தாலுமே நிகழும்; சட்டங்களால் அது சாத்தியப்படுவதில்லை. பெயரில் சாதியை ஒழிக்கும் அடிப்படையான பண்பாட்டு மாற்றம் தமிழகத்தைக் கடந்து வேறெந்த மாநிலத்திலும் தலையெடுக்கவில்லை என்பது எத்தனை கெடுவாய்ப்பானது!
ஒருவர் தன் பெயரில் சாதியைப் போட்டுக் கொள்வதுதான் பொது வெளியில் தலித் மக்கள் எதிர்கொள்ளும் பட்டவர்த்தனமான அவமானம். ’என் சாதியை என் பெயரில் சேர்த்துக் கொள்வது உனக்கெப்படி அவமானமாகும்?’ என நீங்கள் கேட்கலாம். ஒரு பார்ப்பனர் தன்னை திரிவேதி என்றோ, தீட்சித் என்றோ அறிமுகம் செய்து கொள்ளும் போது ஒரு தலித் அங்கே இழிவுபடுத்தப்படவில்லையா? ‘நீ பிராமணர் என்றால் நான் யார்?’ என்ற கேள்வி அங்கே வார்த்தையால் கேட்கப்படாமலேயே நிலை கொண்டு விடுகிறது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு தலித்திடம் தன் பெயரை சாதியோடு சொல்லும் போது, தான் பிறக்க நேர்ந்த சாதி அந்த தலித்திற்கு நினைவுபடுத்தப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி அவர் காயப்படுத்தப்படுகிறார். ’என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினால் என்ன, உன் சாதிப் பெயரை பெருமையாகப் பறைசாற்றினால் என்ன’- ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரண்டுமே ஒரே மாதிரியான பாதிப்பைத் தான் உண்டாக்குகிறது. அது இழிவு. அவமரியாதை.
சாதி குறித்து இவ்வளவு விவாதங்கள் நடக்கின்றன. இவ்வளவு இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. இவ்வளவுப் போராட்டங்கள் நடக்கின்றன. இந்திய அரசமைப்பின் தந்தை அம்பேத்கர் சாதி இழிவு குறித்து பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் இவை எதுவுமே ஒரு படித்த மூளையை சலவை செய்யாது என்றால் என்ன அர்த்தம்? சாதி தனக்கு ஆதாயமானது, தனக்கு அது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் அளிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக படித்த இந்தியர்கள் சாதியை விட்டுத் தொலைக்க மறுக்கின்றனர். வெளிநாடுகளுக்குப் போனாலும் சாதியை தமது கலாச்சாரம் என்று காட்டிக் கொண்டு திரியவே அவர்கள் முற்படுகின்றனர். உலக நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவக் கொள்கை எவ்வகையிலும் அவர்களைப் பண்படுத்துவதில்லை. அங்கே இந்தியர்கள் மீது இனப் பாகுபாடு என்றால் கொதித்தெழுவார்கள். அதையே தலித்துகள் மீது இவர்கள் நிகழ்த்தும் போது கலாச்சாரம் என்பார்கள்.
தமது பெயரிலுள்ள சாதியைத் துறக்க விரும்பாத சாதி இந்துக்கள், பள்ளிகளில் கேட்கப்படும் சாதிச் சான்றிதழ் குறித்து கடுமையாக சாடுகின்றனர். கல்விக் கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுவதாலேயே சாதி ஒழியாமல் நிலை கொண்டிருப்பதாகப் பிதற்றவும் செய்கின்றனர். சாதிச் சான்றிதழுக்கு எதிரான இவர்கள் தம் பெயரிலேயே சாதிச் சான்றிதழ் வைத்துள்ளதையும், அதன் வழியே அவர்கள் பெறும் சலுகைகள் பற்றியும் யார் இவர்களுக்கு புரிய வைப்பது? காலந்தோறும் தம் சாதியால் சமூகப் பொருளாதார ரீதியான அத்தனை பலன்களையும் அனுபவித்துக் கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்து வரும் சமூக நீதியான இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கின்றனர்.
அம்பேத்கர் காலத்தில் தீண்டாமையைத் தான் சட்டப்படி குற்றமாக்க முடிந்தது. எவ்வளவு போராடியும் அவரால் சாதியைக் குற்றமென அறிவிக்க முடியவில்லை. அகச்சான்றுள்ள மனிதர்கள் நிறைந்த நாடெனில் இந்த எழுபது ஆண்டுகளில் இந்தியா அதைச் செய்து காட்டியிருக்க வேண்டும். அரசமைப்பில் சாதி குற்றமென ஆக்கப்பட்டிருந்தால், சாதி இந்துக்கள் அதை ‘கலாச்சாரம்’ என பொய்யுரைத்து உலகை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. குடும்பப் பெயர் என்ற இடத்தில் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் அவலம் என்றோ முடிவுக்கு வந்திருக்கும்.
அப்படியல்லாமல் பல்வேறு சமூகப் போராட்டங்களால் சிறிதளவேனும் விட்டொழிக்கப்பட்ட சாதியப் பழமைவாதங்கள் இந்த தலைமுறையிலும் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. சாதிப் பெயரை வெளிப்படையாகக் கேட்பதோ, பேசுவதோ அநாகரிகமானதாக ஆக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிட்டி மேட்ரிமோனி என்ற பெயரில் ஐயங்கார், முதலியார், வன்னியர் என தனித் தனி சாதிக்கான திருமண விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தைரியமாக இடம் பிடிக்கின்றன. இந்நிறுவனம் இதே விளம்பரத்தை வெவ்வேறு மொழிகளிலும் வெளியிடுகிறது. ஆதிக்க சாதிப் பெயரை வெளிப்படையாகச் சொல்லும் இந்த மேட்ரிமோனி நிறுவனம் பள்ளர், பறையர், அருந்ததியர் என்று பட்டியல் சாதிகளின் பெயர்களில் விளம்பரங்கள் செய்வதில்லை. இது பாகுபாடு இல்லையா? இழிவில்லையா? டாய்லெட் கிளீனர் விளம்பரமொன்றில் ’நாம மிஸ்ஸஸ் ஐயர் வீட்டிற்கு வந்திருக்கிறோம்’ என்கிறார் நாயகன் கணேஷ் வெங்கட். டாய்லெட்டை சுத்தம் செய்யக் கூட நீங்கள் ஐயர் வீட்டிற்குதான் போக வேண்டுமா, என்ன? அந்தப் பெண்ணுக்கு வேறு பெயரே கிடைக்காமலா ‘மிஸ்ஸஸ் ஐயர்’ என்கிறார்கள்? தொலைக்காட்சி பார்க்கும் கோடிக்கணக்கான தலித்துகளை இந்த விளம்பரங்கள் இழிவுபடுத்துகின்றன. இந்த நுட்பமான சாதியவாதத்திற்கு யார் தடை விதிப்பது?
நீதிமன்றமும் அரசும் தலித் மக்களின் மாண்பின் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்குமானால் அது முதலில் பிராமணர் என்ற பதம் உட்பட ஆறாயிரம் சாதிப் பெயர்களையும் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கட்டும். தமது சாதிப் பெயர்களை எல்லா நிலைகளிலும் துறந்து, சாதி இந்துக்கள் சமத்துவப் பண்பைப் பெறுகிற வரை இந்நாட்டில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதியையும் ’தலித்’ என்ற அரசியல் குறியீடு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
- ஜெயராணி