சில செய்திகளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கும் போது அந்த செய்தியின் மீதான அக்கறையோ, அதிர்ச்சியோ நம்மைவிட்டு விலகிச் செல்கின்றது.மோடி வெளிநாடு பயணம் என்ற செய்தியை ஆரம்பத்தில் படித்த நம்மில் சிலர் அவர் எந்த நாட்டிற்குப் போனார், எதற்காக போனார் என்று ஆர்வமாக படித்திருப்போம். ஆனால் இன்று நிலைமை எப்படி? அவர் எங்கே போனால் நமக்கென்ன ,ஒரு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை, போயி வேலைய பாருங்கப்பா என்று சொல்லிவிட்டு நகரவில்லையா… அதே போல படித்தவுடன் சாதாரணமாக கடந்துபோகும் ஒரு செய்தியாகிவிட்டது விவசாயிகளின் தற்கொலை. பல பத்திரிக்கைகள் அதை தலைப்புச் செய்தியாக வெளியிடாமல் பத்திரிக்கையின் எங்கோ ஒரு மூலையில் பெட்டிச்செய்தியாக வெளியிட்டு தங்களுக்கும் விவசாயிகளின் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்கின்றன.

modi obama ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அந்த செய்திகள் எந்த வகையிலும் ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கியது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை அது ஒரு செய்தி அவ்வளவே. இன்னும் எத்தனை கஜேந்திர சிங்குகள் அவர்களின் கண்முன்னாலேயே தற்கொலை செய்து கொண்டாலும் அதை மிக எளிமையாக கடந்துபோகும் மனவலிமையை அவர்களுக்கு கார்ப்ரேட் உலகம் அளித்திருக்கின்றது.

 “விவசாயிகளின் வாழ்க்கையைவிட நாட்டுக்கு எதுவும் முக்கியம் இல்லை”. “விவசாயிகளை நாம் கைவிடக்கூடாது அவர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும்” என்று கஜேந்திர சிங்கின் மரணத்தை ஒட்டி நாடாளுமன்றத்தில் நல்ல மனிதர் மோடி அவர்கள் வாக்குறுதி கொடுத்தார். கொடுத்ததோடு நிற்காமல் தான் ஒரு செயல்படும் பிரதமர் என்பதை நிரூபிக்க தன்னுடைய கனவுத் திட்டமான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற கடும் போராட்டத்தில் இறங்கினார். ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத மோடி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பறந்து பறந்து சென்று அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதாக ஓர் அபத்தமான திரைப்படத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அந்நிய மூலதனம் வரவேண்டும் என்றால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வரவேண்டும்; இல்லை என்றால் அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் வராது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று தோசையை திருப்பிப் போட்டு எதிர்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கின்றார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏறக்குறைய 39 சதவீத விவசாய நிலங்கள் அரசால் எளிதாக கையகப்படுத்தப்படலாம் என்று தெரிகின்றது. இதை விட விவசாயிகளுக்கு மோடியால் என்ன நன்மை செய்துவிடமுடியும்? பழைய செயல்படாத பிரதமர் விவசாயிகளை விவசாயத்தை விட்டுவிட்டு நகர்புறங்களுக்கு போகச் சொன்னார். புதிய செயல்படும் பிரதமர் உங்களை தரதரவென்று உங்கள் நிலங்களில் இருந்து இழுத்துக் கொண்டுபோய் நகர்ப்புறங்களில் தூக்கி வீசப்போகின்றார்.

 “சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் இனிய கலை ; ஆனால் நமக்கோ அதெல்லாம் உயிரின் வாதை”. என்பார் பாரதிதாசன். விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்த்தல் என்பது எப்போதுமே ஆளும் வர்க்கங்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையே கொடுத்திருக்கின்றது. புதிய பொருளாதார கொள்கைகள் நடைமுறைபடுத்தப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் ஏறக்குறைய மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அது எல்லாம் வெறும் எண்களாக தோன்றி எண்களாகவே நம்மை விட்டு மறைந்துவிடுகின்றன. கடந்த ஆண்டு 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தியைப் படிக்கும் எவருக்கும் அது ஒரு புதிய செய்தி என்ற உணர்வு ஏற்படப்போவதில்லை. ஏனென்றால் அது வருடா வருடம் நாம் தெரிந்துகொள்ள சொல்லப்படும் ஒரு பொது அறிவு செய்தி அவ்வளவே.

 மோடி போன்ற நல்ல மனிதர்களின் ஆட்சியில் ‘விவசாயிகளின் தற்கொலைப் பட்டியல்’ என்பது இந்திய வரலாற்றின் புகழ்மிக்க பட்டியலில் இடம் பெறவேண்டும் என்றால் கூட அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றது. மோடியின் ஆட்சியின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் மோடிக்காக தன்னுடைய ‘மானியத்தை’ விட்டுக் கொடுத்திருக்கின்றது. முன்பெல்லாம் ஒரு விவசாயி எந்தக் காரணத்தை முன்னிட்டு தற்கொலை செய்து கொண்டாலும் அது விவசாயிகளின் தற்கொலைப் பட்டியலில் இடம்பெற போதுமானதாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் அந்த வரலாற்று சிறப்புமிக்க பட்டியலில் இடம் பெறவேண்டும் என்றால் முதலில் நிலம் வைத்திருக்க வேண்டும், நிலம் இல்லாத விவசாயக் கூலிகள் இனி விவசாயிகள் கிடையாது. இயற்கை சீற்றம், பயிர்ச்சேதம், சாகுபடி மொத்தமாக பொய்த்துப்போதல், கடன் தொல்லை போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் மட்டுமே இனி அந்தப் புகழ்மிக்க பட்டியலில் இடம் பெறமுடியும்.

 அடுத்த ஆண்டு இதே போல இன்னொரு பட்டியல் வெளியிடப்படும். அதில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை சற்று குறைந்தோ அல்லது கூடியோ ஏன் யாருமே இல்லை என்று கூட வரலாம்! ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் பிணத்தை வைத்து ஒரு நான்கு நாட்கள் மாரடிப்பார்கள். பின்பு கிளிசரின் தீர்ந்த தங்கள் கண்களை துடைத்தபடி அடுத்த செய்தியை நோக்கி நகர்ந்துவிடுவார்கள்.

 பாவம் இந்த விவசாயிகள்! இவர்களுக்கு வெள்ளை மாளிகை தெரியாது, உலக வங்கி தெரியாது, சர்வதேச நாணய நிதியம் தெரியாது, ஆன்லைன் வர்த்தகம் தெரியாது, அம்பானியும் தெரியாது. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நிலம், நிலம், நிலம் மட்டும்தான்.

 தங்களுக்கான விடியலை இந்த தேர்தல் அரசியல் கட்சிகளிடம் இன்னும் அவர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களோ இவர்களை அற்ப மனிதர்களாகப் பார்க்கின்றார்கள். இவர்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டும்தான் இருக்கின்றது என்று இவர்களுக்கு இன்னும் புரியமாட்டேன் என்கிறது. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளும் போது இந்தியாவில் மவோயிஸ்ட்டுகள் மட்டும் நக்சல்பாரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். பாவம் மோடி! அவர்களை (மவோயிஸ்ட்டுகளை) துப்பாக்கிகளை எறிந்துவிட்டு ஏர்கலப்பையை பிடிக்கச் சொன்னார். ஆனால் அவர்களோ (விவசாயிகள்) ஏர்கலப்பையை விட்டுவிட்டு துப்பாக்கிகளை பிடிக்கப் போகின்றார்கள்.

- செ.கார்கி

Pin It