budget 2019வாழ்ந்த காலம் முழுவதும் ஊரை அடித்து உலையில் போட்டு, பல பேரின் வயிற்றில் அடித்து சொத்து சேர்த்த நம்ம ஊர் இந்து முதலாளிகள் சாகப் போறப்பவாவது புண்ணியத்தை தேடிக் கொண்டு சொர்க்கத்தில் இடம் பிடிக்க வேண்டுமே என்று காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு செல்வார்கள். ஆனால் எங்கே போனாலும் ஊரை அடித்து உலையில் போடும் அந்த ஈன புத்தி மட்டும் கடைசிவரை அவர்களை விட்டுப் போகாது. காரணம், அந்த ஈன புத்திதான் அவர்களை செல்வச் செழிப்பாகவும், ஊரை ஏமாற்ற தர்ம பிரபு வேடம் போடுவதற்கான வளத்தையும் கொடுத்தது. அதை விட்டுவிடுவது என்பது தன்னுடைய ஆண்டைத்தனத்தை விட்டுவிட்டதற்கு சமம். எனவே அதையும் கடைபிடித்துக்கொண்டு, அதே சமயம் தர்மபிரபு வேடத்தையும் தொடருவார்கள். இது எல்லாம் மக்களை ஏமாற்றி காலம் காலமாக அவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டி கொழுக்கும் உழைப்புறுஞ்சிகளின் செயலாகும். அப்படித்தான் அமைந்திருக்கின்றது, மோடி அரசு 01.02.2019 அன்று தாக்கல் செய்த கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்.

மோடி ஆட்சி செய்த இந்த 4 வருடம் ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்த நாடும் பேரழிவை சந்தித்து இருக்கின்றது. பாஜகவுக்கு முன் 10 வருடம் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், குத்துயிரும் குலை உயிருமாக விட்டுச் சென்ற நாட்டை காப்பாற்றப் போவதாக வாக்குறுதி அளித்து வந்த மோடி, அதை அணு அணுவாக ரசித்து ரசித்து சித்தரவதை செய்து கொன்றிருக்கின்றார். மோடியும் அவரது கார்ப்ரேட் சகாக்களும் கூட்டாக சேர்ந்து நாட்டின் வளங்களையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கின்றார்கள்.

காங்கிரஸ் கட்சி தனது பத்தாண்டு கால அவல ஆட்சியில் ஏற்படுத்தி வைத்திருந்த மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியும், பெரும் வாழ்வாதார சூறையாடலும், இனி நாட்டை ஆள ஒரு மீ உயர் சக்திகொண்ட மனிதன்தான் வரவேண்டும் என்ற மனப்பிறழ்ச்சிக்கு இந்த நாட்டு மக்களைத் தள்ளியது. வரலாற்றில் இது போன்ற அசமத்துவமான கடும் நெருக்கடிகள் எப்போதெல்லாம ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாசிச சக்திகளே நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிக் கொள்கின்றன என்பதற்கேற்ப இந்தியாவிலும், மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினைகளையும் தான் தீர்ப்பதாக வாக்களித்த வலதுசாரி பாசிச சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றின. ஆனால் பாசிசத்திடம் எப்போதுமே சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருந்தது கிடையாது. உலகில் தோன்றிய அனைத்து பாசிச கோட்பாடுகளும் தேசிய முதலாளிகளின் நலன் காக்கவே அந்த நாட்டு தேசிய, தரகு முதலாளிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை. இவர்களின் நெருக்கடியானது ஒட்டுமொத்த நாட்டின் நெருக்கடியாக சித்தரிக்கப்பட்டு மக்கள், ஊடகத்தின் துணையுடன் நம்ப வைக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் அனைத்து ஆதாயங்களையும் இந்தப் பாசிச சக்திகளே இறுதியில் அறுவடை செய்துகொள்ளும்.

மோடியின் ஆட்சி இந்த 4.9 ஆண்டுகளில், தான் மக்களுக்கு செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிக்கு எதிர்த் திசையிலேயே பயணம் செய்தது. அது இந்தியாவின் மிகப்பெரிய 9 பணக்கார குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்ள முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தது. ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அதன் வாக்குறுதியை நம்பி ஓட்டுபோட்ட இளைஞர்களை இன்று அது இருந்த வேலை வாய்ப்பையும் பறித்து நடுத்தெருவில் நிறுத்தி இருக்கின்றது. கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளி விவர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிகை 23-25 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது. நகர்ப்புறங்களில் 7.8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம் பேரும் வேலை இழந்துள்ளார்கள்.

மோசடி, நம்பிக்கைத் துரோகம், குரூரம் போன்றவற்றின் மீதே மோடியின் இந்த 4.9 ஆண்டு கால ஆட்சி கட்டமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் ஆட்சி மக்களை ஓடவிட்டு அடித்தது என்றால், மோடியின் ஆட்சி எந்தப் பக்கமும் தப்பித்துச் செல்ல வழியற்ற முட்டுச்சந்தில் வைத்து அடித்தது. இனி எந்தக் காலத்திலும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவிற்கு பெரும் மக்கள் அதிருப்தி நிலவுகின்றது. இருக்கும் மூன்று மாதங்களுக்குள் என்ன என்ன தில்லுமுல்லுகளைச் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என இந்துத்துவ பாசிசக் கும்பல்கள் திட்டம் தீட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த இடைக்கால பட்ஜெட்டை நாம் பார்க்க வேண்டும்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டை குறிவைத்து, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. எப்போதுமே தன்னுடைய சுயநலத்தை மட்டுமே நாடும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தை இதன் மூலம் தன்னுடைய வலையில் வீழ்த்தலாம் என அது எண்ணுகின்றது. ஆனால் இந்த அறிவிப்பு மூலம் ஆண்டிற்கு ரூ.7500 மட்டுமே (மாதத்திற்கு ரூ.650) நடுத்தர வர்க்கத்திற்கு மிச்சமாகும். இந்த 4.9 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கம் நிச்சயமாக இதனால் எந்த மகிழ்ச்சியும் அடையாது என்பது உறுதி. அது மோடியைப் பழிதீர்க்க தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது என்பதால் நிச்சயம் இந்த அறிவிப்பால் மோடிக்கு பெரிய பலன் எதுவும் இருக்கப் போவதில்லை.

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. விவசாயிகள் சாரை சாரையாய் டில்லியை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை பிச்சைக்காரர்களைப் போல பார்க்கும் பார்ப்பனிய மனநிலையில் இருந்து வருடத்திற்கு 6000 ரூபாயை அளிக்கும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றார்கள். அப்படி என்றால் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய், நாள் ஒன்றுக்கு 16.7 ரூபாய். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ஆள் ஒன்றுக்கு 4.2 ரூபாய் வருகின்றது. இதைவிட விவசாயிகளின் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. பெரும் பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொடுத்து அவர்களை உலகப் பணக்காரர்கள் வரிசையில் வைத்து அழகு பார்க்கும் மோடி அரசு, இந்த நாட்டுக்காகவே உழைத்துச் சாகும் ஏழை விவசாயிகளை பிச்சைக்காரர்களை விட கேவலமாக மதிக்கின்றது. ஆனால் கொஞ்சம் கூட சூடு சுரணையே அற்ற பிஜேபி அடிவருடிக் கும்பல் இதையும் ஊடகங்களில் போற்றிப் புகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

modi and poorஅதே போல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் மாதம் தோறும் 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அதே அளவு தொகையை அரசு செலுத்தும் என்றும், 60 வயதுக்குப் பின் அவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்கள். இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளிலேயே பணியாற்றுகின்றார்கள். ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் மட்டும் இந்தியாவில் 3 கோடியே 70 லட்சம் பேர் அமைப்பு சாரா துறையில் வேலையிழந்து இருக்கின்றார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரியும் சிறு குறு தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 50000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலையிழந்தனர் என சட்டசபையிலே அரசு தெரிவித்தது. ஆனால் இன்று மோடி பட்ஜெட்டை சிறப்பான பட்ஜெட் என்று வெட்கம்கெட்ட முறையில் இதே அரசு பாராட்டுகின்றது. எனவே அமைப்புசாரா தொழிற்துறையில் மிகப்பெரிய வேலையிழப்பை ஏற்படுத்திவிட்டு தேர்தல் வரும் நேரத்தில் அவர்களின் எதிர்ப்பை மடைமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பெரும் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்படும் வரிச்சலுகை மற்றும் மானியத்தால் ஏற்படும் சுமையைக் குறைக்க வழக்கம் போல இந்தப் பட்ஜெட்டிலும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 80 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயக்கப்பட்டிருக்கின்றது. குடித்துவிட்டு ஊதாரித்தனமாக செலவு செய்யும் ஒருவன் பணத்திற்காக பொண்டாட்டி பிள்ளைகளை விற்பது போல இந்த அரசு தொடர்ச்சியாக இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை முழுவதுமாகவோ, பகுதி அளவிலோ விற்று செலவு செய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் 10 சதவீதப் பணக்காரர்களிடம் 77 சதவீத சொத்துக்கள் குவிந்துகிடக்கும் போது, மானங்கெட்ட அரசு நாட்டின் சொத்தை விற்று தின்று கொண்டு இருக்கின்றது.

ராணுவத்திற்கு ரூ 3.05 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டு மக்கள் பட்டினியாலும் பசியாலும் , ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தினம் தினம் கொத்து கொத்தாக செத்துக்கொண்டு இருக்கும்போதும், இராணுவத்திற்கு எதற்காக இவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டும்? அருகில் உள்ள நாடுகளுடன் சுமுகமான உறவைப் பராமரிப்பது, நட்பு சக்தியாக்கிக் கொள்வது போன்றவற்றை செய்யாமல் திட்டமிட்டு இந்துமதவெறிக் கும்பல் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி, அதைச் சாதகமாக பயன்படுத்தி இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் பெரும் ஊழல் முறைகேடுகள் செய்யத் திட்டமிடுகின்றன‌. சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்த கும்பல் இப்படி ராணுவத்திற்கு அதிகப்படியான நிதிகள் ஒதுக்குவது, அதைத் திருடி தின்பதற்குத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பசுக்களின் நலனுக்காக ரூ 750 கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தொகை முழுவதும் நாட்டில் பசுக்களின் பெயரால் சாமானிய மக்களை அடித்துக் கொலை செய்யும் குற்றக்கும்பல்களுக்கு ஆயுதம் வாங்க பயன்படுத்தப்படும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல வரும் 2022 –ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார் என அறிவித்து இருக்கின்றது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் 50 வருடங்களுக்கு முன்பே விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடிந்ததற்கும், இந்தியாவால் அது முடியாமல் போனதற்கும் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கும் கும்பல்கள்தான் காரணமாகும். இப்போது அதே கும்பல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பப் போகின்றோம் எனச் சொல்வதைக் கூட நாம் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த பட்ஜெட் தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்ற போடப்பட்ட பட்ஜெட் ஆகும். ஆனால் அப்படி போட்ட பட்ஜெட்டில் கூட உழைக்கும் மக்களை கேவலப்படுத்தும் அதன் பார்ப்பனிய எண்ணம் துளி கூட மாறாமல் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நிச்சயம் மக்கள் இந்த பட்ஜெட்டைப் பார்த்து ஏமாற மாட்டார்கள். மக்கள் மீதான மோடியின் கேவலமான மனநிலையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளவே இந்தப் பட்ஜெட் உதவியிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.

- செ.கார்கி

Pin It