கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தனியார் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்க திட்டமிடும் மோடி அரசு

2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் குழுவை (Planning Commission) கலைத்துவிட்டு நிதி ஆயோக் அமைப்பை 2015 ஜனவரி மாதம் உருவாக்கியது. இவ்வமைப்பு துவக்கத்திலிருந்து நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறோம் என தனியாருக்கு லாபமுண்டாக்கும், நில அபகரிப்புக்கு வழிவகை செய்யும் பல திட்டங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. நிதி ஆயோக் ஒரு திட்டத்தை தயாரிக்கிறது, அதன் தலைவர் ஒன்றைப் பேசுகிறார் என்றால் அதில் தனியார் நலன் மட்டுமே எப்போதும் இருந்திருக்கிறது. மக்களின் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க என்னென்ன திட்டங்களை கடந்தக் காலத்தில் அவ்வமைப்பு தயாரித்திருக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நில அபகரிப்பு சட்டத்திருத்தம்

2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிதி ஆயோக் திருத்தம் ஒன்றினைக் 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அது நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான உரிமை திருத்தமாகும் (The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation & Resettlement RFCTLARR - 2015). இது நிலம் கையகப்படுத்துதலில் அரசிற்கு இருக்கின்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்ட திருத்தமாகும். மக்களின் நிலங்களையும் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்ற பொது நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காகவே கொண்டுவரப்பட்டவை. இத்திருத்தம் இதற்கு முன்பு இருந்த சில கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் சிலவற்றை கொடுத்தது. அதாவது சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment), நில உரிமையாளர்களின் ஒப்புதல் (Consent), விவசாய நிலங்கள் கையகப்படுத்துதல் உட்பட இன்னும் சில பிரிவுகளில் தளர்வுகளைக் கொண்டு வந்தது. அதன்படி பாதுகாப்பு (Defense), கிராமப்புற உட்கட்டமைப்புப் பணிகள் (Rural Infrastructure Projects), மலிவு விலையில் வீடுகள் கட்டுதல் (Affordable Housing), அரசாங்கத்தால் அமைக்கப்படுகின்ற தொழில்துறைக் கட்டமைப்புக்கான பாதைகள் (Industrial Corridor by Government/Government Funded Projects) (சாலை மற்றும் ரயில் பாதைகளிலிருந்து இருபுறமும் ஒரு கிமீ தூர அளவிற்கு) மற்றும் அரசு-தனியார் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு உட்கட்டமைப்பு பணிகள் ஆகிய ஐந்து பணிகளுக்கு சமூக தாக்க மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை, நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியதில்லை, விவசாய நிலமாக இருந்தாலும் கையகப்படுத்தலாம். இதுவே இத்திருத்தத்தின் சாராம்சம். அரசு விலக்கு கொடுத்திருக்கும் இந்த ஐந்து பணிகளின் பெயரில் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளும் பெரும்பாலும் அடங்கிவிடும். இதன் மூலம் அரசு மேற்கண்ட பணிகளுக்கென திட்டமிட்ட எந்த நிலமாக இருந்தாலும் அதை சட்டப்பூர்வமாக கையகப் படுத்திக் கொள்ளும் உரிமையை இச்சட்டம் கொடுக்கிறது.

laws on land acquisition

நிலையான நில உரிமை எனும் கொள்ளை

நிலையான நில உரிமை (Conclusive Land Titling) எனும் வரைவு 2019 ஆம் ஆண்டு நிதி ஆயோக்கினால் தயாரிக்கப்பட்டது. தனிநபர்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு கான்கிறோம் என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின்படி அனைத்து நிலம் சார்ந்த ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். "நடப்பில் சொத்துப் பரிமாற்றம் என்பது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே இருக்கின்ற பரிவர்த்தனை தொடர்பான ஆவனமாகும் (Details of past Transaction). இவை இடப்பரிமாற்ற ஆவனங்கள் மட்டுமே. இதில் அரசின் ஒப்புதல் இல்லை. ஆதலால்தான் இவற்றில் பிரச்சனை ஏற்படும் போது அது சட்டப்பிரச்சனையாக மாறுகிறது. ஆகையால் இதில் அரசு தலையிட்டு தனிநபருக்கு சொந்தமான நிலத்திற்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து, பிரச்சனைக்குறிய சொத்திற்கான நட்ட ஈட்டினையும் பெற்றுக் கொடுக்கும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் (Real estate Transactions) அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும்” என சொல்லப்பட்டது. இதன்படி ஒவ்வொரு இந்தியனுக்கும் அவர்களது சொத்துப் பத்திரம் அரசால் புதுப்பிக்கப்படும். இதுவே நிலையான நில உரிமைச் சட்டமாகும்.

நிலம் வாங்குதல் விற்றல் ஆகியன இணையவழியில் நடைபெரும், இதனால் வெளிப்படைத்தன்மை வரும் என சொல்லப்பட்டாலும் இத்திட்டத்தின் மூலம் நிலங்களை வகைப்படுத்துவதே அரசின் உள்நோக்கமாகும். இதைக் கொண்டு ஊரில் உள்ள தனிநபர் சொத்துக்களையும் பொது நிலங்களையும் பிரித்து பார்பது எளிது. அரசின் வார்த்தைகளில் தனியாருக்குத் தாரை வார்க்க ஏற்ற சொத்துக்களை வகைப் படுத்திவிடலாம். ஊர்மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கென இனி நிலங்கள் எதுவும் இருக்காது. பயன்படுத்தப்படாத (Unutilised) அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட (Under Utilised) நிலங்களாக அவை அனைத்தும் வரையறுக்கப்படும். அனைத்தும் அரசு சொத்துக்களாக மாற்றப்பட்டு, அரசு சொத்து தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள அல்லது உரிய பத்திரங்கள் இல்லாமல் காலங்காலமாக ஒரே இடத்தில் வாழ்ந்துவருபவர்களின் நிலங்களை நேரடியாக பெருநிறுவனங்கள் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகர கார்பரேஷன் வெளியிட்ட கணக்கீட்டின்படி சென்னையில் மட்டும் 28,700 கட்டிடங்கள் பட்டா இல்லாத நிலத்தில் கட்டப்பட்டவையாகும். தமிழ் நாட்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டோமெனில், பல தலைமுறைகளாக பத்திரங்கள் இல்லாமல் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்து வருபவர்கள் இந்த சட்ட வரைவின்படி சர்ச்சைக்குறிய நில உடமையாளர்களாக மாறும் அபாயம் இருக்கிறது.

நிலம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் இந்த சட்டத்தை ஏற்பதற்கான உரிமை மாநில அரசாங்கத்திடம் இருக்கிறது. நிலம் மாநிலத்திற்கு முக்கிய வருவாய் மூலமாக இருப்பதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. ஒரே நாடு ஒரு ரேஷன் அட்டை போல நிலம் சம்பந்தமான எல்லா உரிமைகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடாக இத்திட்டத்தினை கொண்டுவந்தது அரசு.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் விற்கப்படும் நிலங்கள்

ஒன்றிய அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உட்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டும் தேசிய பணமாக்கல் எனும் நிதி ஆயோகின் திட்டத்தை (National Monetisation Pipeline) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 24 அன்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் இருவகையான சொத்துக்கள் பணமாக மாற்றப்படுவதற்கு குத்தகைக்கு விடப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று, ஏற்கனவே உருவாகி செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்கள். இரண்டாவது, பணமாக மாற்றுவதற்கு (Monetize) ஏற்ற சொத்துக்கள். இதில் அரசு நிறுவனங்கள், சாலைகள், ரயில்வே, விமானநிலையங்கள், பைப்லைன்கல், செல்போன் டவர்கள், தொலைதொடர்ப்பு லைன்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் குறைவாகப் பயன்படுத்தப்படுபவை (Under utilised) மற்றும் பயன்படுத்தப்படாதவை (Un-utilised) ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைப் பணமாக்குதல் இதில் இரண்டாவது வகையாகும்.

land grabbingபொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் இத்தகைய பணமாக்கல் திட்டத்தில் வராது என்று அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும், மேலே குறிப்பிட்டபடி நிலக் கையகப்படுத்துதலும் பொது நிலங்களை அரசு கைக்கொள்வதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கி வைத்துவிட்டிருப்பதும் தனியாருக்கு வேண்டிய நிலங்களை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்க தேவையான அனைத்து வழிவகைகளையும் திட்டமிட்டு ஒவ்வொன்றாக செய்து வருவதையே நமக்குக் காட்டுகிறது. இத்திட்டத்திற்கு சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, ரியல் எஸ்டேட் மற்றும் அனைத்து பொதுத்துறைகளிலும் நிலத்தை கண்டறிந்து ஒதுக்குவதற்காக தனியான அமைப்புகள் பல ஆண்டுகளாகவே வேலை செய்து வருகிறது.

எடுத்துக்காட்டாக ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (Rail Land Development Authority - RLDA) என்கிற ஒன்றை 1989-ஆம் ஆண்டிலிருந்து ரயில்வே துறையின் ஒரு பிரிவாக உருவாக்கி இந்திய ரயில் போக்குவரத்திற்கு சொந்தமான ”பணமாக்களுக்கு” ஏற்ற நிலத்தை கண்டறிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது குத்தகைக்கு விட ஏற்ற ரயில்வே நிலங்களை அரசுக்குப் பரிந்துரைப்பது இந்த அமைப்புதான். இவ்வமைப்பின்படி ரயில்வே துறைக்கு மட்டும் இந்தியா முழுவதும் 100 இடங்களில் 43,000 ஹெக்டேர் காலி நிலங்கள் இருக்கின்றன. இதில் 16 ரயில் நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்கள், சுமார் 1,904 கோடி ரூபாய் மதிப்பிற்கு குத்தகைக்கு விட கடந்த ஜூன் மாதம் திறந்துவிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் நாள் சென்னையை சுற்றியுள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஏலம் விடப்பட்டன. புதுதில்லி உட்பட பல இடங்களில் அரசு குடியிருப்புப் பகுதி நிலங்கள் மற்றும் எட்டு ஐடிடிசி ஹோட்டல்கள் உட்பட 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை NMP திட்டத்தின்மூலம் பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India- NHAI), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் (National Highways & Infrastructure Development Company Ltd- NHIDCL) மற்றும் மாநில பொதுப்பணிகள் துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH) இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பு துறையை வளர்க்க திட்டமிடவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு பணிகளை செய்துக் கொண்டிருக்கிறது. அமைச்சகத்தின் குறிக்கோள் சாலைப் போக்குவரத்தினை விரிவுப்படுத்துவதன் மூலமாக ”அதீத பொருளாதார வளர்ச்சியை” அரசிற்கு பெற்றுக் கொடுப்பதாகும். அதற்கு நிலக் கையகப்படுத்துதல் இன்றியமையாத ஒன்றென்பதால், அனைத்து மாநிலங்களிலும் நிலம் கையகப்படுத்துதலுக்கான ஆணையம் (Competent Authority for Land Acquisition - CALA) ஒன்றினை அமைத்தது. அவ்வாணையமே மக்களுக்குச் சொந்தமான நிலத்தினை கையகப்படுத்த அமைக்கப்பட்ட அமைப்பாகும். சேலம் 8 வழிச்சாலை உட்பட பல மக்கள் விரோத திட்டங்கள் இந்த அமைப்புகளின் கீழ்தான் நிலத்தினை கையகப்படுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இவை ஒரு சில உதாரணங்களே. இன்னும் தேவைப்படுகிற துறைகளுக்கு நிலங்களை கண்டறியவும் ஒதுக்கீடு செய்யவும் நிலத்தை பொதுத்துறையிடம் இருந்து பெற்று பரிவர்தனைகளை சுலபமாக்கிடவும் தனியான அமைப்பு (Special purpose vehicle) ஒன்று உருவாக்கப்படும் என இத்திட்டத்தினை அறிவிக்கும் போது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருக்கிறார்.

இச்சட்டத்தின் மூலமாக தொடர்ச்சியாக கையகப்படுத்திய, படுத்தவிருக்கின்ற “சட்டப் பூர்வமான” அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விற்று லாபம் பார்க்கும். குத்தகைக்கு விட்ட பணத்தைக் கொண்டு மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்புகளைக் கொண்டுவரும் எனச் சொல்கிறது. இந்ததிட்டமும் நிதி ஆயோக்கின் பரிந்துரைதான்.

நிதி ஆயோக்

நிதி ஆயோக்கினை இந்திய அரசின் கொள்கையை வடிவமைக்கும் அமைப்பாக (Think tank) பாஜக சொல்லிக்கொண்டாலும், அது அரசு சொத்துக்களை தனியாரிடம் மாற்றிக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது அதன் ஒவ்வொரு நகர்விலும் தெரியவருகிறது. அத்தகைய அமைப்பின் தலைவர் ஒன்றிய அரசின் கொள்கைளை பல இடங்களில் உளரிவிடுவதும் உண்டு. நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் 2020 திசம்பர் மாதம் ஸ்வராஜ்யா பத்திரிக்கையின் விழா ஒன்றில், இந்தியாவில் அதீத ஜனனாயகப் போக்கு இருப்பதாகவும், கடுமையான சீர்திருத்தங்கள் இதனால் தடைபடுகிறதென்றும் கூறி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அவ்விழா தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை நிறுவனமான வேதந்தாவின் நிதியில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபர்ஸ்ட் போஸ்ட் மற்றும் இந்தியா டுடே ஆகிய பத்திரிக்கைகளில் இந்த செய்தி வெளியாகி சர்சையானதால் ஸ்வராஜ்ய பார்ப்பனர்களின் முன் இந்துத்துவ சர்வாதிகாரியாக பேசிய அமிதாப் பின்னர் சாவர்க்கராக மாற வேண்டியிருந்தது. அடுத்தநாள் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை நீக்கியது. அமிதாப்பும் தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என பின்வாங்கினார். 2017 ஆண்டு நடத்தப்பட்ட International PPP Finance Summit-ன் போது, ”பொதுத்துறை நிறுவனங்களிலிருந்தும் உட்கட்டமைப்புப் பணிகளில் இருந்தும் அரசு விலகிக் கொள்ளவேண்டும், கல்வி நிறுவனங்கள் முதல் சிறைச்சாலை வரை தனியாரிடம் கொடுக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்து. தனியார் நலனுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிற இத்தகைய அமைப்பை பாஜக தனது கொள்கை திட்டங்களுக்கு பாதை அமைத்துத் தரும் ஒரு நிறுவனமாகவே உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கிறது.

land grabbing 1இந்த நிலையில், மோடி தனது சுதந்திர நாள் உரையின் போது, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அப்படியென்றால், மக்களின் பணமான 1 லட்சம் கோடியும் அம்பானி, அதானி போன்ற மோடியின் நண்பர்களின் தனியார் நிறுவனங்களுக்கு கையளிப்பதற்காகவே மோடி உட்கட்டமைப்புத் திட்டங்களை அறிவிக்கிறார்.

வெளிப்படைத்தன்மை மட்டும்தான் இங்கு குறையா?

ஒன்றிய அரசின் இணையதளமான பூமி ராஷி (Bhoomi Rashi) 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. சாலை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதலில் இருக்கும் வெளிப்படைத் தன்மையை மக்களிடம் கொண்டுச் செல்ல இது பயன்படுமென தெரிவிக்கப்பட்டது. கையப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை விலை, இழப்பீட்டுத் தொகை கணக்கீடு ஆகியவற்றையும் நில உரிமையாளர்களும், பங்குதாரர்களும் தெரிந்துக் கொள்ள இந்த இணையதளம் உதவும் என தெரிவிக்கப்பட்டது.

ஒரே இரவில் பணத்தின் மதிப்பை இல்லாமல் செய்துவிட்டு, பரிவர்தனைகளை டிஜிட்டலாக மாற்றிவிட்டால் கருப்பு பணம் ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் செழித்து வளர்ந்துவிடும் என்பது போன்ற ஒரு திட்டம்தான், மக்களிடம் அவர்களது நிலங்களைக் கையகப்படுத்திவிட்டு அதற்கான தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால் அவர்களுக்கான நீதி கிடைத்துவிடுமென்பதும். நிலம் கையகப்படுத்தல் பற்றிய செய்தியை மட்டுமே அது தனது இணையதளத்தில் கொடுக்குமே ஒழிய வேறொரு பயனும் மக்களுக்கு இருக்காது.

சுதந்திர இந்தியாவில் நம்மை ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்ற இந்த பார்ப்பன அரசு 1947-ஆம் ஆண்டிலிருந்து 2004-ஆம் ஆண்டுவரை சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்களின் 2.5 கோடி ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி அவர்களை வெளியேற்றி இருக்கிறது. மறைந்த சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி அவர்கள் தனது அறிக்கையான Homeless in our own Homeland என்பதில், இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், சுரங்கங்கள், அணைகள், தொழில்துறைக் கட்டமைப்புகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் துப்பாக்கி சுடும் களங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்காக சுமார் 20 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர் என்கிறார். அரசு காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களது நிலத்தை அடித்துப் பிடுங்கி தனியாருக்கு கொடுக்கவும், உட்கட்டமைப்புகளை பெருக்கவும் அதை மறுபடியும் தனியாருக்கே கொடுக்கவும் நினைக்கிறது. நிலம் பிடுங்கப்பட்ட மக்களுக்கு முறையான மீள்குடியேற்றம், புணர்வாழ்வு வசதிகள், இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படுவதில்லை. அதுவே இங்கு தலையாய பிரச்சனை. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொது மக்களின் நிலங்களை எவ்வாறெல்லாம் கையகப்படுத்தலாம் என திட்டமிட்டு அதை திறம்பட செய்துவிட்டு, அரசு வெளிப்படையாக செயல்படுகிறது என காட்டிக் கொள்ள இழப்பீடு தொடர்பான செய்திகளை வலைதளத்தில் இடுவது அயோக்கியத் தனமான செயல்.

- மே பதினேழு இயக்கம்