648 மெகாவாட் அல்ல; 848 மெகா வாட் கொள்முதல்

அதானியுடனான சூரிய மின்சாரம் கொள்முதல் பற்றி தமிழக அரசியல் களம் சூடாக விவாதித்து வருகிறது. கேள்விக் கணைகள் அரசை நோக்கி இருக்கின்றன.. ஆனால் இதன் பின்னணியில் மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் இருப்பது விவாதத்திற்கு வரவில்லை.

உண்மை இதுதான்.

ஒழுங்கு முறை ஆணையம் சூரிய மின்சாரத்திற்கான விலையை யூனிட் ரூ 7.01 என நிர்ணயித்தது. 11/09/2014 உத்திரவு எண் 07படி நிர்ணயிக்கப்பட்ட இந்த விலை ஒர் ஆண்டு காலமாக - 11/10/2015 வரையில்தான் பொருந்தும். அதன் பிறகு விலையை ஆணையம் மறுநிர்ணயம் செய்யும். இந்தக் கால அளவு ‘கண்ட்ரோல் பீரியட்’ என அழைக்கப்படும். சூரிய மின்சாரத்தின் விலை படு வேகமாக குறைந்து வருவதால் ஓர் ஆண்டு காலம் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாக ஆணையம் உத்தரவில் தெரிவித்திருக்கிறது. நடுவண் ஆணையமும் இந்த நடைமுறையைத் தான் அறிவித்திருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட விலை, மின்நிலையம் நிறுவப்பட்டு மின்சார உற்பத்தி வாரியத்திற்கு அளிக்கும் போதுதான் பொருந்தும். ஒப்பந்தம் கையொப்பமிட்ட தேதிக்குப் பொருந்தாது.

அறிவிக்கப்பட்ட ஓர் ஆண்டு நிதிமுதலீடு பெறப் போதுமானதல்ல என்றும், இதனை இரண்டு ஆண்டுகளாக நீடிக்க வேண்டும் எனவும் சில நிறுவனங்கள் ஆணையத்தை அணுகினர். ஆனால் ஆணையம் உத்திரவில் சொன்ன காரணத்தைக் காட்டி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

15/03/2015 டைம்ஸ் ஆப் இந்தியா, அதானி குழுமம் தமிழ்நாட்டில் சூரிய மின்நிலையம் அமைக்கப் போவதகவும், இந்தச் செய்தியை அதானி நிறுவனம் மறுக்கவோ ஏற்கவோ இல்லை என்றும் செய்தி வெளியிட்டது.

முன்னதாக காலநீடிப்புச் செய்ய மறுத்த ஆணையம் இப்போது 01/04/2015 அன்று தன் சுயாதிகாரத்தின் மூலம் இந்தக் கால அளவை 31/03/2016 வரை நீடித்தது. அதாவது மேலும் ஆறு மாதம் காலம் அளித்தது. இந்தக் கால நீடிப்பை மூவர் கொண்ட ஆணையத்தில் ஒருவரான திரு.நாகல் சாமி ஏற்கவில்லை. அவர் மக்கள் நலம் சார்ந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

12/06/2015 அன்று அதானி குழுமம் 200 மெகாவாட்க்கு வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த நிலையம் மார்ச் 2016 உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவித்தது. அடுத்த 22 நாட்களுக்குள் மேலும் 648 மெகாவாட்க்கு இரண்டாவது ஒப்பந்தமும் கையெழுத்தானது.

Hanhuo Q என்ற தென்கொரிய நிறுவனத்துடன் 70 மெகாவாட் நிலையம் அமைக்க 15/07/2015 அன்று அதானி ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனமான பஸ்ட் சோலர் உடனும் அதானி அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த 848 மெகாவாட் சூரிய மின்நிலையம் தான் உலகத்திலேயே ஒரே இடத்தில் அமைக்கப்படும் மிகப் பெரிய நிலையமாகும். 2016 மார்ச்க்குள் அதானி மின் நிலையம் அமைக்க வசதியாகவே ஆணையம் மேலும் ஆறுமாத கால நீடிப்பு செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இன்று யூனிட் ரூ 5.05க்கு குறைந்து போன நிலையில் மேலும் எட்டு மாதங்களுக்குப் பின்னும் ரூ 7.01க்கு கொள்முதல் செய்யும் அரசுக்கு வசதியாகவே ஆணையம் செயல்பட்டிருக்கிறது. அதற்காக தன் சுய அதிகாரத்தையும் பயன்படுத்தியிருக்கிறது.

ஒப்பந்தப் புள்ளி கோரினால் அதானியுடன் நிச்சயமாக யூனிட் ரூ7.01 விலையில் ஒப்பந்தம் செய்ய முடியாது என்பது அரசுக்குத் தெரியும். அதனால் தான் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

மின்சாரச் சட்டம் 2003 சந்தை போட்டியிலேயே கொள்முதல் செய்யச் சொல்கிறது. திறந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் தான் கொள்முதல் செய்யவேண்டும்.

அரசு அதானி ஆணையம் என்ற முக்கோணம் தமிழக மக்களைச் சுற்றி வரையப் பட்டுவிட்டது..

- சா.காந்தி

Pin It