farmers protest at delhi 361இந்தியா முழுவதிலும் கொரோனா என்னும் பெருந்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இப்போது இரண்டாவது அலை மிக வேகமாகவும் பல லட்சம் மக்களை பாதிக்கக்கூடிய வகையிலும் இறப்புகளை அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் இந்த கொரோனாவின் தாக்கம் சற்று அதிக அளவிலேயே உள்ளது. இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. டெல்லி மாநில அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தற்போது அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2020 நவம்பர் 27 முதல் 161 நாட்களாக (06.05.2021) தலைநகர் டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சிங்கு, திக்ரி, காஜிபூர், ஷாஜகான்பூர் எல்லைகளில் கூடாரங்கள் அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே போல் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் இக்காலத்தில் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் நெருக்கடி

மத்திய பிஜேபி அரசுடன் பலகட்டங்களாக விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி அரசு பேச்சுவார்த்தைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லை பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. வாகனங்கள வேறு வழியாக திருப்பிவிடப்படுகின்றன.

கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளைச் செய்து வருகிறது. இதுவரை போராட்டத்தில் 375 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்த போன போதிலும் மனம் தளராமல் போராட்டத்தை தொடர்கின்றனர். கொரோனாவை விட மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் ஆபத்தானவை. ஆனால் பாஜக அரசு போராடும் விவசாயிகளை கொரோனாவை விட ஆபத்தாக பார்க்கிறது.

விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களின் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் தங்கள் அன்பால், அகிம்சையால் அவற்றை விவசாயிகள் எதிர்கொண்டனர். கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று சிங்கு எல்லையில் விவசாயிகள் கூடாரங்கள் சமூக விரோதிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விவசாயிகளின் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத அரசு இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக செயல்படுத்தி வருகிறது.

பொய் பிரச்சாரம்

விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்டு பலவகையான பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் தர்ணா போராட்டத்தை வலுக்கட்டாயமாக மாற்றுவது என்பதும் இதில் அடங்கும்.

டெல்லியின் எல்லைகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் போராடும் விவசாயிகள் முறையான பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் மறுக்கவில்லை. கொரோனா காலத்தில் பாஜக சில தேர்தல் பிரச்சார பேரணிகளை நடத்தியது. அதனால் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவும் என்பதை ஏற்க மறுக்கிறது. அதே சமயம் பாஜவுக்கு எதிராக ஏதேனும் போராட்டங்கள் நடைபெற்றால் மோடி அரசு அதை மிகவும் கடுமையாகக் கையாள்கிறது.

ஆதரவு நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள அறிவுஜீவிகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கடிதம் எழுதியுள்ளனர். அதன் ஒருபகுதி வருமாறு

“மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நெருக்கடியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் ” மேலும் கடந்த 140 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் புறநகரில் திறந்த வெளியில் முகாமிட்டுள்ள பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிடிவாதமான அணுகுமுறை உளவியல் மற்றும் உடல்ரீதியான துன்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே 300க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் போராட்டத்தில் காயங்கள் மற்றும் தடுப்புக்காவல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான குளிர் காலத்தில் டெல்லி எல்லைகளில் தற்காலிக தங்குமிடங்களில் முகாமிடுதல் மற்றும் கோடையின் வெப்பத்தை தாங்குவது எளிதானது அல்ல.

இந்த போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களின் நீண்டகால பொறுமை மற்றும் துன்பத்தை இது பிரதிபலிக்கிறது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “தேசத்திற்கு உணவு பாதுகாப்பை வழங்கும் விவசாயிகளுக்கு நியாயமாக இருக்க வேண்டும்” என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உடனடியாக விவசாயிகளின் தலைவர்களை அழைத்து ஒரு இணக்கமான தீர்வைக் காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தப்படுகிறது.

இதே போல் மேகலாயா கவர்னர் சத்தியபால் மாலிக் ஏப்ரல் 23 தேதியிட்ட கடிதத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினார். முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தை கையாள்வதில் அவர்கள் தவறான பாதையில் இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரிவிக்க முயன்றதாக அவர் மேலும் கூறியுள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் திக்ரி எல்லைக்கு வந்துள்ளனர்.

பாதுகாப்பு

போராடும் விவசாயிகளுக்கு சமூக நல அமைப்புகள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் சுத்திகரிப்பான், முகக்கவசம் விநியோகித்தில் மற்றும் தடுப்பூசி போட ஊக்குவித்தல் ஆகியவற்றை போராட்ட களங்களில் செய்து வரப்படுகிறது. திக்ரி எல்லையில் டாக்டர் சவாய்மான்சிங் தலைமையிலான குழு விவசாயிகளை அணுகி கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியது.

திக்ரி, சிங்கூர் போராட்ட எல்லையில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் முதல் டோஸ் தடுப்பூசி பெரும்பாலும் போட்டுவிட்டனர். இரண்டாம் டோஸ் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிங்கு எல்லையில் கஜாரியா டைல்ஸ் அலுவலகத்தில் முககவசங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் சாலைகளின் ஒரு பக்கப்பாதையை திறந்து விட்டுள்ளனர்.

ஆனால் டெல்லி காவல்துறையின் தடுப்புகள் சாலையின் மறுபக்கத்தில் இன்னும் அகற்றப்படவில்லை. ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் சீராக இயங்குவதற்காக சாலை திறக்கப்பட வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா மின்னஞ்சல் மூலம் முறையான கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளது.

தேர்தல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கடும் கோபத்தின் விளைவுகளேயாகும். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதே போல் அசாம் மாநிலத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அகில் கோகோய் நடந்து முடிந்த தேர்தலில் ஷிப்சாகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டும் என்று சம்யுக்தா கிஷான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலை வைத்து மத்திய பிஜேபி அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும், மிரட்டல்களையும் விடுத்து வருகிறது. வீட்டிற்கு செல்லுங்கள் இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு மிரட்டி வருகிறது.

ஆனால் விவசாயிகளோ கொரோனா என்னும் கொடிய கிருமியை விட கொடூரமான கிருமியாக மூன்று வேளாண் சட்டங்கள் உள்ளது. நாங்கள் வீட்டிற்கு சென்றாலும் மூன்று வேளாண் சட்டங்கள் என்னும் கிருமி தாக்கி இறக்க நேரிடும்.

எனவே நாங்கள் கொரோனா என்னும் கிருமியைச் சமாளித்து விடுவோம். ஆனால் எங்களால் மூன்று வேளாண் சட்டங்கள் என்னும் கிருமியைச் சாமாளிக்க முடியாது. எனவே மூன்று சட்டங்களையும் திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

டெல்லி எல்லையில் எங்கள் போராட்டம் தொடரும். வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள் இப்போது நடத்தி வருகிறார்கள். இந்த கொரோனா தொற்று காலத்திலும் போராடி வரும் விவசாயிகளுடன் நாமும் இருப்போம். இருக்க வேண்டும்.

- கே.பி.பெருமாள்

 

Pin It