சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைப்பில்  ஏன்  மெட்ராஸ் ஹை கோர்ட் என குறிப்பிடப்பட்டு உள்ளது என்றால் அது தான் இன்றும் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான  உண்மையான பெயர்.   திராவிடப் பகுதிகள் என்று சொல்லப்படும்   ஆந்திரா, கர்நாடகா , கேரளா போன்ற மாநிலங்களில் உயர் நீதி மன்றங்கள் என்ன பெயர்களில் உள்ளன என்று பார்ப்போம்.  அன்றைய சென்னை மாகாண அரசியலில் 'இந்திய','திராவிட' அரசியலை பொதுவிலும் ஆந்திர,கேரள,கன்னட அரசியலை தத்தம் பகுதிகளிலும் கொண்டு இயங்கிக் கொண்டு இருந்தனர். தமிழ் நிலத்தில் அப்படியான போக்கு இல்லை.

1947 ல்  பிரிட்டிஷ் இந்தியா வானது இந்தியா ஒன்றியமானது. இந்நிலையில் ஆந்திர மாநில கோரிக்கையினை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த காந்தியின் தொண்டர் 'பொட்டி ஸ்ரீராமுலு 16 .12 . 1952 அன்று மரணம் அடைந்தார். சென்னை மவுண்ட் ரோடில் நடந்த கண்டன ஊர்வலம் பெரும் கலவரமாக வெடித்தது. மைய அரசில், அரசியலில் இருந்த ஆந்திரப் பகுதியினை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் ஆந்திர மாநிலக் கோரிக்கையினை சாத்தியமாக்கினர். அன்று அது பிரிவினைவாதமாகப்   பார்க்கப்படவில்லை. 1953இல் ஆந்திராவானது.  1956 இல் தெலுங்கானா வை உள்ளடக்கி 'ஆந்திரப் பிரதேசமானது'. 1919இல் உயர் நீதி மன்றமாகவும் பின் ஆந்திர , ஆந்திரப் பிரதேச உயர் நீதி மன்றமாகவும் மாறியது. 1956 க்குப் பின்  மொழி வாரி மாநிலங்கள் தோன்றின. அவ்வகையில்   கேரளா உருவானது . 1887 ல் திருவிதாங்கூர் உயர் நீதி மன்றம் என்று  இருந்தது.  பின் 1949ல் திருவிதாங்கூர்  கொச்சின் உயர்நீதி மன்றம் ஆனது. அது,  1956ல் கேரளா  உயர்நீதி மன்றம் என்று ஆகியது.

கர்நாடகாவில் நடந்து இன்னும் கூடுதலானது ஆகும். 1884ல் மைசூர் தலைமை நீதி மன்றம் ஏற்படுத்தப் பட்டது,  அது, 1930 ல்   மைசூர் உயர் நீதி மன்றமாக மாறியது . 1956 மொழி வாரிப் பிரிவினையின் விளைவாக மைசூர் மாநிலம் உருவானது. அதனால், மைசூர் உயர் நீதி மன்றம் அதே பெயரிலேயே தொடர்ந்தது.  ஆனால், 1973 ல் மைசூர் மாநிலம் கர்நாடகாவாக மாறியதால் மைசூர் உயர்நீதி மன்றம் 'கர்நாடகா உயர்நீதி மன்றமாக ' மாற்றப் பட்டது.

தமிழ்நாடு

இந்திய, திராவிட அரசியல் கருத்துக்களைத் தொடக்கத்தில் வளர்த்து எடுத்ததில் சென்னை மாகாணத்தின் பங்கு மிக முக்கியமானது . ஆனால், பின்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மொழி வழி அரசியல் மாறிப் போனதில்  தமிழர்கள் தனித்து விடப் பட்டனர்.  ஜூலை 27,1956 அன்று விருதுநகரில் சங்கரலிங்கனார்  சென்னை மாகாணத்தின் பெயரினை 'தமிழ்நாடு' என்று மாற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தினை தொடங்கினார். அண்ணா, ஜீவா, ம.பொ.சி போன்ற தலைவர்கள் எல்லாம் உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரினர். அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த காமராஜரும் அதனையே கூறினார். ஆட்சியில் இல்லாதவர்களால் செய்ய முடிந்ததையே   ஆட்சிப் பொறுப்பில்  இருந்த காமராஜரும் செய்தார் என்பது விநோதமானது.

ஆந்திரா / பிற  மாநில தலைவர்கள் டெல்லியில் சாதித்ததைப் போல் அவர் செயல் படவில்லை.  சாகும் வரை உண்ணா விரதம்  76 நாட்கள் கடந்த நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி சங்கரலிங்கனார் உண்மையிலேயே இறந்தும் போனார். பொட்டி ஸ்ரீராமுலு வின் மரணம் ஒரு வருடத்தில்  ஆந்திராவை சாத்தியமாக்கியது . சங்கரலிங்கனார் பாவம், அவரது மரணத்திற்குப் பின் 12  ஆண்டுகள் கடந்த பிறகே அந்த வாய்ப்பு கிட்டியது.  சங்கரலிங்கனாரின் மறைவுக்குப் பிறகு  பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கை யினை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக தனி மசோதாவே கொண்டு வரப்பட்டது. ஆனால் , அது தள்ளுபடி செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது..  1967 ல்  அண்ணா முதல்வர் ஆனார் . 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. பிற மாநிலங்களில் மாறியதைப் போல், மெட்ராஸ் ஹை கோர்ட்,  தமிழ்நாடு உயர் நீதி மன்றமாக மாற வில்லை. மேலும் கூடுதலாக, 1996 ல்  மெட்ராஸ் என்பது  சென்னை என்று அதிகாரப் பூர்வமாக மற்றப் பட்ட பிறகும் கூட  அது மெட்ராஸ் ஹை கோர்ட், சென்னை உயர் நீதி மன்றமாக எழுத்துப் பூர்வமாக  மாறவில்லை. மற்ற மாநிலங்களில் எளிதாக சாத்தியமான நிகழ்வுகள் கூட தமிழ் நாட்டில் மட்டும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே, வேறு வழி இன்றி சில  நிகழ்ந்து இருக்கின்றன. சில இன்னும், இன்றும் கூட கைக்கு எட்டாத் தொலைவிலேயே உள்ளன .சென்னை மாநகராட்சி என்பதற்கும் சென்னை  உயர்நீதி மன்றம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு தானே. . !     தமிழ் நாடு  உயர்நீதி மன்றமாகவும்,  அதில், தமிழ் வழக்கு மொழியாகவும் மாறும் நாள் வரட்டும்.

Pin It