தமிழனை அடிமையாகவே வைத்திருக்க நினைக்கும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு கல்லூரி மாணவனின் திறந்த மடல் .....

நான் நேரடியாக பிரச்சனைக்கு வருகிறேன் !  சமீப காலமாக தமிழக மக்களை உணர்வுப் பூர்வமாக ஒன்றுசேர்க்கிறேன் என்ற போர்வையில் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர் காயும் போக்கு தமிழக தலைவர்களிடையே வந்துள்ளது வருத்தம் தருவதாக இருக்கிறது .

இலங்கை பிரச்சனை பற்றி தான் நான் பேச போகிறேன் என்பது உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.  நம் மக்கள் இலங்கையில் கொத்துகொத்தாக அழிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல என்பதும் கடும் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உட்பட்டது என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே.  இலங்கையில் ராஜ பக்சே செய்ததை இங்கு தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் மறைமுகமாக செய்கின்றனர் .

இலங்கையில் இருந்து இங்கு வந்த விளையாட்டு வீரர்களையும் திருத்தல யத்திரீகர்களையும் தாக்குவது தமிழன் தன் அடையாளத்தை இழந்து வருவதையும் மனிதத்தை குழி தோண்டிப் புதைப்பதையும் காட்டுகிறது. தமிழன் நீதி மறந்து செயல் பட்டவன் அல்ல என நாம் சங்ககால வரலாறில் படித்ததில்லையா, அம்பு எய்தவனை விட்டு விட்டு அம்பை தாக்குவதால் யாருக்கு லாபம்?  இலங்கையில் ஆட்சி செய்கின்ற இனவெறி பிடித்தவன் என் இனத்தை அழித்தான் என நாம் சொல்கிறோம் ஆனால் இனவெறி பிடித்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதை நாம் என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அவன் செய்தான் என்ற காரணத்திற்காக நான் செய்வேன் என சொல்வது சரிதானா ?

இலக்கியத்தை மேற்கோள் காட்டும் தலைவர்கள் அந்த இலக்கியங்கள் தமிழன் ஒற்றுமையை விரும்பினான் என்பதை கூறுவதை மறைப்பது ஏன்? உங்கள் சுயநலம் தடுக்கிறதா ?  ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாரதிதாசனும் உலக ஒற்றுமையை குறித்து கூறுகையில்

" தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு .......
தூய உள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ' ஒன்றே' என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் !ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே."

என பாடவில்லையா? ஏன் மக்கள் எல்லோருக்கும் ஓர் இனம் என்பதை மறந்து போனோம் நாம்?  நம் இனம் அழிக்கப்பட்டது என்பது நமக்கு இழப்புதான் என்றாலும் நானும் மற்றவனை அழிப்பேன் என்பது நம் மிருக குணத்தை காட்டுகிறது.   தனக்கு இருக்கும் கஷ்டத்தை இறைவன் பால் சமர்ப்பிக்க இங்கு திருத்தலங்களை நோக்கி இலங்கை மக்கள் வந்தனர் அதில் என்ன தவறை நீங்கள் கண்டு விட்டீர்கள் ? ஏன் அவர்களை தாக்குகிறீர்கள் ? நம் தமிழன் கேரளத்திலே தாக்கப் பட்டபோது நமக்கு  வலித்ததல்லவா ? இலங்கையில் கொல்லப்பட்ட போது வலித்ததல்லவா ? அதே வலிதானே அவர்களுக்கும் இருக்கும் ஏன் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை ?

உங்களுக்கு(அரசியல் தலைவர்களுக்கு ) தமிழன் என்றுமே இனவெறி உள்ளவனாக இருக்க வேண்டும் அப்போது தான் நீங்கள் அவர்களை ஆள முடியும். அவன் உலகத்தை ஓர் இனமாக ஏற்றுக்கொண்டு விட்டால் உங்கள் ஆட்டம் பலிக்காது என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி தமிழக மக்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பது பழகிவிட்டது.  நாம் மட்டுமே வாழ்ந்து விட்டு சுற்றி பகையைச் சம்பாதிப்பது எதற்காக? எதிர்காலத்தில் தமிழன் என்ற இனம் முழுவதுமாக அழிக்கப்படவேண்டும் என்ற ஆசை காரணமா?

இனப்பற்று இருப்பது தவறில்லை ஆனால் அதை வெறியாக்கி கொண்டு மற்றவர் வாழ்க்கையையே அழிக்க நினைப்பது நல்லதல்ல ; நம்மை அது நேராக தாக்காவிடினும் நம் எதிர்கால சந்ததியை தாக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளப் போவது எப்போது?

"யாதும் ஊரே யாவரும் கேளிர் " என உலகையே ஓர் இனமாக கருதியவர்கள் நாம், நமக்கு அழிவை எற்படுத்தியவனை மன்னிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை அவனுக்கு தண்டனை வாங்கி தருவது நம் கடமை அதை விட்டு விட்டு அப்பாவி மக்களையும் விளையாட்டு வீரர்களையும் தாக்குவது நீதியாகாது !

தலைவர்கள் உங்களுக்கு இலங்கை அரசுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என்ற உண்மையான குறிக்கோள் இருக்குமானால் நான் சவால் விடுகிறேன் எங்கே தமிழகத் தலைவர்கள் அனைவரும் இந்த கருத்திற்காக ஒன்று சேருங்கள் பார்ப்போம் ? கண்டிப்பாக மாட்டீர்கள் கொள்கை என்பீர்கள் ( உங்கள் யாருக்கும் அது கிடையாது ) , உங்கள் அரசியல் லாபத்தை கணக்கு பார்ப்பீர்கள். மக்களை குறித்து கவலைப் பட மாட்டீர்கள் .

மீண்டும் சவால் விடுகிறேன் உங்களுக்கு மக்கள் மீது பற்று இருந்தால் ஒன்று சேர்ந்து அரசை எதிர்த்து களம் காணுங்கள் அதை விடுத்து மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதிலே அரசியல் லாபம் பார்க்காதீர்கள் . அப்பாவி மக்கள் மீது நீங்கள் தொடுக்கும் யுத்தம் மீண்டும் தமிழின அழிவுக்கு வழிவகுக்கும்! அதைத்தானே விரும்புகிறீர்கள் தமிழின அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களே !

"நல்லது செய்தல் ஆற்றீர்; ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே"

மக்களை குறித்த கவலையில்
ஒரு கல்லூரி மாணவன் !
Pin It