தமிழக நீதித்துறையின் செயல்பாடுகள் சமீப காலங்களில் அதிருப்தி தரும் வகையிலேயே உள்ளது. ஜனநாயக உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கடும் நடவடிக்கையினை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் போராடுவது குற்றமா? போராடுபவர்கள் குற்றவாளிகளா? கட்டாயத் தலைக் கவசத்திற்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடிய வழக்கறிஞர்களையும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றும் வழக்கறிஞர்களையும் குற்றவாளிகளாகச் சித்தரித்து நடவடிக்கை பாய்கிறது.
ஏன் என்று கேள்வி கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இடைநீக்க உத்தரவும் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. அமைதியாக அமர்ந்திருந்தாலே ஆபத்தா? கடந்த 14.09.2015 அன்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியுரிமைக்காகத் தலைமை நீதிபதியின் அறையில் வாயில் கறுப்பு துணியைக் கட்டிக் கொண்டு தங்கள் கோரிக்கையை வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.
வழக்கறிஞர்களும் மாணவர்களும் எவ்வகையிலும் நீதிமன்ற அலுவலுக்குத் தடையாக இல்லை. அனைவரும் மௌனமாகத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமர்ந்திருந்தனர். நீதிபதிகளின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் உரிய மரியாதைக் கொடுத்து தங்களின் நியாயத்தை எடுத்துக் கூறினர்.
நீதிமன்ற அறையைப் போராட்டக்களமாக மாற்றியதே உச்சநீதிமன்றம் தான், அரசியல் அமைப்பு சட்டத்தின் உறுப்பு 348 (2)ன்படி குடியரசுத்தலைவருக்கு உள்ள அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது!
தமிழ்மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்காமல் இழுத்து அடித்து ஆனால் மொழியுரிமைக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் மீது குற்றம் சுமத்துகிறது. மேலும் போராடிய வழக்கறிஞர்களும் மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறித் தமிழககாவல் துறையை நம்பாமல் மத்திய தொழில் பாதுப்புப் படையை நிறுத்தி வழக்கறிஞர்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகிறது.
தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியுரிமைக்காக போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது உச்ச நீதிமன்றமே! ஆனால் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியுரிமைக்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போராடுபவர்கள் முடக்குவதும், போராட்டகாரர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதும் வேதனைக்குரியது.
சட்டக் கல்வி இயக்குநர்க்கு நெருக்கடி கொடுத்து சட்ட மாணவர்கள் 25.09.15 தேதியில் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இன்றுவரை மூன்று மாதகாலமாகியும் எவ்வித பதிலும் இல்லை! மாணவர்களை டிஸ்மிஸ் செய்யப் போவதாக சட்டக் கல்லூரி முதல்வர் மிரட்டுகிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடவேண்டிய அவல நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். ஆனால் அரசுகளோ இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை! ஜனநாயக உரிமைக்காகப் போராடினால் குற்றவாளிகளா? நீதியரசர் கிருபாகரன் குற்றப்பின்னணி உள்ள சட்ட மாணவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலோட்டமாக சரியென தோன்றினாலும் இதில் குறிவைக்கப்படுவது போராடும் மாணவர்களும் வழக்கறிஞர்களுமே! பல்வேறு சமூகப் பிரச்சனைக்காகப் போராடிய சட்ட மாணவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை காரணமாகக் கொண்டு சட்ட மாணவர்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பது நியாயமான செயலன்று.
சமூகப் பிரச்சனையின் மீது அரசின் அணுகுமுறைப் பொறுப்பற்றதாக இருக்கும் பொழுது ஜனநாயக உள்ளம் கொண்ட மாணவனால் போராடாமல் இருக்க முடியாது. சமீபத்தில் சென்னை, கடலூரில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அரசு இயந்திரம் முடங்கிப் போன நிலையில் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் வீதியில் இறங்கி மக்களுக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்டனர்.
இத்தகையஉணர்வினை வளர்த்தெடுக்க வேண்டியது நீதி மன்றத்தின் கடமையில்லையா? ஜனநாயக உரிமைக்காகப் போராடுவதும் எதிர்ப்பியக்கங்கள் நடத்துவதும் நாகரிகமான சிவில் சமூகத்தின் அடிப்படை அரசியல் உரிமையாகும். இத்தகைய உயர்ந்த ஜனநாயக பண்புகளை காப்பாற்றுவது நீதி மன்றத்தில் மாண்புயில்லையா? ஆனால் நீதித்துறையோ போராடும் மாணவர்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக் கொள்கிறது.
சமூகப் பொறுப்புள்ள சட்ட மாணவர்கள் வழக்கறிஞராக பதியவிடாமல் தடுத்து வீதியில் எறிவது எவ்வகையில் நியாயம்? மத்திய, மாநிலஅரசுகளோ மௌனத்துடன் வேடிக்கைப் பார்க்கிறது, உளவுத்துறை தன்பங்கிற்கு கொம்பு சீவி விடுகிறது.
உளவுத் துறைதான் போராட்டம் நடத்து பவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கிறது. ஜனநாயகமற்ற போக்குகள் செல்வாக்கு பெறும் இத்தருணத்தில் நீதித்துறையில் உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராட வேண்டியது அனைவரின் கடமையாகும்.
நீதித்துறையில் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்! வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களுக்குத் துணை நிற்போம்! உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம்!