சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 28 முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தொடர் உண்ணாநோன்பு நடைபெற்று வந்தது. கடந்த 06.03.2024 அன்று தமிழ்நாடு அரசின் உறுதிமொழியை ஏற்று உண்ணாநோன்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது மக்களின் மொழியில் நடைபெற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் குறித்த புரிதல் மக்களைச் சென்றடையும். நீதிமன்றங்கள் இதற்கு விதிவிலக்கு இல்லை. அந்தந்த மாநில மொழிகளில்தான் உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. குறிப்பாக, மொழிச் சமத்துவம் குறித்த புரிதலை உடைய தமிழ்நாட்டில் இக்கோரிக்கை வெகு நாட்களாக உள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை இதழில் 1956ஆம் ஆண்டே எழுதப்பட்டுள்ள தலையங்கமே இதற்குச் சான்று. “நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும்.
இதற்கு முன்னணி வேலையாக, ஒவ்வொரு சட்டப்புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் செலவையும் ஆட்சியாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாயுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம்” என்கிறது விடுதலை தலையங்கம் (01.09.1956). 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைத்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348-இன்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக இந்தி அல்லது வேறு மொழிகளை அறிவிக்க, குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதே நேரம் இதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
இப்பிரிவின்படி இராஜஸ்தான், அலகாபாத், மத்தியப்பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்காடும் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே உரிமையை மற்ற மாநில மொழிகளுக்கும் வழங்க ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் தடையாக உள்ளன. இது மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது. மாநில மொழிகளை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவதற்குத் தடையாகவும், மொழிச் சமத்துவத்திற்கு எதிராகவும் உள்ள அரசியலமைப்பின் பிரிவுகள் திருத்தியமைக்கப்படவேண்டும். அதுவே உண்மையான கூட்டாட்சிக்கு அடையாளம் ஆகுமே தவிர, வெறுமனே மேடையில் ஒன்றிரண்டு திருக்குறளை ஒப்புவிப்பது மொழி உரிமைக்கு உதவாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
- வெற்றிச்செல்வன்