“நான் எனது தாய்மொழியில் பேசுகிறேன் என்பதே ஏகாதிபத்திய எதிர்ப்புதான்” - ஷிகிவா தியாங்கோ
இந்திய அரசியலமைப்பை, கூட்டாட்சிப் பண்புகளும் ஒற்றையாட்சிப் பண்புகளும் கலந்த அரசியலமைப்பு என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஒற்றையாட்சியைப் பாதுகாத்து, மாநிலங்களின் உரிமைகளை – மொழி உரிமை உட்பட மறுக்கும் அரசியலமைப்பு என்பதற்கு அரசியலமைப்பின் பகுதி XVII மொழி குறித்து சொல்லும் சரத்துகளே சாட்சி. ஆனாலும் இந்திய அரசியலமைப்பு மாநில மொழிகளுக்கு சில பிச்சைகளை அளிக்கிறது. ஆனால் நடுவண் அரசும், உயர், உச்சநீதிமன்றமும் அரசியலமைப்பு வழங்கும் அந்தப் பிச்சையைக் கூடத் தட்டிப் பறித்து வருகின்றன.
அரசியலமைப்பின் சரத்து 348 (2) மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆணை, உத்தரவு ஆகியவை தவிர மற்ற நடவடிக்கைகளை இந்தி மொழியில் நடத்திக் கொள்வதற்குக் குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று அம்மாநில ஆளுநர் அதிகாரம் அளிக்கலாம் என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் 26.1.1950-இல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1949-இல் இராஜஸ்தான் உயர்நீதிமன்ற அவசரச் சட்டம், 1949-இல் இயற்றப்பட்டு, இராஜஸ்தான் உயர்நீதிமன்ற மொழியாக இருந்த ஆங்கிலம் நீக்கப்பட்டு, இந்தி கொண்டு வரப்பட்டது. பின் அரசியலமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 18 நாட்களில் 14.01.1950-இல் அப்போதைய இராஜஸ்தான் மாநில அரசு சரத்து 348 (2)-இன் படி இந்தியை உயர்நீதிமன்ற மொழியாகக் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியைப் பெற்று அனுமதி வழங்கினர். அதன் பின் உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களில் முறையே 05.09.1969, 18.09.1971, 09.05.1972 தேதிகளில் அந்த மாநில மொழியான இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 343 இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தி என்று கூறுகிறது. சரத்து 343 (2)-ஆனது 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்றும், ஆனால் இந்த 15 ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தியை கூடுதல் அலுவல் மொழியாக்கி சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்க குடியரசுத் தலைவரை அனுமதிக்கிறது.
சரத்து 344 (1)-ஆனது 5 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் குடியரசுத் தலைவர் மொழி ஆணையம் (Language Commission) ஒன்றை அமைக்கும்படி கூறுகிறது. 344 (2) இந்த மொழி ஆணையம் இந்தி மொழியை உடனடியாகவும் வெகு விரைவாகவும் பயன்படுத்துதல், ஆங்கில மொழியின் பயன்பாட்டை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துதல், சரத்து 348-இல் சொல்லப்பட்டுள்ள (உச்ச, உயர் நீதிமன்றம், பாராளுமன்றச் சட்டம்) அனைத்திற்கும் அல்லது ஏதாவது ஒன்றிற்கு பயன்படுத்தும் மொழி பற்றி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
சரத்து 344 (3)-ஆனது மொழி ஆணையம் செயல்படும்போது, தொழில், பண்பாடு, அறிவியல் போன்றவை இந்தியாவில் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டும், இந்தி மொழி பேசாத மாநில மக்கள் அரசின் பணியில் வேண்டிக் கொள்ளும் கோரிக்கைகளையும் உரிமைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. சரத்து 344 (4)-ஆனது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 30 பேர் கொண்ட பாராளுமன்றக் குழு பற்றியும், 344 (5) இந்த பாராளுமன்றக் குழு, மொழி ஆணையத்தின் பரிந்துரைகளை பரிசீலனை செய்து, அதன் கருத்துக்களை குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், 344 (6) குடியரசுத் தலைவர் பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை முழுமையாக அல்லது ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது. 07.06.1955-இல் திரு.B.G.கெர் தலைமையில் மொழி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 08.02.1959-இல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை மாநிலங்களவை, மக்களவையிலும் முறையே 1959 ஏப்ரல் 2,3,4 தேதிகளிலும் 8,9 தேதிகளிலும் விவாதிக்கப்பட்டது. 04.04.1959 அன்று இது தொடர்பாக பிரதமர் நேருவும் தனது கருத்தை மக்களவையில் எடுத்துரைத்தார்.
மொழி ஆணையத்தின் அறிக்கை சரத்து 344 (6)-இன் படி பாராளுமன்றக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. முடிவில் பாராளுமன்றக் குழு தனது பல பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு வழங்கியது. அதில் ஒன்று மாநில உயர்நீதிமன்றத்தில் இந்தி அல்லது அந்த மாநில அலுவல் மொழியில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவை குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் வழங்கத் தேவையான சட்டத்தை இயற்றலாம் என்பதாகும். பாராளுமன்றக் குழுவின் பல பரிந்துரைகளை ஏற்று குடியரசுத் தலைவர் 27.04.1960-இல் ஆணை பிறப்பித்தார். இந்தி அல்லது அந்த மாநில அலுவல் மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்கச் சட்ட அமைச்சகம் தேவையான சட்டத்தை இயற்றும் என்று அந்த ஆணையில் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவரின் இந்த ஆணைப்படி 1963 இந்திய அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதற்கு 10.05.1963-இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இச்சட்டத்தின் பிரிவு 7 மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவு உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலைப் பெற்று இந்தியை அல்லது அந்த மாநில அலுவல் மொழியை ஆங்கிலத்துடன் சேர்த்து கூடுதல் மொழியாக அமுல்படுத்தலாம் என்று கூறுகிறது. மொழி ஆணையத்தின் அறிக்கை பாராளுமன்றக் குழுவின் பரிந்துரை, குடியரசுத் தலைவரின் ஆணை, அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் மொழி பற்றிக் கூறும் 1963 ஆட்சி மொழிச் சட்டத்தின் பிரிவு 7-ஆனது 07.03.1970-இல் அரசிதழில் வெளியிடப்பட்டு செயலுக்கு வந்தது.
1949-இலிருந்து இராஜஸ்தான், உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்ட நிலையில், வங்காள மொழியை கல்கத்தா உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. மாறாக, நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. 07-05-1997-இல் உச்சநீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டம் வங்க மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்க மறுத்தது.
2001-இல் வழக்குரைஞர் திரு.முத்துக்கிருஷ்ணன் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அனுமதி அளித்து கவர்னர் அரசிதழில் வெளியிட, அவருக்கு உத்தரவிட வேண்டி W.P. No. 16939/2001 மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அப்போதைய தலைமை நீதிபதி சுபாசன் ரெட்டி, நீதிபதி K.P. சிவசுப்பிரமணியம் கொண்ட அமர்வு “அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348 (2) –இன் படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள்தான். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும், உயர்நீதிமன்றம் சட்டம் இயற்ற முடியாது” என்று கூறி 18.09.2001-இல் தள்ளுபடி செய்தது. பின் 2002-இல் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழை ஆங்கிலத்துடன் சேர்த்து கூடுதல் மொழியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்தைக் கேட்டு கடிதம் அனுப்பினர். 2001-இல் தங்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை என மறுத்து ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி சுபாசன் ரெட்டி. 2003-இல் தமிழக அரசின் கடிதத்திற்கு, தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க உடன்பாடு இல்லை எனக் கடிதம் அனுப்பினார்.
அதன்பின் 2006-இல் ஆட்சிக்கு வந்த திரு.கருணாநிதி அவர்கள் மீண்டும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அப்போதைய தலைமை நீதிபதி திரு.A.P.சா அனைத்து நீதிபதிகள் கொண்ட கூட்டத்தில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க ஒப்புதல் அளித்துத் தீர்மானம் இயற்றப்பட்டது. அதன்பின் 06.12.2006-இல் தமிழகச் சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டி ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டது. 07.12.2006 அன்று அத்தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடுவண் அரசிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் நடுவண் அரசு, வங்காள மொழிக்குச் செய்ததைப் போலவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆட்சி மொழிச் சட்டம் பிரிவு 7-க்கு மாறாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியது. உச்ச நீதிமன்றமும் 07.05.1997, 15.12.1999, 11.10.2012, 16.12.2015 ஆகிய தேதிகளில் தொடர்ந்து தமிழ், வங்காளம், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளை உயர் நீதிமன்ற மொழியாக்க மறுப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 27.04.2015, 19.04.2016-இலும் கூடிய Dr.சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் & நீதிக்கான பாராளுமன்றக் குழு மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்க மாநிலங்கள் கோரினால் உடனடியாக கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்றும் இந்நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்க அவசியமில்லை என தீர்மானித்து முறையே தனது 75, 76 அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அதன் பின்பும் நடுவண் அரசு உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனைக்காக கோப்புகளை அனுப்பி இந்தி அல்லாத மாநிலங்களை ஏமாற்றி வருகிறது.
2009-இல் ப.சிதம்பரம் தலைமையிலான பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை அவசர அவசரமாக செயல்படுத்தி இந்தியை மக்கள் விருப்பத்திற்கு மாறாக திணித்து வருகிறது நடுவண் அரசு. ஆனால், 1959-இல் பாராளுமன்றக் குழு அளித்த அறிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்று அதன்படி 1963-இல் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் பிரிவு 7-ஐ இந்தி மாநிலங்களுக்கு மட்டும் உடனே செயல்படுத்திய நடுவண் அரசு, மற்ற இந்தி அல்லாத மாநிலங்களுக்குச் செயல்படுத்த மறுத்து மாநில மொழிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள சில பிச்சைகளையும் தட்டிப் பறிப்பது அநீதியாகும்.
- சு.தளபதி, மதுரை